Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

நான் புதிய i20-ஐ வாங்கலாம் என இருக்கிறேன். ஆனால், ஹூண்டாய் எலீட் i20-யின் ஸ்டீயரிங், ஓட்டுதல், கையாளுமை போன்ற அம்சங்கள் வழக்கமான ஹூண்டாய் கார்கள் போலவே ‘உயிர்ப்பில்லாமல்’ இருப்பதாக ஆன்லைனில் படித்தேன். இது உண்மையா?

கி. ராஜேஷ், சென்னிமலை.

மோட்டார் கிளினிக்

புதிய ஹூண்டாய் எலீட் i20, பழைய காரைவிட ஏன், மற்ற ஹூண்டாய் கார்களைவிடவும் பல விதங்களில் முன்னேறிய காராக இருக்கிறது. ஸ்டீயரிங், ஓட்டுதல், கையாளுமை போன்ற அம்சங்களில் பழைய i20 காரைவிட நன்றாகவே இருக்கிறது. ஆனால், இன்னும் ஸ்விஃப்ட் போன்று ஓட்ட ஜாலியான உணர்வு எலீட் i20-யில் வரவில்லை. ஆனால் ஸ்டைல், மைலேஜ், பெர்ஃபாமென்ஸ் என அனைத்திலுமே நிறைவான காராக இருக்கிறது. டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவு எடுங்கள்.

என்னுடைய இண்டிகா டீசல் காரின் ஓடோ மீட்டர், ஒரு லட்சம் கி.மீ கடக்கப்போகிறது. இத்தனை காலமாக, அதை நன்றாக சர்வீஸ் செய்து வந்திருக்கிறேன். ‘ஒரு லட்சம் கி.மீ தாண்டிவிட்டால், இன்ஜின் விரைவில் செயலிழந்துவிடும். அதை சீக்கிரம் விற்றுவிடு’ என்கிறார் நண்பர். இது சரியான யோசனையா?

 - மு.அஹமது காசிம், பொள்ளாச்சி.

மோட்டார் கிளினிக்

உங்கள் நண்பர் சொல்வது ஒருவித முன்னெச்சரிக்கை யோசனைதான். ஒரு லட்சம் கி.மீ தாண்டிவிட்டால், யூஸ்டு கார் சந்தையில் காரின் மதிப்பு மிகவும் குறைந்துவிடும். அங்கிருந்துதான் இந்த ஒரு லட்சம் கி.மீ தாண்டினால், கார் இன்ஜின் வீணாகிவிடும் என்ற கான்செப்ட் எல்லாம் பிறந்தது. நீங்கள் காரை சரியாக சர்வீஸ் செய்து, 75,000 கி.மீ தாண்டியவுடன் கிளட்ச், டைமிங் பெல்ட் மாற்றி இருந்திருந்தால், நிச்சயம் இன்னும் பல கி.மீட்டர்களுக்கு உங்கள் கார் உழைக்கும். மெயின்டெனன்ஸ் இல்லை என்றால், 50,000 கி.மீ-யில்கூட சுருண்டு்கொள்கிற இன்ஜின்கள் உண்டு. அதேபோல், இந்தியாவிலேயே பல லட்சம் கி.மீ ஓடிய குவாலிஸ், அம்பாஸடர், இண்டிகோ போன்ற கார்கள் இன்னமும் சாலையில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், ஒரு லட்சம் கி.மீ தாண்டிய கார் நல்ல நிலைமையில் இருந்தாலும், யூஸ்டு கார் சந்தையில் அதன் மதிப்பு மிகவும் குறைவுதான். அது டாடாவாக இருந்தாலும் சரி, பென்ஸாக இருந்தாலும் சரி. 1 லட்சம் கி.மீ தாண்டிய பின்பு, நிச்சயம் சர்வீஸ் செலவுகள் கொஞ்சம் அதிகமாகும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஹீரோ மோட்டோகார்ப் ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாஸிக், கஃபே ரேஸர் ஸ்டைலில் அறிமுகமாகியிருக்கிறது. வழக்கமான ஸ்ப்ளெண்டருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

- ஷஃபீக், அயனாவரம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாஸிக் பைக்தான், இந்தியாவின் முதல் 100சிசி கஃபே ரேஸர் ஸ்டைல் பைக். 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான இந்த பைக்கின் ஸ்டைலிங், கஃபே ரேஸர் பைக்குகளில் இருப்பதுபோல, வின்டேஜ் ஸ்டைல் சீட், ஹேண்டில்பார், வட்ட வடிவ ஹெட்லைட்ஸ், மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. வழக்கமான ஸ்ப்ளெண்டரைவிட ஸ்டைலாக இருந்தாலும், உண்மையான கஃபே ரேஸர் பைக்குகளுக்கு உண்டான அப்பீல் இதில் இல்லை. ஸ்ப்ளெண்டர் ப்ரோ பைக்கில் இருக்கும் அதே 100சிசி இன்ஜின்தான் இதிலும். ஆனால், இந்த பைக்கில் கொஞ்சம் அதிகமாக 8.24bhp சக்தியை அளிக்குமாறு டியூன் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாயில், கஃபே ரேஸர் ஸ்டைல் பைக் வேண்டும் என்றால், இப்போதைக்கு இதைத் தவிர வேறு பைக்குகள் இல்லை.

நான் ஒரு நல்ல காம்பேக்ட் செடான் காரை வாங்க விரும்புகிறேன். ஐந்து பேர் சொகுசாக, நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் இருக்கைகள் இருக்க வேண்டும். விலை பற்றி பிரச்னை இல்லை. எனக்கு முக்கியம் - நிம்மதியான ஓனர்ஷிப்தான்!

 - செ.திருநாவுக்கரசு, மதுரை.

மோட்டார் கிளினிக்

இப்போது விற்பனையில் இருக்கும் காம்பேக்ட் செடான்களில், இடவசதியில் ஸ்கோர் செய்வது டாடா ஜெஸ்ட். பார்க்க சின்ன காராகத் தெரிந்தாலும், உள்ளே பேக்கேஜிங் பக்கா. ஹூண்டாய் எக்ஸென்ட்டின் பின்னிருக்கைகள் ஜெஸ்ட்டைவிட சொகுசாக இருந்தாலும், ஐந்து பேர் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியாது. எனவே, டாடா ஜெஸ்ட்தான் உங்களுக்குச் சரியான காராக இருக்கும். வசதிகளைப் பொறுத்தவரை, ஜெஸ்ட்டின் விலை உயர்ந்த வேரியன்ட்களில் நிறைய வசதிகள் இருக்கின்றன. விலை உங்களுக்கு ஒரு பிரச்னை இல்லை என்பதால், டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்கொண்ட வேரியன்ட்டை வாங்கலாம். தொலைதூரப் பயணங்களில் கியர் மாற்றும் கஷ்டம் இல்லாமல் ஓட்டலாம். ஓனர்ஷிப்பைப் பொறுத்தவரை, உங்களது மெயின்டனன்ஸிலும், சர்வீஸ் செய்யும் டீலரின் தரத்தைப் பொறுத்து நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.

நான் கார் வாங்குவதற்காகவே பணம் சேமித்துவைத்திருக்கிறேன். சென்னையில் சுயதொழில் செய்வதால், சிட்டி டிராஃபிக்கில் அலைச்சல் அதிகமாக இருக்கும். சென்னை சிட்டியில், தொடர்ந்து அதிக நேரம் ஓட்ட எளிதான கார் ஒன்றைச் சொல்லுங்கள். எந்த இடத்தில் வேண்டுமானாலும் பார்க்கிங் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், மிக எளிதாக பார்க் செய்யக்கூடிய காராகவும் இருக்க வேண்டும். 

 ப.கணேஷ், போரூர்.

மோட்டார் கிளினிக்

சந்தேகமே வேண்டாம். உங்களுக்குத் தேவையான கார் டாடா நானோதான். அதுவும், பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ ட்விஸ்ட், உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும். காம்பேக்ட் சைஸ், சிட்டி டிராஃபிக்குக்குப் போதுமான பவர், எளிதாக பார்க்கிங் செய்யவும் ஓட்டவும் பவர் ஸ்டீயரிங் என்று சிட்டிக்காக வடிவமைக்கப்பட்ட கார் நானோ. இன்னும் சில மாதங்கள் காத்திருக்க முடியும் என்றால், அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட நானோ விற்பனைக்கு வரவிருக்கிறது.