கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

வேலைக்கு வித்தைகள் தேவை! - புதிய தொடர்

Mobility Engineering
பிரீமியம் ஸ்டோரி
News
Mobility Engineering

வேலை வாய்ப்பு

ஷங்கர் வேணுகோபால்
ஷங்கர் வேணுகோபால்
எஸ்.ராமச்சந்திரன்
எஸ்.ராமச்சந்திரன்

பரத்தின் உலகை டோனீ ஸீபா (Tony Seba) தலைகீழாக மாற்றிய நாள்:

பரத் பதற்றத்துடன் வேகமாக அலுவலகத்துக்குள் சென்று கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அவர் தன் நிறுவனத்தின் மூத்த தலைவர்களிடம், `தகவல் தொழில்நுட்பம் கொண்டு பெட்ரோல், டீசல் வாகனங்களின் செயல்திறனை எப்படி மேம்படுத்தலாம்' என்பது குறித்த தன் யோசனையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இவரின் யோசனையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டால்தான், பரத்தின் டீம் இது குறித்துத் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய உத்தரவும் நிதியும் கிடைக்கும்.

மீட்டிங்கில் எப்படி நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, பரத் பற்றிய ஓர் அறிமுகம். பரத் - வாகனங்கள் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் பொறியியல் மேலாளர் (Engineering Manager). அதிலும் இன்ஜின் துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக் கழ‌கத்தில் Ph.D முடித்தவர். அவரது கண்டுபிடுப்புகள் பல விருதுகளைக் குவித்திருக்கின்றன. அவரது ஆராய்ச்சியின் பலன்களை இன்று பல வாகனங்களில் பார்க்க முடியும். இந்தியாவில் இந்தத் துறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய வெகுசிலரில் பரத் முக்கியமானவர். அப்படிப்பட்டவர் ஒரு வாரமாக முகம் சோர்ந்து கவலையாக இருப்பது ஏன்?

சில நாட்களாக பரத்தின் அலுவலகத்தில், இன்ஜின் மற்றும் அவற்றைச் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும் என்று ஒரு வதந்தி நிலவி வந்தது. இணைக்கப்பட்ட, தானே இயங்கும் மின்சார வண்டிகளுக்கு (connected, autonomous, electric vehicle) அதிக கவனமும் நிதியும் ஒதுக்கப்படும் என்ற பேச்சும் அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

பரத்தின் யோசனை, ஒரு வாகனத்தின் முக்கியமான அளவுகோல்களை சென்ஸார்கள் மூலம் தொடர்ச்சியாகப் பதிவு செய்து, அதற்கு ஏற்ப இன்ஜினுக்குச் செல்லும் எரிபொருளை வழங்குவது. இந்த யோசனை சரியாக வேலை செய்தால் 2 முதல் 5 சதவிதம் வரை செயல்திறனும் அதிக மைலேஜும் கிடைப்பதுடன், இன்ஜினின் ஆயுளும் நீளும்.

இப்போது மீட்டீங் அறைக்கே திரும்ப வருவோம். தன் கம்பெனியின் மூத்த தலைவர்கள் குழுமியிருக்கும் அந்த ஹாலுக்குள் நிதானமாகச் சென்ற பரத், அங்கே சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டார். தலைவர்கள் தங்களுக்குள் மும்மரமாக ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்கள். அறை முழுவதும் காபி வாசனை பரவியிருந்தது. தானும் ஒரு கப் காபி எடுத்துக்கொண்டு பரத் அமர்ந்தார். கூட்டம் ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்த நிலையில், பரத் யோசனையில் ஆழ்ந்தார்.

பரத்திற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் புதிதல்ல. கல்லூரியில் படித்த நாட்களில் இருந்தே தன் ஆராய்ச்சிக்குப் பல மென்பொருட்களைப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்தத் துறை இன்று பல மடங்கு வளர்ந்துள்ளது. யோசனைகளுக்கு வடிவம் தந்து அவற்றைச் செயல்படுத்துவதும் அவருக்குப் புதிதல்ல. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் வாகனத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிரூபிப்பது பரத்துக்கு ஒரு சவாலாகவே பட்டது. தன் யோசனையை நிர்வாகத்திடம் நிரூபிக்க சில சோதனைகளின் முடிவுகள் அவருக்குத் தேவைப்பட்டன.

