கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

Renault Kiger
பிரீமியம் ஸ்டோரி
News
Renault Kiger

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

எனக்கு எஸ்யூவிகளின் மேல் ப்ரியம். பட்ஜெட் பிரச்னையால், 5 ஆண்டுகளுக்கு முன்பு க்விட் க்ளைம்பர் வாங்கினேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்போது ஒரு காம்பேக்ட் எஸ்யூவிக்கு அப்டேட் ஆக நினைக்கிறேன். எனக்கு ரெனோ பிடித்துவிட்டது. அதிலேயே போகலாம் என்றிருக்கிறேன். ஒரு நல்ல ஐடியா சொல்லுங்கள்.

- திருச்சி துரைராஜ்

ரெனோவில் க்விட்டைத் தவிர்த்து விட்டால், இருப்பது மூணே மூணு கார்கள்தான். டஸ்ட்டர், ட்ரைபர், கிகர்.

டஸ்ட்டரை இந்தப் போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளலாம். காரணம், இது காம்பேக்ட் எஸ்யூவி இல்லை. மிட்சைஸ் எஸ்யூவி. மேலும், டஸ்ட்டரின் டிசைன் இப்போது அவுட்டேட்டட் ஆகிவிட்டது. இதில் எர்கானமிக்ஸ் சிக்கல்கள் இருக்கும். உதாரணத்துக்கு, பாட்டில் ஹோல்டர்கள் போன்ற பிராக்டிக்காலிட்டி குறைவு.

ட்ரைபர் ஒரு எஸ்யூவி இல்லை. இது ஒரு எம்யூவி. காம்பேக்ட் சைஸில் ஒரு 7 சீட்டர் கார். அதனால், விலை கையைக் கடிக்காது. பின் வரிசை இடவசதி பெயருக்குத்தான் இருக்கும். `பார்க்க தக்கையாக இருக்கிறதே; பாதுகாப்பில் சொதப்புமோ’ என்ற குறையை நீக்கிவிட்டது ட்ரைபர். ஆம், குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில், ட்ரைபர் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது. ஆனால், குழந்தைகள் பாதுகாப்பில் 3 ஸ்டார்தான். 7 சீட்டர் என்பதால், இதன் கி.கிளியரன்ஸை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம் (182மிமீ). ட்ரைபர் வாங்கியவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். எந்தக் குறையும் இதுவரை சொல்லவில்லை.

கைகர், ரெனோவின் புத்தம் புது காம்பேக்ட் எஸ்யூவி. 4 மீட்டருக்குட்பட்டதால், விலை பெரிதாக இல்லை. ரெனோ நிஸானின் CMF-A+ ப்ளாட்ஃபார்மில் தயாரானது என்பதால், பில்டும் பக்காவாக இருக்கும். இது சாதாரண எஸ்யூவி போல் இல்லை; பார்ப்பதற்கு கூபே ஸ்டைல் எஸ்யூவியாக இருக்கிறது. இதன் டிசைன் நன்றாகவே இருக்கிறது. டஸ்ட்டர் போல் இல்லாமல், இதில் எக்கச்சக்க இடவசதியும் உண்டு. இரட்டை க்ளோவ் பாக்ஸ்கள், முழங்கை வைக்கும் இடத்தில் சென்டர் ஸ்டோரேஜ் பாக்ஸ், 60:40 ஸ்ப்ளிட் சீட், 405 லிட்டர் பூட் ஸ்பேஸ் என்று செம ப்ராக்டிக்கலாக இருக்கிறது.

வசதிகளும் ஓகே! இதன் டாப் எண்டில் கீலெஸ் என்ட்ரி, Arkamys 3D சரவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பவர்டு ஃபோல்டிங் மிரர்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளேவுக்கு ஒயர்லெஸ் சார்ஜிங் என்று கலக்குகிறது. என்ன கிகரில் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், கனெக்டட் வசதிகள் போன்றவை கிடையாது.

நீங்கள் கிகரைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த விஷயத்தில்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் 72 bhp கொண்ட NA 1.0 லிட்டர் (ட்ரைபரில் இருப்பது), 100bhp வெளிப்படுத்தும் டர்போ (மேக்னைட்டில் இருப்பது) என இரண்டு பெட்ரோல் இன்ஜின்கள் உண்டு. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இருக்கிறது. கிகரில் டீசல் கிடையாது என்பதை நினைவில் கொள்க. கொஞ்சம் ஆவரேஜான நல்ல மைலேஜுக்கு மேனுவல் கியர்பாக்ஸ் சூட் ஆகும். இதில் டிரைவிங் மோடுகள் கொடுத்திருப்பது நல்ல விஷயம். என்ன, இதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டில் மட்டும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம். ஆனால், இது பெரிய குறையாக இல்லை.

