சம்பவம் 1: வேலூரில் ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில், புகை மூட்டத்தில் தந்தையும் மகளும் பலியானார்கள்.
சம்பவம் 2: புனேவில், சும்மா சாலையில் நின்றுகொண்டிருந்த ஓலா ஸ்கூட்டர் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் பரபரப்பு. நல்லவேளையாக யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை.
சம்பவம் 3: திருச்சியில், கடையில் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று ‘பகபக’வெனத் தீக்கு இரையாகிய காட்சி, பதைபதைப்பை உண்டுபண்ணியது.
இவை எல்லாவற்றுக்கும் முன்னரே நடிகர் பார்த்திபன் வாங்கிய ரேவா என்னும் எலெக்ட்ரிக் கார் தீப்பிடித்தது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்தச் செய்திகள் பேரதிர்ச்சியாக இருக்கின்றன. வேலூர்ச் சம்பவம்தான் இதில் வேதனையின் உச்சம். அந்த வேதனை மனசிலிருந்து மறைவதற்குள் அடுத்தடுத்த சம்பவங்கள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றது இன்னும் திகிலாக இருக்கிறது. வீடியோவில் அந்த ஸ்கூட்டர்கள் கொளுந்து விட்டு எரிவதைப் பார்க்கும்போதே நம் இதயமும் பற்றி எரிகிறது.
வேலூர் தந்தை–மகள் பலியான சம்பவத்தில்… ஸ்கூட்டரை சார்ஜ் ஏற்றிவிட்டு உறங்கச் சென்றிருக்கிறார் தந்தை. அது விடிய விடிய சார்ஜ் ஏறியதால் வெப்பம் தாங்காமல் வெடித்துவிட்டது; மின்சார சப்ளையில் ஹை வோல்டேஜால் ஷார்ட் ஷர்க்யூட் ஏற்பட்டது இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பலவிதமாகப் பேசுகிறார்கள்.
ஆனால், இதற்கடுத்த சம்பவங்கள்தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்குவதையே யோசிக்க வைக்கின்றன. சாலையில் / கடையில் சும்மா நின்றுகொண்டிருந்த ஸ்கூட்டர்கள் எப்படி தகதகவெனத் தீப்பிடித்து எரியும்?
Fire protection Research Foundation USA (Part of National Fire Protection Association) என்பது அமெரிக்காவில் உள்ள ரிசர்ச் அமைப்பு. எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பதற்கு – தயாரிப்பாளர்களின் தயாரிப்புச் சிக்கல்கள், (Anode, Cathode, Electrolyte இழைகளின் அமைப்புத்தன்மை) Design Flaws என்று சில காரணங்களைச் சொல்கிறது இந்த அமைப்பு.
நம்மூரில் ஓலா போன்ற நிறுவனங்கள், தங்களது லித்தியம் அயன் பேட்டரிக்கு வழக்கமான NMC (Nickel Manganese Cobalt) கலவையை, கொரியாவிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றன. இவை 150 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலேயே எரியக் கூடிய தன்மையைப் பெற்றவை. டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இதற்காகவே LFP (Lithium Iron Phospate) போன்ற அதிக வெப்பநிலையைத் தாங்கக் கூடிய பேட்டரி செல்களைப் பயன்படுத்துகின்றன. தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் தவறுகளைத் தாண்டி, நம்மிடமும் பல பிரச்னைகள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்!
1. வெயிலில் ரொம்ப நேரம் நிறுத்தாதீங்க!
பெட்ரோல் வாகனங்களை எவ்வளவு நேரம் வெயிலில் நிறுத்தினாலும் பரவாயில்லை; கார்புரேட்டரில் பெட்ரோல் லீக்கேஜ் போன்ற சில காரணங்களைத் தவிர்த்து பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்து குறைவுதான். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களை ரொம்ப நேரம் வெயிலில் நிறுத்தினால் கொஞ்சம் ரிஸ்க். அதுவும் பழைய ஸ்டைல் லெட் ஆசிட் பேட்டரிகளில் ஆசிட் லீக்கேஜ் ஆனால், இன்னும் சிக்கல். இப்போதுள்ள லித்தியம் அயன் பேட்டரிகளிலும் கவனம் தேவை.
2. சார்ஜிங் போடும்போது ஆட்டோ கட் இருக்கிறதா என்று கம்பெனி டீலர்களிடம் கேட்கவும்!
செல்போனை சிலர் விடிய விடிய சார்ஜ் போட்டுத் தூங்கிவிடுவார்கள். இது செல்போனுக்கே ஆபத்து. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இது பெரிய சிக்கல். ஓலா, ஏத்தர் போன்ற பெரும்பான்மையான ஸ்கூட்டர்களுக்கு இப்போது ‘ஆட்டோ கட்’ வசதி வந்துவிட்டன. 6 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ் ஏறும் வாகனங்களை 10 மணி நேரம் வரை சார்ஜ் போடுவது பேட்டரியை உப்ப வைக்க வாய்ப்புண்டு. அதனால், உங்கள் வாகனங்களுக்கு, ஃபுல் சார்ஜ் ஆகிவிட்டால் தானாக சார்ஜிங் கட் ஆகும் ‘ஆட்டோ கட்’ வசதி இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு சார்ஜ் போடவும்.

3. அடிக்கடி சார்ஜ் போடாதீங்க!
நீண்ட நேரம் சார்ஜிங் போட்டு உறங்கப் போவதும் தப்பு; அதேபோல், அடிக்கடி சார்ஜ் போடுவதையும் கம்பெனிகள் ரெக்கமண்ட் செய்வதில்லை. உதாரணத்துக்கு, 25%–ல் இருந்து 70% ஏறியபிறகு, அவசரமாக வெளியே எடுத்துப் போய்விட்டு வந்து, மறுபடியும் 80% வரை போட்டு… மறுபடியும் பயன்படுத்திவிட்டு, மறுபடியும் ஃபுல் சார்ஜ் போடுவது தப்பு. இதனால் பேட்டரியின் லைஃப் சார்ஜிங் சர்க்கிள் குறைந்து வீக் ஆக வாய்ப்புண்டு. முழுமையாக 100% சார்ஜ் ஏற்றிவிட்டுப் பயன்படுத்துவதே நல்லது.
4. பொருத்தமான சார்ஜிங் ஸாக்கெட்கள் பயன்படுத்தவும்!
சிலர் எந்த பவர் ஆம்ப்பிலும் சார்ஜ் போடுவார்கள். இதுவும் தப்பு. உங்கள் ஸ்கூட்டருக்கு 5 AMP சார்ஜிங் ஸாக்கெட்களில் சார்ஜிங் போடலாமா என்பதை உங்கள் வாகனத்தின் ரீடர்ஸ் மேனுவலில் படித்துத் தெரிந்துகொள்ளவும். சிலர் 15Amp ஒயரிங்கில் 5 Amp ஸாக்கெட் பொருத்தி சார்ஜ் போடுவார்கள்; 5 Amp ஒயரிங்கில் 15 Amp ஸாக்கெட் பொருத்தி சார்ஜ் ஏற்றுவார்கள். இதுவும் பேராபத்து. இதனால் ஷார்ட் ஷர்க்யூட் ஆகி பேட்டரி வெடிக்க வாய்ப்புண்டு. எலெக்ட்ரிக் கார் வைத்திருப்பவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5. லாங் டிரைவுக்கு அப்புறம் சார்ஜ் போடாதீங்க!
பெட்ரோல் வாகனங்களைப் பொறுத்தவரை, நீண்ட லாங் டிரைவ் அடிக்கும்போதே எந்த பங்க்கிலும் பைக்கை நிறுத்தி எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இது பொருந்தாது. வாகனத்தை ஓட்டிவிட்டு வந்த கையோடு பேட்டரியில் பிளக்கைச் செருகி சுடச் சுட சார்ஜ் ஏற்றாதீர்கள். இது பேராபத்து. ரைடுக்குப் பின்பு குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளிவிட்டு சார்ஜ் ஏற்றுவது புத்திசாலித்தனம். பேட்டரியைக் கொஞ்சம் கூலாக்கிவிட்டு கூலாக சார்ஜ் ஏற்றுங்கள். (அப்போ ரோடு முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்லாம் வந்து என்ன பிரயோஜனம்னு கேட்கிறீங்களா? ஸ்வாப்பிங் பேட்டரி சிஸ்டம் இருக்கும் ஸ்கூட்டரை வாங்கலாம்!)
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS6. சீட்டுக்கு அடியில் பொருள்களை வைத்து அடைப்பது தப்பு!
எலெக்ட்ரிக் பைக்குகளில் இப்போதைக்கு ஏர்கூல்டு டைப்தான் உண்டு. பெட்ரோல் பைக்குகள்போல், லிக்விட் கூல்டு கிடையாது. பொதுவாக, பேட்டரிகளை சீட்டுக்கு அடியில்தான் ப்ளேஸ்மென்ட் செய்திருப்பார்கள். சிலர் ‘அண்டர்சீட் ஸ்டோரேஜில் இடம் அதிகமா இருக்கே’ என்று அரிசி மூட்டை, காய்கறி போன்ற லக்கேஜ்களை வைத்து பேட்டரிக்குக் காற்றுப் போகவிடாமல் நீண்ட நேரம் மூச்சு முட்ட வைப்பார்கள். இதனாலும், பேட்டரி கோபமாகிச் சூடாக வாய்ப்புண்டு. மற்றபடி ஹெல்மெட் வைத்துக் கொள்வதில் தவறில்லை.

7. லூஸ் கனெக்ஷன்தான் ரொம்ப முக்கியமான காரணம்!
சிலர் வீட்டில் பவர் ப்ளக் பாயின்ட்களை லூஸாகவே வைத்திருப்பார்கள். திருகுகள் தாண்டி உள்ளேயும் பவர் சப்ளை லூஸாக இருக்கும். ஹை வோல்டேஜ், லோ வோல்டேஜைத் தாண்டிப் பெரிய ஆபத்து இந்த லூஸ் கனெக்ஷன்தான். அதிக Frequency, குறைவான Frequency என்று மாறி மாறி சார்ஜ் ஏறும்போதுதான் பெரும்பாலும் பவர் ஷர்க்யூட் ஆகி, பேட்டரிகள் தீப்பிடிக்க வாய்ப்புண்டு. முறையான எலெக்ட்ரீஷியன்கள் வைத்து House Hold Wiring வேலைப்பாடுகளைக் கவனமாகச் செய்துவிட்டு, சார்ஜ் ஏற்றுங்கள்.

8. டிட்டாச்சபிள் பேட்டரி என்றால், வீட்டுக்குள் சார்ஜ் போடுவதில் கவனம்!
ஒகினாவா போன்ற சில வாகனங்களில் `Detachable Battery’ என்று சொல்லக்கூடிய கழற்றி மாட்டக் கூடிய பேட்டரி உண்டு. மாடி போர்ஷனில் வசிப்பவர்கள், இதைத் தனியாக எடுத்துப் போய் வீட்டுக்குள்ளே வைத்தும் சார்ஜ் போடுவார்கள். இதிலும் கவனம் தேவை. குழந்தைகளை சார்ஜ் ஏறும் பேட்டரிக்கு அருகில் விடுவது மகா தப்பு! சார்ஜ் போட்டுவிட்டு, திரும்பவும் பேட்டரியை ஸ்கூட்டருடன் கனெக்ட் செய்வதில் விழிப்பாக இருங்கள். கிரவுண்ட் ஃப்ளோரில் அப்படியே வாகனத்தை நிறுத்தி பேட்டரியைக் கழற்றாமல், கீழேயே கனெக்ஷன் எடுத்துப் போடுவது நல்லது! (வெளியில் ஏதேனும் விபத்தென்றால் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வீட்டுக்குள் என்றால் அபாயம் அதிகம்.)
9. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியதும் முதல்ல இதைச் செய்யுங்க!
எந்தப் பொருள் வாங்கினாலும், பலர் இதைச் செய்வதே இல்லை. அது, ‘ரீடர்ஸ் மேனுவல்’ எனும் குறிப்பைப் படிக்கத் தவறுவது. ‘நமக்கு எல்லாமே தெரியும்’ என்கிற நினைப்பு வேண்டாமே! டி.வி முதல் கார் வரை எது வாங்கினாலும், ரீடர்ஸ் மேனுவலை ஒரு தடவை முழுவதுமாகப் படிப்பது நல்லது! எந்த ஆம்ப்பில் சார்ஜ் போட வேண்டும்; எவ்வளவு நேரம் போட வேண்டும்; ஆட்டோ கட் வசதி உண்டா… பேட்டரியில் லைஃப் சர்க்கிள் என்று பல விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஆபத்து நேரங்களில் ‘நாங்கதான் தெளிவா சொல்லியிருக்கோமே’ என்று தயாரிப்பு நிறுவனங்கள் இதை வைத்து எஸ்கேப் ஆக வாய்ப்புண்டு!

10. எரிகிற ஸ்கூட்டரில் தண்ணியை ஊத்தாதீங்க!
திருச்சியில் ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவத்தில் சிலர், எரிந்து கொண்டிருக்கும் வாகனத்தில் தண்ணீரை எடுத்து ஊற்றுவார்கள். இதை பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களே ரெக்கமண்ட் செய்வதில்லை. அறிவியல் முறைப்படி இது தவறு என்கிறார்கள். லித்தியம் அயனில் உள்ள ரசாயனத்தின் மேல் தண்ணீர் படும்போது, லித்தியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் ஹைட்ரஜன் வாயு போன்ற கெமிக்கல்கள் உருவாகின்றன. இது பேராபத்து. எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுவது மாதிரிதான் இது. வேண்டுமானால், கோணிப் பை அல்லது பெட்ஷீட்டை வைத்து மூடி, மண்ணை அள்ளிப் போட்டுத் தீயை அணைக்கலாம்.
‘எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்குறதுல இவ்வளவு பிரச்னை இருக்கா! இதுக்குப் பேசாம கடன் வாங்கியாச்சும் பெட்ரோல் போட்டே ஸ்கூட்டர் ஓட்டிட்டுப் போயிடலாம்’ என்று என்னைப்போலவே நீங்களும் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமாப் பேசுறது கேட்குது.