IT துறை அவருக்குக் கொடுத்த வாகனத் தகவல்கள், ஆய்வு செய்யும் நிலையில் இல்லை. இந்த நிலையில் பரத்துக்கு அவரது நலம் விரும்பியும் வழிகாட்டியுமான ரவிதான் உதவி செய்தார். ரவிதான் அந்நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர். ரவிக்கு வாகனத் தயாரிப்பின் பல துறைகளில் அனுபவம் உண்டு. பரத்தின் குழப்பத்தைக் கேட்டுவிட்டு அனலிடிக்ஸ் துறையில் யாரிடம் சென்றால் அதற்குப் பதில் கிடைக்கும் என்று சொன்னதும் ரவிதான். அவர் செய்த உதவியால்தான் பரத் தன் சோதனையைச் சரியான நேரத்தில் செய்து முடிக்க முடிந்தது.

பரத், தன் சிந்தனையிலிருந்து மீண்டு கான்ஃபரன்ஸ் ஹாலில் குழுமியிருந்தவர்களைக் கவனித்தார். எல்லோரும் அவரவர் இடத்தில் தயாராக அமர்ந்திருந்ததால் எழுந்து நின்று தன் யோசனை குறித்துப் பேச ஆரம்பித்தார். மடை திறந்த வெள்ளம் போல பரத் பேசப் பேச, அதை அமைதியாக அங்கிருந்தவர்கள் கூர்ந்து கேட்டார்கள். அதன்பிறகு முடிவெடுக்கக் கூடிய உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நிதானமாகவும் உறுதியோடும் பதில் அளித்தார். கூட்டம் முடிந்து பரத் அந்த அறையை விட்டு வெளியே வந்தபோது, ‘நிர்வாகம் தன் யோசனையை ஏற்குமா, ஆராய்ச்சிக்குத் தேவையான நிதியைக் கொடுக்குமா’ என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் சஸ்பென்ஸாகவே இருந்தது.

அப்போது பரத்தின் தொலைபேசியில் CTO விடமிருந்து ஒரு குறுஞ்செய்தி! அதில் அவர் மின்சார வண்டிகளைப் பற்றி அறிந்து கொள்ள `டோனீ ஸீபா’ என்பவரின் வீடியோவைப் பார்க்கும்படி கூறியிருந்தார். `அதில் அப்படி என்ன இருக்கிறது?' என்ற கேள்வியோடு பரத் போனை டேபிளில் வைத்தார்.

வேலைக்கு வித்தைகள் தேவை! - புதிய தொடர்

பவன் வாழ்க்கையில் நடந்த‌ திருப்புமுனை

பரத்தின் இந்த அனுபவங்கள் நடந்து கொண்டிருந்த அதேவேளையில்... அந்த நகரத்தின் மற்றொரு மூலையில் பவன் என்ற கல்லூரி மாணவன் குழப்பமான மனநிலையில் அமர்ந்திருந்தான். பெயர் பெற்ற பொறியியல் கல்லூரியில் வாகனத்துறையில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவன் பவன். அவன் ஒரு மிகச் சிறந்த மாணவன்.

சில நாட்கள் முன்பு, பவன் தன் வகுப்புத் தோழர்களுடன் வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுக்குச் சென்று வந்திருந்தான். கல்லூரியில் தான் படிக்கும் படிப்புக்கும், தொழிற்சாலையில் பணிபுரிவதற்கான திறன் ஆகிய இரண்டுக்கும் உள்ள இடைவெளியை அவனால் அப்போது ஓரளவு உணர முடிந்தது. கவனத்துடன் கண்ணும் கருத்துமாகப் படிக்கும் பவனுக்கே இந்த இடைவெளி என்றால், மற்றவர்களின் நிலை?

அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வந்தபோது, மாணவர்களுக்காக வருடா வருடம் நடக்கும் பாஹா (Baja) என்ற போட்டி பற்றி சிலர் பேசியது பவன் காதில் விழுந்தது. வாகனத்துறையின் எதிர்காலமே மின்சார வண்டிகள்தான் என்றும் அவர்கள் ஆணித்தரமாக அடித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தன் ஹாஸ்டல் அறைக்குத் திரும்பியவுடன் பவன், பாஹா பற்றி இணையதளத்தில் தேடினான். பாஹா என்பது SAE – Society of Automotive Engineers (வாகனத்திறை பொறியாளர்களின் சமூகம்) நடத்தும் ஒரு போட்டி. பாஹாவில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் பணிபுரிய நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டான். சமீபகாலமாக மின்சார வாகனங்களின் மேல் கவனம் செலுத்தும் பாஹாவின் வடிவம்தான் e-பாஹா என்று அழைக்கப்படுகிற‌து என்பதும் அவனுக்குத் தெரியவந்தது.

