ஸ்பெஷல்
Published:Updated:

எது பாதுகாப்பான கார்?

க்ராஷ் டெஸ்ட்...சார்லஸ்

குளோபல் NCAP. 'பேரைக் கேட்டாலே சும்மா அலறுதுல்ல’னு ஆட்டோமொபைல் நிறுவனங்களை அலற வைத்துக்கொண்டிருக்கும் அமைப்பு இது. 'நியூ கார் அசெஸ்மென்ட் ப்ரோகிராம்’ என்பதன் சுருக்கம்தான் NCAP. இங்கிலாந்தில் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது இந்த குளோபல் என்காப். உலகம் முழுக்க உள்ள வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் திறன்களைச் சோதனை செய்து, அறிக்கை வெளியிடுவதுதான் இந்த அமைப்பின் முதன்மைப் பணி.

எது பாதுகாப்பான கார்?

இந்த ஆண்டின் துவக்கத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுவரும் மாருதி ஆல்ட்டோ 800, டாடா நானோ, ஃபோர்டு ஃபிகோ, ஃபோக்ஸ்வாகன் போலோ, ஹூண்டாய் ஐ10 ஆகிய கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்தது குளோபல் என்காப். இதில், ஃபிகோ, போலோ உள்ளிட்ட அனைத்து கார்களுமே தோல்வியடைந்தன. இப்போது, மீண்டும் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் நிஸானின் டட்ஸன் கோ கார்களை டெஸ்ட் செய்தது. இதிலும் இரண்டு கார்களுமே தோல்வியடைந்து, பாதுகாப்பற்ற கார்கள் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்படி நடக்கிறது இந்த க்ராஷ் டெஸ்ட்?

எது பாதுகாப்பான கார்?

நேருக்கு நேர் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும்போது, காருக்குள் இருப்பவர்களுக்கு எப்படிக் காயம் ஏற்படுகிறது? காயங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்வதுதான் இந்தச் சோதனைகளின் நோக்கம். டெஸ்ட்டிங்கின்போது, மனித உடல் போன்ற பொம்மைகள் காருக்குள் வைக்கப்பட்டிருக்கும். பொம்மையின் உடல் முழுக்கவே சென்ஸார்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொம்மைகள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என வெவ்வேறு அளவுகளில் இருக்கும். க்ராஷ் டெஸ்ட் முடிந்ததும், பொம்மையில் இருக்கும் சென்ஸார்கள் மூலம் எந்தெந்த இடங்களில் அடி பலமாகப் பட்டிருக்கிறது என்று ஆய்வு செய்யப்படும்.

இந்திய கார்களை, குளோபல் என்காப் அமைப்பு சோதனை செய்யும்முறை, ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் சோதனை முறை. இந்த நேருக்கு நேர் சோதனைகளில், எடை அதிகமான பொருள் காரின் மீது மோதும்படி செய்யப்படும். மோதும்போது காரின் வேகம் மணிக்கு 64 கி.மீ வேகமாக செட் செய்யப்படும். இதை 'ஃப்ரண்ட்டல் ஆஃப்செட் டெஸ்ட்’ என்று சொல்வார்கள். அதாவது, மோதும் பொருள் அடிபடும் காரின் முன்பக்கம் 40 சதவிகிதம் மோதும்படி இருக்கும். உலகில் பெரும்பான்மையான 'ஹெட் ஆன்’ விபத்துகள் இப்படித்தான் நடக்கின்றன என்பதால், இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

பக்கவாட்டுச் சோதனை என்பது, மணிக்கு 40 க.ிமீ வேகத்தில் ஒரு ட்ராலி, காரின் கதவுகள் பக்கமாக மோதும். இந்த மோதலின் மூலம் காருக்குள் இருப்பவர்களின் இடுப்புப் பகுதியை டார்கெட் செய்து இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இந்தச் சோதனைகள் முடிந்ததும் சென்ஸார்களின் மூலம் கணிக்கப்பட்டு குழந்தைகள், பெரியவர்களுக்கான பாதிப்புகள் எப்படி இருந்தது என்பதை வைத்து, கார் பாதுகாப்பானதா, இல்லையா எனக் கணக்கிடப்படும்.

இந்தியாவுக்குப் பொருந்துமா?

இந்தியாவைப் பொறுத்தவரை, 'அராய்’ எனச் சொல்லப்படும் 'ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ என்கிற அமைப்புதான், இந்தியாவுக்குள் விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, சான்றிதழ் அளிக்கிறது. குளோபல் என்காப் நிறுவனத்தின் சோதனை முறை, ஐரோப்பிய சோதனை முறை. குளோபல் என்காப் எனப்படும் தொண்டு நிறுவனத்துக்கு, ஐரோப்பிய கார் நிறுவனங்கள்தான் நிதி உதவி அளிக்கின்றன. அதனால், குளோபல் என்காப் ஜப்பான் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் இப்போது எழுந்திருக்கிறது.

ஏற்கெனவே ஐந்து கார்களை டெஸ்ட் செய்தபோது ஃபிகோவில் காற்றுப் பைகள் இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்றும், போலோவில் காற்றுப் பைகள், ஏபிஎஸ் இருந்த மாடல் பாதுகாப்பானது என்றும் சொல்லி, இந்த இரண்டு கார்களை மட்டும் இந்த டெஸ்ட்டில் இருந்து காப்பாற்றியது குளோபல் என்காப். ஆசிய நாடுகளின் கார் நிறுவனங்களை அழிக்கத் திட்டம் தீட்டப்படுவதாகப் பொங்குகின்றன ஜப்பானிய கார் கம்பெனிகள்.

எது பாதுகாப்பான கார்?

குளோபல் என்காப் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மேக்ஸ் மோஸ்லி. இவர் ஃபார்முலா ஒன் ரேஸ் பந்தயங்களை நடத்தும் சர்வதேச ஆட்டோமொபைல் சங்கத்தின் முன்னாள் தலைவர். இவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்பு எழுந்துள்ளன. மேக்ஸ் மோஸ்லி ஐரோப்பிய, அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, இந்திய ஆட்டொமொபைல் மார்க்கெட்டைக் கட்டுப்படுத்த நினைக்கிறார் என, இவருக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கின்றன கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

குளோபல் என்காப் நிறுவனத்துக்கு இதில் உள்நோக்கம் உள்ளது என்று சொன்னாலுமே, கார்களின் பாதுகாப்புத் தரம் குறித்த விழிப்புஉணர்வை இந்த அறிக்கை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை. ஸ்டைல், சிறப்பம்சங்கள், அதிக மைலேஜ் போன்றவை மட்டும் இருந்தால் போதும் என்று, இனி எந்த கார் தயாரிப்பாளரும் நினைக்க மாட்டார் என நம்புவோம்!