கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பெட்ரோல் விலை ஏறிடுச்சு... மைலேஜையும் ஏத்திடுங்க!

mileage tips
பிரீமியம் ஸ்டோரி
News
mileage tips

டிப்ஸ்: மைலேஜ்

பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்து விட்டது. சில வருடங்களுக்கு முன்பு 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் ஒரு ஸ்கூட்டியின் ஃப்யூல் டேங்க் நிரம்பிவிடும். இப்போது நிலைமை அப்படி இல்லை. பெட்ரோலை, பார்த்துப் பார்த்துப் பயன்படுத்தணும்; அதேநேரம் மைலேஜையும் குறையாமல் பார்த்துக்கணும். அதுக்கு சில டிப்ஸை ஃபாலோ பண்ணணும் டியூட்ஸ்!

சிலருக்கு க்ளட்ச் என்றால், ரொம்பப் பிடிக்கும். சிக்னலில்கூட க்ளட்ச்சை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே இருப்பார்கள். இது ரொம்பத் தப்பு. இன்னும் சிலர் க்ளட்ச்சைப் பிடித்துக் கொண்டே ஆக்ஸிலரேட்டரும் முறுக்கிக் காண்பிப்பார்கள். இது அதைவிடத் தப்பு. கியர் அப்/டவுன்ஷிஃப்ட் பண்ணும்போது மட்டும்தான் க்ளட்ச் ஞாபகம் வரணும். இது கார்களுக்கும் பொருந்தும்.

சிலர் ஹைவேஸில் போகும்போது, பெட்ரோலை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று ஏசி–யை ஆஃப் செய்துவிட்டு, கார் கண்ணாடியை இறக்கிவிட்டுப் பறப்பார்கள். இதுவும் ரொம்பத் தப்பு. இதில் மிகவும் அடிபடுவது காரின் டைனமிக்ஸ்தான். இதனால், உங்களுக்கே தெரியாமல் உங்கள் காரின் டேங்க்கில் இருந்து எரிபொருள் சர்ரெனக் குறையும்.

பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, ‘டர்புர்’ என ஆக்ஸிலரேட்டர் முறுக்கத் தேவை யில்லை. இப்போது வரும் BS-6 பைக்கு களில் எல்லாமே சாஃப்ட் டச் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்தான். சிலர் பட்டனையும் அழுத்திவிட்டு, ஆக்ஸிலரேட்டர் முறுக்கிக் கொண்டே இருப்பார்கள். இது தேவையில்லை. இதனால் பெட்ரோல் எக்ஸ்ட்ரா செலவு ஆகும்.

பெட்ரோல் விலை ஏறிடுச்சு... மைலேஜையும் ஏத்திடுங்க!

பைக்குகளின் ஐடிலிங் ரேஞ்ச், மைலேஜுக்கு ரொம்பவும் உறுதுணையாக இருக்கும். சிலர் ஓவர் பிக்–அப் வேண்டும் என்பதற்காக, லோக்கல் மெக்கானிக்குகளிடம் சொல்லி, பரிந்துரைக்கப்பட்ட ஆர்பிஎம்–மைத் தாண்டி ஐடிலிங் ரேஞ்ச் வைத்திருப்பார்கள். இதுவும் வேண்டாம். முறைப்படி க்ளட்ச் ப்ளேட், இன்ஜின் பராமரிப்பு இருந்தாலே நல்ல பிக்–அப்பும் மைலேஜும் உறுதி.

‘ட்யூப்லெஸ் டயர்தானே… காத்து நாளைக்கு அடிச்சுக்கலாம்’ என்று தள்ளிப் போடாதீர்கள். சரியான காற்று அளவு கொண்ட டயர்கள், மைலேஜுக்கு அமைதியான நண்பர்கள். காற்றழுத்தம் குறைவாக இருந்தால், உங்கள் கவனத்துக்கே வராமல் மைலேஜ் குறையும். வாரம் ஒருமுறை காற்றடிப்பது என்பதை ரிமைண்டர் போட்டுக் கொள்ளுங்கள்.

சிக்னலில் 50 விநாடிகள் தாண்டி நிற்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தால்… இன்ஜினை ஆஃப் செய்துவிடுவதுதான் நல்லது. அதற்காக, குறைந்தபட்ச விநாடிகளுக்கு ஆஃப் செய்வதும் வேண்டாம். நிமிடக் கணக்கில் ஐடிலிங்கில் நின்றால் எவ்வளவு எரிபொருள் செலவாகுமோ, அதைவிட ஒரு தடவை இன்ஜின் க்ராங்குக்கு ஆகும் எரிபொருள் செலவு அதிகம். ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்ட கார்கள் பெஸ்ட். பைக்குகளுக்கு இருக்கவே இருக்கு இன்ஜின் கில் ஸ்விட்ச்.

கியர் போடுவதிலும் எரிபொருள் சிக்கனம் அடங்கியிருக்கிறது. குறைவான வேகத்திலேயே சட்டென கியர் அப்ஷிஃப்ட் செய்வதும், அதிகமான வேகத்தில் டவுன்ஷிஃப்ட் செய்வதும் தவறு. கியர் போடும்போது இன்ஜின் Knocking தெரிந்தால், நீங்கள் தப்பான கியர் என்கேஜ்மென்ட் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இதிலும் மைலேஜ் அடிவாங்கும்.

பெட்ரோல் கார்களைப் பொருத்தவரை கியர் என்கேஜ்மென்ட், 2,000 - 2,300 rpm என்பது வேகமும் மைலேஜும் சரியான பார்ட்னர்ஷிப் வைக்கும் இடம். இது டீசல் கார்களுக்கு 1,500 - 1,700 rpm சரியாக இருக்கும். அதாவது, 1,700 rpm–யைத் தாண்டி இன்ஜினைக் கதறவிட்டு ரெவ் செய்து கியர் மாற்றுவது வேண்டாம்.

முடிந்தவரை பைக்குகளின் செயின் ஸ்ப்ராக்கெட்டுகளிலும் கவனம் வையுங்கள். மண் மற்றும் தூசு படிந்த செயின்கள், வீல்களைச் சுற்றுவதற்கு இன்ஜின் பவரைத்தான் படுத்தி எடுக்கும். எனவே, வாரத்துக்கு ஒருமுறை செயினுக்கு கியர் ஆயில் அல்லது லூப்ரிகன்ட் அடித்து பக்காவாக வைத்திருங்கள். நம் கண் முன்னேயே பைக் ஸ்மூத்தாக இருப்பது தெரியும். மைலேஜும் கூடும்.

சடர்ன் பிரேக்கிங், திடும் ஆக்ஸிலரேஷன் இவையும் வேண்டாமே! ‘ரேஷ் டிரைவிங் செய்யமாட்டேன்; கிராஜுவலான வேகத்தில்தான் போவேன்; ஆக்ஸிலரேட்டரையும் க்ளட்ச்சையும் மதிப்பேன்’ என்று உறுதிமொழி எடுங்கள். நமக்கு, அடுத்தவர்களுக்கு, பைக்குக்கு… எல்லோருக்குமே நல்லது!

பெட்ரோல் விலை ஏறிடுச்சு... மைலேஜையும் ஏத்திடுங்க!