இதன் ரைடிங்கும் அற்புதம். இதன் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங், கிகரை பார்க் செய்வதற்கு ஈஸியாகவே இருக்கிறது. அதேபோல் ஹைவேஸிலும் நல்ல நிலைத்தன்மை கிடைக்கிறது. பாடிரோலும் பெரிதாகப் பயமுறுத்தவில்லை. RXE, RXL, RXT, RXZ என 4 வேரியன்ட்களில் - ஆன்ரோடு சுமார் 6.69 லட்சத்தில் இருந்து 11.5 லட்சம் வரை கிடைக்கிறது கிகர். மேக்னைட் போலவே விலை குறைந்த ஒரு காம்பேக்ட் எஸ்யூவி, கிகர்தான். கிட்டத்தட்ட ஒரு ப்ரீமியமான i20-ல் இருக்கும் அத்தனை வசதிகளும் கிகரில் இருக்கின்றன. சுமாரான பெர்ஃபாமன்ஸ் ஓகே என்றால், CVT-யை AMT-யே உங்கள் பட்ஜெட்டுக்குச் சரியாக இருக்கும். உங்களுக்கு க்விட் பிடித்திருந்தால், நிச்சயம் கிகர் பிடிக்கும். ஏனென்றால், இது பெரிய XL சைஸ் க்விட்.

மோட்டார் கிளினிக்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வாங்கலாம் என்றிருக்கிறேன். எனக்கு நெக்ஸானின் பில்டு குவாலிட்டியில் இருந்து டிரைவிங், ரேஞ்ச் வரை எல்லாமே பிடித்திருக்கிறது. எனக்கு இருக்கும் ஒரே பிரச்னை - அதிலுள்ள ஹாலோஜன் ஹெட்லைட்டுகள்தான். இதில் டாப் எண்டில்கூட LED இல்லை என்கிறார்கள். எனக்கு நெக்ஸானில் முழுக்க LED ஹெட்லைட்ஸ் பொருத்த வேண்டும் என்று ஆசை. டீலரிடம் கேட்டால், `ஐடியா இல்லை; உங்கள் இஷ்டம்’ என்கிறார்கள். LED லைட்ஸ் பொருத்தலாமா? அல்லது இதில் பிரச்னை உண்டா? பேட்டரி சீக்கிரம் காலியாகுமா? வாரன்ட்டி அடி வாங்குமா? எனக்குத் தெளிவான பதில் கூறுங்கள்.

-அப்துல் ஹமீது, கோவை.

டாடா நெக்ஸான் EV-ல் XM, XZ+, XZ+LUX என மொத்தம் மூன்று வேரியன்ட்கள் இருக்கின்றன. இந்த மூன்றுக்குமே ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் செட்-அப் கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் இதில் LED பல்புகள் மாற்றுவது சுலபம்தான். ஆனால், வெளிச்சம் பீய்ச்சி அடிப்பதில் (Illumination) ஒரு ஒழுங்கு இருக்காது. சரியான வெளிச்சம் கிடைக்காது. காரணம், அதில் உள்ள புரொஜெக்டர் செட்-அப்.

மற்றபடி இதனால், பேட்டரி டிரெய்ன் ஆகிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை. காரணம், எலெக்ட்ரிக் வாகனங்களில் எலெக்ட்ரிக்கல் சமாச்சாரங்கள் முழுவதும் DC மோட்டார் மின்சாரத்தில்தான் இயங்கும். எல்லா வாகனங்களிலும் இதற்கென எக்ஸ்ட்ராவாக 12V கொண்ட சாதாரண லெட்ஆசிட் பேட்டரி வைத்திருப்பார்கள். இது இன்ஜின் பே-வில் இருக்கும். இப்போதுள்ள ஹைபிரிட் வாகனங்களிலேயே இரட்டை பேட்டரிதான் கொடுத்திருப்பார்கள். எனவே, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நிச்சயம் இந்த லெட்ஆசிட் பேட்டரியும் இருக்கும்.

LED பல்புகளை ஓர் அழகுணர்ச்சிக்காகப் பொருத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்லிவிடுகிறோம். LED வெள்ளை பல்புகளைவிட மஞ்சள் பல்புகள்தான் Illumination-ல் ஒரு படி மேலே! என்ன, அது HID (High Intensity Discharge) லைட்டுகளாக இருந்தால் ஓகே! கூடவே, எலெக்ட்ரிக் பாகங்களில் கை வைத்தால், காரின் வாரன்ட்டியிலும் சிக்கல் வரத்தான் செய்யும். எனவே, எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி முடியும்வரை இந்த ஸ்டாண்டர்டு பல்புகளையே வைத்து ஓட்டுங்களேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

மோட்டார் கிளினிக்

நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜீனியர். இந்த லாக்டெளனை முன்னிட்டு சொந்த ஊரில்தான் ஒர்க் ஃப்ரம் ஹோம். எனது கேடிஎம் டியூக்கையும், ஹூண்டாய் காரையும் வெளியே எடுக்கவே இல்லை. அவை சென்னையில் நான் தங்கும் அறையில்தான் இருக்கின்றன. நான் வேலைக்குப் போவதற்கு அடுத்த மாதம் ஆகிவிடலாம். வாகனத்தை நீண்ட நாள் கழித்து எடுக்கும் எனக்கு லாக்டெளன் பராமரிப்பு டிப்ஸ் தேவை.

