Published:Updated:

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்  வாங்கப்போகிறீர்களா... இந்த 10 விஷயங்களை செக் பண்ணுங்க!

இது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஒப்பீடு கட்டுரை கிடையாது.

மின்சார ஸ்கூட்டர் வாங்கச் செல்லும் பல பேருக்கு, இந்த வகை ஸ்கூட்டர்களை ஓட்டுவது அதுவே முதல் அனுபவமாக இருக்கும். IC இன்ஜின் ஸ்கூட்டர்களில் இருந்து இவை பொறியியல் சார்ந்து வேறுபட்டவை என்பதால், முதல் முறை கிடைக்கும் ஓட்டுதல் அனுபவத்தை மட்டும்வைத்து முடிவெடுக்காதீர்கள். ஸ்கூட்டர்களைப் பலமுறை டெஸ்ட் ரைடு செய்து, பிறகு முடிவெடுங்கள். ஏனென்றால் பேட்டரி பொசிஷன், எடை, மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் விதம், மோட்டார் சத்தம், பேட்டரி ஹீட் போன்ற சின்னச்சின்ன இன்ஜினீயரிங்கூட உங்கள் ரைடிங் அனுபவத்தை வெகுவாகப் பாதிக்கும். 

நீங்கள் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் முன் என்னென்ன விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

2
பெரிய வீல் ஸ்கூட்டர் ( Capri23auto from Pixabay )

வீல் அளவு

10 இன்ச்சுக்குக் குறைவான வீல் அளவு கொண்ட ஸ்கூட்டர்களை வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். சிறிய வீல்கள் அதிக அதிர்வுகளைக் கடத்தக்கூடியவை. இவை, கரடுமுரடான ரைடிங் அனுபவத்தையே தரும். பெரிய வீல்கள், சொகுசான ரைடிங்கை கொடுக்கக்கூடியவை.

3
டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

ஓட்டுதல் அனுபவத்தை முடிவெடுப்பதில் சஸ்பென்ஷன் முதன்மையானது. பெரும்பாலான ஸ்கூட்டர்களில், முன்பக்கம் ஹைட்ராலிக் அல்லது டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் வரும்.  பின்பக்கம், மோனோஷாக், டூயல்ஷாக் சஸ்பென்ஷன் வரும்.

டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், சொகுசான ஓட்டுதல் அனுபவத்தைத் தரக்கூடியது. நெடுஞ்சாலையில், எதிர்க்காற்று அதிகம் இருக்கும் இடங்களில் ஓட்டும்போது, டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஸ்கூட்டரை நிலைத்தன்மையோடு வைத்திருக்கும். ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருப்பதால் இது ஸ்போட்ர்ட்டிவான அனுபவத்தைத் தரும். ஆனால், வேகமாக அசதியை ஏற்படுத்திவிடும்.

மோனோஷாக் சஸ்பென்ஷன் ( Dharmapuri Bikers Club )

பின்பக்கம் ட்வின்ஷாக் சஸ்பென்ஷன் செட்டப், நெடுந்தொலைவு ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும். ஆனால், நகரங்களின் நெரிசலான சாலையில் அவ்வப்போது ஸ்கூட்டரை வளைத்துத் திருப்புவதற்கு மோனோஷாக் சிறப்பாக இருக்கும்.

4
டியூப்லெஸ் டயர்ஸ்

டயர்

இப்போது வரும் பெரும்பாலான ஸ்கூட்டர்களில், டியூப்லெஸ் டயர்கள் வருகின்றன. ஆனால், சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் விலையைக் கட்டுப்படுத்த இன்னும் டியூப் டயர் கொடுக்கிறார்கள். டியூப்லெஸ் டயர் ஸ்கூட்டர் வாங்குவது நல்லது. இவை, எடை குறைவானவை; தேவையில்லா ஃபிரிக்‌ஷன் ஏற்படுத்தாது. இதனால் ரேஞ்ச் அதிகம் கிடைக்கும். அதுமட்டுமில்லை, பஞ்சர் போடுவது சுலபமாகும்.

5
ஸ்பீடு

ஸ்பீடு

இந்தியாவின் நகரச் சாலைகளில் ஒரு வாகனம் செல்லக்கூடிய சராசரி வேகம் என்பது 40கி.மீ மட்டுமே. அதனால், மின்சார ஸ்கூட்டர்களை வாங்கும்போது வேகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.  70 முதல் 80 கி.மீ அதிகபட்ச வேகம் என்பது போதுமானது. டாப் ஸ்பீடு அதற்கும் கீழே இருந்தால், ஸ்கூட்டர் பயன்படுத்துவது சீக்கிரமே போர் அடித்துவிடும். அதிக பவர் கொண்ட மோட்டார், அதிக எடை கொண்ட ஆட்களை இழுக்கும் என்பதுடன், மேடான பகுதிகளில் இருப்பவர்களுக்கு நல்ல டார்க் கொடுக்கும். ஆனால், அதிக மின்சாரம் இழுக்கும்.

6
ஸ்கூட்டர் சார்ஜ்

ரேஞ்ச்

பேட்டரி கெப்பாசிட்டி, மோட்டார், பவர் இதையெல்லாம் கடந்து ஒரு ஸ்கூட்டரின் ரேஞ்சை முடிவுசெய்வது பேட்டரி தொழில்நுட்பம்தான். லித்தியம் பேட்டரிகள் அதிக ரேஞ்ச் தருவதோடு, எடை குறைவாகவும், வேகமாக சார்ஜ் ஆவதற்கும் உதவும். லெட் ஆசிட் பேட்டரி ஸ்கூட்டர்களைத் தவிர்த்துவிடுங்கள். 

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் என்பது, 70 கிலோ உள்ள ஒரு நபர், தட்டையான சாலையில் எவ்வளவு தூரம் ஸ்கூட்டரை ஓட்டுகிறார் என்றே டெஸ்ட் செய்யப்படும். உங்களுடைய சாலை அவ்வளவு ஸ்மூத்தாக இருக்கப்போவதில்லை. பயன்படுத்துவரின் எடையில் மாறுபாடுகள் இருக்கலாம். அதனால், நிறுவனம் குறிப்பிடும் ரேஞ்சைவிட வாகனம் 5 முதல் 10 கி.மீ ரேஞ்ச் குறைவாகவே தரும்.  நீங்கள், ஸ்கூட்டர் ஓட்டும் விதமும் உங்களுடைய ரேஞ்சைப் பாதிக்கும். அதேபோல, ரேஞ்ச் காலப்போக்கில் குறையும் என்பதையும் மனத்தில் வைத்தே ஒரு ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுங்கள்.

7
செலவுகள் ( Image by Prasanta Sahoo from Pixabay )

பயன்பாட்டுச் செலவு

மின்சார வாகனத்தின் பராமரிப்புக்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. உங்களுடைய பயன்பாட்டுச் செலவை கணக்கிடுவது ரொம்பவே சுலபம். பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் 3kWh பேட்டரி கொண்டது. அதனால், இது ஒவ்வொரு முழு சார்ஜுக்கும் அதிகபட்சம் 3 யூனிட் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். ஒரு முழு சார்ஜில் 85-95 கி.மீ வரை செல்லும். ஏத்தர் 450x ஸ்கூட்டர் 2.9kWh பேட்டரி கொண்டது. 2.9 யூனிட் மின்சாரத்தை இது விழுங்கும். அதிகபட்சம் 85 கி.மீ வரை செல்லும். ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை அதிகபட்சம் 4kWh பேட்டரிக்கு மேல் கிடையாது. அதனால், 4 யூனிட் மின்சாரத்துக்கு மேல் ஆகாது. பராமரிப்புச் செலவு என்று பார்த்தால் பிரேக் பேட், லைட், டயர், பெல்ட் போன்ற கன்ஸ்யூமபில்ஸ் செலவுகள்தான்.

8
ஏத்தர் ஷோரூம் சென்னை

நம்பகத் தன்மை

நிறைய புது நிறுவனங்கள், ஸ்டார்ட்அப், சின்ன நிறுவனங்கள் எல்லாம் எலெக்டரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கிவிட்டார்கள். இதனால், நம்பகத்தன்மை கொண்ட ஒரு ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுப்பது கடினமாகிவிட்டது. ஏற்கெனவே மின்சார ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களிடம் அந்த நிறுவனம் எப்படி, கஸ்டமர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.  ஒரு ஷோரூம் சென்று பார்க்கும்போது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய புரிதல் அதை விற்பனை செய்பவர்களுக்கு இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். விவரங்களை முழுமையாகச் சொல்கிறார்களா, சந்தேகத்துடன் சொல்கிறார்களா என்ற விஷயங்கள் எல்லாம் நம்பகத்தன்மையை உருவாக்கும்.

9
வாரன்ட்டி

வாரன்ட்டி

பேட்டரி, மோட்டார் என எலெக்ட்ரானிக்ஸை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய ஸ்கூட்டர் என்பதால், வாரன்ட்டி அதிக நாள் இருக்கும் ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுங்கள். இந்த வெப்பநிலையில்,  இத்தனை முறை மட்டுமே ஒரு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும் என எல்லா பேட்டரிக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் உண்டு. இதை சார்ஜிங் சைக்கிள் என்பார்கள். அதிக சார்ஜிங் சைக்கிள் இருக்கும் பேட்டரிக்கு, அதிக வாரன்ட்டி தருவார்கள். ஒரு முறை பேட்டரியின் சார்ஜிங் சைக்கிள் முடிந்துவிட்டால் பேட்டரி வீக்காகி விடும். பிறகு, தூக்கிப்போட்டு விட்டு அடுத்த பேட்டரி வாங்க வேண்டியதுதான். ஒரு வேலை வாரன்ட்டி காலத்துக்குள் பேட்டரி அல்லது மற்ற ஏதேனும் எலெக்ட்ரானிக் பொருள் செயல் இழந்துவிட்டால், புதிதாக மாற்றித்தருவார்கள். இதனால், அதிக நாள் வரான்ட்டி இருக்கும் பொருளை வாங்குங்கள்.

10
சீன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சீனத் தயாரிப்புகள்

இங்கே, பெரும்பாலான நிறுவனங்கள் மேக் இன் இந்தியா என்று சொல்லிக்கொண்டு, சைனீஸ் வாகனங்ளை இந்தியாவில் உற்பத்திசெய்து விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம். சீனப் பொருள்கள் இந்தியச் சூழல்களுக்கும், தட்பவெட்ப நிலைக்கும் ஏற்ப செய்யப்பட்டது கிடையாது. சீன ஸ்கூட்டர்கள் விலை குறைவாகக் கிடைக்கும். ஆனால், அவற்றை வெகு நாள்கள் பயன்படுத்த முடியாது. அதற்கான சர்வீஸ், வாரன்ட்டி போன்றவையும் நிலையானவை கிடையாது.

11
டிஜிட்டஸ் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

வசதிகள்

வசதிகள் கடைசியாகப் பார்க்கவேண்டிய விஷயம். மேலே சொல்லப்பட்டிருக்கும் அத்தனை விஷயங்களிலும் டிக் அடித்து, இரண்டு ஸ்கூட்டர் உங்களுடைய கடைசி செக்லிஸ்ட்டில் தனியாக நிற்கிறது என்றால், இப்போது எந்த ஸ்கூட்டரில் வசதிகள் அதிகம் என்பதைப் பார்க்க வேண்டும். ஸ்கூட்டரில் பொருள்களை வைப்பதற்குப் போதுமான இடவசதி இருக்கிறதா என்று முதலில் பாருங்கள். பிறகு, டிஜிட்டல் டிஸ்பிளே, பேட்டரி ஸ்டேட்டஸ் தெளிவாகக் காட்டுகிறதா, மொபைல் ஃபோன் இணைக்க முடியுமா போன்ற விஷயங்களை எல்லாம் பாருங்கள். எத்தனை சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கிறது, OTA எனப்படும் மென்பொருள் அப்டேட் கொடுக்கிறார்களா, எத்தனை ஷோரூம்/சர்வீஸ் சென்ட்டர் உண்டு, ரோடு சைடு அசிஸ்டென்ஸ் உண்டா என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

தற்போது, இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் என்பது தேசியமயமாக இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிறுவனங்கள் இந்தச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால், உங்களுக்கு நிறைய விலையில், நிறைய ஆப்ஷன்கள் உண்டு என்பதுடன், ரிஸ்க்கும் அதிகம் இருக்கிறது. எல்லாவற்றையும் மனதில் வைத்து, தீர்க்கமாக முடிவெடுங்கள். முடிவெடுத்துவிட்டால், அதில் நம்பிக்கையோடு இருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு