ஸ்பெஷல்
Published:Updated:

50 நாட்களில் இந்தியா!

ர.ராகேஷ்குமார்

இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை ஒரே சுற்றில் பார்ப்பது எனத் திட்டமிட்டு, வெற்றிகரமாக அதை முடித்துள்ளனர், பெங்களூரில் வசிக்கும் சேது சுப்பிரமணியன்  லஷ்மி தம்பதியினர்.

தேவகோட்டையை பூர்வீகமாகக்கொண்ட இவர்கள், கடந்த ஜூன் 20ம் தேதி பெங்களூருவில் துவங்கி, 19 மாநிலங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஆகஸ்ட் 9 அன்று பயணத்தை முடித்துள்ளனர். மொத்தம் 50 நாட்களில் 17,450 கி.மீ தூரம்  ரெனோ டஸ்ட்டர் காரில், தனியாகப் பயணம் செய்துள்ளனர். இவர்களை பெங்களூரில் சந்தித்தோம்.

50 நாட்களில் இந்தியா!

''பெங்களூரில் இருந்து ஹம்பி, பாதாமி ஆகிய கர்நாடக நகரங்கள் வழியாக, மகாராஷ்ட்ரா குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் வழியாக காஷ்மீர் ஆகியவற்றைக் கடந்து உலகின் உயரமான (வாகனங்கள் செல்லக்கூடிய) இடமான கர்துங் லாவை அடைந்தோம். பிறகு அங்கிருந்து திரும்பி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் வழியாக தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், கன்னியாகுமரி சென்றுவிட்டு மதுரை வழியாக பெங்களூரு வந்தடைந்தோம்!' என பயண வழித் தடத்தைச் சொன்னவர், பயணத்துக்கான காரணத்தைச் சொன்னார்.

''புகைப்படம் எடுப்பதிலும் வரலாறுகளைப் படிப்பதிலும், எங்கள் இருவருக்குமே ஆர்வம் அதிகம். வரலாறுகளில் படித்த சில இடங்களை நேரில் சென்று பார்க்கலாம் எனத் திட்டங்கள் வைத்திருந்தோம். மொத்தமாக ஒருமுறை இந்தியாவையே சுற்றிப் பார்த்துவிடலாம் எனத் தீர்மானித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிடத் தொடங்கினோம்.

அதற்கான வரைபடத்தைத் தயாரிப்பதும், அழிப்பதும் பிறகு திருத்துவதுமாக இருந்தோம். மேலும், பயணத்துக்கு ஏற்ற காரும் எங்களிடம் அப்போது இல்லை.

சரி, கார் ஒன்றைப் புதிதாக வாங்கலாம் எனத் தீர்மானித்து, அலசி ஆராய்ந்தோம். டீசல் இன்ஜின்கொண்ட நல்ல மைலேஜ் கொடுக்கும் காராக இருக்க வேண்டும்; அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், அதிக பொருட்கள் வைக்க வசதியாக இருக்க வேண்டும் என நினைத்தோம். டாடா சஃபாரி இதற்குப் பொருத்தமாக இருக்கும் என நினைத்தபோதுதான், ரெனோ டஸ்ட்டர் இந்தியாவில் அறிமுகமானது. எங்களின் தேவைக்கு ஏற்றதுபோலவும் இருந்தது. அதனால் டஸ்ட்டர் வாங்கினோம்.

இந்தச் சுற்றுலாத் திட்டத்தை பெங்களூருவில் உள்ள ரெனோ ஷோரூமில் கூறியபோது, அவர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. நாங்கள் புறப்படும்போது, இந்தியாவில் அவர்களது சேவை மையங்களின் பட்டியல், தொடர்பு எண்கள் ஆகியவற்றை அளித்து, எங்கள் பயணத்தை நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்து, கொடியசைத்துத் துவங்கிவைத்தனர்.

எங்களின் பயணம் 17,500 கி.மீ தூரம் என்பதால், இடையில் 10,000 கிலோ மீட்டருக்கான ஒரு சர்வீஸ் பீரியட் வந்தது. நகரில் இந்த சர்வீஸைச் செய்தோம். அது ஒன்றைத் தவிர, கார் காரணமாக இந்தப் பயணம் எங்குமே தடைபடவில்லை. இன்னும் சொல்லப்போனால், 18.5 கி.மீ மைலேஜ் அளித்துவந்த டஸ்ட்டர், நெடுஞ்சாலைப் பயணம் அதிகம் என்பதனால், 21 கி.மீ வரை மைலேஜ் அளித்தது!' என்றார் சேது சுப்பிரமணியன்.

