ஸ்பெஷல்
Published:Updated:

க்யூட் கூப்பர்!

MINI COOPER Dவேல்ஸ்

 ‘ச்சோ ச்வீட்... ச்சோ க்யூட்’ போன்ற வர்ணனைகளுக்குப் பொருத்தமான கார், மினி! கிராஸ்ஓவர், கன்வெர்ட்டிபிள், கூபே இப்போது புதிதாக 5 டோர்ஸ் என மினி எத்தனை வடிவம் எடுத்தாலும், ஒரிஜினல் மினியின் அழகும் அடையாளமும் அப்படியே இருப்பது, மினி கூப்பரில்தான். சென்னையில் இருக்கும் பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில், இதை உற்பத்தி செய்யும் திட்டங்கள் இருந்தன. இருப்பினும், மூன்று கதவுகளைக்கொண்ட மினி கூப்பரைவிடவும், கன்ட்ரிமேன் அதிக இடவசதியோடு இருந்ததால், மினி கூப்பர் நம் நாட்டில் வெற்றி பெறவில்லை. ஒருவேளை இந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், மினி கார்களின் விலை கணிசமாகக் குறைந்திருக்கும்.

க்யூட் கூப்பர்!

சரி, இப்போது புதிதாக அறிமுகமாகி இருக்கும் மினி கூப்பரைப் பார்ப்போம். இந்தமுறையும் CBU (Completely Built Unit) ஆக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதால், இதன் விலையில் பெரிய மாற்றம் இல்லை. அப்படி என்றால், எந்த நம்பிக்கையில் புதிய மினி கூப்பரை அறிமுகப்படுத்துகிறது BMW? என்னதான் சொகுசு கார் செக்மென்டாக இருந்தாலும், இந்த செக்மென்ட் வாடிக்கையாளர்களும் கணிசமான அளவில் டீசல் கார்களைத்தான் விரும்புகிறார்கள். அதனால், மினி கூப்பரை டீசல் இன்ஜினோடும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அடுத்ததாக, இதன் இன்ஜின் சத்தம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இதன் ஓட்டுதல் தரமும் முன்னேற்றம் கண்டிருக்கிறது.

டிஸைன்

தூரத்தில் இருந்து பார்த்தாலே, மினி வருவதைக் கண்டுபிடித்துவிட முடியும். காரணம், இதன் பானெட், விண்ட்ஸ்கிரீன், மேற்கூரை ஆகிய மூன்றின் கவர்ச்சி.
பழைய கூப்பருக்கும் புதிய கூப்பருக்கும் என்னதான் வித்தியாசம்? சொல்லப்போனால், மினி இப்போது அந்த அளவுக்கு ‘மினி’ இல்லை. ஆம், இதன் நீளம் 3,821 மிமீ. பழைய காரைவிட 98மிமீ நீளம் கூடியிருக்கிறது. அதனால், வீல்பேஸ் தாராளமாகிவிட்டது. மேலும், இதன் 16 இன்ச் வீல்கள், ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸை நோக்கி நகர்ந்து, காருக்கு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. அறுகோண வடிவத்தைக்கொண்ட இதன் கிரில், பளிச் எனக் காட்சியளிக்கும் வீல் ஆர்ச் ஆகியவை மினிக்கு, தனித்தன்மையைச் சேர்க்கின்றன.

பிஎம்டபிள்யூவின் UKL பிளாட்ஃபார்மில்தான் மினி உருவாக்கப்படுகிறது. இப்போது வரும் எல்லா மினி கார்களைப் போலவும் கூப்பரிலும் இன்ஜின் குறுக்குவசமாகத்தான் பொருத்தப் பட்டிருக்கிறது. ஃப்ரண்ட் வீல் டிரைவ், முன்பக்கம் மெக்பர்ஸன் ஸ்டர்ட், பின்பக்கம் மல்ட்டி லிங்க் சஸ்பென்ஸன் போன்ற அம்சங்களில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனாலும், இதை அமைத்திருக்கும் முறையிலும், செய்யப்பட்டுள்ள மாற்றங் களினாலும், சஸ்பென்ஷன் தரம் மேம்பட்டுள்ளது.

க்யூட் கூப்பர்!

உள்ளலங்காரம்

காரின் நீளம் அதிகமாகி இருப்பதால், கேபின் ஷோல்டர் ரூம் மற்றும் ஹெட்ரூம் அதிகமாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பின்னிருக்கைகளில் கால்களை நீட்ட மேலும் இடம் கிடைத்திருக்கிறது. நான்கு பேர் உட்காரக்கூடிய காராக இருந்தாலும், இதற்கு இரண்டு கதவுகள்தான். அதனால், பின்னிருக்கைகளுக்குச் செல்ல சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், உட்கார்ந்துவிட்டால் வசதியாக இருக்கிறது.

முன்னிருக்கைகளும் வசதியாகத்தான் இருக்கின்றன. தொடைக்குக் கூடுதலாக சப்போர்ட் தேவைப்பட்டால், வசதிக்கு ஏற்றதுபோல சீட்டை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும் முடிகிறது. ஆனால், எலெக்ட்ரிக் சீட் அட்ஜஸ்மென்ட் இல்லாமல் இருப்பதுதான் பெரிய ஏமாற்றம்.
உள்ளலங்காரத்தின் தரத்தை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது மினி. ஓடோ மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஏ.சி வென்ட்டுகள் என மினியில் எல்லாமே வட்ட வட்டமாகத்தான் இருக்கின்றன. சென்டர் கன்ஸோலில் இருக்கும் LED திரையின் ஓரம், நாம் ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டினால், சிகப்பு நிறத்துக்கும் மேனுவல் மோடில் வைத்து ஓட்டினால், பச்சை நிறத்துக்கும் மாறுவது ‘வாவ்’ ரகம்.

BMW கார்களைப்போலவே மினியிலும் ஸ்டெஃப்னி டயர் இல்லை. டிக்கியில் இரண்டு சூட்கேஸ்களை வைக்கும் அளவுக்கு இடம் தாராளமாக இருக்கிறது. மேலும் இடம் தேவைப்பட்டால், பின் இருக் கைகளையும் மடக்கிக்கொள்ளலாம்.

க்யூட் கூப்பர்!

இன்ஜின்

மினி கூப்பரில் பெட்ரோல் வெர்ஷனும் உண்டு என்றாலும், இங்கே நாம்  டெஸ்ட் செய்தது  டீசல் இன்ஜின்தான். இதை இயக்குவது 114 bhp (4,000rpm) அளிக்கக்கூடிய 1.5 லிட்டர் வேரியபிள் ஜியோமென்ட்ரி டர்போ சார்ஜர்கொண்ட 3 சிலிண்டர் இன்ஜின். இருந்தாலும் டர்போ லேக் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காமல் இது, சத்தமே இல்லாமல் இயங்குகிறது. இதன் டார்க் 27.5 Kgm (1,750rpm) என்பதால், மிட் ரேஞ்சிலேயே பீக் பவர் வெளிப்படுகிறது.

கையாளுமை

கையாளுமையில் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது மினி. பிரேக்கும் பக்காவாகச்

க்யூட் கூப்பர்!

செயல்படுகிறது. அதேபோல, சஸ்பென்ஷனும் சூப்பர்.

மைலேஜ்

மினி கூப்பர், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 16.8 கி.மீ, நகருக்குள் 11 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.

கையாளுமை, சொகுசு என இரண்டிலும் ஸ்கோர் செய்வதால், டிரைவிங் ஆர்வலர்களால், இந்த கார் அதிகமாக விரும்பப்படும். இந்த டெஸ்ட் டிரைவ் மினி டீசலைப் பற்றியதுதான் என்றாலும், டீசலைவிட பெட்ரோல் வெர்ஷன் நன்றாக இருக்கிறது என்பதையும் இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும். அது மட்டுமல்ல, டீசல் - பெட்ரோல் என இரண்டுமே 34.5 லட்சம் ரூபாய்தான் (எக்ஸ் ஷோரூம்) என்பதால், பெட்ரோல் வாங்குவதுதான் சரியான சாய்ஸ். ஆனால், பெட்ரோலைவிட டீசல் விலை குறைவு. அதனால், டீசலே சிறந்தது எனச் சொல்பவர்கள் வேண்டுமானால், டீசலைத் தேர்ந்தெடுக்கலாம்.