Published:Updated:

நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்தமிழ், படங்கள்: க.தனசேகர்

வெள்ளைனா க்ளாஸ்.. கறுப்புனா மாஸ்! என் பிளாக் கலர் வென்ட்டோவுக்கு எங்க ஏரியாவுல செம மாஸ். இந்த தடவை எங்கூடதான் நீங்க கிரேட் எஸ்கேப் வரணும் பாஸ்!'' என்று ஒரு ஞாயிறு காலை வாய்ஸ் ஸ்நாப்பில் (044 - 66802926) சில பல தடவைகள் மெசேஜ் செய்திருந்தார் வாசகர் ரஞ்சித். 'பிளான் ஓகே’ என்று வாட்ஸ்அப்பில் ரிப்ளை செய்துவிட்டு, பொள்ளாச்சி புறப்பட்டோம்.

நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

சமத்தூர் மெயின் ரோட்டில், ரஞ்சித்தின் கராஜில் காத்திருந்தது கறுப்பு நிற வென்ட்டோ. '''ஏங்க... கலர் டல்லா இருக்குங்க...’ 'ஹைவேஸ்ல நைட்ல ட்ராவல் பண்ணும்போது கிளார் அடிக்கும்டா மச்சான்’னு வீட்லயும், நண்பர்கள்கிட்டயும் ஏகப்பட்ட எதிர்ப்பு சார். அதை எல்லாம் மீறி இந்த காரை எடுத்தேன். ஏன்னா, நமக்கு கறுப்புதானுங் ஃபேவரைட்!'' என்று தனது தோட்டத்தில் விளைந்த கொக்கோ மற்றும் ஜாதிக்காய் பார்சல்களை டிராக்டரில் ஏற்றிவிட்டு வந்தார் மாடர்ன் விவசாயி ரஞ்சித்.

ஒரு சாயலில், போலோவின் அண்ணன் போன்றிருந்த வென்ட்டோவை ஸ்டார்ட் செய்தோம். உள்ளே டேஷ்போர்டு எளிமையாகவும், எர்கானமிக்ஸ் விஷயங்கள் கச்சிதமாகவும் இருந்தன. ''ஏன்டா ரஞ்சித்து... என்னைய லேட்டாக்கிடாதீங்க சித்தப்பானு சொல்லிப்போட், நீ இப்படி லேட் பண்ணிட்டியே?'' என்று தடாலென பின் சீட்டை ஆக்கிரமித்தார், ரஞ்சித்தின் சித்தப்பா ராஜசேகர்.

நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

''இது ரூட் மேப்... வால்பாறை, சோலையார் டேம் போய் ஃபாரஸ்ட் வழியாவே அதிரப்பள்ளி ஃபால்ஸ் போகோணும்... அதானுங் ப்ளான்!'' என்று, தான் கையினால் வரைந்த பேப்பர் மேப்பைக் காண்பித்தார் ரஞ்சித். வால்பாறை செல்லும் வழியிலேயே ரஞ்சித்தின் வீடு இருந்ததால், பொசுக்கென்று ஆழியார் டேம் வந்திருந்தது. செக்போஸ்ட்டில், ''கெஸ்ட் ஹவுஸ் போகோணும்!'' என்று ரஞ்சித் சொன்னதும், உள்ளூர் நம்பர் பிளேட்டைப் பார்த்து 'டோல் பணம்’ இல்லாமல் வழிவிட்டார்கள் கேட் கீப்பர்கள். இதுவே வெளியூர் நம்பர் பிளேட்கள் மற்றும் வாடகை கார்கள் என்றால், கிட்டத்தட்ட 100 ரூபாய் கை மாறிய பின்பே வழி கிடைக்கும்.

நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

சட்டென மலைப் பாதை ஆரம்பித்திருந்தது. ஃபோக்ஸ்வாகன், ஃபியட், டாடா டீசல் கார்கள் டர்போ லேக்குக்குப் பிரபலமானவை என்பதை உலகமே அறியும். 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட வென்ட்டோவிலும் 2,000 ஆர்பிஎம் வரை நன்றாகத் தூங்கி வழிகிறது டர்போ சார்ஜர். எனவே, இரண்டாவது, மூன்றாவது கியர்களுக்கு வேலையே கிடைக்கவில்லை. ஆனால், எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் மலைப் பாதைகளில் காரை ஓட்டுவதற்கு அற்புதமாக இருக்கிறது. வால்பாறைக்கு மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொன்றையும் ஆசையாக அனுபவிக்க உதவுகிறது இதன் பவர் ஸ்டீயரிங். வால்பாறைப் பயணத்தில், 19வது வளைவு பிரசித்தம்.  இதன் வியூ பாயின்ட் மற்றும் வரையாடுகள், வால்பாறைக்குச் செல்பவர்களின் கார்  பைக்குகளை ஓரம் கட்ட வைத்து விடுகின்றன.

செங்குத்தான சரிவான மலைப் பகுதிகளில், ஹாயாக விளையாடிக் கொண்டிருந்தன சில வரையாடுகள். இதனை ஆங்கிலத்தில் 'நீல்கிரி தார்’ என்பார்கள். இதன் குளம்புகளில் இருக்கும் விசேஷ சொரசொரப்பான தன்மை, மலைச் சரிவுகளில் கிரிப் கொடுத்து, சரிந்து விடாமல் இருக்க உதவுகிறது. சில நேரங்களில் சரிவுகளில் இது உருண்டாலும், அடிபடாமல் மறுபடியும் எழுந்து மேய ஆரம்பித்துவிடுமாம். தற்போது பல பிரச்னைகளால் வால்பாறையில் வரையாடுகள் குறைந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

மீண்டும் மலையேற ஆரம்பித்தோம். கூகுள் சர்ச்சில் 'செவன்த் ஹெவன்’ என்று நீங்கள் டைப் செய்தால், வால்பாறை என்றுதான் வரும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் வால்பாறையைச் சொல்கிறார்கள். ''யாருக்கும் தெரியாத நிறைய இடம் வால்பாறைல நமக்கு அத்துப்படிங்!'' என்றார் ரஞ்சித்.

வால்பாறை செல்லும் பாதைக்குள் செல்லாமல், சட்டென இடதுபுறமாக வென்ட்டோவைத் திருப்பச் சொன்னார் ரஞ்சித். ''இதுக்குப் பேரு சக்தி எஸ்டேட். நிறைய பேருக்கு இந்த இடம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைங்!'' என்றார். அற்புதமான மலைப் பாதைகளினூடே, ஆள் அரவமற்று விரிந்துகொண்டே செல்கிறது சக்தி எஸ்டேட். சுற்றிலும் சில பல ஏக்கர்களுக்கு பச்சைப் பசேல் டீ செடிகள். ''ஆனால், மாலை வேளைகளில் இந்தப் பக்கம் வருவது ஆபத்து' என்றார் ரஞ்சித். ஏனென்றால், இந்த இடம் காட்டின் எல்லையில் இருக்கிறது. யானைகள் மொத்தமாகக் கூடும் இடமும்கூட! ஒருமுறை தனது குடும்பத்துடன் வந்து கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட யானைகளிடம் இருந்து தப்பித்து வந்த்தாகச் சொன்னார்.

இது நமக்கு மட்டுமே தெரிந்த இடம் என்ற இறுமாப்பு சற்று நேரத்தில் காலியானது. செல்லும் வழியில் சில யுடர்ன்களில், ஒன்றிரண்டு ரோமியோக்கள், தங்கள் குல்ஃபிகளுடன் செல்ஃபி க்ளிக்கிக்கொண்டிருந்தார்கள். ''எப்படி இருந்தாலும் கண்டுபிடிச்சுப் போடுறானுகளே!?'' என்று இளைய தலைமுறையைப் பற்றி வியந்தார் ராஜசேகர்.

