ஸ்பெஷல்
Published:Updated:

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வணக்கம்!

இந்தியாவில் மிக அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான மாருதி ஸ்விஃப்ட், எந்த அளவுக்குப் பாதுகாப்பான கார் என்பதை, இங்கிலாந்தைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் குளோபல் என்கேப் (Global NCAP) என்ற அமைப்பு சோதனை செய்து, அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மணிக்கு 64 கி.மீ வேகத்தில் செய்யப்பட்ட Frontal Offset கிராஷ் டெஸ்ட்டில், ஸ்விஃப்ட் 5-க்கு ‘0’ மார்க்கே பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் விடுத்த அறிவிப்பு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டட்ஸன் கோ காரும் இதே போன்று பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதுவும் 0 மார்க்கையே பெற்றதில், பலரும் திகிலடைந்திருக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் இதே குளோபல் என்கேப் அமைப்பு, நம் நாட்டில் விற்பனையாகும் விலை குறைந்த, சின்ன கார்களைக்கொண்டு சில பாதுகாப்பு சோதனைகளை நடத்தியது. அதிலும் ஹூண்டாய் i10, டாடா நானோ மற்றும் மாருதி 800 ஆகிய கார்கள் 0 மார்க் எடுக்க... வாடிக்கையாளர்கள் மனங்களில் அச்சம் படர ஆரம்பித்துள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தச் சோதனையில் கலந்துகொண்டு பாதுகாப்புச் சான்றிதழ் பெறவேண்டுமானால், என்னதான் விலை குறைந்த மாடலாக இருந்தாலும், அந்த காரில் காற்றுப் பைகளும், ஏபிஎஸ் பிரேக்ஸும் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், குளோபல் என்கேப் சோதனை செய்த இந்திய கார்கள் அனைத்துமே, விலை குறைந்த மாடல்கள் என்பதால், இவை எதிலும் காற்றுப் பைகளோ, ஏபிஎஸ் பிரேக்ஸோ இல்லை. இருப்பினும், இந்த கார்களின் கட்டுமானமாவது (ஷெல்) உறுதியாக இருக்கிறதா என்று இந்த நிறுவனம் சோதனை செய்ததில், இந்த கார்களின் கட்டுமானம் உருக்குலைந்து போயிருக்கிறது. 

‘‘ஐரோப்பாவின் சாலைகளை மனதில் வைத்துச் செய்யப்பட்ட இந்தச் சோதனைகள், நம் நாட்டுக்குப் பொருந்தாது. நம் நாட்டின் சாலைகளுக்கு ஏற்ற வகையில், கார் எப்படித் தயாரிக்க வேண்டும் என்று இங்கே சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நாங்கள் கடைப்பிடிக்கிறோம்” என்று இந்திய கார் உற்பத்தியாளர்களின் பிரதிநிதியாக இருக்கும் ‘SIAM’ அமைப்பு வாதிடுகிறது.

‘இந்த குளோபல் என்கேப், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கார் கம்பெனிகளுக்குச் சாதகமாகச் செயல்படக்கூடியது. இவற்றுக்கு இந்தியா, ஜப்பான், கொரியா கார் கம்பெனிகளை மட்டம் தட்டுவதே வேலை’ என்பது துவங்கி, ‘காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்ஸ் விற்பனை செய்யும் கம்பெனிகள் கொடுக்கும் அழுத்தத்தினால்தான் குளோபல் என்கேப் இப்படிச் செயல்படுகிறது’ என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிவிட்டார்கள்.

உள்நோக்கம் இருக்கிறதா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், நிச்சயமாக இது இந்திய கார் தயாரிப்பாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மிகப் பெரிய எச்சரிக்கை மணி. கார் வாங்குவதே பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம் என்பதற்காகத்தான். ஆனால், அந்த காரே பாதுகாப்பற்றதாக இருந்தால் என்ன செய்ய முடியும்?

நம் நாட்டில், நோய்களால் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். குளோபல் என்கேப் அறிக்கையை அலட்சியப்படுத்தாமல், காரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, கார் தயாரிப்பாளர்கள் அனைவரின் கடமை. 

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்