ஸ்பெஷல்
Published:Updated:

யாருக்கும் சொல்லாதீங்க!

யாருக்கும் சொல்லாதீங்க!

எலீட் ஐ20 காரின் சவாலைச் சமாளிக்க, புதிய ஸ்விஃப்ட் காரை அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வருகிறது மாருதி. தற்போதைய ஸ்விஃப்ட்டைவிட கொஞ்சம் அதிக விலைக்கு விற்பனைக்கு வரவிருக்கும் இந்த காரின் அகலம் கூடியிருக்கிறது. அதனால், காரின் உள்ளே இடவசதி அதிகம். டிக்கியும் கொஞ்சம் பெரிதாகியிருக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக, டே டைம் ரன்னிங் லைட்ஸை இந்த காரில் அறிமுகப்படுத்துகிறது மாருதி. இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.

சென்னையில், இரவிலும் பகலிலும் தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது ரெனோவின் புதிய சின்ன கார். முதன்முறையாக 800சிசி திறன்கொண்ட சின்ன இன்ஜினை இந்த காரில் ரெனோ அறிமுகப்படுத்துவதால், இன்ஜின் தரத்தை அறியவும், மைலேஜை அதிகப்படுத்தவும் கடுமையான சோதனைகள் நடக்கின்றன. 3 சிலிண்டர், ட்வின் கேம், 12 வால்வுகள் கொண்ட இந்த இன்ஜின் மைலேஜிலும், பெர்ஃபாமென்ஸிலும் சிறந்ததாக இருக்குமாம். டீசல் இன்ஜின் ஆப்ஷன் இந்த காரில் கிடையாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதவாக்கில், இந்த கார் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

யாருக்கும் சொல்லாதீங்க!

சென்னை  திருவள்ளூர்  அருகே உருவாகிவரும் யமஹாவின் புதிய தொழிற்சாலையில், ஜனவரி 2015 முதல் தயாரிப்புப் பணிகள் துவங்குகின்றன.
ரே மற்றும் புதிய ஸ்கூட்டர் இங்கு முதல்கட்டமாகத் தயாரிக்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் நான்கு இடங்களில் இருக்கும் தனது பயிற்சிப் பள்ளிகளை, மேலும் ஆறு இடங்களில் துவக்கவும் திட்டம்.

எட்டியோஸ், எட்டியோஸ் லிவா ஆகிய இரண்டு கார்களும் விற்பனையில் எடுபடாமல் போனதைக் கண்டுகொள்ளாமல், எங்கள் கவனம் எல்லாம் இனோவா, ஃபார்ச்சூனர் மீதுதான் இருக்கிறது என சில மாதங்களுக்கு முன்பு வீம்பு பேசியது டொயோட்டா. மாஸ் மார்க்கெட் எனச் சொல்லப்படும் ஹேட்ச்பேக் மார்க்கெட்டைப் பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருப்பது வேஸ்ட் என ஜப்பான் தலைமையகம் கடுப்பாக, அவசர அவசரமாக டொயோட்டா ‘அய்கோ’ எனும் சின்ன காரை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறது டொயோட்டா இந்தியா. பெங்களூருவில் தற்போது டெஸ்ட் செய்யப்பட்டுவரும் இந்த காரில், இந்தியாவுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டுவாக்கில் விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்பது திட்டமாம். அய்கோ, 1 லிட்டர் இன்ஜினுடன் 3.5 மீட்டர் நீளம்கொண்ட கார். இது ஆல்ட்டோ, இயான், டட்ஸன் கோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும்.