ஸ்பெஷல்
Published:Updated:

பட்ஜெட் பெர்ஃபாமெர்!

ரீடர்ஸ் ரெவ்யூ YAMAHA FZ-S V2.0சி.சந்திரசேகரன், படங்கள்: பா.காளிமுத்து

யமஹா பைக் என்றாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரணம், என் அப்பா யமஹா RX100 பைக் வைத்திருக்கிறார். அதனால், நான் பைக் வாங்கினால், அது யமஹாவாக மட்டும்தான் இருக்க வேண்டும் என விதியே வைத்திருக்கிறேன்.

 ஏன் யமஹா FZ-S V2.0 பைக்?

இதற்கு முன் யமஹா RX135 வைத்திருந்தேன். அதைவிட பெரிய பெர்ஃபாமென்ஸ் பைக் வாங்க வேண்டும் என்று தேடலில் இருந்தபோது வந்ததுதான், யமஹா FZ-S V2.0. பார்க்கும்போது ஒரு மினி சூப்பர் பைக் போன்ற ஃபீல் தந்தது. ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்போது ட்ரெண்ட்டில் இருக்கும் பைக்கான FZ-S V1.0 மாடலைவிட நன்றாக இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். அதனால், FZ-V2.0 பைக் வாங்கலாம் எனத் தீர்மானித்தேன்.

பட்ஜெட் பெர்ஃபாமெர்!

ஷோரூம் அனுபவம்

மதுரையில் உள்ள இரண்டு ஷோரூம்களுக்கும் சென்றேன். அங்கு நான் கேட்ட சிவப்பு நிற பைக் இல்லை. அதற்காக 25 நாட்களுக்கு மேல் காத்திருந்தும் கிடைக்கவில்லை. அதற்கு மேலும் காத்திருக்க முடியாமல், எனது உறவினர் மூலமாக, சிவப்பு கலர் பைக்கை திருநெல்வேலியில் உள்ள இனோவேட்டிவ் மோட்டார்ஸில் இருந்து டெலிவரி எடுத்தேன். திருநெல்வேலி ஷோரூமில் பைக்கை டெஸ்ட் டிரைவ் கொடுத்தார்கள்; பைக்கைப் பற்றிய அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கமும் அளித்தார்கள். சர்வீஸ் மட்டும் மதுரையிலேயே செய்கிறேன்.

பிடித்தது

டிஸைன் மிக அருமையாக இருக்கிறது. புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் ஸ்பீடோ மீட்டர், டேக்கோ மீட்டர், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், பெட்ரோல் கேஜ் ஆகியவை உள்ளன. இவற்றை, பைக் ஓட்டும்போது தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஸ்விட்ச்கள் தரமாக இருக்கின்றன. பெட்ரோல் டேங்க் டிஸைன் புதிதாக இருக்கிறது. இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் சூப்பர்; ஹேண்ட்லிங் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கியர்களை ஸ்மூத்தாக இயக்க முடிகிறது. இதில் இருப்பது 149 சிசி ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின். பழைய FZ-S பைக்கில் இருப்பது 153 சிசி, கார்புரேட்டர் இன்ஜின். இதில் 3 சிசி குறைந்தாலும் பிக்அப் சிறப்பாக இருக்கிறது.

பிடிக்காதது

இதில் ஸ்ப்ளிட் டைப் சீட் எனக்குப் பிடிக்கவே இல்லை. மிக ரஃப்பாக வேறு இருக்கிறது. பைக் வாங்கிய இரண்டு நாட்களிலேயே சீட் சரியில்லை எனத் தெரிந்துவிட்டது. அது, மெட்டீரியல் பிரச்னையா அல்லது சீட் பொசிஷன் பிரச்னையா என்பது தெரியவில்லை. சீட்டை ஆல்ட்டர் செய்தால், பிரேக் பிடிக்கும்போது வழுக்கிவிட வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தோடு செல்வதற்கு இந்த சீட் சரியாக வராது. மேலும், குறுகலான இடங்களில் பைக்கை சடனாகத் திருப்ப முடியவில்லை. அதேபோல், சைலன்ஸர் சத்தம் ரொம்பக் குறைவு. இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். பிரேக்ஸ் கச்சிதமாகச் செயல்படுகிறது. இருந்தாலும், பின்பக்கமும் டிஸ்க் ஆப்ஷன் கொடுத்திருக்கலாம்.

பட்ஜெட் பெர்ஃபாமெர்!

என் தீர்ப்பு

குறைவான பட்ஜெட்டில், ஒரு சூப்பர் பைக் ஓட்டும் ஃபீல் கொடுக்கிறது இந்த பைக். கிளட்ச் லைட்டாக இருப்பதால், டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. கியர்பாக்ஸ் தரம் ஸ்மூத்தாகவும், இன்ஜினுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. இதுவரை 1,600 கி.மீ வரை ஓட்டி இருக்கிறேன். லிட்டருக்கு 60 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் என ஷோரூமில் சொன்னார்கள். ஆனால், என்  ஓட்டுதல் முறைக்கு லிட்டருக்கு 50 கி.மீ வரை மைலேஜ் தருகிறது.
ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்தும் வேண்டும் என்பவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் பைக், FZ-S வெர்ஷன் 2.0.