ஸ்பெஷல்
Published:Updated:

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

தமிழ், படங்கள்: தி.விஜய்

''அரிதானது என்பது அபாரமானது கிடைக்கும் வரை மட்டுமே! என்னோட க்ரூஸ் எனக்கு அபாரமானது; அரிதானது!'' என்று பயங்கர ஃபீலிங்ஸோடு தனது செவர்லே க்ரூஸ் காரை நெருங்கினார் சரவணன். ''நாங்க ஒரு செவர்லே ஃபேமிலி. கொஞ்ச நாளைக்கு முன்னால ஆப்ட்ரா, யுவா வெச்சிருந்தேன். இப்போ என்கிட்ட பீட், க்ரூஸ்னு என் பையனோட சேர்த்து மூணு செல்லங்கள்!'' என்று க்ரூஸின் சாவியை நம்மிடம் கொடுத்தார் சரவணன்.

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

கோவை காந்திபுரத்தில் வெல்டிங் ஷாப் உரிமையாளரான சரவணன், கிரேட் எஸ்கேப் பகுதிக்காக, சென்ற ஜனவரி முதலே வாய்ஸ் மெசேஜ் செய்துகொண்டிருந்தார். ''மோட்டார் விகடனோட கிரேட் எஸ்கேப் போறனாக்கும்... நைட்டுக்குள்ள மெஷினை டெலிவரி அனுப்போணும். யாரும் லீவு கீவு எடுத்துப்போட்றாதீங்க!'' என்று தனது ஊழியர்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு, பரபரபவெனத் தயாரானார் சரவணன்.

''நட்பூ... இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தது போதும்... வண்டியில ஏறுங்க... நெல்லியம்பதி வரைக்கும் போகோணுமுல்ல!'' என்று உடன் வந்தார் சரவணனின் நண்பர் சிவக்குமார். இவர் சரவணனின் சென்னை நண்பர். சென்னையில் இருந்து கிரேட் எஸ்கேப்புக்காகவே வந்திருந்தார்.

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

க்ரூஸின் மிகப் பெரிய ப்ளஸ் அதன் டிஸைன்தான். முன் பக்க கிரில், பனி விளக்குகள், பின் பக்க ஸ்பாய்லர் என்று சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டு, அழகாக இருந்தது சரவணனின் க்ரூஸ். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்பதால், கிளட்ச், டெட் பெடல் என்று நசநசவென்று இல்லாமல், சிம்பிளாகவும், ப்ரீமியம் லுக்கிலும் அசத்தியது இன்டீரியர். மிடில் கிளாஸ் மக்களின் ப்ரீமியம் கார் என்பதால், டிரைவிங்கில் டிரைவ் மோட் ஆப்ஷன் மட்டும்தான் இருந்தது. ‘D’ மோடுக்கு லீவரைத் தள்ளி, பிரேக்கில் இருந்து காலை எடுத்தால், சிறுத்தைபோல சீறத் தயாராகிறது க்ரூஸ்.

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

க்ரூஸின் மற்றொரு ப்ளஸ், பெர்ஃபாமென்ஸ். இதை ஓட்டிப் பார்த்து அனுபவித்தால்தான் தெரியும். நெடுஞ்சாலையில், 140 கி.மீ வேகத்தில் சென்றாலும், ஆட்டம் போடாமல் அசரடித்தது. ஆனால் மெயின் ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி பாலக்காடு சாலையை நெருங்கியபோது, க்ரூஸின் மற்றொரு முகம் வெளிப்பட்டது. மோசமான சாலை மற்றும் அடிக்கடி வந்த ஸ்பீடு பிரேக்கர்களால் தட்டுத் தடுமாறி... பம்மியபடி... மேடுகள் மீது உறவாடிக்கொண்டே மெதுவாக நகர்ந்தது க்ரூஸ். சஸ்பென்ஷன்தான் க்ரூஸின் மைனஸ்களில் முக்கியமானது. மேடு, பள்ளங்களில் பயணிக்கும்போது காருக்குள் இருப்பவர்கள் எல்லோரும் குலுங்கிக்கொண்டேதான் பயணிக்க வேண்டும்.

