கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

வாசகர்களுக்கான கேள்வி பதில்

டாடா சஃபாரி
டாடா சஃபாரி

நான் 3 ஆண்டுகளாக மாருதி 800 ஓட்டிக் கொண்டிருக்கிறேன். குடும்பம் பெரிதாகிவிட்டதால், 800 போதவில்லை. ஒரு 7 சீட்டர் வாங்கலாம் என்று நினைக்கிறோம். எங்களின் பயணத் தேவை மாதத்துக்கும் 1,000 கிமீ. எங்கள் பட்ஜெட் 14 லட்சம். பெட்ரோல் கார்தான் எங்கள் விருப்பம்; ஆனால், சுத்தமான இந்தியத் தயாரிப்பாக இருக்க வேண்டும். டீசல் காராக இருக்கும்பட்சத்தில் மராத்ஸோ மீதும் புது சஃபாரி மீதும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எங்களுக்கான சரியான பதிலைக் கொடுங்கள்!

– ஜெனார்த்தனன், மதுரை.

14 லட்சம்; உங்கள் விருப்பம் பெட்ரோல்; 7 சீட்டர், இந்தியத் தயாரிப்பு என்று சொல்லியிருக்கிறீர்கள். இதில் மார்க்கெட்டில் உள்ள ஆப்ஷன் என்று பார்த்தால்… மாருதி XL6 மட்டும்தான். XL6–ல் நீங்கள் கேட்பதுபோல் டீசல் கிடையாது; பெட்ரோல் மட்டும்தான். இதன் டிசைனும், விலையும், நம்பகத்தன்மை வாய்ந்த நெட்வொர்க்கும் உங்களுக்கு எந்தவிதத்திலும் சிக்கலை ஏற்படுத்தாது. ஆனால், இதில் 6 சீட்டர் ஆப்ஷன்தான் உண்டு.

டீசலைப் பொருத்தவரை நீங்கள் கேட்டதுபோல், டாடா சஃபாரி, மஹிந்திரா மராத்ஸோ மட்டும்தான் உங்களுக்கான ஆப்ஷன்கள். இதில் மராத்ஸோ, நல்ல தேர்வுதான். இதில் பெட்ரோல் வேரியன்ட் இல்லை; டீசல் மட்டும்தான். இடவசதிக்கும் சொகுசுக்கும் பெயர் பெற்றுவிட்டது மராத்ஸோ. இதில் 8 சீட்டர் ஆப்ஷன்கூட உண்டு என்பது உங்களுக்கான நல்ல விஷயமாக இருக்கும். இதன் 1.5 லிட்டர் இன்ஜினும், 121bhp பவரும் ஆவரேஜாக 14 கிமீ வரை மைலேஜைத் தருகிறது. இதில் M2 எனும் 8 சீட்டர் வேரியன்ட், உங்கள் பட்ஜெட்டுக்குள் வரும். இதன் குறைந்த எடையும் வசதிகளும்தான் மைனஸ். மேலும் இந்த கார் இப்போது அவுட்டேட்டட் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

அடுத்ததாக, லேட்டஸ்ட் வரவு சஃபாரி. இதிலும் பெட்ரோல் இல்லை. டீசல் இன்ஜின் மட்டும்தான். ரேஞ்ச்ரோவர் காரின் ஒமேகா D8 ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட இதன் கட்டுமானம், 7 பேர் உட்கார்ந்தாலும் இடிக்காத அளவு இதன் 205 மிமீ கி.கிளியரன்ஸ், 2.0லி பெரிய டர்போ இன்ஜின், 170bhp பவர் என்று கலக்குகிறது. கொஞ்சம் விலையை அதிகப்படுத்தினால் பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ், TPMS, பவர்டு டிரைவர் சீட் போன்ற வசதிகளும் கிடைக்கும். டாடாவின் நம்பகத்தன்மை இப்போது பெரிதாகப் பேசப்படுகிறது. அதையும் தாண்டி கொரியன் மாடல் ஓகே என்றால், நீங்கள் ஹூண்டாயின் அல்கஸாருக்காகக் காத்திருக்கலாம்.

