ஸ்பெஷல்
Published:Updated:

குட் ஃபேமிலி கார்!

ரீடர்ஸ் ரிவ்யூ HONDA MOBILIOக.கவின் பிரியதர்ஷினி, படங்கள்: தே.தீட்ஷித்

நான்கு மாதங்களுக்கு முன்புவரை அமெரிக்காவில் பணியில் இருந்தேன். அங்கு ஹோண்டா ஒடிசி (Odyssey), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஆகிய கார்கள் வைத்திருந்தேன். இங்கு வந்தபிறகு, என்ன கார் வாங்குவது என்பதில் நிறைய சந்தேகம் இருந்தது. யாரிடமும் விசாரிக்கவில்லை. ஆன்லைனில் ரெவ்யூஸ் பார்த்துவிட்டு, முதலில் மாருதி ஸ்விஃப்ட் டிசையர், ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அதில், 5 பேர் வரைதான் உட்கார முடியும் என்பதால், அவற்றைத் தவிர்த்துவிட்டேன்.

குட் ஃபேமிலி கார்!

ஏன் மொபிலியோ?

நான், என் மனைவி, இரு குழந்தைகள், என் பெற்றோர் என என் குடும்பம் கொஞ்சம் பெரிது. குடும்பத்தோடு பயணம் செய்வதற்கு ஏற்றது போலவும், என் குழந்தைகள் வெளியூர்ப் பயணங்களின்போது பின்னால் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்க்க ஆசைப்படுவார்கள் என்பதால், நல்ல இடவசதி உள்ள பெரிய கார் வாங்க வேண்டும் எனவும் முடிவு செய்தேன்.

பின்பு, இனோவா வாங்கலாம் என ஆலோசித்தேன். அது கொஞ்சம் பெரிதாக இருக்கும்; பார்க்கிங்  செய்வது ஈஸியாக இருக்காது எனத் தோன்றியது. எனவே, இனோவா போல வேறு கார் இருக்கிறதா எனத் தேடும்போதுதான் மொபிலியோவின் ஸ்பெசிஃபிகேஷன் பிடித்தது. நான் விரும்பியதுபோல 7 பேர் உட்காரக்கூடியதாகவும் இருந்தது.

ஷோரூம் அனுபவம்

திருச்சி வரகனேரி நெடுஞ்சாலையில் உள்ள ஆடிட் ஆட்டோ ஹோண்டா ஷோரூமில் இந்த காரைப் பார்த்தேன். இதன் ரிச் லுக், ஹெட்லைட்ஸ், இன்டீரியர் ஆகியவை மிகவும் அருமையாக இருந்ததால், உடனே பிடித்துவிட்டது. என் மனைவி டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தார். அவருக்கும் பிடித்துவிட்டது. அன்றே காரை புக் செய்துவிட்டேன். காரை டெலிவரி தரும்போதுதான் மூன்றரை மணி நேரம் தாமதம் செய்தனர். கமிட் செய்த நேரத்துக்குச் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற டைம் கான்ஷியஸ், டீலர்களிடம் இருக்க வேண்டும்.

குட் ஃபேமிலி கார்!

பிடித்தது

கார் வாங்கிய பின்பு ஹோல்டர்ஸ், ஜி.பி.எஸ், ரிவர்ஸ் கேமரா ஆகியவற்றை வாங்கிப் பொருத்தினேன். நீண்ட தூரப் பயணத்துக்கு மொபிலியோ மிக வசதியாக இருக்கிறது. ஒரு லிட்டர் டீசலுக்கு சிட்டியில் 17 கி.மீ, நெடுஞ்சாலையில் 19 கி.மீ மைலேஜ் தருகிறது. பிரேக்ஸ் அருமையாக இருக்கிறது. ஓட்டும்போது அதிர்வுகளோ, இன்ஜினில் இருந்து சத்தமோ இல்லை.

ஏழு பேர் உட்காரும் கார் என்றாலும்கூட, காரின் அளவு சின்னதாகவும், பார்க்கிங் செய்ய வசதியாகவும் இருக்கிறது. பெரிய காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வே இல்லை. நகரம், நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் ஓட்டுவதற்கு வசதியாக உள்ளது. ஆரம்பத்தில் பிக்அப் நன்றாகவே  இருக்கிறது.        

குட் ஃபேமிலி கார்!

பிடிக்காதது        

மூன்றாவது வரிசையில்  சிறுவர்கள் மட்டுமே வசதியாக உட்காரமுடியும். ஷோரூமில் சொன்ன மைலேஜ் தருவது இல்லை. முதல் சர்வீஸுக்கு விட்டு வாங்கிட்டேன் இனி, மைலேஜ் நன்றாக இருக்கும் என சர்வீஸில் சொல்கிறார்கள்.

அதேபோல், மூன்று வரிசையும் ஃபுல் ஆகிவிட்டால் பூட் ஸ்பேஸ் மிகவும் சிறியதாகிவிடுகிறது. அதனால், வெளியூர்ப் பயணங்களில் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.