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

சுற்றிலும் வயல்வெளிகளுக்கு நடுவில் உள்ள சாலையில் ஜிவ்வெனப் பறந்துகொண்டிருந்தது க்ரூஸ். சாலை, லேசாக வலதுபுறம் திரும்பியது. இது வடக்கஞ்சேரி  பொள்ளாச்சி ஹைவே. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வருபவர்கள் இந்தச் சாலை வழியாகத்தான் வரவேண்டும். நெல்லிக்குளம் எனும் பகுதியைத் தாண்டி, நெம்மாரா என்ற இடத்தில் நெல்லிக்குளங்கரா பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. அம்மன் பக்தர்களுக்கு நிச்சயம் இந்தக் கோவில் பிடிக்கும். திருச்சூருக்கு இணையாக யானைகளை வைத்து நடக்கும் இந்தக் கோவில் திருவிழாவில், ஒருவித இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்படும் பாயாசம், பிரசாதமாகக் கிடைக்கும். ''இந்தப் பாயாசத்துக்காகவே அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வருவோம் நண்பரே!'' என்று சொன்னார் சரவணன். கொடக்காரா நாயர் என்பவர், நெல்லியம்பதியில் இருந்து இந்த அம்மனை, மழை  வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒரு குடையின் கீழ் பத்திரமாகக் கொண்டுவந்து இந்த இடத்தில் சேர்த்து, இந்த பகவதி கோவிலை உருவாக்கினார் என்கிறது ஸ்தல வரலாறு.

அங்கிருந்து 30 கி.மீ போனால், இடதுபுறம் வருகிறது பொத்துண்டி எனும் அணை. சுற்றுலாவாசிகள் மத்தியில் இந்த அணை அவ்வளவு பிரபலம் இல்லை. எனவே, அந்த ஊர் காதலர்கள் இந்த இடத்தைத்தான் மீட்டிங் பாயின்ட்டாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், இந்த அணையின் அமைதி மட்டுமில்லை; அழகும் அப்படி!

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

19ம் நூற்றாண்டில் உருவான இந்த அணையின் ஸ்பெஷல் என்னவென்றால், இது சிமென்ட் கான்க்ரீட் கலவையால் கட்டப்பட்டது இல்லை. ஜேக்கரி என்னும் பனை வெல்லத்தாலும், ஒருவித சுண்ணாம்புக் கிளிஞ்சல்களாலும் கட்டப்பட்டது. சித்தூர் வட்டத்தின் விவசாயத்துக்கும், தண்ணீர்த் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது பொத்துண்டி அணை. இறைக்கும் கிணறு சுரக்கும் என்பதுபோல், இங்கே எடுக்க எடுக்க... தண்ணீரின் அளவு குறையவே இல்லை என்பது இன்னொரு ஸ்பெஷல். கிட்டத்தட்ட பல ஏக்கருக்கு... பச்சைப்பசேல் மலைகளுக்கு நடுவில், பயம் கலந்த அழகில் நம்மை மெஸ்மரிஸம் செய்கிறது பொத்துண்டி.

பொத்துண்டி அணையில் இருந்து கொஞ்ச தூரம் பயணித்ததுமே மலைப் பாதை ஆரம்பிக்கிறது. வழக்கம்போல, செக்போஸ்ட்டில் சம்பிரதாய செக்அப் முடித்துவிட்டு மலையேற ஆரம்பித்தோம். 'நெடுஞ்சாலை மட்டுமல்ல; மலைப் பாதையும் எனக்குப் பிடிக்கும்’ என்பதுபோல க்ரூஸ் செயல்பட ஆரம்பித்திருந்தது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இருப்பதால், மலை ஏற்றங்களில் 'டர்போ லேக்கா... அப்படின்னா?’ என்று தேட வைக்கிறது க்ரூஸ்.

