ஸ்பெஷல்
Published:Updated:

பெருமை அல்ல; கடமை!

கு.நெல்சன் மேத்யுஸ் மதுரம், படங்கள்: டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்

பயணிகள் தவறவிடப்படும் பொருட்களால், ஆட்டோ டிரைவர்களுக்குக் காலம் காலமாக ஏற்படும் அவப்பெயர் கொஞ்சநஞ்சம் அல்ல!

சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோவில் தவறவிடும் பொருட்கள் பலவற்றை, டிரைவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் செய்திகளை அடிக்கடி படிக்கிறோம். தவறவிடப்படும் பொருட்களை டிரைவர் கவனித்தால்தான் உண்டு. இல்லையென்றால், அடுத்து வரும் பயணி, தவறுதலாக எடுத்துச் செல்வதும் நடக்கும்.

பெருமை அல்ல; கடமை!

சென்னையில், மதுரவாயல் பைபாஸ் சாலையின் பயன்பாட்டுக்குப் பின்பு, பெருங்களத்தூர் முக்கியமான போக்குவரத்து மையமாகிவிட்டது. இங்கு தினசரி சுமார் 2,000 பேருந்துகளுக்கு மேல் நின்றுசெல்கின்றன. பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். இதுபோன்ற பரபரப்பான இடங்களில் பயணிகளின் பொருட்கள் திருடர்களால் கவர்ந்து செல்லப்பட்டால், மீட்பது கடினம். ஆனால், இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் கண்களில் பட்டால், உங்கள் பொருள் பத்திரமாக உங்களை வந்து சேர்ந்துவிடுவதற்குச் சாத்தியம் அதிகம்.

சமீபத்தில், வயதான ஒரு பெண் பயணியால் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே தவறவிடப்பட்ட பையை, அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் 50 பவுன் நகைகளும், 2.75 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் இருந்திருக்கிறது. இதுபோல, பயணிகளால் தவறவிடப்படும் லேப்டாப், மொபைல் போன், பர்ஸ் போன்ற ஏராளமான பொருட்களை, தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் ஆட்டோ ஸ்டாண்டு ஓட்டுநர்களான கண்ணன், சங்கர், நெல்சன் முரளி, தன்ராஜ் ஆகியோர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என்பதுதான் ஆச்சரியமான, ஆனந்தச் செய்தி.

இவர்களைச் சந்தித்தோம். ''உழைத்துப் பிழைப்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படமாட்டோம். ஆட்டோவில் பயணிகள் தவறவிடும் உடைமைகள் மட்டுமல்ல, பஸ் வந்த அவசரத்தில் சிலர் சாலையில் விட்டுச் சென்ற உடைமைகளையும் நாங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். முதன்முறையாக போலீஸ் கமிஷனர் எங்களை அழைத்துப் பாராட்டிப் பரிசு வழங்கினார். இது, எங்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. இதைப் பெருமைக்காகச் செய்யவில்லை; மனசாட்சியின்படி செய்கிறோம்'' என்கின்றனர்.