ஸ்பெஷல்
Published:Updated:

மலைப்பு... மயக்கம்... மர்மம்....10

கணேசன் அன்பு

 எவரெஸ்ட்டின் உச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாது. ஆனால், எவரெஸ்ட்டைப் போலவே நூற்றுக்கணக்கான கணவாய்-களையும், பனிபடர்ந்த சிகரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இமயமலைத் தொடர். மோட்டார் வாகனங்களால் சென்றடையக்கூடிய அதிக உயரமான இடம், ‘கர்துங் லா’ என்று இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். உலகின் உயரமான வாகனச் சாலையான (World’s Highest Motorable Road) ‘கர்துங் லா’-வை அடைவதே, சாகசப் பயணத்தின் இறுதி இலக்கு.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....10

லே நகரின் வடக்கே, மேகங்கள் மோதி விளையாடிக்கொண்டிருந்த உயர்ந்த மலையின் உச்சிதான் கர்துங் லா. நகரின் மத்தியில் இருந்து 40 கி.மீ தூரம் மலை ஏற்றப் பாதை மூலம் இதன் உச்சியை அடையலாம். லே நகரின் உயரம் 11,500 அடி. கர்துங் லா 18,300 அடி. ஒன்றிரண்டு மணி நேரங்களில் 7,000 அடி கூடுதல் உயரத்தை அடைந்துவிடுவதால், உடலின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மலைகளுக்கு உடல் பழக்கப்பட்ட பிறகே, கர்துங் லா செல்ல வேண்டும்.
நாங்கள் பயணித்தபோது, சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. போக்குவரத்துக்குத் தடை விதித்து, அதிவிரைவாக சாலைகளைச் சீரமைத்து அசத்தினர் BRO (Border Roads Organisation) பணியாளர்கள். இமயமலைத் தொடர் முழுக்க, சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபடும் BRO பணியாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகுந்த பாராட்டுக்குரியது. கர்துங் லா உச்சியில் இருந்து லே நகரம் நோக்கிய தென் திசையில் சிந்து பள்ளத்தாக்கும், அதனைத் தொடர்ந்து ஸான்ஸ்கர் சமவெளியின் அடுக்கடுக்கான மலை உச்சிகளின் பிரம்மாண்டமும் பிரமிப்பைத் தந்தன.

வானமே எல்லை என்பதுபோல, வானத்தை முட்டிக் கொண்டிருந்த தொடர்ச்சியான மலைத் தொடர்களுக்கு மத்தியில், ஓர் உயரமான கணவாயின் உச்சியில் கண்டு ரசித்த வானமும், வெண் மேகங்களும் பக்கவாட்டில் உரசியபடி நின்றன. இது, கர்துங் லா காண்பித்த அற்புதம். கர்துங் லா கணவாயைக் கடந்து, வடக்கு திசையில் பசுமையான நூப்ரா பள்ளத்தாக்கு உள்ளது.

நூப்ரா பள்ளத்தாக்கில் ஹண்டர் (Hunder) என்ற இடத்தில், சுற்றுலாப் பயணிகள் தங்க வசதிகள் உள்ளன. சுற்றிலும் பனி மலைகள் சூழ்ந்திருக்க, நிலப்பகுதிகள் பாலைவனம்போல மணல் மேடுகளாக அமைந்திருப்பது ஹண்டரின் சிறப்பு. இந்தப் பகுதியின் விசேஷமான Bactrain (இரட்டைத் திமில்) ஒட்டகங்களின் மூலம் மணற்பரப்பில் வலம்வருவது உற்சாகமான அனுபவம். ஹண்டரை தவிர ‘பனாமிக்’ (Panamik) என்ற இடமும் நூப்ரா பள்ளத்தாக்கில் முக்கியமான ஒன்று. அங்கிருந்து சிறிது தூரத்தில் சியாச்சின் மலை அடிவாரம். பனாமிக்கைக் கடந்து சியாச்சின் வரை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. நூற்றாண்டுகளைக் கடந்த Samtanling Gompa மற்றும் Diskit Gompa போன்ற மடாலயங்கள், நூப்ரா பள்ளத்தாக்கின் பெருமைகளை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றுகிறது.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....10

நூப்ரா பள்ளத்தாக்கில் இருந்து பெங்காங் ஏரிக்குச் செல்ல, அபாயகரமான மலைப் பாதை ஒன்றும் உண்டு. இது உயிரைத் துச்சமெனக் கருதும் உச்சகட்ட சாகசப் பயணிகளுக்கானது. பெரும்பாலும் இந்தப் பாதையை யாரும் தேர்ந்தெடுப்பது இல்லை. எங்கள் பயணத்தில் நூப்ரா பள்ளத்தாக்கு திட்டமிடப்படாததால், கர்துங் லா–வில் ‘யு டர்ன்’ எடுத்து ‘லே’ நகருக்கு இறங்கினோம். 11-ம் நாள் ஓய்வுக்குப் பிறகு, அடுத்த நாள் புறப்படத் தயாரான இடம் கார்கில்.
வாடகைக்கு எடுத்த புல்லட்களை ‘லே’வில் ஒப்படைத்துவிட்டு, டெம்போ டிராவலர் மூலமாக கார்கிலுக்குப் புறப்பட்டோம்.

