ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்கள்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

ஜாகுவார் மட்டுமல்ல; பல ப்ரீமியம் நிறுவனங்களின் திட்டமே எலெக்ட்ரிக் மொபிலிட்டிக்கு மாறுவதுதான். 2030–க்குள் வால்வோ, ஜாகுவார் போன்ற நிறுவனங்களில் இருந்து பெட்ரோல்/டீசல் கார்கள் எதுவுமே வருவதற்கு வாய்ப்பில்லை.

எனக்கு ஜாகுவார் மிகவும் பிடித்த கார். அதில் XEதான் எனது சாய்ஸ். ஆனால், ஜாகுவார் XE–ன் தயாரிப்பை நிறுத்தப் போவதாக ஓர் அதிர்ச்சிச் செய்தி படித்தேன். இது உண்மையா? ஜாகுவாரின் திட்டம்தான் என்ன?

– ஆலன், கோயம்புத்தூர்.

இப்போதைக்கு XJ காரின் தயாரிப்பை மட்டும் நிறுத்தியுள்ளது ஜாகுவார். ஆனால், XE–ன் தயாரிப்பு பற்றி அஃபிஷியலாக எந்த அறிவிப்பும் இல்லை.

போன ஆண்டு ஜூன் மாதமே XE, XF, F-Pace டீசல் போன்ற கார்களின் டீசல் லைன்–அப்பை நிறுத்தி விட்டது ஜாகுவார். இப்போதே அமெரிக்காவில் XE கார் ஓடவில்லை. XF மாடலைத்தான் ஃபேஸ்லிஃப்ட் செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறது. 2019–ல் இந்தியாவில் XE மாடலை ஒரு ஃபேஸ்லிஃப்ட் செய்தது. ஆனால், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி A3 போன்ற கார்களுடன் போட்டி போட முடியவில்லை XE காரால். 2025–ல் இருந்து லேண்ட்ரோவர் மற்றும் ஜாகுவாரின் ஒவ்வொரு மாடல்களும் எலெக்ட்ரிக் சொகுசு கார்களாக வரவிருக்கின்றன. லேண்ட்ரோவரின் வரவிருக்கும் மாடல் கார்கள் MLA (Modular Longitudinal Architecture) ப்ளாட்ஃபார்மில்தான் தயாராக இருக்கின்றன. இதில் IC (Internal Combustion) இன்ஜின் மாடல்களோடு எலெக்ட்ரிக் ஹைபிரிட் மாடல்கள் வரும்.

ஜாகுவார் மட்டுமல்ல; பல ப்ரீமியம் நிறுவனங்களின் திட்டமே எலெக்ட்ரிக் மொபிலிட்டிக்கு மாறுவதுதான். 2030–க்குள் வால்வோ, ஜாகுவார் போன்ற நிறுவனங்களில் இருந்து பெட்ரோல்/டீசல் கார்கள் எதுவுமே வருவதற்கு வாய்ப்பில்லை. போன ஆண்டே ஜாகுவாரின் புது CEO Thierry Bollore இப்படிச் சொல்லிவிட்டார். ‘‘2026–க்குள் டீசல் லைன்அப் முழுவதையும் பேஸ்–அவுட் செய்யும் திட்டம் இருக்கிறது. ஹைட்ரஜன் செல் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் லைன்அப்பில்தான் கவனம் செலுத்துவோம். 2030–க்கு மேல் ஜாகுவாரில் இருந்து ஜீரோ எமிஷன் என்பதுதான் திட்டம்!’’ என்று கூறியிருக்கிறார்.

ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது என் விருப்பம். டிவிஎஸ் என்டார்க் 125 மிகவும் பிடித்திருக்கிறது. கூடவே சுஸூகியின் அவினிஸ் ஸ்கூட்டர் பற்றியும் கேள்விப்பட்டேன். அதுவும் ஓகே! இரண்டுமே பிடித்திருக்கிறது. பெர்ஃபாமன்ஸ்… அழகு… ஸ்போர்ட்டினெஸ் எனக்கு முக்கியம். எது வாங்கலாம்?

