ஸ்பெஷல்
Published:Updated:

மேட் இன் இந்தியா!

DC அவந்திதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார், DC அவந்தி. பிரபல  டிஸைனர் திலீப் சாப்ரியாவின் கைவண்ணத்திலும், DC டிஸைன்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களின் கற்பனையிலும் கைவண்ணத்திலும் உருவான கார் இது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் புதிய அவதாரமான அவந்தியை டெஸ்ட் செய்தோம்.

மேட் இன் இந்தியா!

நகரத்துக்குள் காரை ஓட்டினால், சுற்றிலும் வாகனங்களுக்குப் பதிலாக செல்போன் கேமராக்கள்தான். பிஎம்டபிள்யூ, பென்ஸுக்குக் கிடைக்காத வரவேற்பு, அவந்திக்குக் கிடைக்கிறது. லம்போகினியைவிட கிரேஸியான டிஸைன்கொண்ட அவந்தியைப் பார்த்தால், உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. காரின் டிஸைன், எல்லோருக்கும் பிடிக்கும் எனச் சொல்ல முடியவில்லை. ஆனால், எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கிறது அவந்தி.
காரின் பானெட்டில் இருக்கும் கறுப்புக் கோடு, அகலமான பானெட் கண்ணை உறுத்தாமல் இருக்க, அதை அழகாகப் பிரித்துவிடுகிறது. காரின் பக்கவாட்டு டிஸைன், கலக்கல்.

காரின் பின்பக்கம்தான் அதிரடித் திருப்பமாக இருக்கிறது. இந்திய கார்களைப் பொறுத்தவரை, மிக புதிய டிஸைன் இது. லே மான்ஸ் ரேஸ் கார்போல நீளமாக இருக்கிறது.  இன்ஜினுக்கு மேல் இருக்கும் கறுப்புப் பட்டைகள், செம ஸ்டைலிஷ். காரின் ஷோல்டர் லைனும், ரூஃப் லைனும் நெருங்கும்விதம் அழகு. அந்த இடம் சற்று இழுத்ததுபோலத் தெரிந்தாலும், பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.

உள்ளே

காரின் உள்ளே கேபின் விசாலமாக இருக்கிறது. ஆனால், காரின் உயரம் குறைவுதான். கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் என்பதால், உயரமானவர்களுக்குத்  தலை இடிக்கும். நாம் டெஸ்ட் செய்தது, ப்ரீ -ப்ரொடக்‌ஷன் கார் என்பதால், உள்ளே இன்னும் சில வேலைகள் மிச்சம் இருந்தன. டயர்கள், சென்டர் கன்ஸோல் போன்றவை பார்க்க நன்றாக இருந்தன. ஆனால், காரின் உள்ளே அமர்ந்துகொண்டு பின்னால் எதையும் பார்க்க முடியவில்லை. அதற்கு ரிவர்ஸ் கேமராதான் கைகொடுக்கிறது.

டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாஃப்ட் டச் ஏ.சி பட்டன்கள் போன்றவை நாம் ஓட்டிய காரில் இருந்தாலும், தயாரிப்பு மாடல் காரில், ipad ரெசல்யூஷன்கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புதிய டோர் பேடுகள் என சென்டர் கன்ஸோலில் மேலும் சில வசதிகள் சேர்க்கப்படுமாம்.

மேட் இன் இந்தியா!

இன்ஜின்

அவந்தி ஸ்போர்ட்ஸ் காரில் இருப்பது, 1,998 சிசி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின். 248 bhp சக்தியை அளிக்கும் இந்த 4 சிலிண்டர் இன்ஜினை, ஒரு பிரபல பிரெஞ்சு கார் நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறது DC நிறுவனம். அந்த நிறுவனத்திடம் இன்ஜின்களுக்கான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாததால், அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட வேண்டாம் என DC நம்மிடம் கேட்டுக் கொண்டாலும், கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமம் இல்லை. க்ளூ முந்தைய வரிகளிலேயே இருக்கிறது.

இன்ஜினை ஆன் செய்தால், ஸ்போர்ட்ஸ் காருக்கான படபடப்பு எதுவும் இல்லாமல் அமைதியாக உயிர்பெறுகிறது. இன்ஜினை அதிகமாக ரெவ் செய்தால்தான் சத்தம் வருகிறது. அப்போதும் ஸ்போர்ட்ஸ் காருக்கான  ‘கேரக்டர்’ இல்லாத  சத்தமாக இருக்கிறது. தயாரிப்பு மாடலில் ஸ்போர்ட்டியான எக்ஸாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்படும் என்கின்றனர். நம்புவோம்.

