ஸ்பெஷல்
Published:Updated:

ராயல் சேலஞ்ஜர்ஸ்!

ஜாகுவார் XF Vs மெர்சிடீஸ் பென்ஸ் E350 CDI Vs பிஎம்டபிள்யூ 530dதொகுப்பு: சார்லஸ்

 பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஜாகுவார் ஆகிய மூன்று சொகுசு கார்களும் வரிசை கட்டி என் வீட்டின் முன்னால் நின்றால், எந்த காரில் முதலில் ஏறுவது? எந்த காரின் உள்பக்கம் ஒரு 7 ஸ்டார் ஹோட்டலின் லாபியில் உட்கார்ந்திருப்பதைப்போல உணர வைக்கிறது? மூன்றில் எந்த காரில் நீண்டநேரம் ஜாலியாக ஊரைச் சுற்றமுடியும்? எது என் வேகத்துக்கு ஈடுகொடுக்கும்? - எனது டெஸ்ட் டிரைவில் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை என்னால் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நான் அதற்கான விடையைக் கண்டுபிடிக்காமல் விடவில்லை.

ராயல் சேலஞ்ஜர்ஸ்!

பென்ஸின் புத்தம் புதிய E350 டீசல், பிஎம்டபிள்யூ 530D, ஜாகுவார் XF ஆகிய இந்த மூன்று கார்கள்தான் ஹாட் காம்பெட்டிஷனில் இருக்கின்றன. மூன்று கார்களுமே 6 சிலிண்டர் இன்ஜின் கொண்ட மெகா சைஸ் செடான் கார்கள். மூன்றுமே பெர்ஃபாமென்ஸில் கொஞ்சம் த்ரில் வேண்டும் என்பவர்களுக்கானவை. இந்தப் போட்டியில், ஆடியின் A6 காரும் உண்டு. ஆனால், அடுத்த ஆண்டு புதிய A6 வரவிருப்பதால், இப்போதைய A6 காரின் தயாரிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி வருகிறது ஆடி. அதனால், ஆடி இந்தப் போட்டா போட்டியில் இப்போதைக்கு ஆப்சென்ட்.

சொகுசு பெர்ஃபாமென்ஸ் கார்களில் 4 சிலிண்டர் இன்ஜின் கொண்ட கார்கள், பிகினர்களுக்கானது என்றால், V8 இன்ஜின் சூப்பர் சீனியர்களுக்கானது. இந்த இரண்டுக்கும் இடையில் இருப்பதுதான் 6 சிலிண்டர் இன்ஜின்கொண்ட கார்கள். பெர்ஃபாமென்ஸ், இன்ஜின் தரம், மைலேஜ் ஆகிய மூன்றிலும் இந்த 6 சிலிண்டர் இன்ஜின்கள் பேலன்ஸ்டாக இருக்கும். மூன்று கார்களையும் இரண்டு நாட்கள் முழுமையாக ஓட்டிப் பார்த்து, இந்த டெஸ்ட் ரிப்போர்ட்டைத் தயார் செய்திருக்கிறோம்.

டிஸைன்

பென்ஸ் E கிளாஸ், ஜாகுவார் XF, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஆகிய மூன்று கார்களையும் அருகருகே நிற்கவைத்தால், உங்கள் கண்கள் பிஎம்டபிள்யூ மீதுதான் அதிக நேரம் பதிந்திருக்கும். ஸ்பிளிட் கிரில், மிரட்டலான பானெட், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 18 இன்ச் அலாய் வீல் என மிகவும் ஸ்போர்ட்டியாக இருக்கிறது பிஎம்டபிள்யூ. பென்ஸும், ஜாகுவாரும் நீளமான சூப்பர் செடான் கார்களைப்போல, மிக ராயலாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே ஸ்போர்ட்டி என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. பொதுவாக, சொகுசு கார்களின் டிஸைனைப் பொறுத்தவரை, அது ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்றாற்போல  மாறும். மேலும், சொகுசு கார்களை வெறும் வெளிப்பக்க டிஸைனை மட்டுமே வைத்து வாங்கமாட்டார்கள். காருக்குள் இருக்கும் சொகுசு வசதிகளும், பெர்ஃபாமென்ஸும் இங்கே முக்கியம்.

ராயல் சேலஞ்ஜர்ஸ்!
ராயல் சேலஞ்ஜர்ஸ்!
ராயல் சேலஞ்ஜர்ஸ்!

உள்ளே

மூன்று கார்களின் கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு காருக்குள் பார்த்தால், பிஎம்டபிள்யூவின் உள்பக்கம்தான் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. கலர் கலராக, ஜிகினா வேலைகள் எதுவும் இல்லாமல், பிஎம்டபிள்யூவின் டிஸைன் விதிகள்படி அட்சரம் பிசகாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சென்டர் கன்ஸோலின் மீதிருக்கும் ஹை-ரெஸ் எல்சிடி ஸ்கிரீன் கவனத்தை ஈர்க்கிறது. இது தவிர, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவும் உண்டு. இதில், வேக விபரங்களும் நேவிகேஷன் விபரங்களும் தெரியும். இது தவிர, ஸ்டீயரிங் முன்பாக விண்ட் ஸ்கிரீனிலும் ஸ்பீடோ மற்றும் நேவிகேஷன் விபரங்கள் தெரியும் என்பது 5 சீரிஸின் கூடுதல் கவர்ச்சி. மியூஸிக் சிஸ்டம் செம கிளாராட்டி. ஆனால், டேஷ்போர்டு மிகவும் உயரமாக இருப்பது வெளிச்சாலையை மறைக்கிறது. இதனால், நகருக்குள் ஓட்டும்போது, முன்பக்கம் எங்கேயாவது இடித்துவிடுமோ என்று பயந்துகொண்டே ஓட்ட வேண்டியிருக்கிறது.

மெர்சிடீஸ் பென்ஸில் உயரமான டேஷ் போர்டு இல்லை என்பதால், டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வெளிச்சாலையை முழுவதுமாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. ஆனால் பென்ஸ், சின்னச் சின்ன மாற்றங்கள் செய்தாலும், E க்ளாஸின் கேபினுக்கு வயதாகிவிட்டது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பழைய காலத்து ரேடியோவில் தேவையே இல்லாமல் பல பட்டன்கள் இருக்கும். அதுபோல, E க்ளாஸின் சென்டர் கன்ஸோலில் ஏகப்பட்ட பட்டன்கள். ஆடியோ கண்ட்ரோல். நேவிகேஷன், ப்ளூடூத் என அனைத்தையும் ஒரே முறையில் இயக்கும் COMAND  சிஸ்டம் E க்ளாஸில் உண்டு. ஆனால், இதைப் பயன்படுத்த அதிகப்படியான பயிற்சியும், நுணுக்கங்களும் தெரிந்திருக்க வேண்டும். யூஸர் ஃப்ரெண்ட்லியாக இது இல்லை. பென்ஸில் இருக்கும் 360 டிகிரி கோண பின்பக்க கேமராவின் வீடியோ, அப்படியே சென்டர் கன்ஸோல் ஸ்கிரீனில் தெரிகிறது. இதனால் ரிவர்ஸ் எடுப்பது, பார்க்கிங் செய்வதெல்லாம் செம ஈஸி. பில்டு குவாலிட்டியிலும் முதல் இடத்தில் இருக்கிறது பென்ஸ் E க்ளாஸ்.

ஜாகுவாரில் ஏகப்பட்ட பட்டன்கள் இருக்காது. காரணம், எல்லா கன்ட்ரோல்களையும் சென்டர் கன்ஸோலில் இருக்கும் டச் ஸ்கிரீன் மூலமே இயக்கலாம். டச் ஸ்கிரீன் இயக்குவதற்கு ஈஸியாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருந்திருக்கலாம். ஜாகுவார் டேஷ்போர்டையும் கொஞ்சம் மாடர்னாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏ.சி வென்ட்டுகளை ஃப்ளிப் செய்து திறக்கலாம் என்பதும், காரை ஆன் செய்ததும் கியர் செலக்டர், சென்டர் கன்ஸோலுக்குள் இருந்து வெளியே வருவதும் ஜாகுவார் ஜிமிக்ஸ்.

பின் பக்க சொகுசு

70 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் இந்த கார்களில் பின்பக்க இருக்கைகளும் சொகுசாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல அதிக சிறப்பம்சங்களோடு இருக்க வேண்டியதும் முக்கியம். அந்த வகையில் மூன்று கார்களில் சிறந்த கார் எது என்பதைப் பார்ப்போம். நீங்கள் காரை ஓட்டமாட்டீர்கள், பின்பக்கம்தான் அதிகம் உட்கார்ந்து பயணிப்பீர்கள் என்றால், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் உங்களுக்கான கார் இல்லை. பின்பக்க இருக்கைகள் சொகுசாக இல்லை என்பது இங்கே குறை இல்லை. முன்பக்க இருக்கைகள், பின்பக்க இருக்கைகளில் உட்காருபவர்களின் முகத்துக்கு நேராக, மிகப் பெரிதாக இருப்பது, காருக்கான சொகுசு ஃபீலைக் குறைத்துவிடுகிறது. காருக்கு வெளியேயும் பார்க்க முடியவில்லை. மேலும், பின்பக்கம் இருக்கும் 9.2 இன்ச் டிஸ்ப்ளே ஸ்கீரினும் தொந்தரவாகவே இருக்கிறது. பின்பக்கக் கண்ணாடிகள் உயரமாக இருப்பதும், மிகச் சின்ன காருக்குள் உட்கார்ந்திருக்கும் உணர்வைத் தந்துவிடுகிறது.

பின்பக்கப் பயணிகளுக்கு, கால் தொடைகளுக்குப் போதுமான சப்போர்ட் இல்லை என்பதுதான் ஜாகுவாரின் மைனஸ். உயரம் குறைவான சீட்டிங் பொசிஷன், குறைவான ஹெட்ரூம் மற்றும் சின்னக் கண்ணாடிகள் காருக்குள் இடவசதி குறைவு என்பது போன்ற தோற்றத்தைத் ஏற்படுத்துகிறது. ஆனால், பின்பக்க இருக்கைகள் அரண்மனைக்குள் உட்கார்ந்திருப்பது போன்ற கம்பீரத்தைத் தருகின்றன.

70 லட்சம் ரூபாய்க்கு மேலான கார்களில் பின்பக்கம்தான் அதிக சொகுசு வேண்டும் என்ற கொள்கையில் ஜெயிக்கிறது பென்ஸ். சொகுசான இருக்கைகள், வெளியே வேடிக்கை பார்ப்பதற்கு வசதியாக பெரிய கண்ணாடிகள், நீளமான சன் ரூஃப் ஆகியவை காருக்குள் அதிக இடவசதி இருப்பதுபோன்ற உணர்வைத் தருகின்றன. மேலும், எவ்வளவு மோசமான டிராஃபிக் நெருக்கடி மிகுந்த சாலையில் பயணித்தாலும் வெளிச்சத்தம் காருக்குள்ளே வரவில்லை என்பது நிம்மதி!

ராயல் சேலஞ்ஜர்ஸ்!

இன்ஜின்

புதிய பென்ஸ்  E க்ளாஸில், பழைய காரில் இருந்த அதே 3 லிட்டர், V6 காமென் ரெயில் டர்போ டீசல் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், பவரையும் டார்க்கையும் கூட்டி பெர்ஃபாமென்ஸில் முன்னிறுத்தியிருக்கிறது பென்ஸ். பழைய காரைவிட 31bhp சக்தி அதிகரித்து, 262 bhp சக்தியுடன் சீறுகிறது  E க்ளாஸ். இதன் அதிகபட்ச டார்க் 63.2kgm. பவர் அதிகரித்திருப்பதால், பழைய காரைவிட இன்னும் வேகமாக இருக்கிறது புதிய  E க்ளாஸ். 0-100 கி.மீ வேகத்தை 7.09 விநாடிகளில் கடக்கிறது. 140 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லும்போது பெர்ஃபாமென்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அதிக சத்தமோ, ஆட்டமோ எதுவும் இல்லை. ஸ்டெபிளிட்டி பிரமாதம். அதனால், ‘இந்த வேகம் போதும்’ என மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பென்ஸ் E க்ளாஸின் மைனஸ் எனச் சொல்ல வேண்டுமானால், அது கியர்பாக்ஸ்தான். போட்டியாளர்களிடம் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்க, இதில் வெறும் 7-ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். 1 கியர் குறைவு என்பது பெரிய குறை இல்லைதான் என்றாலும், வேகத்துக்கு ஏற்றபடி கியர்கள் சட்டென மாறவில்லை. வெளிநாடுகளில் இதே காரில் 9-ஸ்பீடு கியர்பாக்ஸை அறிமுகப்படுத்திவிட்டது மெர்சிடீஸ். ஆனால், இது இந்தியாவில் இப்போதைக்கு விற்பனைக்கு வராது.

ஜாகுவார் XF காரில் இருப்பது 3 லிட்டர், ட்வின் டர்போ, V6 டீசல் இன்ஜின். ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த காரின் சக்தி 270bhp. மூன்று கார்களில் ஜாகுவார்தான் அதிக சக்திகொண்ட கார். ஆனால், பெர்ஃபாமென்ஸில் அதிக சக்தி ஜாகுவாருக்கு உதவவில்லை. பிஎம்டபிள்யூவின் பீக் டார்க் 1,500ஆர்பிஎம்-லேயே துவங்க, பென்ஸின் அதிகபட்ச டார்க் 1,600 ஆர்பிஎம்-லேயே துவங்குகிறது. ஆனால், ஜாகுவார் தனது பீக் டார்க்கைத் தொட 2,000 ஆர்பிஎம் வரை எடுத்துக்கொள்கிறது.

நகருக்குள் ஓட்ட ஜாகுவார் சிறப்பாக இல்லை. ஆரம்ப வேகம் மிகவும் சுமாராக இருக்கிறது. 2000ஆர்பிஎம்-ல்தான் டர்போ வேகம் பிடிக்க ஆரம்பிக்கிறது. இதனால் ஆளரவம் இல்லாத சாலைகளில் மட்டுமே பெர்ஃபாமென்ஸ் மிரட்டலைக் காட்ட முடிகிறது. காரணம், டர்போ வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை பூனை போல இருந்த ஜாகுவார், அதன்பிறகு சினம்கொண்ட சிறுத்தையாக சீறுகிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், காரின் சக்திக்கு ஏற்ப உடனடியாக கியர்களை மாற்றுகிறது.

ராயல் சேலஞ்ஜர்ஸ்!

பிஎம்டபிள்யூ 530D டீசல் காரில் இருப்பதும், ஜாகுவாரில் இருப்பதுபோன்ற 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான். ஆனால், இது போட்டியாளரைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. 3 லிட்டர், 6 சிலிண்டர் இன்ஜின் கொண்ட பிஎம்டபிள்யூ அதிகபட்சமாக 255bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 55kgm டார்க் இதன் அதிகபட்சம். மூன்று கார்களில் பவர் குறைந்த காராக, எண்களில் மட்டுமே இருக்கிறது பிஎம்டபிள்யூ. ஆனால், பெர்ஃபாமென்ஸில் இதுதான் நம்பர் ஒன். 0-100 கி.மீ வேகத்தை 6.1 விநாடிகளில் கடக்கிறது பிஎம்டபிள்யூ. ஆரம்ப வேகத்தில் இருந்தே பெர்ஃபாமென்ஸ் சீராக இருப்பதால் நகரம், நெடுஞ்சாலை என இரண்டு விதமான சாலைகளிலும் பெர்ஃபாமென்ஸில் தெறிக்கவிடுகிறது பிஎம்டபிள்யூ. பேடில் ஷிஃப்ட்டைப் பயன்படுத்தி கியர்களை மாற்றி ஓட்டும்போது, பிஎம்டபிள்யூவின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அசரடிக்கிறது. ஆனால், பிஎம்டபிள்யூ 530D காரின் மைனஸ், இதன் இன்ஜின் சத்தம். சாதாரண டீசல் இன்ஜின்களைப் போல சத்தம் அதிகமாகப்போடுகிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

பொதுவாக ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் பிஎம்டபிள்யூ கார்கள் முதல் இடம் பிடிக்கும். ஆனால், இந்த செக்மென்ட்டில் சாஃப்ட் சஸ்பென்ஷனைக் கொடுத்திருப்பது பிஎம்டபிள்யூவுக்கு எதிராக முடிந்திருக்கிறது. மோசமான சாலைகளில் அதிகமாக அலுங்கிக் குலுங்குவதோடு, காருக்குள் ஆட்டமும் அதிகமாக இருக்கிறது. ஜாகுவாரிலும் இதே கதைதான்.

இந்தியச் சாலைகளுக்காக சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், திருப்பங்களில் வளைத்துத் திருப்பி ஓட்டும்போது, காருக்குள் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. ஆனால், 235/55 மெகா சைஸ் டயர்களைக்கொண்டிருப்பதால், மோசமான சாலைகளில் பயணித்தாலும் காருக்குள் குலுங்கல்கள் அதிகமாகத் தெரியவில்லை.

ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் முதல் இடத்தில் இருக்கிறது பென்ஸ் E க்ளாஸ்.

ராயல் சேலஞ்ஜர்ஸ்!

சஸ்பென்ஷன் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருப்பதால், மோசமான சாலைகளில் பயணிக்கும்போது காருக்குள் இருப்பவர்களுக்கு எந்த ஆட்டமும் இல்லை. வழக்கமாக, பிஎம்டபிள்யூ கார்களை ஓட்டும்போது இருக்கும் ஜாலியான ஓட்டுதல் அனுபவத்தைத் தருகிறது பென்ஸ் E க்ளாஸ்.

பெர்ஃபாமென்ஸில் முதல் இடத்தில் இருக்கிறது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ். ஆனால், ஓட்டுதல் தரத்திலும், பின்பக்க இருக்கை இடவசதியிலும் மிகவும் பின்தங்கிவிடுகிறது. டீசல் இன்ஜின் சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்பது, பிஎம்டபிள்யூவின் மிகப் பெரிய மைனஸ். 71.72 லட்ச ரூபாய் விலையை நியாயப்படுத்த, சிறப்பம்சங்கள் மட்டுமே இருக்கின்றன.

70.66 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஜாகுவார் XF காரில் பிஎம்டபிள்யூவைப்போல அதிக சிறப்பம்சங்கள் இல்லை என்றாலும், தனது வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ, அதைத் தருகிறது. மிகவும் சொகுசான இருக்கைகள்கொண்ட கேபின், சத்தம் இல்லாத இன்ஜின், பெரிதாகக் குறை சொல்ல முடியாத ஓட்டுதல் தரம் என ஜாகுவார், பிஎம்டபிள்யூவைவிட சில படிகள் முன்னால் நிற்கிறது.

71.78 லட்சம் ரூபாய்க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது E க்ளாஸ். ராயல் லுக், பெர்ஃபாமென்ஸ், சொகுசான இருக்கைகள், ஜாலியான ஓட்டுதல் அனுபவம் என முதல் இடத்தில் இருக்கிறது பென்ஸ் E க்ளாஸ். டேஷ்போர்டு ஸ்டைலாக இல்லைதான். ஆனால், ஒரு முழுமையான சொகுசு காராக இருக்கிறது E க்ளாஸ்.

ராயல் சேலஞ்ஜர்ஸ்!