Published:Updated:

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் HYUNDAI ELITE i20தமிழ்

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் HYUNDAI ELITE i20தமிழ்

Published:Updated:

motor@vikatan.com இன்பாக்ஸை செக் செய்தபோது, 'ஹூண்டாய் எலீட் i20 காரின் 56,000ஆவது புக்கிங் விழாவுக்கு மோட்டார் விகடனை வரவேற்கிறோம்!’ என்றது ஹூண்டாய். ''ஐ’ம் தி ஃபர்ஸ்ட் கஸ்டமர் ஆஃப் எலீட் i20 இன் ஓசூர். ரிகார்டிங் கிரேட் எஸ்கேப், ப்ளீஸ் கால் மீ  சந்தோஷ்!' என இன்னொரு மெயில்.

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

அடுத்த வாரம் ஓசூரில் சந்தோஷின் கிரானைட் ஃபேக்டரியில் இருந்தோம். தனது சில்வர் கலர் எலீட் i20 காருக்கு அருகே  பெருமையுடன் நம்மை அழைத்துச் சென்றார் சந்தோஷ்.

''மச்சான்... என்னை விட்டுட்டு கிரேட் எஸ்கேப் ஆயிடாதீங்க... இதுக்காகவே லீவு எடுத்துட்டு வந்திருக்கேன்!'' என்று முந்தின இரவு சேலத்தில் இருந்து கிளம்பி, பயண நேரத்தில் சரியாக நம்முடன் சேர்ந்துகொண்டார் சந்தோஷின் காலேஜ்மேட் வினோத்.

''iபோன்; i20  என்ன ஒற்றுமை பார்த்தீங்களா? என்கிட்ட iபோன் இருக்கிறதால, i20ல் ஜிபிஎஸ் ஃபிட் பண்ணலை!'' என்று தனது iபோனில் சிக்மகளூர் ரூட் மேப்பை நேவிகேட் செய்தார் சந்தோஷ். புதிய iபோன் போலவே புதிய i20யிலும் வசதிகள் எக்கச்சக்கம். ஈஸி பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஸ்டீயரிங் அசிஸ்ட், கிளைமேட் கன்ட்ரோல், ப்ளூடூத் என்று இன்டீரியர் தரம் ப்ரீமியம் கார்களுக்கு இணையாக இருந்தது.

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்து கியர் போட்டது தெரியவில்லை; பூப்போன்ற ஆக்ஸிலரேட்டரை மிதித்து 160 கி.மீ வேகத்தில் பறந்தது தெரியவில்லை; ஓசூர் கடந்து நைஸ் ரோடு, நீலமங்கலா என கர்நாடகாவில் நுழைந்ததுகூடத் தெரியவில்லை; மதிய உணவுக்காக வயிற்றில் அலாரம் அடித்தபோது, ட்ரிப் மீட்டரைப் பார்த்தால், 194.5 கி.மீ என்று காட்டியது. அப்போதுதான், 'அட... கார் ஓட்டியிருக்கோம்...’ என்ற ஃபீலே வந்தது. இவை எல்லாவற்றுக்கும் காரணம், i20ன் 89bhp பவர்கொண்ட இன்ஜினில் செய்யப்பட்டிருக்கும் ட்யூனிங். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், இதற்குப் பெரிதும் துணை புரிகிறது.

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷரவணபெலகுலாவில் மதிய உணவை முடித்தபோது, மணி இரண்டு. ஷரவணபெலகுலா, ஆன்மிகச் சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பிடித்த இடம். சந்திரகிரி, விந்தியகிரி எனும் இரு மலைகளைக்கொண்ட அழகான ஊர். ஷரவணபெலகுலா என்றால், தமிழில் 'சரவண வெள்ளைக் குளம்’ என்று அர்த்தம். இங்குள்ள விந்தியகிரியின் மலை உச்சியில் அமைந்திருக்கும் 52 அடி உயர சமண மதத் தீர்த்தங்கரராகிய கோமதீஸ்வரர் சிலை, அனைவரையும் கவரும்; காரணம், இதன் வடிவமைப்பு அப்படி. இந்தச் சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது இதன் ஸ்பெஷல். நமது தஞ்சாவூர் கற்கோயில் போலவே, கர்நாடகாவில் இந்தக் கோயிலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இவரைத் தரிசிக்க நீங்கள் 600 படிகள் ஏற வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியெங்கும் இருக்கும் ஊர்க் கோயில்களில் கிடா வெட்டி அன்னதானம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்வதில் பிஸியாக இருந்தது ஷரவணபெலகுலா.