மலையேற்றங்களில் கவனம்
மலையேற்றங்களில் கவனம்

நான் அடிக்கடி மலைப் பாதைகளில் கார் ஓட்டுவேன். எனக்கு ஒரு சந்தேகம். என் கார் சில நேரங்களில் மலை இறக்கங்களில் திடீர் திடீர் என பிரேக் ஜாம் ஆகி விடுகிறது. பிரேக் பிடிக்காமல் பயத்தை வரவழைக்கிறது. பல முறை இதுபோல் உயிர் பயத்தைக் காட்டிவிட்டது என் கார். சர்வீஸ் சென்டருக்கு விடலாம் என்று பார்த்தால்… வீட்டுக்கு வந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது. இது தயாரிப்புப் பிரச்னையா… அல்லது என் ஓட்டுதல் பிரச்னையா?

– திருமூர்த்தி, திண்டுக்கல்.

இது ஒரு நல்ல கேள்வி. பொதுவாக, மலை இறக்கங்களில் கார் ஓட்டும்போது, நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறு இதுதான். அதாவது, பிரேக் பெடலில் காலை வைத்துக்கொண்டே கார் ஓட்டுவோம். இதனால், பிரேக் டிரம்களும் டிஸ்க் பெடல்களும் சூடாகி, ஜாம் ஆகிவிடும். அதனால், உங்கள் பிரேக் பழுதடைந்ததுபோல் உங்களுக்குத் தெரியும். ஆனால், இது முழுக்க முழுக்க உங்கள் டிரைவிங்கால் ஏற்படும் பிரச்னைதான். கார்களின் தயாரிப்புப் பிரச்னை இல்லை. அப்படி பிரேக் சூடாகும் நேரத்தில், ஏதாவது ஒரு வளைவில் பாதுகாப்பாக காரை நிறுத்தி விட்டு, சூடாக ஒரு டீ/ஸ்நாக்ஸ் அடித்துவிட்டுக் கிளம்புங்கள். எல்லாம் பக்காவாகி விடும்.

மலை இறக்கங்களில் இறங்கும்போது, சிலர் ஜர்ரென 4 அல்லது 5–வது கியர்களில் இறங்குவார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயம்; கார் உங்கள் கன்ட்ரோலில் இருக்காது என்பதைத் தாண்டி, நீங்கள் பிரேக் பிடித்தபடியேதான் ஓட்டிக் கொண்டிருப்பீர்கள். இதனால்தான் இந்த பிரேக் பழுதடையும் பிரச்னை ஏற்படுகிறது. இறக்கங்களில் 2–வது கியரைப் பயன்படுத்துவதுதான் நல்லது. தேவையானால் மட்டும் 3–வது கியருக்கு வாய்ப்பளிக்கலாம். முடிந்தவரை பிரேக்கில் கால் வைத்தபடி ஓட்டுவதைத் தவிர்க்கலாம். ஆனால், கன்ட்ரோல் தேவை. இன்னும் சிலர் எரிபொருளை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று நியூட்ரலிலோ, இன்ஜினை ஆஃப் செய்துவிட்டோ இறங்குவார்கள். இந்த மாதிரி நேரங்களில் உங்கள் காரின் பிரேக், 60%தான் வேலை செய்யும். இது எல்லாவற்றையும்விட பேராபத்து என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பேடில் ஷிஃப்டர்கள்
பேடில் ஷிஃப்டர்கள்

எனக்கு ஒரு சந்தேகம். கார்களில் பேடில் ஷிஃப்டர்கள் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்? விரிவாகச் சொல்லுங்களேன்.

– நிஜார் அஹமது, திருப்பத்தூர்.

பே டில் ஷிஃப்டர்களை ஆட்டோமேட்டிக் கார்களில் மட்டும்தான் வழங்குவார்கள். இந்த பேடில் பட்டன்கள், ஸ்டீயரிங் வீலிலேயே, பின் பக்கத்தில் பொருத்தியிருப்பார்கள். + சிம்பல் இருந்தால், கியரைக் கூட்ட! -சிம்பல் இருந்தால் கியரைக் குறைக்க. ஆட்டோமேட்டிக் கார்களில் கியர் லீவரை `M’ (Manual) மோடுக்குத் தள்ளிவிட்டு, பேடில் ஷிஃப்டர்களைப் பயன்படுத்தலாம். இது டிரைவிங்கில் ஒரு ஃபன்னை ஏற்படுத்தும் என்பது நிஜம். நெடுஞ்சாலைகளில் ஓவர் டேக் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரும்போது உடனடியாக, வேகத்தை உடனடியாகக்கூட்ட பேடில் ஷிப்டர்கள் பயன்படுத்தப் படும்.