வேலைக்கு வித்தைகள் தேவை! - புதிய தொடர்


மின்சார வாகனப் போட்டி

பாஹா என்பது உலக அளவில் 45 ஆண்டுகளாக நடைபெறும் ஒரு திருவிழா. மாணவர்கள் தங்கள் கைப்பட உருவாக்கும் வாகனங்களை ஓட்டிக்காட்டும் மிகப் பெரிய போட்டி அது. இந்த வருடத்திற்கான போட்டியில் தானும் பங்கேற்க வேண்டும் என்று அவன் முடிவுசெய்தான். அப்போது அவன் மனதில் `ஒரு மின்சார வண்டியின் தாக்கத்துடன் ஒரு வாகனத்தை உருவாக்கினால் என்ன?' என்பது போன்ற சில யோச‌னைகள் மின்னலாக வெட்டின.

இயந்திரவியல், கணினி, மின்னணுவியல் துறைகளிலிருந்து ஆர்வமிக்க நண்பர்களைக் கொண்டு e-பாஹாவுக்கான அணியை பவன் அமைத்தான். போட்டியில் கலந்து கொள்ள மாதிரி வண்டியை உருவாக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரு சில வாரங்களே இருந்தன. என்றாலும் தீவிரமாக வேலை செய்து ஓர் அடிப்படை வாகனத்துக்குத் தேவையான அமைப்பை உருவாக்கினான். நான்கு சக்கரங்கள், ஒரு மோட்டார், பேட்டரி அனைத்தையும் பொருத்தி ஒரு வாகனத்தை பவனும் அவனது குழுவினரும் உருவாக்கினார்கள்.

ஆனால் பலமுறை முயன்றும் அந்த வண்டி ஓடவில்லை. காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் பவனும் சக மாணவர்களும் சோர்ந்து போனார்கள்.

e-பாஹா போட்டிக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் பவனும் அவனது நண்பர்களும் போராடுவதைப் பார்த்த பேராசிரியர் முருகன், அவர்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் அவர். நடைமுறையில் உள்ள சவால்கள் பற்றியும் அவருக்கு நன்கு தெரியும்.

பவனிடம் அந்த வாகனத்தைப் பற்றி விளக்கமாக கேட்டுக் தெரிந்து கொண்ட அவர், வண்டி ஓடாமல் இருப்பதற்கு மூல காரணம் (root cause) என்னவாக இருக்கும் என்பதைப் படிப்படியாக, ஒவ்வொரு பாகமாக ஆய்வு செய்து கண்டுபிடிக்க முருகன் வழிநட‌த்தினார். அவர் கொடுத்த ஆலோச‌னைப்படி மோட்டாருக்குச் செல்லும் மின்சாரத்தைச் சரி செய்ததுடன், மேலும் சில மாற்றங்களைச் செய்தபின், வண்டி நன்றாக ஓடத் தொடங்கியது. பழையபடியே அனைவருக்கும் மீண்டும் உற்சாகம் கொப்புளித்தது.

பவன் எடுத்த ஹேட் ட்ரிக்!

முருகனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பவனும் அவனது குழுவினரும் e-பாஹாவுக்குப் பயணித்தனர். பாஹா நடைபெற்ற திடல் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. 100 அணிகளுக்கு மேல், 2,000 மாணவர்களுக்கு மேல் அங்கே கூடியிருந்தனர். வெயிலையும் தூசியையும் பொருட்படுத்தாமல் அனைவரும் உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். முதல் நாள் இறுதியில், வாகன நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து மாணவர்களுக்கு ஒரு தேர்வு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் கொடுத்த கேள்வித்தாள் பவனுக்குச் சுலபமாகவே இருந்தது.

அன்றுதான் பாஹாவின் கடைசி நாள். மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பரிசு பெற்றவர்கள் பெயர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதல் பரிசு பஞ்சாப்பில் இருந்து வந்த அணிக்குச் சென்றது. “இரண்டாவது பரிசு பெறும் அணி...” என்று அறிவிப்பு வந்தபோது பவனின் இதயம் ஒருசில வினாடிகள் நின்றுவிட்டது. “பவன் மற்றும் குழுவினர்” என்று அறிவிப்பாளர் வாக்கியத்தை முடித்தபோது உற்சாகத்தில் துள்ளிக் குதித்தபடி, பவன் தன் குழுவினரோடு கோப்பையை வாங்கிக்கொண்டான்.

