
கடந்த சில ஆண்டுகளாகவே, மிட்சைஸ் எஸ்யூவிகளின் எழுச்சியால் மிட்சைஸ் செடான் செக்மென்ட் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும், கார் தயாரிப்பாளர்கள் புதிய மாடல்களைக் களமிறக்குவதில் சுணக்கம் காட்டாமல் செயல்பட்டதைப் பார்க்கமுடிந்தது.
4 தலைமுறைகள், 22 ஆண்டுகள்... மிட்சைஸ் செக்மென்ட்டில் தவிர்க்கமுடியாத காராக `சிட்டி' இருப்பது தெரிந்ததே. ஸ்போர்ட்டியான அதேநேரம் சொகுசான இந்த ஹோண்டா காரை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில்தான், இதர போட்டியாளர்கள் களமிறங்கி வருகிறார்கள். இதனாலேயே சிட்டியின் ஐந்தாவது தலைமுறை மாடலுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. மிட்சைஸ் எஸ்யூவிகளின் எழுச்சியால் மிட்சைஸ் செடான் செக்மென்ட் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும், கார் தயாரிப்பாளர்கள் புதிய மாடல்களைக் களமிறக்குவதில் சுணக்கம் காட்டாமல் செயல்பட்டதைப் பார்க்கமுடிந்தது (யாரிஸ்).

மேலும் BS-6 விதிகளுக்கேற்ப காரை அப்டேட் செய்யும்போது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சில நிறுவனங்கள் தமது செடான்களை ஃபேஸ்லிஃப்ட் செய்துவிட்டார்கள் (வெர்னா, வென்ட்டோ, ரேபிட்). ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பாக, அதாவது கடந்த மார்ச் 16, 2020 அன்றே ஐந்தாம் தலைமுறை சிட்டியை ஹோண்டா இந்தியாவில் காட்சிப்படுத்துவதாக இருந்தது. ஆனால், கொரோனா இந்திய ஆட்டோமொபைல் சந்தையை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சூழலையே மாற்றிவிட்டது. இந்த கார் பற்றிய தகவல்களை இனி பார்க்கலாம்.
1. BR-V மிட்சைஸ் எஸ்யுவியின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை தற்போது விற்பனையில் இருக்கும் சிட்டி பெறும் எனத் தகவல் வந்திருக்கிறது. எனவே புதிய சிட்டி களமிறங்கினாலும், வேறு பெயரில் பழைய சிட்டியின் விற்பனை தொடரலாம். அமேஸ் - சிட்டி - சிவிக் - அக்கார்டு எனத் தனது செடான்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்த முடிவை ஹோண்டா எடுத்திருக்கலாம்.

2. 7 வேரியன்ட்கள் - MT/AT ஆப்ஷன் என வந்திருக்கும் BS-6 சிட்டி, BS-4 மாடலைவிட 9-15 ஆயிரம் ரூபாய் வரை விலையேற்றத்தைக் கண்டுள்ளது (9.91 - 14.31 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம்). இந்த மாடல், கடந்த 2014-ம் ஆண்டில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அநேகமாக புதிய சிட்டியில்தான், BS-6 டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. இது அறிமுகமான பிறகு, பழைய சிட்டியின் விலை குறையலாம்.
3. ஐந்தாம் தலைமுறை சிட்டி, அதே 2,600 மிமீ வீல்பேஸில்தான் கிடைக்கிறது. 6 மிமீ உயரம் குறைந்திருந்தாலும் (1,489 மிமீ), முன்பைவிட 109 மிமீ அதிக நீளம் (4,549 மிமீ) - 53 மிமீ அதிக அகலம் (1,748 மிமீ) என கார் வளர்ந்திருப்பது ப்ளஸ். தாய்லாந்தில் விற்பனையாகும் சிட்டியைவிட, நம் ஊருக்கு வரப்போகும் சிட்டி 11 மிமீ அதிக வீல்பேஸைக் கொண்டுள்ளது. தவிர, காரின் கிரவுண்ட் கிளியரன்ஸிலும் மாறுதல் இருக்கலாம்.

4. ASEAN NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், புதிய ஹோண்டா சிட்டி 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுவிட்டது. எனவே, இந்திய வெர்ஷனும் பாதுகாப்பில் அசத்துவதற்கு வாய்ப்புள்ளது. தாய்லாந்தில் கிடைக்கும் சிட்டி டர்போ (RS வெர்ஷன்), இந்தியாவில் கிடைப்பதற்கான சாத்தியம் குறைவுதான். மேலும் தற்போதைய நான்காம் தலைமுறை மாடலைவிட, அதிக எடையில்தான் புதிய சிட்டி இருக்கும்.
5. டாப் வேரியன்ட்டான ZX-ல் 6 காற்றுப்பைகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ESP, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், Low TPMS, 3 பாயின்ட் சீட் பெல்ட், Lane Watch Camera (சிவிக்கில் இருப்பது) போன்ற பாதுகாப்பு வசதிகள் புதிய சிட்டியில் இருக்கின்றன. தாய்லாந்து மாடலுடன் ஒப்பிட்டால், இந்திய வெர்ஷனின் கேபின் டூயல் டோன் ஃபினிஷில் இருக்கும். அலாய் வீல்களும் புதிது. டேஷ்போர்டில் Brushed Aluminium & Piano-Black வேலைப்பாடும் அதிகம்.

6. 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில், ஆப்பிள் கார் ப்ளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஹோண்டா கனெக்ட் தவிர, Alexa கனெக்ட்டிவிட்டி புதிது. அனலாக் மீட்டரில் 7 இன்ச் கலர் MID & G-Meter இருப்பது செம. கிளைமேட் கன்ட்ரோல் ஏசி கன்ட்ரோல்கள், Rotary Knob வகைக்கே திரும்பிவிட்டன. லெதர் சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், LED ஹெட்லைட் & டெயில் லைட், சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட்கள், 16 இன்ச் அலாய் வீல்கள் என வசதிகள் அதிகம்.
7. டீசல் மாடலைப் பொறுத்தவரை, BS-6 அமேஸில் இருக்கும் அதே 1.5 லிட்டர் i-DTEC டர்போ டீசல் இன்ஜினே சிட்டியிலும் தொடரும். மேலும், சிட்டி வரலாற்றில் முதன்முறையாக, டீசல்-ஆட்டோமேட்டிக் கூட்டணி இதில் இடம்பெறவுள்ளது. ஆனால், அமேஸ் போல இல்லாமல், இங்கே 100bhp பவர் கிடைக்கப்பெறலாம். நான்காம் தலைமுறை சிட்டியை, 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜினுடன் (L15A, 4 சிலிண்டர்) மட்டுமே வாங்கமுடியும்.

8. ஐந்தாம் தலைமுறை சிட்டியில், முற்றிலும் புதிய 1.5 லிட்டர் i-VTEC BS-6 பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்த உள்ளது ஹோண்டா (L15B). முன்பைவிட 1 சிசி (1,498சிசி) மட்டுமே அதிகமாகி உள்ளதால், 2bhp (121bhp) & 0.5kgm (15kgm) மட்டுமே கூடுதலாக வெளிப்படுகிறது. ஆனால், சிட்டியின் வரலாற்றில் முதல்முறையாக, DOHC வால்வ் செட்-அப் & Variable Timing Control (VTC) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
9. V, VX, ZX எனும் 3 வேரியன்ட்களில், புதிய சிட்டியை ஹோண்டா களமிறக்கலாம். பின்னாளில் Mild Hybrid தொழில்நுட்பம் வெளிவரலாம். ஆனால் 122bhp பவர் - 17.3kgm டார்க் தரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், இந்திய சிட்டியில் வருவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். மற்றபடி இந்த காருக்கே உரித்தான நம்பகத்தன்மை - சொகுசு - மைலேஜ் - பர்ஃபாமன்ஸ் - கையாளுமை ஆகியவை தொடரக்கூடும்.

10. முந்தைய மாடலைவிட 30-40 ஆயிரம் ரூபாய் அதிக விலையில் வரப்போகும் புதிய சிட்டி, வென்ட்டோ - வெர்னா - யாரிஸ் - ரேபிட் - சியாஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக வருகிறது. 11.5 - 17.5 லட்சம் ரூபாய், புதிய சிட்டியின் உத்தேச விலையாக இருக்கலாம். சிறப்பான ஆரம்ப கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸ், புதிய பெட்ரோல் இன்ஜினுக்குக் கைகூடியிருக்கிறது. நம் ஊருக்கு ஏற்றபடி இதன் கம்ப்ரஷன் ரேஷியோ வேறுபடும்.