- ராகேஷ்குமார், நாகர்கோவில்.

நீங்கள் ஊரில் இருப்பதால், பைக்குக்கு பெட்ரோல் போட்டு ரொம்ப நாட்களாகி இருக்கும். முதல் வேலையாக, தயவுதாட்சண்யம் பாராமல் முழுவதுமாக டிரெய்ன் செய்வது நல்லது. காரணம், ரொம்ப நாட்களானதால், அந்த பெட்ரோல் ஜெல்லி மாதிரி இருகிப் போயிருக்கும். இதனால் ஸ்டார்ட்டிங் ட்ரபுள் ஏற்படும். கார்களை இதனால்தான் தினமும் ஸ்டார்ட் செய்து ஐடிலிங்கிலாவது வைக்க வேண்டும் என்கிறார்கள். அதற்குத்தான் டேங்க் ஃபுல்லாக இருந்தால் நல்லது.

நாளைக்குத்தான் கிளம்பணும் என்றால், ஆபீஸுக்குக் கிளம்பும்போதுதான் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றில்லை; முந்தின நாளே அதற்கான ஆயத்தங்களைச் செய்து விடுங்கள்.

ரொம்ப நாட்கள் நின்றிருந்ததால், மொத்த வாகனத்தின் எடையையும் டயர்கள் தரையில் தாங்கி அழுத்திப் பிடித்திருக்கும். இதனால் காற்று குறைந்து ஃப்ளாட் டயர் ஏற்பட்டிருக்கும். எனவே, முதல் வேலையாக பெட்ரோல் பங்க்குக்குச் சென்று முதலில் காற்றை நிரப்புங்கள்.

பைக்கை, எடுத்தவுடனேயே பட்டன் ஸ்டார்ட் செய்து படுத்தி எடுக்காதீர்கள். கிக் ஸ்டார்ட் செய்து, 5 நிமிடங்கள் வரை ஐடிலிங்கில் விட்டு அப்புறம் கிளம்புங்கள். அதேபோல் காருக்கு என்றால், பேட்டரி எந்த கண்டிஷனில் இருக்கும் என்று தெரியாது. அதனால், காரை 15 - 20 நிமிடங்கள் ஐடிலிங்கில் விட்டுக் கிளப்புங்கள்.

காருக்குள்ளே கெட்ட காற்று சுற்றும். எனவே ஏசி புளோயர், ஹெட்லைட் எல்லாவற்றையும் ஆஃப் செய்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்யுங்கள். எல்லா ஜன்னல்களையும் இறக்கிவிட்டு, 5 நிமிடம் புளோயரை மட்டும் ஓடவிட்டு, அப்புறம் ஜன்னலை ஏற்றிவிட்டு ஏசியை ஆன் செய்யுங்கள்.

ஃபுட் பெக், சாவி துவாரம், செயின் ஸ்ப்ராக்கெட் எப்படியும் நிச்சயம் தூசு, மண் படிந்து இறுக்கமாகி விட்டிருக்கும். கியர் ஆயில் அல்லது செயின் ஸ்ப்ரே அடித்து லூப்ரிகேட் செய்துவிட்டு பைக்கை எடுங்கள்.

கார்களுக்குள் கிருமிகள் இருக்கலாம். ஏசி கார்களில் சானிட்டைஸர் பயன்படுத்துவது சிலருக்கு மூச்சுப் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே சோப் வாட்டர் ஸ்ப்ரே கொண்டு இன்டீரியரைச் சுத்தப்படுத்துதல் நல்லது.

ரெண்டு நாள் காரை ஸ்டார்ட் செய்யவில்லை என்றாலே எலிகள் காருக்குள் கும்மியடிக்க ஆரம்பித்து விடும். எனவே, பானெட்டைத் திறந்து ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள். அதேபோல், சென்டர் கன்ஸோலில் எந்த வார்னிங் சிம்பலும் இல்லாத பட்சத்தில் மட்டும்தான் காரைக் கிளப்ப வேண்டும். எலிகள், ஒயர்களைக் கடித்திருந்தால் நிச்சயம் இன்ஜின் டிஸ்ப்ளே வார்னிங் ஒளிரும். பைக் ஒயர்களையும் எலிகள் விடுவதில்லை. எனவே, கவனம்!

