ஸ்பெஷல்
Published:Updated:

யங்ஸ்டர் கேங்ஸ்டர்ஸ்!

பட்ஜெட் கிளாஸிக்ஸ் YAMAHA RX100ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

 மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டைக் கைப் பற்ற சுஸூகியும், ஹோண்டாவும் முட்டி மோதிக்கொண்டிருந்த 1980களில், யாரும் எதிர்பாராத வகையில், இடையில் புகுந்து அதகளப்படுத்தியது யமஹா.

யங்ஸ்டர் கேங்ஸ்டர்ஸ்!

RX100. இதுதான் யமஹாவின் பெயரை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் கொண்டுசென்றது. அப்போது பவர்ஃபுல் பைக்காக இருந்த இந்த பைக், இப்போது கிளாஸிக் அடையாளம் பெற்றுவிட்டது. “நல்ல கண்டிஷனில் RX 100 கிடைக்குமா? எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை” என இளைஞர்கள் தேடி அலையும் இந்த பைக்குக்கு, ஏக கிராக்கி!

யமஹா RX100 பைக் அறிமுகமானது 1985-ம் ஆண்டு. முதலில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட யமஹா RX100, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ‘பார்ன் டூ லீட்’, ‘அஹெட் ஆப் தி 100ஸ்’ எனும் முழக்கத்துடன் விற்பனைக்கு வந்த இந்த பைக்கின் பிக்-அப், பரவசப்படுத்தும் தோற்றம், பிரத்யேகமான இன்ஜின் சத்தம் ஆகியவற்றுக்காகவே பலரும் இதை வாங்கினார்.

இன்றும் இந்த பைக் சாதாரணமாகக் கிடைப்பதில்லை. கடைசியாக வந்த புதிய யமஹா RX100 பைக், இன்று 18 வயதைக் கடந்திருக்கும். ஆனால், இன்றும் இது ஒரு புதிய பைக்குக்கான விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. 35,000 ரூபாயில் இருந்து கிடைத்தாலும், நன்றாகப் பராமரிக்கப்பட்ட பைக்குகள், 75 ஆயிரம் ரூபாய் வரை விலை சொல்லப்படுவது ஆச்சரியம்.

RX100 கிளப், RX100 ப்ரெண்ட்ஸ் என்ற பெயர்களில் சமூக வலைதளங்களிலும் இதன் ரசிகர்கள் வியாபித்திருக்கின்றனர். இதன் ஒரிஜினல் தன்மை மாறிவிடக் கூடாது என்பதற்காக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக பெயின்ட்டைக்கூட மாற்றாமல் அப்படியே பராமரித்து வரும் கோவையைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் அசோகனைச் சந்தித்தோம்.

கோவையில் சிறு தொழில் நிறுவனங்கள் நடத்திவரும் கனகராஜும், அசோகனும் RX100 பைக்கால் நண்பர்கள் ஆனவர்கள். கனகராஜ் 1988-ம் ஆண்டு 17,000 ரூபாய்க்கு வாங்கிய பைக்கையும், அசோகன் 1990-ம் ஆண்டு 22,000 ரூபாய்க்கு வாங்கிய பைக்கையும்தான் இன்றுவரை பயன்படுத்தி வருகிறார்கள்.

யங்ஸ்டர் கேங்ஸ்டர்ஸ்!

“நான் 1988-ல் இந்த பைக்கை வாங்கும்போது இதன் அருமை தெரியாது. இதனுடைய பிக்அப், இன்ஜின் சத்தம், லுக் வேறு எந்த பைக்குக்கும் வராது. கிட்டத்தட்ட நாங்க ரெண்டு பேரும் 25 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது. ரெண்டு தடவை எஃப்.சி-க்குப் போயிட்டு வந்துடுச்சு. இந்த பைக்கை நம்பி எவ்வளவு தூரம் வேணும்னாலும் போலாம்.  லிட்டருக்கு 40 கி.மீ கிடைக்கும்னு சொல்வாங்க. ஆனா, எங்க பைக் 45 கி.மீ குறையாமக் கொடுக்குது!’’ என்று பெருமையாகச் சொன்னார் அசோகன்.

‘‘ஸீரோ மெயின்டனன்ஸ் என்றால், அது RX100-தான். ஆறு மாசத்துக்கு ஒருதடவை ஒர்க்‌ஷாப் போகும்; அதிகபட்சமா 1,000 ரூபாய் செலவாகும். ஸ்பேர் பார்ட்ஸும் பிரச்னையில்லாமக் கிடைக்குது. மத்த பைக்குகளோட இதை கம்பேர் பண்ணினா, இன்னைக்கும் பெஸ்ட்டா RX100 பைக்தான் இருக்குது. இளைஞர்கள் மட்டுமில்லை. 20, 25 வயசுல வாங்குனவங்க இப்பவும் RX100 ஓட்டுறாங்க. இப்போ 20, 25 வயசு இருக்குறவங்களும் RX100-ஐ விரும்பி வாங்குறாங்க. அதுதான் RX100 பைக்கோட சக்ஸஸ்!” என்கிறார் கனகராஜ்.

இப்படி ஏத்தி ஏத்திப் பேசியே, விலையையும் ஏத்திவிட்டுட்டீங்களே பாஸ்!