ஸ்பெஷல்
Published:Updated:

2015 - ன் புதிய ஃபோர்டு எண்டேவர்

ர.ராஜா ராமமூர்த்தி

 இந்தியாவின் ‘பிக் பாய்’ எஸ்யுவியான எண்டேவர், புதுப் பொலிவுடன் வரத் தயாராகிவிட்டது. வெளிநாடுகளில் ‘எவரெஸ்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எண்டேவரின் புதிய மாடல், இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஆதிக்கத்தை முறியடிக்க, பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய எண்டேவரின் டிஸைன் பார்க்க ஃப்ரெஷ்ஷாகவும், பழைய காரைவிட மிரட்டலாகவும் இருக்கிறது. ரேஞ்சர் பிக்-அப் டிரக்கை அடிப்படையாகக்கொண்ட கார் என்பதால், அதன் பிரம்மாண்டம் இதிலும் அப்படியே இருக்கிறது. பெரிய வீல் ஆர்ச்சுகள் இந்த எஸ்யுவிக்கு ஒரு ஸ்போர்ட்டியான லுக்கைத் தருகின்றன. முன் பக்க க்ரில்லில் க்ரோம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், ஃபோர்டு நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிஸைன் கொள்கை இதுதான். LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், அலுமினியம் ஸ்கஃப் பிளேட்ஸ், பின் பக்கம் தடிமனான க்ரோம் பார் போன்றவை காருக்கு உயர்தர ஃபீல் அளிக்கின்றன. பழைய எண்டேவரின் பின்பக்கக் கதவு பக்கவாட்டு முறையில் திறக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். அதை மாற்றிவிட்டு, இப்போது மேல்நோக்கித் திறக்கும்படி அமைத்திருக்கிறார்கள். அதனால், ஸ்பேர் டயர் காருக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளது.

2015 - ன் புதிய ஃபோர்டு எண்டேவர்

காரின் உள்ளே பழைய காரைப் போலவே பாக்ஸியான கேபினைக் கொண்டுள்ளது. டேஷ்போர்டு பார்க்கவே ‘கனமாக’ இருக்கிறது. பெரிய க்ரோம் ஏ.சி வென்ட்டுகள், ஸ்க்ரீன் போன்றவை ‘பிக் -சைஸ்’ அமெரிக்க கார்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால், கறுப்பு வண்ண சென்டர் கன்ஸோல் பார்க்க மிகச் சாதாரணமாக இருக்கிறது. டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இப்போது ஃபோர்டு நிறுவனத்தின் ‘SYNC 2’ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கும் டிஸ்ப்ளே ஸ்க்ரீன்கள், 7 காற்றுப் பைகள் எனக் கலக்குகிறது புதிய எண்டேவர். அது மட்டுமில்லாமல், காருக்குள் தண்ணீர் பாட்டில் உள்பட பொருட்கள் வைக்க சுமார் 30 இடங்கள் உள்ளன. இரண்டாவது, மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்து விட்டால், 2,010 லிட்டர் இடம் கிடைக்கிறது.

2.2 லிட்டர், 3.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களோடு விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய ஃபோர்டு எண்டேவர். 6- ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு. இது தவிர, ஆல் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் என இரண்டு டிரைவ்களிலும் கிடைக்கும் புதிய எண்டேவர்.

ஆசிய சந்தைகளுக்கான எண்டேவர், ஃபோர்டு நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்தியாவுக்கு CKD முறையில் இறக்குமதி செய்யப்பட்டு, அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், டொயோட்டா ஃபார்ச்சூனரை வீழ்த்த வேண்டும் என்றால், எண்டேவரின் விலை குறைவாக இருக்க வேண்டும். புதிய எண்டேவர் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது!