ஸ்பெஷல்
Published:Updated:

திருவண்ணாமலை திண்டாட்டம்!

கா.பாலமுருகன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

பஞ்ச பூத தலங்களுள், நெருப்புக்குரிய தலம் திருவண்ணாமலை. பக்தர்களின் புனித தலமான இந்த நகருக்கு இந்திய அளவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்துகூட அண்ணாமலையார் கோயிலுக்கும், ரமண மகரிஷி ஆசிரமத்துக்கும் வருகை தருகிறார்கள். அதனால், திருவண்ணாமலை பக்தர்களால் எந்த நேரமும் பரபரப்பாக இருக்கும் ஊர்.

கடந்த மத்திய, மாநில ஆட்சிகளில், மாநில நெடுஞ்சாலையாக இருந்த திண்டிவனம்   திருவண்ணாமலை  கிருஷ்ணகிரி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, நால்வழிச் சாலைக்கான நில எடுப்புப் பணிகளும் சுறுசுறுப்பாக நடந்து முடிந்து, சாலைப் பணியும் ஜரூராகத் துவங்கியது. மக்கள் மகிழ்ச்சியில் மிதந்தார்கள். காரணம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் ஓசூர், பெங்களூர் நகரங்களில் பணிபுரிகிறார்கள்.

திருவண்ணாமலை திண்டாட்டம்!

திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, மத்தூர் வழியாக கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இணைவதால், வாகனப் போக்குவரத்து முதல் விவசாயப் பொருட்களைச் சுலபமாக நகரங்களுக்கு எடுத்துச் செல்வது வரை, பல்லாயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். அதேபோல், பாண்டிச்சேரி செல்வதற்கும் சுற்றிக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. குறைவான தூரம், குறைவான  பயண நேரம் என்பதுதான் குதூகலத்துக்குக் காரணங்கள்.  

ஆனால், இப்போது சாலைப் போக்குவரத்து வசதி எப்படி இருக்கிறது? ''சென்னையில இருந்து திருவண்ணாமலை போகணுமா? வேலூர் போயி போளூர் வழியாப் போங்க... ரோடு ஓரளவுக்கு நல்லா இருக்கும். திண்டிவனம் பக்கம் போகாதீங்க... திண்டாடிடுவீங்க!'' என்றார்கள். வழியில் பார்ப்பவர்கள் எல்லாம் சாலையைப் பற்றியே புகார் வாசிக்க... அப்படி என்னதான் இந்தச் சாலையில் பிரச்னை? புதிதாக வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, இந்தப் பயணத்துக்குச் சரியாக இருக்கும்   எனத் தீர்மானித்தோம்.

சென்னையில் இருந்து திண்டிவனம் வரை, நால்வழிச் சாலையில் சுகமாக இருந்த பயணம், திண்டிவனம் நகருக்குள் திரும்பியபோதே டெர்ரர் காட்டியது. தத்தித் தத்தித் தாவி திருவண்ணாமலை சாலையைப் பிடித்ததும் ரிலாக்ஸாக ஓட்டலாம் என ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்த சற்று நேரத்தில், நேர் எதிராக பஸ் வந்துகொண்டிருந்தது. சாலையின் ஒரு பகுதி பள்ளமாக இருந்ததால், அந்த இடத்தில் போக்குவரத்து ஒரு ஓரமாகவே நடக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் கடந்த பிறகு, மெதுவாக நகர்ந்து கடந்தோம். பக்கவாட்டில் சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம், சுமார் இரண்டு அடி ஆழம் வரை இருக்கும். பக்கவாட்டில் தடுப்புகள் எதுவும் இல்லை. கொஞ்சம் கவனம் பிசகினால், எந்த வாகனமாக இருந்தாலும் கவிழ்ந்துவிடும். இரவில் இந்தச் சாலையில் பயணிப்பதை நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது. ஆங்காங்கே தோண்டிய பள்ளங்கள் அப்படியே கிடக்க, பாலம் கட்டுவதற்காக மறித்து உருவாக்கப்பட்ட சுற்றுச் சாலை சமீபத்து மழையால் சிதிலமாகிக் கிடக்க... திருவாரூர் தேர் ஆடிக்கொண்டு வருவதுபோல, எல்லா வாகனங்களும் ஆட்டம் போட்டுக்கொண்டே கடக்கின்றன.

சரி, திருவண்ணாமலை தாண்டினால் சரியாகிவிடும் என்று நினைத்தால், நிச்சயம் மாட்டிக்கொள்வீர்கள். அதாவது, நீங்கள் எஸ்யுவி போன்ற கார் இல்லாமல், ஹேட்ச்பேக், செடான் காரில் சென்றால் அண்டர் சேஸி அடி  வாங்கி அங்கேயே நிற்க வேண்டியதுதான்.

திருவண்ணாமலை திண்டாட்டம்!

திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 184 கி.மீ தூரம்தான். குறைவான கிலோ மீட்டர்கள் என ஏமாந்து இந்த வழியாகச் சென்றால், ஜென்மத்துக்கும் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்திவிடும். ஆஃப் ரோடிங் ரேஸ் போட்டிகளை இங்கே நடத்தலாம் என்கிற அளவுக்கு சாலை அதிரிபுதிரியாக இருக்கிறது. திண்டிவனத்தில் கம்பீரமாகத் திரும்பிய கார், கிருஷ்ணகிரி போய்ச்சேருவதற்குள்  படாதபாடு பட்டுவிட்டது, இதைத்தான் கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்கிறார்களோ!

என்னதான் இந்தச் சாலையில் பிரச்னை? 'இந்தச் சாலைக்கான திட்டமும் நிதி ஒதுக்கீடும் நடந்தபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி; மாநிலத்தில் திமுக ஆட்சி. ஆட்சிகள் இரண்டும் மாறிவிட்டன. ஏற்கெனவே ஒதுக்கிய நிதிக்கான பணிகளை முடித்த கான்ட்ராக்டர்கள், அடுத்து வரவேண்டிய நிதிக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், நிதி ஒதுக்கீடு நடக்கவில்லை. அதனால், பாதி வேலையோடு எல்லா வேலைகளும் நிற்கின்றன. நிதி ஒதுக்கீடு நடக்காதற்கு கட்சி அரசியல் காண்ட்ராக்டர்களின் அரசியலும் காரணம்'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நிதிப் பிரச்னை தீர்ந்து நீதி கிடைப்பது எப்போது?