வால்பாறையில் பாலாஜி கோவில் பிரசித்தம். குறிஞ்சி நிலத்துக்கு மேல்.... டீ எஸ்டேட்டுக்கு நடுவே இயற்கையும் இறைவனும் கைகுலுக்கிக்கொள்ளும் அந்த இடத்தில் முருகப் பெருமானோடு, கணபதி பெருமானையும் (யானைகள்) தரிசிக்கலாம்.

நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

வால்பாறையில் அடுத்துப் பார்க்க வேண்டிய இடம்  நீரார் அணை. இதில் மேல் நீரார் அணை  புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் இல்லை என்பதால், கூட்டமும் அவ்வளவாக இல்லை. ஒரே ஒரு குட்டி அருவி இதன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நீரார் அணையிலிருந்து சோலையார் அணைக்குக் கிளம்பினோம். பெரும்பாலும் வால்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்பவர்கள், உணவை எடுத்துச் செல்வதே நலம். இல்லையென்றால், சோலையார் அணையில் இருக்கும் ஒரே ஓர் உணவகத்தில் கிடைக்கும் மீன் சாப்பாட்டை, க்யூவில் காத்திருந்து

தான் சாப்பிட வேண்டும். எப்போதுமே காய்ந்து போயிருக்கும் சோலையார் அணையில், நாம் சென்றபோது, கொஞ்சூண்டு அருவியாகக் கொட்டியது நீர்.

சோலையாரைத் தாண்டிச் சென்றால், கேரள செக்போஸ்ட் வருகிறது. இந்த செக் போஸ்ட்டில் மாலை 4.30 மணிக்குள் வந்தால் மட்டுமே அனுமதி. நாம் சென்றபோது, உச்சி வெயிலிலும் லேசாக குளிர் எடுத்தது. ''ஒன்ட்ற கார்ல ஏ.சி ப்ராப்ளம்னு சொன்னியே ரஞ்சித்து...'' என்று எடுத்துக் கொடுத்தார் ரஞ்சித். ''வென்ட்டோவுல சர்வீஸுக்குப் பிறகு எனக்கு ரொம்பப் பிடிக்காத விஷயம் ஏ.சிதானுங்க. இதுவரைக்கும் 45,000 ரூபாய் செலவழிச்சுப் போட்டேனுங்க. இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லைங்க!'' என்று ஏ.சியின் ப்ளோயரை நான்கில் வைத்தார். சோலையார் அருவியைவிட இரைச்சல் அதிகமாய் இருந்தது காற்று வெளிவரும் சத்தம்.

இங்கிருந்து அதிரப்பள்ளி  54 கி.மீ. இந்தக் காட்டுப் பாதை மிருகங்கள் நடமாடத்தான் ஏதுவாக இருக்கும். வென்ட்டோ போன்ற செடான் கார்களில் இந்தக் காட்டுப் பாதையில் செல்வதை, உங்கள் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். செல்லும் வழியில் கர்நாடக ரிஜிஸ்ட்ரேஷன் பைக்குகள் சில 'வ்வ்ர்ர்ரூம்’மெனப் பறந்தன. விசாரித்ததில், 'ஃப்ளையிங் ஃபால்கான்ஸ்’ என்னும் பைக் கிளப் உறுப்பினர்கள் என்றும், இந்தியா முழுவதும் டூர் அடிப்பதாகவும் சொன்னார் க்ளப்பின் தலைவர்.

நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

ஆளரவமற்ற அமைதியான காட்டுப் பாதையில் தடதடத்தபடி, எந்த மிருகங்களுக்கும் இடையூறு தராமல் பயணித்தோம். காட்டுப் பகுதிக்கே உரிய அமைதி போய், திடும்மென வாகன இரைச்சல்களும், மனிதக் குரல்களும் காதுகளைப் பந்தாட ஆரம்பித்திருந்தன. அதிரப்பள்ளி வந்ததற்கான அடையாளம் இது. அதிரப்பள்ளி அருவி, கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. நாம் சென்றபோது, லேசாக இருட்டத் தொடங்கி இருந்தது. ''சமயம் ஆயி... அதோண்டு அடைச்சு! இனி நாளையானு!'' என்றார் டிக்கெட் கொடுப்பவர். ஏனென்றால், இங்கு மாலை 5.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது.

