ஸ்பெஷல்
Published:Updated:

வாங்கலாமா? ஃபோர்டு ஃபிகோ

பழைய கார் மார்க்கெட்சார்லஸ்

பழைய கார்களில் தற்போதைய மார்க்கெட் லீடர், ஃபோர்டு ஃபிகோ. எந்த யூஸ்டு கார் ஷோரூமுக்குப் போய் நீங்கள் விசாரித்தாலும், அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஃபோர்டு ஃபிகோ இப்போது முன்னிலையில் இருக்கிறது. நான்கு ஆண்டுகள், 1 லட்சம் கி.மீ வரை ஓடிய ஃபிகோ கார்களும்கூட, மார்க்கெட்டில் இப்போது அதிக டிமாண்டோடு விற்பனையாகின்றன. ஹேட்ச்பேக் கார்களில் முழுமையான ஆல் ரவுண்டர் ஃபிகோ என்பதுதான் இதன் செல்வாக்குக்குக் காரணம். ஆனால், இதை யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கும்போது பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இல்லை என்றால், ஃபிகோ உங்கள் பேங்க் பேலன்ஸைக் கரைக்கும் காராக மாறிவிடும்.

வாங்கலாமா? ஃபோர்டு ஃபிகோ

எப்படி வந்தது ஃபிகோ!

செடான், எஸ்யுவி எனப் பெரிய கார்களை மட்டுமே தயாரிப்போம் என்ற கொள்கையோடு நுழைந்த ஃபோர்டு நிறுவனத்துக்கு, சேல்ஸ் கிராஃப் சரிந்துகொண்டே போனது. நான்கு மீட்டருக்குள் சின்ன ஹேட்ச்பேக் காரைக் கொண்டுவந்தால் மட்டுமே, இந்தியாவில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை உணர்ந்தது ஃபோர்டு நிர்வாகம். 1995ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்த ஃபோர்டு, 2010ம் ஆண்டுதான் முதன்முறையாக ஃபிகோ என்ற ஹேட்ச்பேக் காரைக் கொண்டுவந்தது. மிகவும் தாமதமான முடிவு இது என்றாலும், மிகச் சிறப்பான காரைக் கொடுத்து ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் மாருதி, ஹூண்டாயின் ஆதிக்கத்தை உடைத்தது.

அடுத்த ஆண்டு, புதிய ஃபிகோ விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் இப்போது ஃபிகோ அதிகமாகப் புழங்குகிறது. நல்ல ஃபிகோவை எப்படி வாங்குவது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, எதற்காக ஃபிகோவை வாங்க வேண்டும் என்று பார்ப்போம்.

பெர்ஃபாமென்ஸ்!

ஃபிகோவில் பெட்ரோல்  டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுமே உண்டு. ஆனால், ஃபோர்டைப் பொறுத்தவரை பெட்ரோல் இன்ஜினைவிட டீசல் இன்ஜின்களைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. காரணம், பெட்ரோல் இன்ஜின்களின் பெர்ஃபாமென்ஸ் மிகச் சுமாராக இருக்கும் என்பதோடு, மைலேஜும் ரொம்ப சுமாராகவே இருக்கும். டீசல் இன்ஜினைப் பொறுத்தவரை 68தீலீஜீ சக்தி கொண்ட 1.4 லிட்டர் இன்ஜின்தான் ஃபோர்டு ஃபிகோவில் இருக்கிறது. இதன் ஆரம்ப வேகம் சிறப்பாக இருக்கிறது. நகருக்குள் ஸ்டார்ட்/ஸ்டாப் டிராஃபிக்கில் பயன்படுத்த, வசதியான காராகவும் இருக்கிறது ஃபிகோ. டர்போ லேக் இல்லை. ஆனால், நெடுஞ்சாலையில் அதிக வேகம் செல்லச் செல்ல, பெர்ஃபாமென்ஸில் பின்தங்கிவிடுகிறது. ஆனால் அதிர்வுகளோ, ஆட்டமோ இல்லாமல், ஸ்டெபிளிட்டியில் சிறப்பான காராக இருப்பது, ஃபிகோவின் மிகப் பெரிய பலம்.

ஓட்டுதல் மற்றும் கையாளுமையைப் பொறுத்தவரை, மற்ற ஹேட்ச்பேக் கார்கள் ஃபிகோவுடன் அவ்வளவு எளிதில் போட்டி போட்டு ஜெயித்துவிட முடியாது. மோசமான சாலைகளில் பயணித்தாலும் அலுங்கல் குலுங்கல்கள் காருக்குள் அவ்வளவாகத் தெரியவில்லை என்பதோடு, வளைவுகளில் வளைத்துத் திருப்பி ஓட்டவும் ஈஸியான காராக இருக்கிறது ஃபிகோ. அதேபோல், டர்னிங் ரேடியஸ் மிகவும் குறைவு என்பதால், யுடர்ன் எடுப்பது, பார்க்கிங் செய்வது அனைத்தும் ஈஸி.

டிரைவிங் பொசிஷன் செம பர்ஃபெக்ட். டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால் வெளிச்சாலை நன்றாகத் தெரிவதோடு, பெடல்கள் சரியான உயரத்தில் இருப்பதால், நீண்ட தூரம் ஓட்டினாலும் அலுப்புத் தெரியவில்லை. ஃபிகோ டீசல் நகருக்குள் லிட்டருக்கு 14.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 18.5 கி.மீ மைலேஜ் தருகிறது.