- குகனேஷ், தஞ்சாவூர்.

அவினிஸ், ஸ்கூட்டர் செக்மென்ட்டுக்குப் புது வரவு. இதன் பவர், 8.9bbp. எடை குறைவான ஸ்கூட்டர் என்பதால், இதைக் கையாள்வது அருமையாக இருக்கிறது. சுஸூகி இன்ஜினின் ஸ்மூத்னெஸ்… வாவ்! இதன் மைலேஜ், பிரமாதமாக இருக்கிறது. 38 – 42 கிமீ வரை சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள். இரண்டிலுமே அண்டர் சீட் வசதி 22 லிட்டர். இரண்டுமே ஸ்டைல் மற்றும் பல விஷயங்களில் செமையாக இருக்கின்றன. மற்றபடி இதன் பராமரிப்புச் செலவைத் தவிர, எல்லா விஷயங்களிலும் அவினிஸ் நல்ல ரேட்டிங் வாங்குகிறது. மற்ற போட்டியாளர்களைவிட அவினிஸில் சில ஆயிரங்கள் விலை மட்டும்தான் கொஞ்சம் அதிகம்.

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்கள்!

என்டார்க்கில் ரேஸ் XP எனும் வெர்ஷன் நிஜமாகவே செம ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இதுதான் இப்போதைக்கு வேகமான ஸ்கூட்டர்களில் ஒன்று என்று சொல்லலாம். அவினிஸைவிட பவரும் டார்க்கும் கொஞ்சம்போல அதிகம். புளூடூத் அம்சமும், ஜிபிஎஸ் சிஸ்டமும் அம்சமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அவினிஸைவிட லேசாக எடை அதிகமாக இருந்தாலும், இதன் ஹேண்ட்லிங் அற்புதமாக இருக்கிறது.

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்கள்!

என்டார்க்கை ஓட்டியவர்கள், இதன் சஸ்பென்ஷன் பற்றிச் சிலாகிக்கிறார்கள். சுஸூகியை விட டிவிஎஸ், இதற்கு நல்ல வாரன்ட்டியும் தருகிறது. என்ன, இதன் மைலேஜ்தான் கொஞ்சம் சுமாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். ப்ளாஸ்டிக் தரமும் கொஞ்சம் மேம்படலாம் என்றே தோன்றுகிறது. மற்றபடி விலைக்கேற்ற ஒரு தரமான, பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டர், டிவிஎஸ் என்டார்க் 125.

எங்களைக் கேட்டால்… இரண்டையும் ஓட்டிப் பார்த்துவிட்டு, உங்கள் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு முடிவு எடுக்கலாம்.

முதல் கார் வாங்க இருக்கிறேன். இந்திய நிறுவனம்தான் பிடிக்கும். டாடாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அல்ட்ராஸ் அல்லது டியாகோ இரண்டும்தான் எனது சாய்ஸ். ஆனால், எனக்கான சாய்ஸ் எது என்று தெரியவில்லை. தெளிவுபடுத்துங்கள்!

– கருப்பசாமி, ஆண்டிபட்டி.

நீங்கள் பெட்ரோல்/டீசல், மேனுவல்/ஆட்டோமேட்டிக் எது என்று சொல்லவில்லை. டியாகோவில் டீசல் இல்லை என்பதால், இங்கே மேனுவல் பெட்ரோலையே எடுத்துக் கொள்ளலாம். டியாகோவைவிட கொஞ்சம் ப்ரீமியம் லுக் அல்ட்ராஸில் உண்டு. டியாகோவில் ஒரு பட்ஜெட் லுக் தெரியும். அல்ட்ராஸ், ப்ரீமியம் ஹேட்ச்பேக் போல் ஜொலிக்கிறது.டியாகோவைவிட பூட் ஸ்பேஸும் பக்கா! (242 / 345லி). நீளம் குறைவாக இருப்பதால், இடவசதியிலும் டியாகோ அல்ட்ராஸைவிட சுமாராகத்தான் இருக்கும். 100 மிமீ வீல்பேஸ் அல்ட்ராஸில் அதிகம்.

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்கள்!

கி.கிளியரன்ஸில் மட்டும் அல்ட்ராஸ் டியாகோவைவிட 5 மிமீ குறைவு. மற்றபடி இரண்டிலுமே ஒரே 3 சிலிண்டர், 1.2 லி ரெவோட்ரான் இன்ஜின்தான். இதில் மைலேஜ் கிங் என்றால், டியாகோதான். 18 கிமீ தருகிறது என்கிறார்கள். அல்ட்ராஸ் ஆவரேஜாக 15 கிமீ தருகிறது. கொஞ்சம் ஓட்டுதலில் ஃபன் வேண்டுமென்றால், அல்ட்ராஸின் 1.5 லி, 4 சிலிண்டர் டர்போ வேரியன்ட்டைப் பாருங்கள்.

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்கள்!

ஆனால், மைலேஜில் கொஞ்சம் அடி விழலாம். வசதிகளிலும் சொகுசிலும் அல்ட்ராஸ் கொஞ்சம் எக்ஸ்ட்ரா. பாதுகாப்பில் இரண்டுமே கில்லிகள்தான்; இருந்தாலும் குளோபல் என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார் அல்ட்ராஸ். நெடுஞ்சாலை நிலைத்தன்மையில் இதை உணரலாம். டியாகோ 4 ஸ்டார் ரேட்டிங். 1 லட்சம் வரை எக்ஸ்ட்ரா விலை கொடுக்க ரெடியாக இருந்தால், அல்ட்ராஸ்தான் சரியான சாய்ஸ்!

வெளியூர்களுக்குக் காரில் போனால்… டோல்கேட்தான் பெரும் சிக்கலாக இருக்கிறது. ஃபாஸ்ட் டேக் வந்தபிறகும், பீக் அவர்ஸில் காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது. டோல்கேட்டில் ஃபாஸ்ட் டேக்குக்கு முடிவு வரப் போகிறது என்கிறார்களே… இது உண்மையா? ஜிபிஎஸ் சிஸ்டம் வருவதாகக் கேள்விப்பட்டேன். அது எப்படி இயங்கும்?

- ஜான் ஆபிரகாம், ஈரோடு.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, டவுன் பஸ்ஸில் சில்லறை இல்லாமல் போனால் எப்படி கண்டக்டருக்குப் பயப்படுவோமோ, அதே மாதிரி நெடுஞ்சாலைகளில் கார்களில் பயணிக்கும்போது, டோல்கேட்களில் சில்லறைக் காசு இல்லையென்றால் அள்ளு விடும். மோட்டார் விகடனில் நாமேகூட ‘கார்களின் Cubby Holders அல்லது க்ளோவ்பாக்ஸில் முடிந்தளவு சில்லறைப் பணம் வைத்துக் கொண்டால் நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டில் சட்டுனு புறப்படலாம்’ என்பதை வலியுறுத்தி இருக்கிறோம். அட, சொல்லப்போனால் டோல்கேட்டில் பணம் கட்டுவதைக் கருத்தில் கொண்டே சில கார்களில் சில்லறை வைப்பதற்காகவே சில உண்டியல் சைஸ் ஹோல்டர்களை டிசைன் செய்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.