அதிரப்பள்ளி அருவியை ஒட்டியுள்ள காட்டேஜில் தங்க முடிவெடுத்தோம். இங்கு கேரள அரசின் சுற்றுலாத் துறை விடுதி, மிகவும் பிரசித்தம். சலசலவென ஓடும் ஆற்றை ஒட்டியபடி அமைந்திருக்கும் காட்டேஜ்களில் தங்குவது அபாரமான சுகம். ஆனால், கொஞ்சம் காஸ்ட்லி! இரண்டு படுக்கைகள் கொண்ட ஓர் அறை 3,000 ரூபாய். ''இவ்விடந்து தாழப் போயி குறைஞ்ஞ ரென்ட்டுக்கு ரூம் கிட்டும்!'' என்றார் கைடு ஒருவர். பர்ஸைப் பதம் பார்க்காத ஒரு காட்டேஜில் (வாடகை 1,500/) தங்கிவிட்டு, மறுநாள் அருவி வாசலில் வென்ட்டோவை நிறுத்தினோம்.

ஞாயிறு காலை என்பதால், காலை 8 மணியில் இருந்தே கூட்டம் திமுதிமுக்க ஆரம்பித்திருந்தது. 'கடிக்காத நாய் இருக்கும்; ஆனால், குடிக்காத வாய் இல்லை!’ என்பதுபோல் அதிரப்பள்ளியின் அழகான வனப்பகுதி, முந்தின சனி இரவு குடிகாரர்களால் அலைக்கழிக்கப்பட்டிருப்பது, ஆங்காங்கே உடைந்துபோன பாட்டில்கள் மூலம் உறுதியானது.

கேரளாவில் மாதத்தின் ஒவ்வொரு முதல் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக் கடைகளைக் கட்டாயம் மூடியிருக்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆணை பிறப்பித்திருப்பதால், கேரளாவில் இருக்கும் அத்தனை பார்களும் அன்று மூடப்பட்டிருந்தன.

20 ரூபாய் டிக்கெட் எடுத்து விட்டு உள்ளே நுழைந்தோம். நெருப்பில்லாமல் புகைந்து கொண்டிருந்தது அதிரப் பள்ளி. எதிர்ப்படும் அனைவரையும் பேரிரைச்சலுடன் சில்லென ஆசீர்வசித்து வரவேற்கிறது அருவி நீர்.

கிட்டத்தட்ட 145 கி.மீ நீளம் கொண்ட சாலக்குடி நதி, ஆனைமலை மலையிலிருந்து ஆரம்பமாகிறது. அமைதியின் சொரூபமாக சாலக்குடி நதியில் இருந்து வரும் நீர், அதிரப்பள்ளியில் தாண்டவம் ஆடிவிட்டு, வளச்சல் காடு வழியாகப் பயணித்து, பெரியாற்றில் இணைந்து அரபிக் கடலில் கலக்கிறது. இங்கே நீர் வரத்து வேகமாக இருப்பதால், குளிக்கத் தடை. கீழே இறங்கினால், குட்டிக் குட்டிப் பாறைகளுக்கு நடுவே ஆரவாரம் தணிந்து வரும் ஓரளவு அமைதியான நீரில் உல்லாசமாகக் குளிப்பதை ஒரு முறையேனும் அனுபவித்து விடுங்கள். அசைவப் பிரியர்கள் மீன் வறுவலையும் அனுபவிக்கலாம்.

அருவிக் கரையோரமே ஒரு வாழ்க்கை வாய்க்காதா?

வாசகர்களே!

நீங்களும் இதுபோல் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி (044 - 66802926) தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு