ஸ்பெஷல்
Published:Updated:

C க்ளாஸ் சூப்பர் க்ளாஸ்!

தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பென்ஸ் பிரியர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸாக, புதிய C க்ளாஸ் மாடலை விற்பனைக்குக் கொண்டுவரத் தயாராகி விட்டது மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம். 2014-ம் ஆண்டை ‘இயர் ஆஃப் எக்ஸலென்ஸ்’ என்று மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா அறிவித்தபோது, இவ்வளவு திட்டங்களை அந்த நிறுவனம் கையில் வைத்திருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் S க்ளாஸ் காரில் ஆரம்பித்து, ‘மாதம் ஒரு கார்’ என தனது ரேஞ்ச் முழுக்கவும் இப்போது ஃப்ரெஷ் கார்கள். இதில் லேட்டஸ்ட் C க்ளாஸ்.

C க்ளாஸ் இப்போது பென்ஸின் விலை குறைந்த கார் இல்லை. A க்ளாஸ், அந்த ஏரியாவைப் பார்த்துக்கொள்ள, தைரியமாக ப்ரீமியம் சொகுசு கார் என மார் தட்டிக்கொள்ளலாம் C க்ளாஸ் வாடிக்கையாளர்கள்.

C க்ளாஸ் சூப்பர் க்ளாஸ்!

டிஸைன்

டிஸைனில் அப்படியே பென்ஸின் சூப்பர் ஸ்டாரான S க்ளாஸ் போலவே இருக்கிறது, புதிய C க்ளாஸ். இதுதான் ஜெர்மன் கார்களுடைய ஃபேமிலி டிஸைன் கொள்கைகளுக்கான காரணம். S க்ளாஸ் போலவே, இதன் ரூஃப் லைன் மிக அழகாக வளைந்திருக்கிறது. காரின் முன்பக்க க்ரில், முன்பைவிட யூத்ஃபுல். ஃபுல்-LED ஹெட்லைட்ஸ் செம ஸ்டைலிஷ்! பழைய C க்ளாஸ் லேசாக டயட்டில் இருந்ததுபோல இருக்கிறது காரின் ஒட்டுமொத்தத் தோற்றம். ஆனால், கண்ணை உறுத்தும் ஒரே விஷயம், காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ். இந்தியச் சாலைகளுக்காக காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பிய C க்ளாஸ் கார்களில் இருக்கும் ஒரு ரிச் லுக் இதில் இல்லை. காரின் எக்ஸாஸ்ட்களுக்கு குரோம் பூச்சு கொடுக்கப்பட்டிருந்தாலும், அது வெறுமனே டம்மிதான். உண்மையான எக்ஸாஸ்ட், பம்பருக்கு உள்ளே ஒளிந்திருக்கிறது.

ரியர் வீல் டிரைவ் காரான C க்ளாஸின் சேஸி, சுமார் 50 சதவிகிதம் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் வீல்பேஸ் 80 மிமீ அதிகரிக்கப்-பட்டிருந்தாலும், பழைய காரைவிட 100 கிலோ எடை குறைந்திருக்கிறது. வெளிநாடுகளில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷனுடன் புதிய C க்ளாஸ் கிடைத்தாலும், இங்கே புதிய செட்டப்பில் சாதாரண ஸ்டீல் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன்தான். பழைய C க்ளாஸில் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் இருந்த நிலையில், இதில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் யூனிட்டுக்கு மாறிவிட்டது.

C க்ளாஸ் சூப்பர் க்ளாஸ்!

இன்டீரியர்

வெளியிலும் மட்டுமல்ல, உள்ளேயும் மினி S க்ளாஸ்  போலவே இருக்கிறது புதிய C க்ளாஸ். உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் தரம் உச்சம். சீட் கன்ட்ரோல்ஸ், விண்டோ ஸ்விட்ச்சுகள் எல்லாம் S க்ளாஸ் காரில் இருந்த அதே டைப்தான். இந்த காரின் ஃபிட் அண்டு ஃபினிஷ் தரம், செக்மென்ட்டின் பெஞ்ச் மார்க்காக இருக்கும்.

சென்டர் கன்ஸோல், அழகான மரப் பட்டையில் அமைக்கப் பட்டுள்ளது. அதன்மீது இருக்கும் ஏ.சி வென்ட்டுகளின் ஃபினிஷ் அருமை. டேஷ்போர்டு, சென்டர் கன்ஸோல் இரண்டும் அழகாக இணைக்கப்பட்டுள்ளன. COMAND இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன், பட்டன்கள் போன்றவை ‘இந்த காருக்கு இவ்வளவா’ என கொஞ்சம் ஓவர் ஸ்டைலாக இருக்கிறது. COMAND இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீனைப் பயன்படுத்த, டச் பேட் கொடுக்கப் பட்டுள்ளது. பிரச்னை என்னவென்றால், தேவையில்லாதபோது இந்த 8.4 இன்ச் ஸ்க்ரீனை மடித்து வைத்துக்கொள்ள முடியாது. கார் ஓட்டும்போது இது நிச்சயம் கண்களை உறுத்தும்.
முன்னிருக்கைகளுக்கு மெமரி வசதியுடன் கூடிய எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மென்ட் வசதி உண்டு. இருக்கைகள் அகலமாக, சாஃப்ட்டாக இருந்தாலும், சைடு போல்ஸ்டரிங்குகள் இறுக்கமாக இருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் பெரிதாக இருப்பதால், பிடித்து ஓட்ட வசதியாக இருக்கிறது. பழைய C க்ளாஸில் பெரிய மைனஸாக இருந்தது, பின்னிருக்கை இடவசதி. இப்போது காரின் வீல்பேஸ் அதிகமாகி இருப்பதால், கால்களை நன்றாக நீட்டி - மடித்து உட்கார முடிகிறது. தொடைகளுக்கான சப்போர்ட் மிகக் குறைவாக இருப்பது மைனஸ்.

