Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

125 சிசி செக்மென்ட்டில் எது நல்ல பெர்ஃபாமென்ஸும், ஓட்டுதல் அனுபவமும்கொண்ட பைக்? மைலேஜ் பற்றிப் பிரச்னை இல்லை. ஓட்டுவதற்கு மிக நன்றாக இருக்க வேண்டும்.

சி.முத்தமிழ் செல்வன், இமெயில்

125 சிசி செக்மென்ட்டில் பவர்ஃபுல் என்றால், அது பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்தான். ஆனால் அடிக்கடி சரியான கியர்கள் விழாமல் கடுப்பேற்றுவது இதன் மைனஸ். 125 சிசி செக்மென்ட்டில், ஹோண்டாவின் ஸ்டன்னர் பைக்தான் ஓட்டுவதற்கு ஜாலியாக இருக்கும். இதன் 124.7 சிசி இன்ஜின் 11.6 தீலீஜீ சக்தியை அளிக்கிறது.  பெர்ஃபாமென்ஸும் குறை சொல்லும்படி இல்லை. இதன் மைலேஜ் லிட்டருக்கு 55.6 கிமீ.

எனக்கு ஆஃப் ரோடு சாகஸங்கள் செய்யப் பிடிக்கும். அதேசமயம், ஆன்ரோடிலும் நல்ல அனுபவத்தைத் தரும் காராக இருக்க வேண்டும். எனக்கு ரெனோ டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் காரை வாங்கவேண்டும் என்று ஆசை கிளம்பிவிட்டது. இது நல்ல காரா?

ப.ராஜேஷ்குமார், சென்னை.

ரெனோ டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலில், தீவிரமான ஆஃப் ரோடிங் சாகசங்கள் செய்ய முடியாது. டஸ்ட்டரின் 2 வீல் டிரைவ் மாடலுக்கும், 4 வீல் டிரைவ் மாடலுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதன் சாஃப்ட் கிளட்ச். இண்டிபென்டண்ட் சஸ்பென்ஷன் மேடுபள்ளங்களை அசால்ட்டாகச் சமாளிக்கிறது. கியர் ரேஷியோ, நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சட்டென கியர்களை மாற்றிப் பறக்க முடிகிறது. சின்ன மேடுபள்ளங்கள், மணல் பிரதேசங்களில் ஏறி இறங்கலாமே தவிர... கடற்கரை மணல், சாலையே இல்லாத காடுகளில் எல்லாம் டஸ்ட்டரை நம்பிக்கையுடன் கொண்டு செல்ல முடியாது.

என்னிடம் ஃபோர்டு ஃபியஸ்டா கிளாஸிக் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் வேலை விஷயமாக மதுரைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நிறுத்துவதற்காக, காரை சாலையின் ஓரமாக, மிதமான வேகத்தில் ஓட்டி வந்தேன். அங்கு ஒரு சின்னப் பள்ளம் இருந்ததைக் கவனிக்கவில்லை. திடீரென்று காரின் முன்பக்க இடது வீல் பள்ளத்தில் இறங்கி ஏறியதில், காரே குலுங்கியது. காரின் வீலிலும், டயரிலும் எந்தச் சேதமும் இல்லை. ஆனால், மதுரை வேலை முடித்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான் கார் இடதுபக்கமாக இழுத்துக்கொண்டு செல்வதைக் கவனித்தேன். பத்திரமாக வீட்டுக்கு வந்துவிட்டாலும், என்ன செய்வது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்!

க. ரத்தினம், கரூர்.

இது நிச்சயம் அலைன்மென்ட் பிரச்னைதான். காரை சர்வீஸ் சென்டரிலோ, அலைன்மென்ட் சென்டரிலோ கொடுத்து, மேனுவலில் உள்ளபடி அலைன்மென்ட் செய்யச் சொல்லுங்கள். முக்கியமாக, வீல் பேலன்ஸிங்கும் செய்துவிடுங்கள். வீலில் பெண்ட் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், சோதனை செய்துவிடுவது நல்லது. கார் அதிகம் குலுங்கியது என்பதால், சஸ்பென்ஷனில் ஏதும் பிரச்னை இருக்கிறதா என்றும் பார்த்துவிடுங்கள். இந்த அனைத்து வேலைகள் முடிந்ததும், எல்லாவிதமான சாலைகளிலும், அலைன்மென்ட் செய்தவருடன் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.

மோட்டார் கிளினிக்

மோட்டார் விகடன் அக்டோபர் 2014 இதழில் 'கார் பழசு... வேல்யூ பெரிசு’ என்ற கட்டுரையில், ஹோண்டா சிவிக் காரைப் பற்றிப் படித்தேன். அதில் 2011 மாடல் ஹோண்டா சிவிக் காரை சுமார் 5.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்று இருந்தது. என்னுடையது 2011 மாடல்தான். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட். ஆனால், கார் 54,000 கி.மீதான் ஓடியிருக்கிறது. இந்த காரை நான் 8 லட்சம் ரூபாய்க்கு விற்கலாம் என்று இருந்தேன். ஆனால், இதே 2011 மாடல் 5.25 லட்சம் வரைதான் வெளியே விற்க முடியும் என்று நீங்கள் சொல்லியிருப்பதால், குழப்பமாக இருக்கிறது. என் காருக்கான சரியான விலை எவ்வளவு?

த.பரமேஸ்வரன், ஓசூர்.

யூஸ்டு கார் சந்தையில் 2011  ஹோண்டா சிவிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் சுமார் 4.7 லட்சம் ரூபாய் முதல் 5.5 லட்சம் ரூபாய் வரைதான் விற்பனை செய்யப்படுகிறது. காரின் விலை எவ்வளவு இருந்தாலும், சிவிக் காருக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. மேலும், இவை அனைத்தும் சுமார் 80,000 கி.மீஆவது ஓடிய கார்களாக இருக்கும். உங்கள் கார் 54,000 கி.மீதான் ஓடியிருக்கிறது என்பதால், இன்னும் கொஞ்சம் அதிகமாக 6 லட்சம் வரை விற்கலாம். அதற்கும்கூட, கார் நல்ல நிலைமையில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, காரை நல்ல முறையில் தயார் செய்துவிட்டு, 6 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யலாம். 8 லட்சம் மிக அதிகம்தான்.

புதிய யமஹா FZ-S V2.0 பைக்குக்கும், சாதாரண திஞீஷி பைக்குக்கும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்தான் முக்கிய வித்தியாசம் என்பது தெரியும். இதில், எந்த மாடலை வாங்கலாம்? இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

ர.சங்கர், மதுரை.

FZ-S V2.0 பைக்கில் இருப்பது, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம். பழைய FZ-S பைக்கில் இருப்பது, வழக்கமான கார்புரேட்டர் சிஸ்டம். கார்புரேட்டரை, சிறிது மெக்கானிக்கல் அறிவுடன் நீங்களே கூட டியூன் செய்ய முடியும். கார்புரேட்டர் பைக் மக்கர் செய்தால், நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் மெக்கானிக்கே சரி செய்துவிடுவார். ஆனால், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம், ஒரு பக்கா எலெக்ட்ரானிக் சமாச்சாரம். சென்ஸார், ECU போன்றவை அடங்கியது. இதன் ECU-ல் பதிவேற்றப்பட்டு இருக்கும் ஃப்யூல் மேப்தான் சிலிண்டருக்குள் எவ்வளவு பெட்ரோல் 'இன்ஜெக்ட்’ செய்யப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இதற்காக சென்ஸார்கள் மூலம் வெப்பம், அழுத்தம் போன்ற பல விஷயங்களைக் கணக்கெடுத்துக்கொண்டே இருக்கும். இதில் பிரச்னை என்றால், சாதாரண மெக்கானிக் இதைச் சரிசெய்ய முடியாது. கார்புரேட்டர் பைக்கின் ப்ளஸ், இதன் விலை குறைவு; எளிதாக ரிப்பேர் செய்ய முடியும். இதன் மைனஸ், கோல்டு ஸ்டார்ட்; சற்று குறைவான மைலேஜ். ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பைக்கில், கோல்டு ஸ்டார்ட் பற்றிக் கவலை தேவை இல்லை. நல்ல மைலேஜ், பவர் டெலிவரி என மெக்கானிக்கலாக அசத்தும். ஆனால், விலைதான் சற்று அதிகம். புதிய யமஹா FZ-S V2.0 பைக், சாதாரண மாடலைவிட அதிகமாக லிட்டருக்கு 46.1 கி.மீ மைலேஜ் வரை அளிக்கிறது. ஆனால், இதன் விலை, 91,326 ரூபாய் (சென்னை ஆன் ரோடு). பழைய மாடல் இதைவிடக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இரண்டில் எது தேவை என்பதை நீங்களே முடிவெடுங்கள்.  

மோட்டார் கிளினிக்

இப்போது நான் லண்டனில் இருக்கிறேன். நான், 2015 ஜூலையில் கார் வாங்க முடிவு செய்து இருக்கிறேன். 2004 முதல் ஐகான் இருந்தது. சமீபத்தில்தான் விற்பனை செய்தேன். நான் இந்தியா வந்தபிறகு ஓட்டவும், என் அப்பா அம்மாவுக்காகவும் ஒரு கார் தேவை. என்னுடய பட்ஜெட் 8 லட்சம். டீசல் கார்தான் வேண்டும். குடும்பத்துடன் கோவில்களுக்குப் போக வேண்டிவரும். மேலும், என் குழந்தையை எங்கு அழைத்துச் சென்றாலும், பேக், சைக்கிள், தள்ளுவண்டி என டிக்கியில் நிறைய இடம் வேண்டும். எனக்குப் புதிய அம்சங்கள் மிகவும் பிடிக்கும். இப்போது விற்பனையில் இருக்கும் கார்கள்தான் என்றில்லை. ஜூலை மாதத்துக்குள் வரலாம் என நீங்கள் எதிர்பார்க்கும் காராக இருந்தாலும் பரவாயில்லை. எந்த கார் வாங்கலாம்?

நி.க்ஷி.சரண்குமார், லண்டன்.

எப்படியும் பூட் நிரம்பிவிடும் என்பதால், பூட் ஸ்பேஸ் அதிகம் இருக்கும் கார்தான் உங்களுக்குச் சரியான சாய்ஸாக இருக்கும்.

ஹூண்டாய் எக்ஸென்ட் SX (டீசல்) டாப் எண்ட் மாடலை நீங்கள் பரிசீலிக்கலாம். இதன் பூட் ஸ்பேஸ் 407 லிட்டர். இந்த செக்மென்ட்டிலேயே மிக அதிக பூட் ஸ்பேஸ் கொண்டது இதுதான். ஹூண்டாய் என்பதால், வசதிகளுக்குக் குறைவில்லை. காரின் சென்னை ஆன் ரோடு விலை 8.52 லட்சம் ரூபாய். எக்ஸென்ட்டைத் தவிர, வசதிகளும், இடவசதியும் அதிகம்கொண்ட கார் டாடா ஜெஸ்ட் XT (டீசல்). ஆனால், இதன் பூட் ஸ்பேஸ் 360 லிட்டர்தான். இதன் சென்னை ஆன் ரோடு விலை 8.26 லட்சம். இந்த இரண்டு கார்களில் ஒன்று, உங்களுக்கு ஏற்ற காராக இருக்கும். குடும்பத்துடன் டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுங்கள்.

சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துவிட்டது. இரு கார்களுக்கும் சேதம். அந்தச் சமயத்தில், உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

ஜோதிமணி, சென்னை37.

விபத்து சமயங்களில், வாகன உரிமையாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதைத்தான் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். அது தேவையில்லை; குறைவான சேதம் என்றால், பரஸ்பரம் முகவரி, லைசென்ஸ் விபரங்கள் பறிமாறிக்கொண்டு, இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்யலாம். அதிக சேதம் என்றால், அருகில் உள்ள போக்குவரத்துக் காவலருக்குத் தகவல் தெரிவித்து, வழக்குப் பதிவு செய்வது முக்கியம். அடுத்தது, விபத்து நிகழ்ந்த 24 மணி நேரத்துக்குள், இன்ஷூரன்ஸ் பாலிஸி வைத்திருக்கும் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். சேதமான வாகனத்துக்கு எவ்வளவு தொகை செலவாகும் என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கூறிவிடும். மீதமுள்ள தொகைக்கு என்ன செய்ய வேண்டும் எனபதை வாகன உரிமையாளர் திட்டமிட்டுக்கொள்ள முடியும். விபத்துக்குள்ளான இருவரும் இன்ஷூரன்ஸ் பாலிஸி வைத்திருந்தால், இருவரும் க்ளைம் செய்ய முடியும்.    அதேபோல், யாருடைய தவறினால் விபத்து நிகழ்ந்ததோ, அவருடைய இன்ஷூரன்ஸ் பாலிஸியில் க்ளைம் செய்யவும் முடியும். அதாவது, மூன்றாம் நபர் விபத்துக் காப்பீடு மூலமாக நீதிமன்றம் வழியாக நிவாரணம் பெற முடியும். இந்த விபத்தில் வாகன உரிமையாளர் மற்றும் உடன் இருந்தவர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால், நீதிமன்றத்தின் மூலமாகத் தான் நிவாரணம் பெற முடியும்.