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

இதுவரை டிராஃபிக், மேடு பள்ளம் போன்ற தொந்தரவுகள் இல்லாததால், எலீட் i20ல் 150கிலோ மீட்டருக்கு மேல் பறந்ததில் தொற்றிக்கொண்ட உற்சாகம் அதற்கப்புறம் நீடிக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் அதிகம்; பெட்ரோல் விலை அதிகம்; ஸ்பீடு பிரேக்கர்கள் அதிகம்; சிக்னல்கள் அதிகம். நமது எலீட் i20 காரில் டர்போ லேக்கும் அதிகம் என்பதை அப்போதுதான் உணர முடிந்தது. எனவே, லோ ரேஞ்சில் இஞ்சி தின்ற வயிறுபோல எலீட் i20ன் இன்ஜின் காலியாகத் திணறித் தவிக்கிறது. ஆனால், மிட் ரேஞ்சைத் தாண்டியதும் பவருக்குப் பஞ்சம் இல்லை. ''விட்டா கர்நாடகாவுல வீட்டுக்குள்ளகூட ஸ்பீடு பிரேக்கர், சிக்னல் வெச்சிருப்பாங்கபோல!'' என்று கமென்ட் செய்தார் சந்தோஷ்.

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

ஒவ்வொரு ஸ்பீடு பிரேக்கராக ஏறி இறங்கி ஹாசன் வரை சென்றிருந்தோம். சிக்மகளூர் செல்லும் பாதையில் 'யகாச்சி வாட்டர் ஸ்போர்ட்ஸ் சென்டர்  1 கி.மீ’ என்ற போர்டு தென்பட, எலீட்டை இடதுபுறம் திருப்பினோம். இந்த வாட்டர் கேம்ஸ் அவ்வளவாகப் பிரபலமாகாத சுற்றுலா இடம். ஆனால், இங்கு என்ஜாய் செய்ய நிறைய விஷயங்கள் இருக்கின்றன. 'ஜெட் ஸ்கை, பனானா ரைடு, ட்ராம்போலின், பம்பர் ரைடு, ஸ்பீடு போட்’ என பணத்துக்கு ஏற்ப விளையாட்டுகள் மனத்தைக் கவர்கின்றன. இதில், 'பனானா ரைடு’ வித்தியாசமானது. வாழைப்பழம் போன்ற மிதக்கும் ட்யூப்ல் நான்கைந்து பேரை டாப் ஸ்பீடில் படகில் கட்டி இழுத்துச் சென்று கவிழ்த்துக் கவிழ்த்து விளையாடுவது, ஜேம்ஸ்பாண்ட் படம் பார்க்கும் எஃபெக்ட் தருகிறது. குதித்துக் குதித்து விளையாடும் பம்ப்பர் ரைடு குழந்தைகளுக்கானது. இதற்குக் கட்டணம் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 400 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். சிக்மகளூருக்கு ஃபேமிலி டூர் செல்பவர்கள், நிச்சயம் யகாச்சி வாட்டர் கேம்ஸில் பொழுதைக் கழிக்கலாம்.

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

இருள ஆரம்பிப்பதற்குள் சிக்மகளூரை அடைந்திருந்தோம். 'சின்ன மகளின் ஊர்’ என்பதுதான் சிக்மகளூரின் விரிவாக்கம். அரசர் ருக்மாங்கதர், தனது இளைய மகளின் திருமணத்தின்போது, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இந்தக் கிராமத்தை, வரதட்சணையாகக் கொடுத்ததற்காக இந்தப் பெயர் வந்தது என்கிறது வரலாறு. கர்நாடகாவில் சிக்மகளூர் முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட். நிறைய சுற்றுலாத் தலங்களுக்கு இது ஸ்டார்ட்டிங் பாயின்ட்டும்கூட! முல்லையனகிரி சிகரம், முத்தொடி சரணாலயம், குத்ரேமுக் பார்க், கல்ஹட்டி அருவி, கலசா என்று ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு, சிக்மகளூரில் இருந்து கிளம்புவதுதான் பெஸ்ட்!

சிக்மகளூர், காபி எஸ்டேட்டுக்கு பிரபலம் என்பதால், காபி வாசம் காற்றில் மிதந்தது. முத்தொடி சரணலாயத்துக்கு 30 கி.மீக்கு முன்பு ஒரு மலைப் பாதையில் ஒரு ஹோம் ஸ்டேயில் தங்க முடிவெடுத்தோம். சிக்மகளூரில் சாதாரண காட்டேஜ்களைவிட ஹோம் ஸ்டே எடுத்துத் தங்குவதுதான் புத்திசாலித்தனமான விஷயம். வீட்டில் தங்குவதைப்போன்ற உணர்வைத் தரக்கூடிய அம்சம் ஹோம் ஸ்டே. 1,500 சதுர அடியில், அட்டாச்டு பாத்ரூம்களுடன், வேலையாட்களின் உதவியுடன் சமையல் செய்யும் வசதி கொண்ட ஹோம் ஸ்டே, இங்கு சீப்பாகக் கிடைக்கிறது. ஒருவருக்கு 1,000 ரூபாய் என கட்டணம் ஆரம்பிக்கிறது. சிக்கனோ, மட்டனோ, மீனோ... விரும்பியதைச் சமைத்துத் தருகிறார்கள். ஆபத்தே இல்லாத நடுக்காட்டில், சில்லென்ற குளிரில் தங்குவதால், கேம்ப் ஃபயர் உண்டு.

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

காலையில், கர்நாடகா ஃபேமஸ் நீர் தோசாவும், காரா பாத்தையும் சாப்பிட்டுவிட்டு, முல்லயனகிரி சிகரத்துக்கு எலீட்டைக் கிளப்பினோம். நெடுஞ்சாலையில் 'மக்களின் முதல்வர்’போல சீறும் எலீட், ஏற்றம்கொண்ட மலைப் பாதைகளில் 'தமிழக முதல்வர்’ போல பம்மிப் பதுங்குகிறது. சில நேரங்களில், சில ஏற்றங்களில் 'ஃபர்ஸ்ட் கியரில்கூட ஏற மாட்டேன்’ என்று அடம்பிடிக்கிறது எலீட் i20. ''ஷோரூம்ல புக் பண்ணும்போது, டர்போ லேக் அவ்வளவா இருக்காதுன்னுதான் சொன்னாங்க... கார் வாங்கி ஒன்பது மாசத்துல இன்னும் ஒரு தடவைகூட 'எலீட் எப்படி இருக்கு?’னு யாரும் ஒரு போன்கூட பண்ணலை சார்!'' என்றார் சந்தோஷ்.

முல்லயனகிரி சிகரம், கர்நாடகாவின் மிகப் பெரிய மலைச் சிகரம். காரை கீழே பார்க் செய்துவிட்டு, 450 கற்படிகளில் ஏறித்தான் போக வேண்டும். கன்னடப் படங்களின் ஷூட்டிங் இங்கு அடிக்கடி நடக்கும் என்றார்கள். கடல் மட்டத்தில் இருந்து 1,930 மீட்டர் உயரத்தில் இருக்கும் முல்லயனகிரியின் மலை முகட்டில் நிற்கும்போது, உலகின் உச்சியில் இருப்பது போன்ற பிரமை. ஆன்மிக விரும்பிகளுக்கு சிவன் கோயிலும் இங்கு உள்ளது. முல்லயனகிரி மலையின் கூடவே வரும் பாப்புடான் மலையும் அற்புதமான இடம்.

மறுபடியும் டர்போ லேக், மலைப் பாதைகள், மேடு பள்ளங்கள் தாண்டி ஓர் அருவி வந்தது. கல்ஹட்டி அருவி என்று இதற்குப் பெயர். கெம்மன்கண்டி செல்லும் மலைச் சாலையில் இருக்கிறது இது. நம் ஊர் மணிமுத்தாறு, திற்பரப்புபோல மிக பிரபலமான அருவி கல்ஹட்டி. 12.2 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியில் ஆனந்தக் குளியல் போட்டால், லேசாக அலுப்பு தீரும். ஆயில் மசாஜ், சன் பாத் என்று களைகட்டிக்கொண்டிருந்தது கல்ஹட்டி. இங்குள்ள பழைமை வாய்ந்த கற்களால் கட்டப்பட்ட கோயில், விஜயநகரப் பேரரசர் காலத்தில் கட்டப்பட்டது என்றும்; அகஸ்திய முனிவர் இங்கு வந்துபோனதாகவும் சொன்னார்கள். இதில் இன்னொரு சிறப்பம்சம், அருவியை ஒட்டியே இந்தக் கோயில் அமைந்திருப்பதால், அருவிச் சாரலில் நனைந்தபடியே பக்தி மழையிலும் நனையலாம். கல்ஹட்டி நுழைவுக்கு முன்பு குறுகலான வளைவில் ஏறும் பஸ், கார்களுக்கு அதிகபட்ச முன்னுரிமை தந்து, இறங்கும் வாகனங்களை ஓரங்கட்டி, பாதுகாப்பாக நகரும் வரை சில இளவட்டங்கள் டிராஃபிக் போலீஸாகச் செயல்பட்டது ஆச்சரியம். இது நிச்சயம் விபத்துகளைத் தடுக்க உதவும்.

சிக்மகளூரில் சிக்கிய மனசு!

கல்ஹட்டியில் இருந்து 10 கி.மீ தொலைவில் வருகிறது கெம்மன்கண்டி. இங்குள்ள மலைச் சிகரத்தில் மாலை நேரத்துக்குப் பிறகு சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால், ஏறுவதற்கு அனுமதி கிடையாது. ஆனால், பகல் நேரத்தில் மிருகங்கள் வர வாய்ப்பு இல்லை என்றார்கள். கரடுமுரடான மலைப் பாதையில் ஏறுவதற்கு ரொம்ப சிரமப்பட்டது எலீட். கெம்மன்கண்டி சிகரம், முல்லயனகிரி அளவு உயரம் இல்லை; கடல் மட்டத்தில் இருந்து 1,434 மீட்டர் உயரத்தில் இருக்கும் இதுவும், கர்நாடகாவின் முக்கிய மலைச் சிகரங்களில் ஒன்று. மாலையில் இங்கிருக்கும் லைட் ஹவுஸில் ஏறி நின்று சூரியன் மறைவதைப் பார்ப்பது வரம். கெம்மன்கண்டியைச் சுற்றி அமைந்துள்ள தோட்டம், அழகான மலை முகடுகள் வியூ பாயின்டில் இருந்து பார்ப்பது கண்களுக்கு விருந்து.

இன்னும் ஏகப்பட்ட இடங்கள் பாக்கி இருந்தும், நேரமின்மையால், எலீட்டை ஓசூர் நோக்கி மிதித்தோம். ஆனால், சிக்மகளூர் அனுபவத்தை மனத்தில் இருந்து டெலிட் செய்யவே முடியாது பாஸ்!

படங்கள்:க.தனசேகரன்

வாசகர்களே!

நீங்களும் இதுபோல் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044  66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!