லே – கார்கில் இடைப் பட்ட தூரம் 240 கி.மீ. ‘லே’-வில் இருந்து 35 கி.மீ பயணத்துக்குப் பிறகு சிந்து நதியும், ஸான்ஸ்கர் நதியும் சங்கமிக்கும் இடத்தை அடைந்தோம். இரண்டு நதிகளையும் அவற்றின் வண்ணங்களே வேறுபடுத்திக் காண்பித்தன. டிசம்பர் – ஜனவரி மாதங்
களில் இந்த நதிகளின் பெரும்பகுதி உறைந்திருக்கும். இதனை அடுத்து Moon Land என்ற இடத்தில் அதன் அழகை ரசித்ததுடன் சிறிது ஓய்வும் எடுத்துக்கொண்டோம். இந்தப் பகுதியில் இருந்த மலைகள் அனைத்தும் திட்டுத் திட்டுகளாக நிலாவின் மேற்பரப்பு போலக் காட்சியளித்தன. ஆகவேதான் இந்தக் காரணப் பெயர்.

தொடர்ந்த பயணத்தில் Namik La (12,100 அடி) எனும் கணவாய்க்கு முன்பாக, சரக்கு லாரி ஒன்று சாலை ஓரத்தில் கவிழ்ந்திருந்தது. ராணுவம் மற்றும் BRO மீட்பு பணியாளர்களுக்காகக் காத்திருப்பதாக லாரி ஓட்டுநர் தெரிவித்தார். அவருக்குத் துணையாக இன்னும் சில லாரி ஓட்டுநர்களும் அங்கேயே காத்திருந்தனர். மணாலி தொடங்கி, நகர் வரை வந்தடைந்த சாலைப் பயணங்களில், இந்த ஓட்டுநர்களின் ஒற்றுமையும், புரிந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும், உதவும் மனப்பான்மையும் பெரிதும் வியக்கவைத்தன.

லே – கார்கில் இடைப்பட்ட மலைத் தொடர்கள் மஞ்சள்/சாம்பல் வண்ணங்களைக்கொண்டு வறண்டு இருந்தன. சாலையை ஒட்டி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே வந்த சிந்து நதியின் படுகைகளில் மட்டும் லேசான பசுமை எட்டிப் பார்த்தது. நீண்ட சோர்வான பயணத்துக்குப் பிறகு, கார்கில் வந்து சேர்ந்தபோது, மாலை 5 மணி. கார்கில் நகர வீடுகளும், கட்டடங்களும் மிகப் பழமையாக இருந்தன. இருள் பரவத் துவங்கிய 7 மணி அளவிலேயே ஆள் நடமாட்டம் குறைந்துவிட்டது. பயணத்தில் இதுவரை கடந்து வந்த ஊர்கள், மனிதர்களைக் காட்டிலும் கார்கிலும், அவர்களின் கலாசாரமும், உடைகளும், உணவுகளும், வீடுகளின் அமைப்புகளும் 21–ம் நூற்றாண்டின் நவீன காலகட்டத்துக்கு மாறியிருக்கவில்லை.

அடுத்த நாள், நகர் புறப்படுவதற்காக காலை 7 மணிக்கே தயாராகி நின்றோம். கார்கில் நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருந்தது போர் நினைவுச் சின்னம். போரில் இறந்த நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்த உணவகத்தில் காலை உணவருந்தினோம். சிறிது ஓய்வுக்குப் பின்பு, போரின்போது எதிரிகளால் கைப்பற்றப்பட்ட NH1 தேசிய நெடுஞ்சாலையில் நகர் நோக்கி வேகமெடுத்தது வேன்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....10