C க்ளாஸ் சூப்பர் க்ளாஸ்!

இன்ஜின்

புதிய C க்ளாஸ் C200 மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. 181 bhp, 30.6 kgm டார்க் கொண்ட இந்த இன்ஜின், செம ஸ்மூத்தாக இயங்குகிறது. மிட் ரேஞ்ச் பவர் டெலிவரி சூப்பர். இதே இன்ஜின்தான் E க்ளாஸ் பெட்ரோல் மாடலிலும் இருக்கிறது. 7-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மெருகேற்றப்பட்டு, இப்போது ‘7G-Tronic Plus’ என்று அழைக்கப்படுகிறது. போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது, இன்ஜினின் டார்க் குறைவுதான்.

புதிய C க்ளாஸில், பெட்ரோல் மாடலைத்தான் முதலில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா. டீசல் மாடல் 2015-ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம்தான் விற்பனைக்கு வரும். S க்ளாஸ் காருக்கு, இந்த கேம்-பிளான் வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஆனால், செலவை மிச்சம் பிடிக்க நினைக்கும் C க்ளாஸ் செக்மென்ட்டில் இது எடுபடுமா என்பது சந்தேகமே!

இன்ஜின் டிரைவ் மோட், ஸ்டீயரிங், கியர் பாக்ஸ், ஏ.சி, ஸ்டார்ட்-ஸ்டாப் போன்றவற்றை நம் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு. ஆனால், சஸ்பென்ஷனை மாற்றியமைக்க முடியாது. தினமும் ஓட்டுவதற்கு கம்ஃபோர்ட் ஆப்ஷன்தான் பெஸ்ட். டிரைவர் வைத்து ஓட்டினால், எக்கோ மோடில் ஓட்டலாம், மைலேஜ் அதிகமாகக் கிடைக்கும். ஸ்போர்ட்+ மோடில் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கிறது. டவுன் ஷிஃப்ட் செய்யும்போது மட்டும் மெதுவாக இயங்குகிறது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்.

C க்ளாஸ் சூப்பர் க்ளாஸ்!

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

ஓட்டுதல் தரத்தில் பழைய E கிளாஸைவிட, முந்தைய C க்ளாஸ் அருமையாக இருக்கும். இந்த விஷயத்தில் செக்மென்ட் பெஞ்ச் மார்க்காக இருந்த கார் அது. புதிய காரில் சேஸியும், ஸ்டீயரிங் மொத்தமாகவே புதுசுதான். அப்படியென்றால், ஓட்டுதல் தரமும், கையாளுமையும் முன்னேறியிருக்கிறதா?

இந்தியச் சாலைகளுக்காக காரின் சஸ்பென்ஷன் இறுக்கமாக்கப்பட்டு, கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு பயப்பட வேண்டாம். ஆனால் ஓட்டுதல் தரம் பழைய காரைப்போல சூப்பராக இல்லை. பழைய கார் எந்தச் சாலையிலும்  ஆடாமல் அசையாமல் செல்லும். ஆனால், புதிய C க்ளாஸ் உயரமாக இருப்பதாலும், சஸ்பென்ஷன் இறுக்கமாக்கப்பட்டுள்ளதாலும் மோசமான சாலைகளில் செல்லும்போது ஆட்டம் கொஞ்சம்

C க்ளாஸ் சூப்பர் க்ளாஸ்!

அதிகமாகவே இருக்கிறது. நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற காராக இருக்கிறது புதிய C க்ளாஸ். நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் ஸ்டேபிளாக இருக்கிறது. காரின் எடையும் குறைந்திருப்பதால், கையாள்வதற்கும் சிறந்த காராக இருக்கிறது பென்ஸ் C க்ளாஸ்!

புதிய C க்ளாஸ் காரின் முக்கிய நோக்கம், சொகுசு அனுபவம்தான். ரெஸ்பான்ஸிவ் இன்ஜின், ஸ்டைலிஷ் கேபின் என சொகுசை விரும்பும் வாடிக்கையாளருக்கே இந்த கார் மிகவும் பிடிக்கும். பென்ஸ் பிரியர்கள், பழைய காரில் இருந்த மெக்கானிக்கல் ஃபீல் இல்லையே என்று ஃபீல் பண்ணுவார்கள். முதல் பேட்ச் கார்கள் வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்பதால், விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். டீசல் மாடலும், இந்தியாவிலேயே அசெம்பிளியும் சீக்கிரம் வந்தால்தான் C க்ளாஸுக்கு சியர்ஸ் சொல்ல முடியும்.

C க்ளாஸ் சூப்பர் க்ளாஸ்!