மோட்டார் கிளினிக்

என்னிடம் ஸ்விஃப்ட் பெட்ரோல் இருக்கிறது. 50,000 கிமீ ஓட்டிவிட்டேன். ஸ்விஃப்ட்டில் பூட் பிரச்னையைத் தவிர பெரிதாகக் குறைகள் இல்லை. நான் அடுத்த கார் வாங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறேன். எனக்கு பூட் ஸ்பேஸ் அவசியம்; கிரவுண்ட் கிளியரன்ஸும் 200 மிமீ இருக்க வேண்டும். காரணம், எங்கள் வீட்டு பார்க்கிங் கொஞ்சம் உயரமான ஏரியா. எனவே, செடான்கள் சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். எஸ்யூவிதான் செட் ஆகும். மாதம் 600 கிமீ-யாவது ஓட்டிவிடுவேன். கொஞ்சம் வசதிகளும் இருந்தால் நல்லது. டீசன்ட்டான மைலேஜும் வேண்டும். பராமரப்பும் சர்வீஸும் சிக்கல் இருக்காதபடி இருக்க வேண்டும். 10 - 11 லட்சம் பட்ஜெட்டுக்குள் நச்சென ஒரு எஸ்யூவி சொல்லுங்கள்.

- முஹமது ஜலாலுதீன், மெயில்.

உங்கள் பட்ஜெட்டில் பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட், டஸ்ட்டர், வென்யூ, சோனெட் போன்ற எஸ்யூவிகள் வருகின்றன. இதில் பிரெஸ்ஸா - பராமரிப்பில் கில்லி. கி.கிளியரன்ஸும் மிகச் சரியாக 200 மிமீ. ஆனால், நீங்கள் கேட்கும் வசதிகளும் இன்டீரியரும் பாதுகாப்பும் இதில் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஓட்டுதலில் டீசல் போல் இந்த பிரெஸ்ஸா இல்லை என்றும் சொல்கிறார்கள்.

ஃபோர்டின் எக்கோஸ்போர்ட்டும் சரியான ஆப்ஷன். இதன் கட்டுமானமும், ஓட்டுதலும் வாவ் ரகம்! ப்ரீமியம் 8 இன்ச் டச் ஸ்க்ரீனுடன் இதன் ஆல் பிளாக் தீம் இன்டீரியர் சூப்பர். இதன் கி.கிளியரன்ஸும் உங்கள் பார்க்கிங்குக்குப் பிரச்னை வராது. இதன் பூட்ஸ்பேஸ் 352 லிட்டர். டெயில்கேட்டில் ஸ்டெஃப்னி இல்லாத எக்கோஸ்போர்ட்தான் இப்போது லேட்டஸ்ட் வரவு. மாருதி அளவுக்கு இதன் சர்வீஸ் நெட்வொர்க் இல்லை. எனவே, சர்வீஸில் மட்டும் கொஞ்சம் பொறுக்க வேண்டும்.

டஸ்ட்டர் மிட் சைஸ் எஸ்யூவி. இந்த அவுட்டேட்டட் மாடல் உங்களுக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை. அடுத்ததாக, சோனெட் மற்றும் வென்யூ உங்கள் பட்ஜெட்டில் மிகச் சரியாக இயைந்து போகிறது. இரண்டுமே கொரியன் கார்கள். லோகோதான் வேறு. மற்றபடி இரண்டுக்குமே ஒரே ஜீன்தான். வசதிகளிலும் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. இருந்தாலும் சோனெட்டில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் வென்யூவில் மிஸ்ஸிங். உதாரணத்துக்கு 10.25 டச் ஸ்க்ரீனில் ஆரம்பித்து 6 காற்றுப்பைகள், 392 லிட்டர் பூட்ஸ்பேஸ், எல்இடி லைட்கள் வரை சொல்லலாம். ஆனால், வென்யூதான் பெர்ஃபாமன்ஸில் சோனெட்டைவிட கில்லி. மேலும் பேடில் ஷிஃப்டர்கள் இருப்பது ஜாலி இதன் பூட் ஸ்பேஸ் 350 லிட்டர். கி.கிளியரன்ஸ் 190 மிமீ. சோனெட் நல்ல சாய்ஸ்தான்; ஆனால், வென்யூவைவிட நீங்கள் சுமார் 1.5 லட்சம் கூடுதலாகச் செலவழிக்க வேண்டியிருக்கும். பட்ஜெட் பிரச்னை இல்லை என்றால், சோனெட். இல்லையென்றால் வென்யூ! மற்றபடி ஆட்டோமேட்டிக் / மேனுவல் - இது உங்கள் சாய்ஸ்!