ஸ்பெஷல்
Published:Updated:

நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா?

தமிழ், ஓவியம்: கண்ணா

சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் செல்வம். சில ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளிடம் சிக்கி, தான் விழிபிதுங்கித் திரும்பிய கதையைச் சொன்னார்.

''இது நடந்து ஏழெட்டு வருஷத்துக்கு மேலாயிடுச்சுங்க. இப்போ நான் டிராவல்ஸ் டிரைவர்; சொந்தமா ஸைலோ வெச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி லாரி டிரைவரா இருந்தேன். அப்போ, பாரத் சிலிண்டர் கேஸ் லோடு அடிப்பேன். கோயம்புத்தூர்  ஹைதராபாத் நம்ம ரூட்டு. ஒருநாள் லோடு இறக்கிட்டு, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு வந்துக்கிட்டிருந்தேன். ஆந்திராவுல கர்னூல் தாண்டி 10 கிலோ மீட்டர்ல ஒரு இடம்... சரியா ஞாபகம் இல்லை. அப்போ ரோடு, காடு மாதிரிதான் இருக்கும்.

திடீர்னு ஒரு பத்துப் பதினைஞ்சு மாட்டு வண்டிங்க இருக்கும்... தடதடனு லாரி முன்னால வரிசை கட்டி வந்து நின்னுச்சு. யாரு இவங்க.. தைரியமா நடுரோட்ல மாட்டு வண்டிகள நிப்பாட்டுறாங்களேன்னு நெனைச்சு, வண்டியைவிட்டு இறங்கினேன். 'டபார்’னு ஒருத்தன் என் கையை முறுக்கி, பின்னாலக் கட்டினான். கிளீனர் பையன் அலறிட்டான். டக்குன்னு துப்பாக்கிய நீட்டினான். பேச்சே வரலை. துப்பாக்கி முனையில, பத்து பேருக்கு நடுவுல நாங்க, பேஸ்மென்ட் வீக்காகி நின்னுக்கிட்டு இருந்தோம்.

நக்ஸலைட்ஸ்... நல்லவங்களா, கெட்டவங்களா?

லாரி நம்பர் பிளேட்டைப் பார்த்துட்டு, 'தமிழா நீ... எவ்வளவு வெச்சிருக்க?’னு ஒருத்தன் கேட்டான். 'பணம் இல்லைங்க’னு சொன்னேன். பளார்னு ஒரு அறை. படபடனு ஒரு ஏழெட்டு பேரு லாரியில ஏறி, எல்லா இடத்திலேயும் தேடிப் பார்த்தாங்க. 'இக்கட 5,000 உன்னதி’ன்னு லாரியில இருந்து ஒருத்தன் கை காண்பிச்சான். 'பொய்யா சொல்ற’னு திரும்ப ஒரு அறை. ரெண்டு மணி நேரம், அவங்ககிட்ட படாதபாடு பட்டோம்.

'வண்டியில டீசலைக் காலி பண்ணுங்கடா’னு துப்பாக்கிக்காரன் தெலுங்குல சொன்ன அடுத்த செகண்ட், லாரியில இருந்த டீசலை பம்ப் அடிச்சு எடுத்திட்டாங்க. 'நாங்க எப்படிப் போறது?’ன்னு திரும்பக் கேட்டேன். ஒரு துண்டுச் சீட்டைக் கையிலக் கொடுத்து, 'வண்டியில 3 லிட்டர் டீசல் இருக்கும். அடுத்த டீசல் பங்க் வரைக்கும் தாங்கும். வழியில யாரும் மறிச்சா, இதைக் காண்பிச்சுத் தப்பிச்சுக்கோ... இந்தச் சீட்டைக் காண்பிச்சு டீசலும் நிரப்பிக்கோ’னு சொல்லி, கட்டை அவுத்து விட்டுட்டு, லாரியில இருந்த பாத்திர பண்டங்களை எல்லாம் எடுத்துட்டுக் கிளம்பிட்டாங்க.

'விட்டா போதும்டா சாமி’னு வண்டியைக் கிளப்பிட்டேன். தூரத்துல ஒரு டீசல் பங்க் இருந்துச்சு. அவங்க சொன்ன மாதிரியே கரெக்ட்டா அந்த டீசல் பங்க் வர்ற வரைக்கும்தான் வண்டியில டீசல் இருந்தது. அப்போ நைட்டு ரெண்டு மணி இருக்கும். தூங்கினவங்களை எழுப்பி, அந்தச் சீட்டைக் காண்பிச்சதும்... பதறியடிச்சு தடதடனு டேங்க்கையே ஃபுல் பண்ணிக் கொடுத்துட்டாங்க. 'இந்தச் சீட்டைப் பத்திரமா வெச்சுக்கங்க. போற வழியில போலீஸ்ல மாட்டினீங்கன்னாகூட யூஸ் ஆகும்’னு சொன்னார் அங்க வேலை செய்றவர். அது மட்டுமில்லாம, செலவுக்கு 500 ரூபாயும் கொடுத்தாங்க.

பெட்ரோல் பங்க், ஹோட்டல் எல்லாரோடும் நக்ஸலைட்ஸ்க்கு லிங்க் இருக்குன்னு அப்போதான் தெரிஞ்சது. இன்னொரு விஷயம்  அவங்க உண்மையிலேயே நக்ஸலைட்டா, இல்லை திருடங்களானு தெரியலை. இன்னும் இந்தத் திருட்டோட லாஜிக்கும் எனக்குப் புரியலை. 5,000 ரூபாய்க்கு டீசல் ஃபில் பண்ணினதா நெனைச்சுக்கிட்டேன். ஆனா, இந்தச் சம்பவத்தை இப்ப நினைச்சாலும் திகிலா இருக்கு சார்!'' என்று மிரட்சி குறையாமல் சொன்னார் செல்வம்.

அன்பு வாசகர்களே, டிரைவர்களே!

உங்களுக்கும் இதுபோல், த்ரில்லான... திகிலான... ஜாலியான அனுபவங்கள்  கிடைத்திருக்கலாம். உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள மோட்டார் விகடன் தயாராக இருக்கிறது. (044 - 66802926) தொலைபேசி எண்ணில் உங்கள் குரலைப் பதிவு செய்யுங்கள். நாங்களே உங்களை அழைக்கிறோம்.