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

பொதுவாக மலைப் பாதைகளில், ஏறும் வாகனங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படை விதிகூட, கேரளாவின் எந்த லாரி டிரைவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை போலிருக்கிறது. தாறுமாறாக வந்த லாரிகளிடம் இருந்து தப்பிக்க, க்ரூஸின் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்கும், டர்போ சார்ஜரும் பார்ட்னர்ஷிப் வைத்து உதவின. பவர் ஸ்டீயரிங் இல்லாத, மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வாகனங்களில் பயணிக்கும்போது, கொஞ்சம்... இல்லை, ரொம்பவும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

சேர்ந்தே இருப்பது மலைகளும் அருவிகளும் என்பதுபோல, சின்னச் சின்ன அருவிகள் சலசலப்புச் சத்தத்தில் சிம்பொனி மீட்டிக்கொண்டிருந்தன. அருவி நீரைப் பருக வந்திருந்த ஒன்றிரண்டு மான்களும் பறவைகளும், க்ரூஸின் டீசல் இன்ஜின் வைப்ரேஷனைக் கேட்டதும் மிரண்டு ஓடின. யானை, காட்டெருமைகளுக்கு எல்லாம் தண்ணீர்ப் பிரச்னை இல்லை போல. இருளத் தொடங்கிய பின்னும் எந்தக் காட்டு மிருகங்களும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், 'இது காட்டு மிருகங்கள் உலவும் இடம்; மிருகங்களுக்கு வழிவிட்டுச் செல்லுங்கள்’ என்று வலியுறுத்தி அனுப்பி இருந்தார்கள் செக்போஸ்ட் அதிகாரிகள்.

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

நான்கு மணிக்கு மேல் நெல்லியம்பதி காட்டுக்குள் ஜீப் சவாரிக்கு அனுமதி இல்லை. எனவே, காலையில் செல்ல முடிவெடுத்தோம். நெல்லியம்பதியில் 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ என்பதுபோல், இங்குள்ள ஒரே ஒரு காட்டேஜ் ‘ITL’ ரிஸார்ட்தான். இதற்கு நீங்கள் முன்பதிவு செய்துதான் ஆக வேண்டும். இரண்டு படுக்கைகள்கொண்ட ஒரு அறைக்கு வாடகை 1,500 ரூபாய். வெட்ட வெளியில் இல்லாமல் நட்ட நடுக்காட்டுக்குள் இருப்பதால், இங்கு கேம்ப் ஃபயர் ஆப்ஷனும் உண்டு. இதற்குத் தனியாக 500 ரூபாய் கட்டணம். சுற்றுலாவாசிகள் குறைவு என்பதால், இந்த காட்டேஜில் தேவைக்கேற்ப மட்டுமே சமைக்கப்படுகிறது. எனவே, இரவு உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட வேண்டும். எல்லாமே காஸ்ட்லி!

மறுநாள் காலை விடிந்ததும், கேரள ஃபேவரைட் புட்டு மற்றும் கடலையைக் காலை உணவாக்கிவிட்டுக் கிளம்பினோம். நெல்லியம்பதி எல்லையை அடைந்ததும், ஜீப்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. ''சிக்ஸ் ப்ளஸ் சிக்ஸ் பன்னண்டு கிலோ மீட்டருக்கானு 1,000 ரூவ... அதோட என்ட்ரீ ஃபீஸானு 300 ரூவ.. ஈ ரைடு பிரமாதமாயினுண்டாவூம்..... பூவாமோ?'' என்று க்ரூஸைச் சுற்றி வளைக்க ஆரம்பித்து விட்டார்கள் ஜீப் டிரைவர்கள். பேரம் முடிந்து, நமக்கு ஒதுக்கப்பட்ட MM550  ஜீப்பில் ஏறினோம்.