கிளட்ச் கொஞ்சம் டைட்டாக இருக்கிறது. ஆனால், இன்ஜின் நல்ல ரெஸ்பான்ஸிவ்வாக இருக்கிறது. டர்போ லேக் குறைவாகவும், கியர்பாக்ஸ் ரேஷியோ நெருக்கமாகவும் இருப்பதால், ஆக்ஸிலரேஷன் சிறப்பாக இருக்கிறது. இன்ஜின் அதிகபட்சம் 6,200ஆர்பிஎம் வரைதான் ரெவ் ஆகிறது. 0-100 கி.மீ வேகத்தை 7.75 விநாடிகளில் அடைகிறது. ஆனால், காரின் எடை சற்று அதிகம் என்பதால், பெர்ஃபாமென்ஸ் ‘ஃபீல்’ குறைவுதான். காரணம், காரின் ஸ்பேஸ் ஃப்ரேம் சேஸியின் எடை மட்டும் 400 கிலோ. தயாரிப்பு மாடலில் 100 கிலோ குறைந்துவிடும் என்கிறது DC.

சஸ்பென்ஷன், பெரிய மேடு பள்ளங்களை நன்றாகச் சமாளிக்கிறது. ஒட்டுமொத்தத்தில் ஓட்டுதல் தரம் நன்றாகவே இருக்கிறது. வழக்கமாக ஸ்போர்ட்ஸ் கார்கள் தரையோடு தரையாக இருக்கும். ஆனால், அவந்தியின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கர் பற்றிய கவலை இல்லை.

மேட் இன் இந்தியா!

கையாளுமையிலும் ஆச்சரியப்படுத்துகிறது அவந்தி. கொஞ்சம் நன்றாக வளைத்துத் திருப்பி ஓட்டினால்தான் ஸ்போர்ட்டி ஃபீலிங் கிடைக்கிறது. ஒரு மிட் இன்ஜின் (இரண்டு ஆக்ஸில்களுக்கு நடுவில் இன்ஜின்) ஸ்போர்ட்ஸ் காருக்கான அருமையான கையாளுமையைக் கொண்டிருக்கிறது. பிரேக்கை இன்னும் சிரத்தை எடுத்து இயக்க வேண்டியிருந்தாலும், வேகத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும் சற்று சிரத்தை எடுத்துதான் கியர்ஷிஃப்ட் செய்யவேண்டியிருக்கிறது. பேடில் ஷிஃப்டர்களுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஸ்டீயரிங் பெர்ஃபெக்ட்டாக இன்னும் செட்டப் செய்யப்படவில்லை. ஜாலியாக ஓட்ட விரும்பும் ஓட்டுநருக்கான காராக ஆகக்கூடிய கார் அவந்தி.

அவந்தியின் சிறப்பான ஓட்டுதல் தரத்துக்கும், கையாளுமைக்கும் காரணம், இதன் ஸ்பேஸ் ஃப்ரேம் சேஸி. இந்தியச் சாலைகளுக்காக வலுசேர்க்கப்பட்ட இந்த சேஸி, உலக அளவில் பிரபலமான டிஸைன். முழுக்க முழுக்க DC டீம்தான் இந்த சேஸியை வடிவமைத்து உருவாக்கியிருக்கிறது. ஸ்ட்ரட்டுகள் கோனி நிறுவனத்திடம் வாங்கப்பட்டு சேர்க்க்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் ஆர்ம்கள் புனேவிலேயே தயாரிக்கப்படுகின்றன. 20 இன்ச் அலாய் வீல்கள், வீல்ஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுகிறது. முன்பக்கமும் பின்பக்கமும் முறையே 330 மிமீ, 295 மிமீ  வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
காரின் பாடி, சூப்பர் ஸ்ட்ராங் ஹைடெக் கார்பன் ஃபைபர் பேனல்களால் உருவாக்கப் பட்டுள்ளது. இவற்றை இந்திய நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறது DC. பெங்களூரூவில் இருக்கும் அந்த நிறுவனம், இஸ்ரோவுக்கு பாகங்களைத் தயாரித்துக் கொடுத்த நிறுவனமாம்.

மேட் இன் இந்தியா!

அவந்தி காரை 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது DC. அப்படி வந்தால் அவந்திக்கு ஸ்போர்ட்ஸ் கார் ரசிகர்கள் ஆரத்தி எடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம்!

அவந்திதான் இந்தியாவின் முதல் மிட் இன்ஜின் கார். கவனத்தை ஈர்க்கும் டிஸைன், நல்ல பெர்ஃபாமென்ஸ், சிறப்பான கையாளுமை என இந்திய ஆட்டோமொபைல் துறையின் வருங்காலத்தின் மீது நம்பிக்கையை வரவழைக்கும் கார். இதன் விலை 35 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காசுக்கு நிறையவே மதிப்பைத் தருகிறது அவந்தி. இதை உருவாக்க பெரும் முயற்சி எடுத்திருக்கிறது DC நிறுவனம். இன்னும் சுமார் 15 சதவிகித வேலைகள் மிச்சம் இருப்பதால், தயாரிப்பு மாடல் காரை ஓட்டிய பிறகுதான் முழு தீர்ப்பும் எழுத முடியும். இந்தியாவின் முதல் ஸ்போர்ட் ஸ்காருக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருக்கிறது DC அவந்தி!

மேட் இன் இந்தியா!