குறிப்பாக, ஏற்றமான மலைச் சாலைகள் – ஹேர்பின் பெண்டுகளில் திரும்பும்போது பேடில் ஷிஃப்டர்களைப் பயன்படுத்தி ஓட்டிப் பாருங்கள். கார் உங்கள் கன்ட்ரோலில் இருக்கும். ஈரமான சாலைகளில் கார் ஓட்டும்போதும், கார் அதிக கிரிப்புடன் இயங்கும்.

நெடுஞ்சாலைகளில் சடர்ன் பிரேக்கின்போது, சட்டெனக் கியரைக் குறைக்க இந்த பேடில் ஷிஃப்டர்களைப்போல் உற்ற நண்பன் வேறொன்றுமில்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில், நீங்களாக மேனுவலாக கியர் மாற்றுவதால், இதில் மைலேஜில் மட்டும் லேசான தொய்வு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஹோண்டா சிட்டி, ஹோண்டா அமேஸ், டொயோட்டா யாரிஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வாகன் டி–ராக், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் போன்ற ஆட்டோ மேட்டிக் கார்களில் பேடில் ஷிஃப்டர்கள் உண்டு.

ஜாவா பெராக்
ஜாவா பெராக்

நான் ஒரு ஜாவா லவ்வர். என் நண்பன் ஜாவா 42 பைக் வைத்திருக்கிறான். நாங்கள் இருவரும் அடிக்கடி ஜாவாவில் கோவா சென்று வருவோம். நான் ஸ்ப்ளெண்டர் பைக்தான் பயன்படுத்தி வருகிறேன். ஜாவாவுக்கு அப்கிரேட் ஆகலாம் என்று நினைக்கிறேன். என் நண்பன், பெராக் பற்றிச் சொன்னான். அதற்காகத்தான் காத்திருக்கிறேன். பெராக் வாங்கலாமா?

குகனேஷ், வாலாஜாபேட்டை.

ஜாவா பெராக் பற்றி கடந்த இதழில் சொல்லியிருந்தோம். ஜாவா பைக்குகள் நம்பகத்தன்மைக்குப் பெயர் போனவை. இந்தியாவின் விலை குறைந்த பாபர் பைக்கும் பெராக்தான். ட்ரையம்ப் போனவில் பாபர் பைக்கின் விலையில், நீங்கள் பத்து பெராக் பைக் வாங்கிவிடலாம் என்பது நிதர்சனம். ஆனால், கேள்வியில் நீங்கள் உங்கள் நண்பரோடு ஒன்றாக, ஒரே பைக்கில் லாங் டிரைவ் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். முதலில் ஒரு விஷயம் – பெராக் என்பது சிங்கிள் க்ரூஸர். அதாவது, இதில் பில்லியன் சீட் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜாவாவில் ஆக்சஸரீஸ் ஃபிட்டிங் உண்டு என்றாலும், அதில் கிராப் ரெயில், இன்ஜின் கார்டு, க்ராஷ் கார்டு, பார் எண்டு மிரர்ஸ் போன்றவை வேண்டுமானால் வரும். பில்லியன் சீட்டைப் பற்றித் தகவல் இல்லை. ராயல் என்ஃபீல்டு மாதிரி MIY (Make It Yourself) ஸ்கீம் இருந்தாலாவது பரவாயில்லை. இதில் ரைடிங் தரமும் கொஞ்சம் சுமாராகவே இருக்கிறது. காரணம், இதன் சஸ்பென்ஷன் டிராவலை ஜாவா 42-யை விட நன்கு குறைத்திருக்கிறார்கள். இதன் கி.கிளியரன்ஸும் ரொம்பக் குறைவு. வெறும் 145 மிமீதான்.

உங்களுக்கு இந்த செக்மென்ட்டில் மீட்டியார் செட் ஆகுமா என்று டிரைவ் செய்து பார்க்கவும். MIY திட்டத்தில் சேடில் பேக் முதல் கலர் வரை எல்லாமே உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.மீட்டியாரிலும் கிட்டத்தட்ட இதே இன்ஜின் அளவுகோல்கள்தான் என்பதால், பெர்ஃபாமன்ஸில் உங்களுக்கு எந்தவித தொய்வும் இருக்காது. இதுவும் ஒரு க்ரூஸர் என்பதால், லாங் டிரைவுக்கு மீட்டியார் ஓகேதான் என்றே தோன்றுகிறது.