வாங்கலாமா? ஃபோர்டு ஃபிகோ

கவனம் தேவை!

2008 ஜனவரி முதல் 2011 பிப்ரவரி வரை தயாரிக்கப்பட்ட ஃபிகோ கார்களை, 2012ம் ஆண்டு ரீகால் செய்தது ஃபோர்டு. தவறான பவர் ஸ்டீயரிங் ஹோஸ், ரியர் ட்வீஸ்ட் பீம் ஆகியவற்றால், ஃபிகோ கார்களைத் திரும்ப அழைத்துச் சரிசெய்து கொடுத்தது. மீண்டும் 2013ம் ஆண்டு, 2010 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட கார்களையும், 2011 மார்ச் முதல் நவம்பர் வரை தயாரிக்கப்பட்ட கார்களையும் திரும்ப அழைத்தது. பவர் ஸ்டீயரிங் ஹோஸில் பிரச்னை இருந்ததால், அதைச் சரிசெய்துகொடுத்தது. மீண்டும் 2011 ஜனவரி முதல் 2012 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட கார்களைத் திரும்ப அழைத்து, ரியர் ட்விஸ்ட் பீமில் பிரச்னை இருந்ததால், அதையும் சரிசெய்துகொடுத்தது.

பவர் ஸ்டீயரிங் ஹோஸில் பிரச்னை இருந்தால், வெடிப்புகள் விழ ஆரம்பிக்கும். இந்த வெடிப்புகளால் பவர் ஸ்டீயரிங் ஆயில் லீக் ஆகி, எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் பிரச்னையை உண்டாக்கும். இதனால் கார் தீப்பிடிக்கும் ஆபத்து அதிகம். அதேபோல், ரியர் ட்விஸ்ட் பீமில் பிரச்னை இருந்தால், இதுவும் வெடிப்பை உண்டாக்கும். பின்பக்க சஸ்பென்ஷனில் கார் ஓட்டும்போது விநோதமான சத்தத்தைக் கிளப்பும். இதைச் சரிசெய்யாமலே ஓட்டிக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் கார் பிரேக் டவுன் ஆகிவிடும். இதனால், நீங்கள் வாங்கும் கார் இந்தக் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டிருந்தால், இந்தப் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றனவா என்று சர்வீஸ் ஹிஸ்டரியில் செக் செய்வது மிக மிக அவசியம்.

ஃபிகோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு. இதனால், பெரிய பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் காரில் அதிக எடையோடு பயணிக்கும்போது, காரின் அடிப்பாகம் அடிபட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். அதனால், காரின் அன்டர் பாடியை செக் செய்வது அவசியம்.

சில ஃபிகோ கார்களில் ஏ.சி எவாப்ரேட்டர் காயில் சீக்கிரமே பழுதடைந்துவிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மற்ற ஹேட்ச்பேக் கார்களில் இருப்பதைவிடவும் பெரிய ஏ.சி கம்ப்ரஸரைக் கொண்டது ஃபிகோ. இதனால், காரின் கேபின் சீக்கிரத்தில் சில்லென மாறிவிடும். சில நிமிடங்கள் ஆகியும் கேபின் 'சில்’ ஆகவில்லை; கொஞ்சம் விநோதமாக 'ஹிஸ்ஸ்’ என சத்தம் எழுகிறது என்றால், எவாப்ரேட்டர் காயிலில் பிரச்னை என்று அர்த்தம். எவாப்ரேட்டர் காயிலை முழுவதுமாக மாற்ற வேண்டும் என்றால், 6,000 ரூபாய் வரை செலவாகும்.

ஃபிகோவை 10,000 கி.மீக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும். பெய்ட் சர்வீஸ் எனும்போது, 5,000 ரூபாய் வரை பில் வரும். 50,000 கி.மீ அல்லது 60,000 கி.மீயில் கொஞ்சம் பெரிய சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும். கிளட்ச் பிளேட் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டத்தில் சில பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு 20,000 ரூபாய் வரை செலவாகும். 30,000 கி.மீக்கு ஒருமுறை டீசல் ஃபில்டரை மாற்றச் சொல்கிறது ஃபோர்டு. இதற்கு 1,400 ரூபாய் செலவாகும். இன்ஜின் ஆயில் மாற்ற 1,100 ரூபாயும், மூன்று ஆண்டுகள் பழைய ஃபிகோவுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க 8,000 ரூபாய் வரையும் செலவாகும்.

ஃபிகோவில் டிரைவிங் பொசிஷன் பெர்ஃபெக்ட். நீண்ட தூரம் கார் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது.

பெரிய ஏ.சி கம்ப்ரஸரைக் கொண்டது ஃபிகோ. அதனால் கேபின் சீக்கிரத்தில் 'சில்’ ஆகிவிடும். அப்படி ஆகவில்லை என்றால் ஏ.சி காயிலில் பிரச்னை!

காருக்குள் தண்ணீர் பாட்டில், பொருட்கள் வைக்கப் போதுமான இடம் உண்டு. பின்பக்கம் பவர் விண்டோ ஆப்ஷன் இல்லை. ஆடியோ கன்ட்ரோல்கள் ஸ்டீயரிங் வீலுக்குப் பின்பக்கம் கொடுக்கப் பட்டுள்ளன.

சின்னப் பயணங்களுக்குப் பொருட்கள் எடுத்துச் செல்ல போதுமான டிக்கி.