பவன் அணிக்கு அடுத்து பரிசு பெற்ற அணி, ஓர் அனைத்து மகளிர் அணி. அதன் தலைவி காவ்யா துள்ளிக்கொண்டு பரிசு வாங்கச் சென்றபோதுதான், பவன் அவளை முதல்முறையாக‌க் கவனித்தான். இருவரும் புகைப்படம் எடுக்கும் இடத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டார்கள்.

முருகனை அலைபேசியில் அழைத்து, அவர்கள் பரிசு பெற்ற செய்தியை பவன் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டான். பாஹா முடிந்து ஊருக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தபோது, பவனுக்குத் தொலைபேசியில் ஓர் அழைப்பு. அவனது கனவு கார் கம்பெனியிலிருந்து வந்த அழைப்பு அது. பவனுடன் பேசிய அந்தக் கம்பெனியின் HR மேனேஜர் அவர்கள் வைத்த தேர்வில் பவன் நன்றாக பதில் அளித்திருந்ததாகவும், அவன் அணி e-பாஹா போட்டியில் செய்த வாகனம் அருமையாக இருந்தது என்றும் பாராட்டினார். நேர்காணலுக்கான ஒரு தேதியையும் அப்போது அவர் கூறினார். பவனுக்கு ஆகயத்தில் பறப்பது போல இருந்தது.

அன்று மாலை பவன், ரயில் நிலையத்தில் காவ்யாவை ஒரு நொடி சந்தித்தான். அவள் அவனை அடையாளம் கண்டு சிரித்தாள். அன்று தன் வாழ்வில் நடந்த முக்கிய மூன்று நிகழ்வுகளை நினைத்துக்கொண்டே தொடர்வண்டியில் பயணித்தான் பவன். அவற்றில் அவனை மிகவும் பாதித்தது காவ்யா தான்.

ஊருக்குத் திரும்பியதும், பவன் கோப்பையை எடுத்துக்கொண்டு முருகனைச் சந்திக்கச் சென்றான். நேர்காணலின் தேதியைக் கூறினான். நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்று முருகன் பவனுக்கு விளக்கினார். புத்தகங்களில் இருக்கும் கோட்பாடுகளைவிட நடைமுறைக்கு ஏற்ற, நேரடி அனுபவத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரம் அதிகம் என்று அவர் கூறினார். பாஹா போட்டியில் பங்கு பெற அவன் சந்தித்த சவால்கள், அவற்றை எப்படிச் சமாளித்தான், தன் அணியை எப்படி நடத்திச் சென்றான் போன்றவற்றை நினைவில் கொள்ளுமாறு முருகன் கூறினார். குறிப்பிட்ட தேதியில் சற்று முன்னதாகவே பவன் நேர்காணலுக்குச் சென்றான்.

நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் பவனுக்கு ஆச்சர்யமாக இருந்தன. முருகன் கூறியதுபோல, அவன் படித்த பாடங்களிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படவில்லை. சவாலான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் கொடுக்கப்பட்டு அவற்றைத் தன் அனுபவத்தில் பவன் எப்படிச் சமாளிப்பான் என்று கேட்டார்கள். பவனின் e-பாஹா அனுபவம் அவனுக்குப் பதிலளிக்க மிகவும் உதவியாக இருந்தது.

நேர்காணலைத் திருப்தியாக முடித்துவிட்டு வெளியே வந்தபோது, ஒரு வாரத்தில் தொடர்பு கொள்வதாகக் கூறினார்கள். பசியுடன் இருந்த பவன், டீ குடிக்கப் போகலாமா என்று யோசித்தபோது, கதவைத் திறந்து கொண்டு காவ்யா வேகமாக உள்ளே வந்தாள். இருவரும் அதிகம் பேசிக்கொள்ள முடியவில்லை. அடுத்த நேர்காணல் காவ்யாவுக்குத்தான். வேலை கிடைக்குமா கிடைக்காதா, காவ்யா வரும் வரை காத்திருக்கலாமா என்று பவனின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

வேலைக்கு வித்தைகள் தேவை! - புதிய தொடர்

ஸீபாவின் பாதையில் பரத்தின் பயணம் தொடக்கம்!

பரத்துக்கு ஒரு வாரம் சென்றபின், தன் யோசனையை முன்னே எடுத்துச் செல்ல பச்சைக் கொடி காட்டப்பட்டது. பரத் மகிழ்ச்சியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தன் யோச‌னைக்கு ஒப்புதல் வந்தாலும், பரத்தின் மனதில் ஒரு கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. இன்ஜின் துறையில் தன் யோசனை ஒன்றே ஒன்றுதான். ஆனால் மின்சார வண்டிகள் மற்றும் அவை தொடர்பான மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு மிக அதிகம். அவற்றை நிர்வாகம் மிகவும் ஊக்கப்படுத்தியதை பரத்தால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

டோனீ ஸீபாவின் வீடியோ இப்போது அவருக்குச் சரியாகப் பட்டது. அவர் கூறியபடி மின்சார வண்டிகளில் பல மடங்கு நன்மைகள் உள்ளன. அவற்றின் மோட்டார் ஒரு இன்ஜினைவிட ஐந்து மடங்கு திறன் வாய்ந்தது. உதிரி பாகங்களோ 100 மடங்கு குறைவு. அவற்றை இயக்க ஆகும் செலவு 10 மடங்கு குறைவு. நகரங்களில் உள்ள காற்றில் புகையின் ஒரு முக்கியக் காரணம், இன்ஜின் மூலம் ஓடும் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை என்பதை பரத் நன்கு அறிவார்.

டோனீ ஸீபாவின் கணிப்பு சரியாக இருந்தால், 2030-ல் விற்பனையாகும் வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளாக இருக்கும். பரத் இந்தத் துறையில் தன் விழிப்புஉணர்வை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நன்றாகவே அறிந்து கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் நிறுவனத்தின் தலைமை அலுவகத்திலிருந்து ஒரு தொசைபேசி அழைப்பு வந்தது. எதற்காக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே பரத் பேசினார். தன் யோச‌னைக்கு ஒதுக்கப்ட்ட‌ நிதி கிடைக்காமல் போய்விடுமோ?

வாகனத்துறைக்குத் தேவைப்படும் திறன்கள்

பரத்தும் பவனும் சந்தித்த நிலைமையை நாம் அனைவரும் ஒரு நாள் சந்திக்க நேரலாம். கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குத் தயாராகும் மாணவர்களோ, அல்லது அனுபவம் உள்ள பொறியாளரோ, எந்தத் துறையாக இருந்தாலும் மாற்றத்துக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நம்மை நாமே தயார்ப்படுத்திக்கொள்ள FISITA போன்ற நிறுவனங்கள் வெளியிடும் வரையறைகளை, கட்டமைப்புகளைப் (frameworks) பயன்படுத்தி, எந்தெந்தத் திறன்களை எப்போது கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். அதற்குத் தகுந்த ஒரு பாதையையும் வழி வகுத்துக்கொள்ளலாம்.


*இந்தக் கட்டுரையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. *இதில் கூறப்படும் கருத்துகள் அனைத்தும் இதனை எழுதியவர்களின் தனிப்பட்ட கருத்து.

எதிர்காலத்தில் வாகனத் துறையில் தேவைப்படும் மூன்று வகை திறன்கள்!

வாகனத்துறையில் தேவைப்படும் திறன்க‌ளை FISITA கூட்டமைப்பு மூன்றாகப் பிரித்துள்ளது. அவை...

1.) அடிப்படை பொறியியல் திறன்க‌ள் -‍ இயந்திரவியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், கணினி

2.) தரக் கட்டுப்பாடு, வாடிக்கையாள‌ர் நோக்கி கவனம், தொடர்பு கொள்ளுதல் முதலியவற்றை ஒன்றிணைத்து வேலை செய்தல் (integration skills)

3) வளர்ச்சி மனப்பான்மை ‍- புதிய யோச‌னைகளை உருவாக்கி அவற்றை ஒப்புதல் வாங்கி, நிதி ஒதுக்கிய பின் வெற்றிகரமாகச் செயல்படுத்துதல், புதியவற்றைக் கற்றுக்கொள்ளுதல் போன்றவை. இவை அனைத்தும் உள்ளவர்கள்தான் எதிர்காலத்தில் வாகனத்துறையில் வெற்றி பெற முடியும்.