மலைப் பாதையில் சட்டென வலது புறம் திரும்பியது ஜீப். பாதை என்றும் சொல்ல முடியாது; ரோடும் கிடையாது; இதில்தான் இனிமேல் பயணம் என்றார்கள். நடுநடுவே முளைத்த குட்டிக் குட்டிப் பாறைகளும் அகலமான பள்ளங்களும் நமது ஜீப்பின் சஸ்பென்ஷனை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹைட்ராலிக், சாஃப்ட், மோனோ ஷாக் என்று பல்வேறு விதமான சஸ்பென்ஷன்கள் ஞாபகத்தில் வந்து போயின. திடும்மென ஒரு பாறை மேடு... சுற்றிலும் அடர்த்தியான பெயர் தெரியா செடிகள்... நடுவே வேட்டையாடப்பட்ட ஒரு மானின் அழுகிய உடல் என்று த்ரில்லிங்கின் உச்சகட்டமாக இருந்தது காட்டுப் பயணம். ''ஈ மான்னே புலி அடிச்சதானு... திவசம் வந்து அதிண்டே இறைச்சினே கழிச்சிட்டுப் போவும்!'' என்றார் ஜீப் டிரைவர். 90 டிகிரியைத் தவிர மற்ற எல்லா கோணங்களிலும் வளைந்து கவிழ்ந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தது ஜீப்.

நெஞ்சை அள்ளிய நெல்லியம்பதி!

முரட்டுத்தனமான ஒரு முகட்டில் ஜீப் நின்றது. மின்னாம்பாறா எனும் இந்த இடம், முதல் வியூ பாயின்ட் என்றார் டிரைவர். இங்கு அரிய வகைப் பறவை இனமான வேழாம்பல் பறவைகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இங்கு பார்க்க முடியும் என்று டிரைவர் சொல்லி முடிக்கையில், சில வேழாம்பல் பறவைகள் 2,000 அடி உயரத்தில் மிதந்தபடி பறந்துகொண்டிருந்தன.

அடுத்து, இரண்டாவது வியூ பாயின்டான காராசூரி எனும் இடத்தில் ஜீப் நின்றது. இந்த உச்சியிலிருந்து பார்த்தால், பரம்பிக்குளம் மலைப் பகுதி பரந்து விரிந்து தெரிகிறது. இந்த இடம்தான் மாலை நேரங்களில் மிருகங்கள் வந்து இளைப்பாறும் பகுதி என்றும், 4 மணிக்கு ஜீப் சவாரி செய்தால், சரியாக 5 மணிக்கு இந்த இடத்தில் வந்து கூட்டமாக நிற்கும் காட்டு விலங்குகளைத் தரிசிக்கலாம் என்றும் சொன்னார் டிரைவர். இரவு நேரங்களில் இந்தப் பயணத்தில் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாதாம். விலங்குகளைக் கண்டு குழந்தைகள் அலற வாய்ப்பு உண்டு என்பதால், இந்த ஏற்பாடு. சில பயணங்களின்போது யானைகள் ஜீப்பைத் துரத்திய சம்பவம் சிலவற்றையும் நினைவுகூர்ந்தார் அவர். பொதுவாக, யானைகளின் உயரத்தை அதன் காலடித் தடத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாமாம். அவற்றின் கால் தடங்களின் அளவைப்போல ஆண் யானைகள் 8 மடங்கு உயரமாகவும், பெண் யானைகள் என்றால், 6 மடங்கு உயரமாகவும் இருக்குமாம்.

ஒருமுறை மென்மையாக உங்கள் கால் தடங்களை நெல்லியம்பதியில் பதித்துவிட்டு வாருங்களேன்!

வாசகர்களே!

நீங்களும் இதுபோல் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி (044 - 66802926) தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!