''மொபைலின் ஜிபிஎஸ் வசதியை நம்பித் தான் இந்த மொத்தப் பயணத்தையும் தொடங்கினோம்'' என்று பேசத் தொடங்கினார் லஷ்மி. 'லோத்தல் என்ற ஊரில் இருந்து சோம்நாத் செல்வதற்காக, மாலை வேளையில், ஜி.பி.எஸ் உதவியோடு கிளம்பினோம். ஜி.பி.எஸ் எது சுருக்கமான வழியோ, அதைத்தான் நமக்கான வழியாகக் காண்பிக்கும். அப்படிச் சென்றுகொண்டிருக்கும்போது, இரவு 9.30 மணி கடந்திருக்கும். வழியில் ஒன்றிரண்டு கிராமங்களைத் தவிர, எந்த ஊரையும் காண முடியவில்லை. இப்படிப் போய்க்கொண்டே இருக்கும்போது, ஜிபிஎஸ் '30 கி.மீ சோம்நாத்பூர்’ என்று காண்பிக்கிறது. ஆனால், அதன் பின்பு எந்தச் சாலையும் தென்படவில்லை. அப்போது எதிரே இருந்த பெயர்ப் பலகையில், You are Entering into Gir Forest என்று எழுதியிருந்தது. திடுக்கிட்டு காரைத் திருப்பினோம். விசாரிப்பதற்கு ஒரு காவலாளிகூட அந்த இடத்தில் இல்லை. இரவு 11 மணி... என்ன செய்வது எனத் தெரியாமல் வந்த வழியே திரும்பி, 120 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு, அதிகாலை 3 மணிக்குத்தான் சோம்நாத்பூரை அடைந்தோம். ஜிபிஎஸ் கருவியை நம்பிச் சென்று, கிர் காட்டுக்குள் புகுந்த இரவை மறக்கவே முடியாது.

50 நாட்களில் இந்தியா!

அதேபோல், பீகார் செல்லும் வழியில் நக்ஸலைட் பகுதிக்குள் சென்றுவிட்டோம். இந்த முறை ஜிபிஎஸ் சரியான வழியைத்தான் காண்பித்தது. ஆனால், வழியில் பாலம் உடைந்திருந்தது ஜிபிஎஸ்க்கு எப்படித் தெரியும்? அதன் அருகில் இருந்த வழித்தடத்தில் சென்று பார்க்கலாம் எனச் சென்றபோது, அங்கே ஆயுதம் ஏந்திய ராணுவப் படை இருந்தது. அவர்களின் விசாரணைகளுக்குப் பிறகு, 'இது நக்ஸல் ஏரியா. இங்கே வரக் கூடாது’ என எச்சரித்து, வேறு பாதையைக் கூறினர். அவர்கள் காட்டிய வழியில் பயணத்தைத் தொடர்ந்தோம்!'' என்றார் பயம் விலகாமல்.

''எங்கள் பயணத்தில் சாலை மோசம் என்று எங்கேயும் இல்லை. ஆனால், இமயமலைச் சாலைதான் சவால் நிறைந்ததாக இருந்தது. ஒருவழிப் பாதைதான்; எதிரில் வரும் வாகனங்களுக்கு ஏற்றதுபோல நாம் ஒதுங்கி நின்று செல்ல வேண்டியிருக்கும். சாலைகளின் நடுவே ஆங்காங்கு பள்ளங்கள் உருவாகி, தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும், பனிப்பாறைகள் மலையில் இருந்து உருண்டு விழுந்துகொண்டிருக்கும். அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் மிக எளிதாக இந்தப் பிரச்னைகளை அணுகுகிறார்கள். வழியில் ஏதேனும் பள்ளம் வந்தால், ஒரு சில கற்களை எடுத்துப்போட்டு அந்தப் பள்ளத்தைச் சமன்செய்து, சுலபமாக வண்டி ஓட்டிச் செல்கிறார்கள். புதிதாகச் செல்பவர்கள்தான் இதில் மாட்டிக்கொள்கிறார்கள்.

திருட்டுச் சம்பவங்கள் எதையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை அதேபோல், எந்த விபத்திலும் நாங்கள் சிக்கவில்லை. நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் பொறுப்புடன்தான் செல்கின்றன. கார்கள்தான் பறக்கின்றன. பாதுகாப்புக்காக, ஜிபிஎஸ் லிங்க்கை நண்பர்கள் நால்வரோடு இணைத்திருந்தேன். ஒரே இடத்தில் எங்கள் கார் நகராமல் நான்கு நாட்கள் நின்றால், உடனே போன் செய்து நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமோ என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.

எந்தப் பிரச்னையும் இன்றி, திட்டமிட்ட எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து, திருப்தியுடன் ஊர் திரும்பினோம்!' என்றார் சேது சுப்பிரமணியன்.