மணாலியை அடுத்து ஜிஸ்பா கிராமத்துக்குப் பிறகு துவங்கிய லடாக் பிராந்தியந்தின் வறண்ட (பனிப்பாலை) மலைகள், கார்கிலைக் கடந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆரம்பமானதும் முற்றிலும் மாறிவிட்டன. இப்போது வழிநெடுகிலும் பசுமை மட்டுமே. ஆங்காங்கே பனி உருகி சிந்து நதியில் இணைந்துகொண்டதுடன் அதன் அடர்த்தியையும் வேகத்தையும் அதிகரிக்கச் செய்தன. நகருக்கு முன்பாக அமர்நாத் செல்லும் பாதை பிரியும் மலை இறக்கம், மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அது ஒரு பிரம்மாண்டப் பள்ளத்தாக்கு. ஒருபுறம் மண் சரிவு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. வாகனங்கள், மண் சரிவின் வேகத்தைக் குறைக்கும்பொருட்டு நிதானத்துடன் ஊர்ந்து சென்றன. இது தேசிய நெடுஞ்சாலை என்று நினைத்தபோது மேலும் வியப்பு கூடியது. பசுமையான காஷ்மீர் மலைகளினூடே பயணித்து ஸ்ரீநகரை அடைந்தபோது, இருள் பரவத் தொடங்கியிருந்தது. 10 நாட்களுக்கும் மேலாகப் பயணித்த இமயமலைப் பயணத்தின் இறுதிக்கட்டம் என்பதால், மனதிலும் மென்சோகம் பரவியது.

இமயமலை, இந்தியாவின் இயற்கை அரணாக அமைந்துள்ளது என்று பள்ளி நாட்களில் படித்திருப்போம். சிம்லா, மணாலி, லே, பெங்காங் ஏரி, கர்துங் லா, கார்கில், நகர் போன்ற பகுதிகளில், சுமார் 2,000 கி.மீ பயணித்து மலைத் தொடர்களைக் கண்டு வியந்தபோதுதான், அதன் வீரியம் புரிந்தது. அரண்மனையின் மதில் சுவர்களைப்போல, இந்திய தேசத்தின் பிரம்மாண்டமான இயற்கை மதில் சுவர்களாக இமயமலைத் தொடர்கள் உள்ளன. நவீன ஆயுதங்கள் மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக்கு முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், எந்த ஒரு எதிரிப் படையாலும் கடந்து வர முடியாத மர்ம மலைகளாக அமைந்திருக்கின்றன. ஒட்டுமொத்தப் பயணத்தில் பார்த்துப் பிரமித்த விஷயம், இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணி. கடும் குளிரிலும், பனிப்பாலை நிலங்களிலும், அடர்ந்த காடுகளிலும், பனிச் சிகரங்களிலும் அவர்களின் தன்னலமற்ற சேவையாலும், அர்ப்பணிப்பாலும் மட்டுமே, நாம் இங்கே பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர முடிந்தது. பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம், உணவும் அதன் தரமும். 13 நாட்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே கிடைத்த விடுதி உணவுகளையே உட்கொண்ட போதும், உடலுக்கு எந்த இடர்ப்பாடுகளும் ஏற்படவில்லை. மலைவாழ் மக்கள் உபசரித்த உணவில் அன்பும் ஆரோக்கியமும் இரண்டறக் கலந்திருந்தன.

ஒட்டுமொத்தமாக சிம்லாவில் குதூகலமாக ஆரம்பமான பயணம், ரொதாங் பாஸ் -ஐ கடக்கும்போது மலைக்கவைத்ததுடன் தொடர்ந்து பல மர்மங்களைக் காண்பித்து மயக்கவும் செய்தது. பிரம்மாண்டத்தால் மனம் மயங்கியது, Acute Mountain Sickness–ஆல் சில இடங்களில் உடலையும் மயக்கமுறச் செய்தது.

தொழில்முறையாக திரைப் படங்களுக்குச் செயற்கை வண்ணம் கூட்டும் ‘கலரிஸ்ட்’ பணிபுரியும் எனது கண் முன்னே, மலைத் தொடர்களின் மாசற்ற இயற்கையான வண்ண வேறுபாடுகளைத் தரிசிக்கக் கிடைத்த ஓர் அற்புத வாய்ப்பாக இந்தப் பயணம் அமைந்தது. பிரம்மாண்டத்தின் அமைதியையும், தியானத்தின் பரவசத்தையும் உணரவைத்தது. இமயமலைகளைத் தரிசித்தவர்கள் மனதில் சாந்தமும், தியானமும் குடிகொள்வதுடன், ஆண்டுதோறும் அதன்பால் ஈர்ப்பதும் உறுதி.

மகிழ்ச்சி, துன்பம், கோபம், வெறுப்பு, பெருமை, பயம், மயக்கம், கம்பீரம் என்று மனிதன் பல்வேறு இயல்புகளை வெளிப்படுத்துகிறான். ஒட்டுமொத்தப் பயணத்தின்போது இமயமலையும் பல்வேறு முகங்களைக் காண்பித்து, மனித வாழ்வின் நிதர்சனத்துடன் தனக்கு உள்ள தொடர்பை உணரச் செய்தது. இந்த நினைவுகளைச் சுமந்தபடியே பலநாட்கள் பிரிந்திருந்த குடும்பத்தினரைத் தரிசிக்க ஸ்ரீநகரில் விமானம் ஏறினோம்!

(முடிந்தது)