அதன் பிறகு, பிப்ரவரி 2021 முதல் Fastag எனும் எளிய நடைமுறையைக் கொண்டு வந்தது. Fastag ஸ்டிக்கர் ஒட்டாதவர்கள், இரட்டைக் கட்டணம் அல்லது பெனால்ட்டி கட்ட வேண்டும் என்கிற தண்டனைக்குப் பயந்தே, Fastag ஸ்டிக்கர் ஒட்டினார்கள். சில மாநிலங்களில் 300 விநாடிகளுக்கு மேல் நின்றால், பணம் கட்டத் தேவையில்லை என்று நடைமுறையில் கொண்டு வந்தார்கள். (கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்…)

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்கள்!

இப்போது ஃபாஸ்ட்டேக் சிஸ்டம் வந்தாலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க முடியவில்லை. ‘அட, இதுகூடப் பரவாயில்லை; சோஷியல் மேட்டர், பண்ணிக்கலாம்’ என்று கவுண்டமணி மாதிரி விட்டுக் கொடுத்தாலும், சில டோல் மையங்களில் தொழில்நுட்பக் கோளாறெல்லாம் ஏற்பட்டு, காத்திருப்புக் காலம் கூடுகிறது. இதனால் திணறிப் போன அரசு, வேறு என்ன நடைமுறைப்படுத்தலாம் என்று தாடையைச் சொறிந்தபோது, ஜிபிஎஸ் டோல் ஐடியா உதித்திருக்கிறது. ஜிபிஎஸ் சிஸ்டத்தில் செயல்படும் டோல் கட்டண விதிமுறைகளைக் கொண்டு வரும் திட்டம் பற்றி ஏற்கெனவே அறிவித்து விட்டார், மத்தியப் போக்குரவத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. அதென்ன ஜிபிஎஸ் சிஸ்டம்?

இந்த GPS சிஸ்டத்தை GNSS (Global Navigation Satellite System) என்றும் சொல்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, பெல்ஜியம், ரஷ்யா, செக் குடியரசு, பல்கேரியா என்று பல நாடுகளில் இந்த நடைமுறை இப்போதும் இருந்து வருகிறது. இது GPRS மூலம் இயங்கும் ஒரு நடைமுறை. அப்படியென்றால், ‘எல்லா கார்களிலும் நேவிகேஷன் சிஸ்டம் இருக்க வேண்டுமே’ என்கிறீர்களா? ஆம், இன்னும் சில ஆண்டுகளில் அதையும் கட்டாயப்படுத்தப் போகிறது மத்தியப் போக்குவரத்துத் துறை. எல்லா கார்களிலும் ட்ராக்கிங் சாதனம் அல்லது ட்ரான்ஸ்பாண்டர் பொருத்தப்படுவது கட்டாயமாகலாம்.

இந்த நடைமுறையில் டோல் பிளாஸாக்களே தேவையில்லை என்பதுதான் இங்கே ஹைலைட்டான விஷயம். உங்கள் வாகனம் நெடுஞ்சாலையில் பயணத்தைத் தொடங்கியது முதல், அது குறித்த தகவல்கள் ஜிபிஎஸ் சிஸ்டம் மூலம் பதிவாகத் தொடங்கிவிடும். ஒரு குறிப்பிட்ட கலெக்ஷன் பாயின்ட்டைத் தாண்டியதும், தானாகவே உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். நீங்கள் நெடுஞ்சாலையைவிட்டு நகரத்துக்குள் புகுந்த பிறகு, உங்கள் வாகனம் எத்தனை கிமீ பயணித்திருக்கிறீர்கள் என்பது கணக்கிடப்பட்டு, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்கள்!

இதனால், நெடுஞ்சாலைகளில் டிராஃபிக் நெருக்கடியைத் தவிர்க்கலாம். இது ஜிபிஆர்எஸ் மூலம் இயங்குவதால், உங்கள் வாகனம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், வாகனத் திருட்டு போன்றவற்றைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

இந்த ஜிபிஎஸ் சிஸ்டம் நடைமுறைக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரை ஃபாஸ்ட் டேக்கில் ஃபாஸ்ட்டா போங்க!

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com