Published:Updated:

மலைப்பு... மயக்கம்... மர்மம்....9

கணேசன் அன்பு

மலைப்பு... மயக்கம்... மர்மம்....9

லடாக் பயணம் மேற்கொள்பவர்கள், தவறவிடக் கூடாத இடம், பெங்காங் ஏரி (Pangong Lake). Pangong Tso  என்ற வார்த்தைக்கு, 'நீண்டு குறுகிய வசீகரிக்கக்கூடிய ஏரி’ என்று பொருளாம். இமய மலைத்தொடர் வழி நெடுகிலும் வியப்பூட்டியது என்றால், பெங்காங் ஏரி தனது கொள்ளை அழகால் பார்த்தவுடன் பரவசப்படுத்தியது. '3 இடியட்ஸ்’ இந்திப் படம் பார்த்தவர்கள், அதன் கிளைமாக்ஸ் காட்சியில் காண்பிக்கப்பட்ட பெங்காங் ஏரியின் அழகை மறந்திருக்க மாட்டார்கள்.

பயணத்தின் ஒன்பதாவது நாளன்று, பெங்காங் ஏரியை நோக்கி புல்லட்கள் புறப்பட்டன. இது 'லே’ நகரில் இருந்து 170 கி.மீ தூரம். சென்று திரும்ப சுமார் 350 கி.மீ பயணிக்க வேண்டும். ஆகவே, டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பிக்கொள்வது அவசியம். மேலும், காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் இருந்து அனுமதிக் கடிதம் பெற வேண்டும். நம் அடையாள அட்டையை டூர் ஏஜென்ட்டிடம் கொடுத்துவிட்டால், அவர்கள் எளிதில் அனுமதி பெற்றுத் தருவார்கள்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....9

மணாலி நோக்கிய தென்திசையில், சிந்து நதியை ஒட்டியவாறு அமைந்துள்ள 'காரு’ எனும் இடத்தில் இடப்புறமாகப் பிரியும் சாலை, பெங்காங் ஏரிக்கு அழைத்துச் செல்லும். சற்று தூரத்திலேயே செம்ரி (Chemre) என்ற மடாலயம் உள்ளது. அதிகாலையிலேயே கிளம்பினால், இந்த மடாலயத்தையும் பார்க்க முடியும். இதனைக் கடந்ததும் மலையேற்றம் ஆரம்பமானது. லடாக் பிராந்தியத்தின் பெரும்பாலான மலைத் தொடர்கள் பசுமை இன்றி, வறண்ட மஞ்சள் வண்ணம் கொண்டிருந்தன. 'லே’ நகரில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள 'சங் லா’ எனும் இடத்தில் மதிய உணவுக்காகத் திட்டமிட்டு இருந்தோம். சங் லாவை நெருங்கிய மலையேற்றப் பாதை மிகவும் மோசம். மலையைக் குடைந்து வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. முறையான மண் சாலைகள்கூட இல்லை. இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நிதானமும், ஒருமுகத்தன்மையும் அவசியம். மலை வெட்டப்பட்டு இருந்த சில இடங்களில், மலையுடன் உறைபனியும் சேர்ந்து பாறைகளைப் போல ஒட்டிக்கொண்டு இருந்தது.

சங் லாவுக்கு சற்று முன்பாக, வெளிநாட்டு ஜோடியின் புல்லட் பைக் பழுதாகி நின்றுகொண்டிருந்தது. பெட்ரோல் லீக்தான் பிரச்னை. நாங்கள் முயன்றும் சரிசெய்ய முடியவில்லை. சற்று நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு, ரோந்துப் பணியில் அந்த வழியாக வந்த ராணுவ வீரர்களிடம் உதவி கோரினோம். அந்தக் குழுவில் முத்து என்ற கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரரும் இருந்தார். அவர் ஒரு மெக்கானிக். இரண்டே நிமிடங்களில் பிரச்னையைச் சரிசெய்து, வெளிநாட்டினரை பதற்றத்தில் இருந்து மீட்டார். ராணுவ வீரர்களுக்கு நன்றி சொல்லி சங் லா அடைந்த எங்களை, மேலும் அசத்தியது இந்திய ராணுவம்!

சங் லாவில் இருந்த ராணுவ முகாமில், சுற்றுலாப் பயணிகளுக்கு க்ரீன் டீயும், திபெத்திய ஸ்பெஷல் உணவான மோமோவும் அன்புப் பரிசாக வழங்கினார்கள். சங் லா என்பது லடாக் பிராந்தியத்தின் (மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய) மூன்றாவது அதிஉயர கணவாய். இதன் உயரம் 17,800 அடி. உயரம் மற்றும் கரடுமுரடான சாலையால், அனைவருக்கும் உடல் சோர்வு தொற்றிக்கொண்டது. அங்கிருந்த சாங்லா கேஃபிடெரியா (changla cafeteria) எனும் உணவகத்தில், மதிய உணவாக நூடுல்ஸும் எனர்ஜி ட்ரிங்ஸும் கிடைத்தன. இங்கு தென்பட்ட சுற்றுலாப் பயணிகளில் பெரும்பகுதியினர், வெளிநாட்டினர்தான். சற்று நேர ஓய்வுக்குப் பிறகு, பெங்காங் ஏரி நோக்கிப் புறப்பட்டோம்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....9

மலையிறக்கம், பள்ளத்தாக்கு, சமவெளி, மலையேற்றம், இருபுறமும் உச்சிகளில் பனி படர்ந்த மலைகள், பனி உருகி சாலையை அரித்து ஓடும் சிற்றாறுகளைக் கடந்து, மூன்று மணி நேரக் கடும் பயணத்துக்குப் பிறகு, பக்கவாட்டில் வீற்றிருந்த பிரம்மாண்ட மலையின் முனையில் கருநீல வண்ணத்தில், பெங்காங் ஏரியின் கரை எட்டிப் பார்த்து எங்களை வரவேற்றது. அது ஓர்அற்புதத் தருணம். ஓட்டிக்கொண்டிருந்த வாகனத்தை விட்டுவிட்டு, பறவையைப்போல பறந்துசென்று ஏரிக்கரையில் குதிக்கத் தூண்டிய அற்புதத் தருணம். இந்த இடைப்பட்ட தூரத்தில் ஆங்காங்கே ஓரிரு வீடுகளும், அவர்களின் விவசாய நிலங்களும் தெரிந்தன. தவிர, 'தங்ஸே, லுகுங், ஸ்பாங்மிக்’ கிராமங்களில் தொலைபேசி, இன்டர்நெட் மையம் போன்ற அடிப்படை வசதிகளுடன் விடுதிகளும் உள்ளன. பெங்காங் ஏரிக்கரையில் இரவு தங்குவதற்கு கூடாரங்கள் கிடைக்காத பட்சத்தில், இங்குள்ள விடுதிகளில் தங்கலாம்.

சொர்க்கத்தில் இருப்பதைப்போன்ற உணர்வைத் தரும் இமய மலைத்தொடரின் ஸ்தலங்களில், பெங்காங் ஏரி முக்கியமானது. கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியின் அகலம் 4 கி.மீ; நீளம் 140 கி.மீ. இதில், 40 கி.மீ மட்டுமே இந்திய எல்லைக்குள் அமைந்துள்ளது. மற்ற பகுதி திபெத்துக்குச் சொந்தம். ஏரியை அடைந்த மேற்கு முனையில் இருந்து, 10 கி.மீ தூரம் வரை கிழக்கில் திபெத் நோக்கிச் செல்ல அனுமதி உண்டு. அங்கு இருக்கும் இந்திய ராணுவ முகாமைத் தாண்டிப் பயணிக்க அனுமதி இல்லை. ஆனாலும், அங்கிருந்த மைல் கல்லில் டோக்கியோ, பெய்ஜிங், கோலாலம்பூர், ஷாங்காய் போன்ற நகரங்களுக்கான கி.மீ தூரத்தை வழித்தடம் துல்லியமாகக் காண்பித்தது.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....9

பெங்காங் ஏரியைப் பொறுத்தவரை, அதன் நான்கு திசைகளும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மலைகளில் படர்ந்திருக்கும் உறைபனி உருகுவதே இந்த ஏரியின் நீராதாரம். குளிர்காலங்களில் இந்த ஏரி முற்றிலும் உறைந்துவிடும். ஒரு லாரியையே உறைந்த ஏரியின் மீது ஓட்டிச் செல்ல முடியும் என்பது, கூடார உரிமையாளர் சொன்ன ஆச்சரியத் தகவல். அக்டோபருக்குப் பிறகு ஏரிக்குச் செல்ல அனுமதி இல்லை. பனிப் பொழிவு ஆரம்பமாகி, உறைந்துவிடும். பிறகு ஏப்ரல், மே மாதங்களில் பனி உருகிய பின்பே சுற்றுலாப் பயணிகளுக்கு ஏரியை ரசிக்க அனுமதி கிடைக்கும். தங்குவதற்கு ஏரிக்கரையை ஒட்டியவாறு கூடாரங்கள் நடத்தப் படுகின்றன. சீஸன் சமயங்களில் லே–வில் இருக்கும் டூர் ஏஜென்ட்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்வது உகந்தது. நபர் ஒருவருக்கு சுமாராக 500 ரூபாய் ஆகும்.

பெங்காங் ஏரியில் இரவு தங்குவதற்கு, நமது உடல் திடம் மிக முக்கியம். கடந்த மாதம் பெங்காங் ஏரியில் இரவு தங்கிய நண்பர் ஒருவரின் மனைவி, Acute Mountain Sickness –ஆல் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தாகச் சொன்னார்கள்.

முன்னெச்சரிக்கையாக நாம் செய்ய வேண்டியது இதுதான்: பயணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, தினமும் இரண்டில் இருந்து ஐந்து கி.மீ நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதிகாலை எனில் கூடுதல் நலம். தண்ணீர் தாராளமாகப் பருக வேண்டும். அதிகமாக மது அருந்துதல் கூடாது. எளிதில் ஜலதோஷத்துக்கு ஆளாகிறவர்கள், சுவாசப் பிரச்னை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்தப் பயணத்தைத் தவிர்த்தல் நல்லது.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....9

இவ்வளவு மெனக்கெடல்கள் ஏன் என்று கேட்டால், பெங்காங் ஏரியின் வசீகரத்தை அனுபவிக்கத்தான். ஏரியைச் சுற்றிலும் அமைந்துள்ள மலைகளின் உயரம் சுமார் 20,000 அடி. மலைகளின் பிரம்மாண்டமும், ஏரியின் நிசப்தமும் நம்மைத் தியான நிலைக்குக் கொண்டுசெல்லும்.  

இந்த இடத்தின் மிக முக்கிய வசீகரம், ஏரியில் பிரதிபலிக்கும் மலைகள் மற்றும் ஆகாயத்தின் பிம்பம்தான். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு உருவாகும் மெல்லிய வெளிச்சம் தொடங்கி, சூரியன் அஸ்தமித்த பிறகு சூழும் காரிருள் வரை, ஏரியில் பிரதிபலிக்கும் மலைகளின் பிம்பங்களையும், வண்ணங்களையும் ரசித்துக் காணக்கூடியவர்கள் பாக்கியவான்கள். மாலை நேரங்களில் தங்க ஆபரணங்கள் போல மஞ்சள் வெயிலின் பிரதிபலிப்பு காட்சியளிக்கும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ணங்களைக் காண்பிக்கும். இரண்டு நாட்கள் முழுவதுமாக ஏரியில் தங்கி இருந்து தியானத்தையும், வண்ணங்களையும் அனுபவிப்பது கடவுளைத் தரிசித்த அனுபவத்தைக் கொடுக்கும்.

அன்புடனும், சுவையான உணவுடனும் நம்மை உபசரிக்க திபெத்திய முகம்கொண்ட வெள்ளந்தியான மலைவாழ் மக்கள், எப்போதும் தயாராகக் காத்திருக்கிறார்கள் ஏரிக் கரையில்!

(சிகர்ர்ரூம்...)