ஸ்பெஷல்
Published:Updated:

ஹைப்பர் கார்!

ர.ராஜா ராமமூர்த்தி

 சூப்பர் கார், பழைய   சென்சேஷன். போர்ஷே 918, மெக்லாரன் P1, லாஃபெராரி போன்ற ஹைப்பர் கார்கள்தான் இன்றைய டிரெண்ட். ஹைப்பர் கார் என்றால், மிகக் குறைவான எடையில் ஹை-பெர்ஃபாமென்ஸ் கொண்ட ஏரோ டைனமிக் டிஸைன் கார் என்று அர்த்தம். ஹைப்பர் கார்களில் உச்சமாகச் சொல்லப்படும் சமீபத்தில் வந்துள்ள லாஃபெராரியைப் பற்றிப் பார்ப்போம்.

‘கோடிக்கணக்கில் காசைக் கொட்டி, தான் உருவாக்கும் ஹைப்பர் காரின் மதிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்வது?’ லாஃபெராரி உருவாக்கப்படும்போது ஃபெராரி தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கேள்வி இது.

ஹைப்பர் கார்!

‘என்ஸோ ஃபெராரி’ காரின் வழித் தோன்றலான இந்த ஹைப்பர் காரை ‘லாஃபெராரி (LaFerrari)’ எனப் பெயர் சூட்டக் காரணம், ‘இத்தாலியில் லாஃபெராரி என்றால், The Ferrari என்று பொருள். அதாவது, எங்கள் தொழில்நுட்பத் திறனின் உச்சம்; எங்கள் அனுபவத்தின் உச்சம்; மொத்தத்தில் ஃபெராரியின் உச்சம்’ என்கிறார்கள் ஃபெராரி நிறுவனத் தலைவர்கள்.

ஃபெராரியின் தலைமை டிஸைனர் Flavio Manzoni, ‘‘இரண்டு இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு லாஃபெராரி வரையப்பட்டது. முதலாவது, ஏரோடைனமிக்ஸ்; இரண்டாவது, காரின் எடை. டிஃப்யூஸர், ஸ்பாய்லர் போன்ற ஆக்டிவ் ஏரோடைனமிக் சமாசாரங்கள் இருப்பதால், அவற்றின் இயக்கங்களுக்கு ஏற்ப டிஸைன் செய்தோம். ஏரோடைனமிக்ஸுடன் போராடாமல், அதனுடன் இயைந்து செல்லும்படியான ஒரு வடிவத்தை உருவாக்கினோம்’’ என்கிறார்.
லாஃபெராரியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த கார்தான் ஃபெராரியின் டிஸைனர்கள் உருவாக்கிய முதல் கார். இதற்கு முன்புவரை பினின்ஃபெரினா எனும் டிஸைன் நிறுவனம்தான் ஃபெராரி கார்களை டிஸைன் செய்துவந்தது.

என்ஸோ ஃபெராரி 2002-ம் ஆண்டு அறிமுகமானபோது, அதன் எடை சுமார் 1,365 கிலோ. இந்த காரின் வழித்தோன்றலாக 10 ஆண்டுகள் கழித்து அறிமுகமாகும் லாஃபெராரி, இதைவிட அதிக எடைகொண்டிருந்தால், பெர்ஃபாமென்ஸ் அடிவாங்கும். அதேசமயம், காரில் பேட்டரி, மோட்டார்கள் என ஹைபிரிட் சமாசாரங்களையும் சேர்க்க வேண்டும். எனவே, என்ஸோவின் எடையைவிட குறைவாகவோ அல்லது சமமான எடைதான் லாஃபெராரி கொண்டிருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துக்கொண்டது ஃபெராரி. இவ்வளவு சிக்கலான சவாலைச் சமாளிக்க, தன்னுடைய ஃபார்முலா ஒன் அணியின் டெக்னிக்கல் கிங்கான Rory Byrne-ஐ நியமித்தது ஃபெராரி நிர்வாகம். லாஃபெராரியின் கார்பன் ஃபைபர் மோனோகாக் சேஸி, இவருடைய கைவண்ணம்தான்.

காரின் எடையைக் குறைப்பதற்காகவே, MilleChili எனும் ப்ரோட்டோ டைப் ஒன்றை உருவாக்கினார்கள். இதில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜினைப் பொருத்தலாம் என டெக்னிக்கல் டீம் முடிவு செய்தாலும்...ஃபெராரி தலைமை, டர்போ சார்ஜர்கள் இல்லாமல் இயற்கையாகச் சுவாசிக்கும் 6.3 லிட்டர் V12 இன்ஜின்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டது. இறுதியில், ஹைபிரிட் பாகங்களில் ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்து எடையைக் குறைத்தார்கள். லாஃபெராரியின் மொத்த எடை இப்போது வெறும் 1,255 கிலோ மட்டுமே. இது மாருதி ஸ்விஃப்ட்டின் நிகர எடையை விடவும் குறைவு.

லாஃபெராரியின் கார்பன் ஃபைபர் காக்பிட்டின் எடை வெறும் 69 கிலோ மட்டுமே! இதில் மற்ற கார்களில் இருப்பதுபோன்று வழக்கமான இருக்கைகள் கிடையாது. சேஸியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய பேடுகளின்மீதுதான் உட்கார வேண்டும். இருக்கையை அட்ஜஸ்ட் செய்வதற்குப் பதிலாக, ஸ்டீயரிங் வீலையும், பெடல்களையும் நமக்கு ஏற்றவாறு முன்னோ, பின்னோ அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

லாஃபெராரியின் இன்ஜினும், எலெக்ட்ரிக் மோட்டார்களும் இணைந்து இயங்குவது, இன்ஜினீயரிங்கின் உச்சம். மூன்றே விநாடிகளுக்குள் மணிக்கு, 100 கி.மீ வேகத்தையும், 7 விநாடிகளுக்குள் மணிக்கு 200 கி.மீ வேகத்தையும் தாண்டிப் பறக்கிறது லாஃபெராரி. காரின் மொத்த சக்தி 963 bhp.

ஹைப்பர் கார்!

டெக்னாலஜியின் உச்சமாக இருக்கும் இந்த காரை காசு இருப்பவர்கள் எல்லோரும் வாங்கிவிட முடியாது. ஃபெராரி நிறுவனம் வெறும் 499  லாஃபெராரி கார்களை மட்டுமே தயாரிக்க இருக்கிறது. காரின் விலை 12 கோடி ருபாய். தன்னுடைய  லாயல் கஸ்டமர்கள், அதாவது தொடர்ந்து ஃபெராரி கார்களை மட்டுமே வாங்கிய நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, காரை விற்பனை செய்ய இருக்கிறது ஃபெராரி. காரின் விலையைவிட இரண்டு மடங்கு பணம் தருகிறேன் என 24 கோடியுடன் ஃபெராரி அலுவலகத்துக்கு வந்தவர்களிடம் எந்தத் தயவும் காட்டாமல் திருப்பி அனுப்பிவிட்டது ஃபெராரி.

லாஃபெராரியுடன் ஃபெராரியின் ஆதிக்கம் முடிந்துவிடவில்லை. அடுத்த லாஃபெராரியின் எக்ஸ்ட்ரீம் மாடலாக, லாஃபெராரி XX தயாராகி வருகிறது. ரேஸ் டிராக்கில் மட்டுமே ஓட்டக்கூடிய இந்த காரை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஆனால், வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது. காரை ஃபெராரியே பத்திரமாக வைத்துப் பராமரித்துவரும். வாடிக்கையாளர்கள் ஃபெராரி அழைக்கும் நாளன்று டிராக்குக்கு வந்து காரை டிராக்கில் ஓட்டலாம். காரின் விலையைத் தவிர, அனைத்துச் செலவுகளும் ஃபெராரியுடையதுதான்.

1,050 bhp சக்திகொண்ட இந்த கார், வரும் டிசம்பர் 3-ம் முதல் 6-ம் தேதி வரை, அபுதாபியில் நடக்க இருக்கும் ஃபெராரியின் Corse Clienti ரேஸ் ஃபைனல் ரவுண்டில் அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது!