ஸ்பெஷல்
Published:Updated:

ரெனோவின் சின்ன கார்!

சார்லஸ், Rendering: ஹாசிப்கான்

மாருதிக்கு 800, ஹூண்டாய்க்கு சான்ட்ரோ, ஃபோர்டுக்கு ஃபிகோ என்பதுபோல, ரெனோவின் கேம் சேஞ்சராக இருக்கப்போகும் கார் இதுதான். வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல, கார் தயாரிப்பாளர்களும் ரெனோவின் சின்ன காரின் வருகைக்காகக் கொஞ்சம் படபடப்போடு காத்திருக்கின்றனர். XBA என்கிற அடைமொழியுடன், மிக மிக ரகசியமாக சென்னையில் உருவாகிவருகிறது ரெனோவின் இந்த சின்ன கார். உலகிலேயே முதன்முறையாக இந்த காரின் ஸ்பை படங்களை வெளியிட்டது மோட்டார் விகடன். அடுத்த ஆண்டு மார்ச் மாதவாக்கில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார் பற்றிய ரகசிய தகவல்கள் இதோ...

ரெனோவின் சின்ன கார்!

ரெனோவின் கதை

மஹிந்திராவுடன் கூட்டணி போட்டு, லோகன் காரின் மூலம் 2007-ம் ஆண்டு இந்தியாவுக்குள் அடியெடுத்துவைத்தது பிரெஞ்சு நிறுவனமான ரெனோ. ஆனால், மஹிந்திராவுக்கும், ரெனோவுக்கும் ஏழாம் பொருத்தமாக அமைய, 2008-ம் ஆண்டு தன்னுடைய குளோபல் பார்ட்னரான நிஸானுடன் சென்னையில் தொழிற்சாலை அமைத்தது ரெனோ. முதல் காராக ஃப்ளூயன்ஸ் வர... அதனைத் தொடர்ந்து கோலியோஸ், பல்ஸ், ஸ்காலா எனத் தொடர்ந்தன. ஆனால், டஸ்ட்டர் மட்டுமே ரெனோவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்தது. இந்தியாவில் விலை குறைவான காரைக் கொண்டுவரவில்லை என்றால், நிலைக்க முடியாது என்பதால், இப்போது சின்ன 800சிசி காருடன் வருகிறது ரெனோ.

ரெனோவின் சின்ன கார்!

டிஸைன்

இந்தியாவில் டிஸைன் ஸ்டுடியோ வைத்திருக்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனம் ரெனோ. மும்பையில் அமைந்திருக்கும் இந்த டிஸைன் ஸ்டுடியோவில்தான் புதிய காருக்கான டிஸைன் அம்சங்கள் இறுதி செய்யப்பட்டன. மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான், டட்ஸன் கோ, டாடா நானோ கார்களுடன் போட்டி போட இருக்கும் இந்த காரின் ஸ்டைல், வழக்கமான சின்ன கார்கள் போல இல்லை. 3.4 மீட்டர் நீளம்கொண்ட இந்த காரை ஒரு முழுமையான ஹேட்ச்பேக் கார் என்று சொல்ல முடியாது. கிராஸ்ஓவர் கார்போல, கொஞ்சம் டால்பாய் டிஸைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம். அதனால், எவ்வளவு மோசமான சாலைகளிலும், பெரிய ஸ்பீடு பிரேக்கர்களிலும் தைரியமாக காரை ஏற்றி இறக்கலாம்.

ஜெரார்டு டெட்டர்பெட் என்பவர்தான் இந்த காரின் மூளை. ரெனோவின் M0 பிளாட்ஃபார்ம் கார்களின் தந்தை இவர்தான்.M0 பிளாட்ஃபார்ம் என்பது தயாரிப்புச் செலவுகள் குறைவான ‘லோ காஸ்ட்’ கார் தயாரிப்பு பிளாட்ஃபார்ம். இதில்தான் ரெனோவின் டஸ்ட்டர் தயாரிக்கப்படுகிறது. இந்த வெற்றிக்குக் காரணமான 68 வயதான ஜெரார்டு டெட்டர்பெட்-ஐ, ஓய்வுக்குப் பின்பு மீண்டும் அழைத்துவந்து இந்த சின்ன கார் பிராஜெக்டுக்குத் தலைமை ஏற்க வைத்திருக்கிறது ரெனோ.
ரெனோவின் இந்த சின்ன கார், ரெனோ - நிஸான் கூட்டணிக்குப் பொதுவான புத்தம் புதிய CMF பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. ‘காமென் மாட்யூல் ஃபேமிலி’ என்று அழைக்கப்படும் இதில், பல வடிவங்களில் பல கார்களைத் தயாரிக்க முடியும். இதன் மூலம் ஒரு புதிய கார் உருவாக்குவதற்கான செலவில் 30 - 40 சதவிகிதம் குறையும் என்பதோடு, எல்லா கார்களுக்கும் பொதுவான பாகங்கள் மூலம் 20-30 சதவிகிதம் செலவைக் குறைக்க முடியும். இந்த பிளாட்ஃபார்மில்தான் ரெனோ தனது சின்ன காரைத் தயாரித்துவருகிறது. காரின் தயாரிப்புச் செலவுகள் குறைவு என்பதோடு, காருக்குத் தேவையான 95 சதவிகித பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால், 3 லட்சம் ரூபாய்க்குள் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது ரெனோ. 

ரெனோவின் சின்ன கார்!

செம ஸ்ட்ராங்கான பாகங்களால் இந்த கார் தயாரிக்கப்படுகிறது. பில்டு குவாலிட்டியில் மற்ற சின்ன கார்கள் ரெனோவின் இந்த காரை வீழ்த்துவது கடினம் என்கிறார்கள், ரெனோவின் சென்னை இன்ஜினீயர்கள். கிராஸ்ஓவர் டிஸைன் காரான இதில், இடவசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற சின்ன கார்களில் இருப்பது போன்ற காஸ்ட் கட்டிங் சமாச்சாரங்கள் எதையும் இந்த காரில் பார்க்க முடியாது என்கிறார்கள்.

இன்ஜின்

ரெனோவின் சின்ன காரைப் பொறுத்தவரை இன்ஜின்தான் சூப்பர் ஹீரோ. முதன்முறையாக 800 சிசி பெட்ரோல் இன்ஜினை இந்தியாவுக்காகவே ஸ்பெஷலாக உருவாக்கியிருக்கிறது ரெனோ. BR-8 என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படும் ரெனோவின் இந்த சிறிய இன்ஜின் 3 சிலிண்டர்களைக்கொண்டது. ட்வின் கேம், சிலிண்டருக்கு 4 வால்வுகள் என்கிற வகையில் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் அதிகபட்ச சக்தி 50 bhp உள்ளே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரெனோவின் சின்ன கார்!

ரெனோ தனது சின்ன காரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் அறிமுகப்படுத்துகிறது. இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, இதில் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 800சிசி, 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால், மைலேஜில் ரெனோவின் இந்த சின்ன கார் முதல் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். லிட்டருக்கு 20 கி.மீ மைலேஜ் கிடைக்கும் வகையில், இதன் இன்ஜினை ட்யூன் செய்வதாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் தீவிரமாக இரவு நேரங்களில் டெஸ்ட் செய்யப்பட்டு வரும் இந்த காரின் தயாரிப்புப் பணிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது. ஆல்ட்டோ, இயான், டட்ஸன் கோ கார்களை வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் காத்திருந்தால், ரெனோவின் சின்ன காரையும் ஆப்ஷன்ஸ் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்!