Published:Updated:

யுவன்களின் கார் ஈவோ!

ரீடர்ஸ் ரெவ்யூ FIAT PUNTO EVOகா.பாலமுருகன்

யுவன்களின் கார் ஈவோ!

ரீடர்ஸ் ரெவ்யூ FIAT PUNTO EVOகா.பாலமுருகன்

Published:Updated:

நான் ஒரு கார் ஆர்வலன். விதவிதமான பிராண்டுகள் நம் நாட்டில் இருந்தாலும், நம் ஊருக்கேற்ற கார்கள் என நான் நினைக்கும் கார்கள் ஒரு சில மட்டுமே!

யுவன்களின் கார் ஈவோ!

நான் பணிபுரியும் TUV Rheinland எனும் சர்வதேச நிறுவனம், தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்களைச் சோதனை செய்து, தரச்சான்றிதழ் தரும் நிறுவனம். இதில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிகிறேன். இப்போது ஃபியட் புன்ட்டோ ஈவோ வைத்திருக்கிறேன். இதற்கு முன்பு, ஃபோக்ஸ்வாகன் போலோ 1.6 மாடலும், ஸ்கோடா ஆக்டேவியாவும் வைத்திருந்தேன். கடைசியாக வைத்திருந்த ஸ்கோடா ஆக்டேவியா காரை, சுமார் 2 லட்சம் கி.மீ வரை ஓட்டிவிட்டேன். சர்வீஸ் செலவுகள் மிக அதிகமாகவும், எதிர்பார்த்த திருப்தி இல்லாமலும் இருந்ததால், அந்த காரை விற்பனை செய்துவிட்டேன். அடுத்து எந்த கார் வாங்குவது என்று யோசித்தபோது, ஃபோக்ஸ்வாகன் போலோவும் ஹூண்டாய் வீ20 காரும்தான் நினைவுக்கு வந்தன. போலோ, நான் ஏற்கெனவே வைத்திருந்த கார். இதில் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு. ஹூண்டாய் காரில் அதிக சிறப்பம்சங்கள் இருக்கும். ஆனாலும் திருப்தி இல்லை. அதனால், முடிவு எடுக்க முடியாமல் இருந்தேன். அந்த நேரத்தில்தான் புன்ட்டோ ஈவோ விற்பனைக்கு வந்தது.

ஏன் ஈவோ?

இத்தாலி நிறுவனமான ஃபியட், டிஸைனுக்கும் கட்டுமானத் தரத்துக்கும் புகழ்பெற்றது. உலகின் மிகச் சிறந்த இன்ஜின்கள் உருவாகும் இடமும் ஃபியட்தான்; மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இன்ஜின்கள் சப்ளை செய்துவருவதும் ஃபியட்தான். எங்கள் நிறுவனச் சோதனைகளில் ஆட்டோமொபைல் இன்ஜின்களும் உண்டு. எனவே, ஃபியட்டின் டீசல் இன்ஜின் தரம் பற்றி எனக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சிலர் இதை ஸ்விஃப்ட் இன்ஜின் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. ஏற்கெனவே இங்கு விற்பனையில் இருந்த புன்ட்டோ, லீனியா ஆகிய கார்கள் சிறந்தவையாக இருந்தாலும், நம் ஊருக்கேற்ற விஷயங்கள் குறைவாக இருப்பதாக எண்ணம் இருந்தது. ஆனால், ஈவோவின் டெக்னிக்கல் விபரங்கள், அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது. நான் தினசரி 100 கி.மீ தூரமாவது பயணம் செய்ய வேண்டி இருப்பதால், டீசல் இன்ஜின்தான் சரியாக இருக்கும். அதனால், புன்ட்டோ ஈவோ அறிமுகம் ஆகும் வரை காத்திருக்க முடிவுசெய்தேன்.  

ஷோரூம் அனுபவம்

ஃபியட் புன்ட்டோ ஈவோ அறிமுகமானதுமே, சென்னையில் உள்ள ஆர்டிசி ஃபியட் ஷோருமுக்குச் சென்றேன். காரில் நான் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களும் இடம்பிடித்திருந்தன. என் கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் ஷோரூமில் திருப்தியான பதில் தந்தார்கள். காரை புக் செய்தால், டெலிவரி கொடுக்க ஒரு மாதம் ஆகும் என்றார்கள். ஆனால், எனக்கு ஆறே நாட்களில் டெலிவரி கிடைத்துவிட்டது.

யுவன்களின் கார் ஈவோ!

எப்படி இருக்கிறது ஈவோ?

ஈவோவின் டாப் வேரியன்டில் உள்ள கன் மெட்டல் அலாய் வீல்கள் அட்டகாசமானவை. இந்த அலாய் வீல்கள் மற்றும் 16 இன்ச் டயர்களை செட்டாக வாங்க வேண்டும் என்றால், வெளிமார்க்கெட்டில் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் அதேபோல், பனி விளக்குக் குடுவைகள், முன் பக்க கிரில் போன்றவற்றில் இருக்கும் க்ரோம் டிஸைன் தனித்துவமாக இருக்கின்றன. அதற்காகவே இந்த டாப் வேரியன்டை வாங்கினேன். மேலும், ஈவோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ், புன்ட்டோவைவிட அதிகமாகி இருப்பதால், ஸ்பீடு பிரேக்கரில் இடிக்குமோ எனக் கவலைப்படத் தேவை இல்லை.

உயரமான சீட் பொசிஷன் இருப்பதால் சாலையை முழுமையாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. வீல்பேஸ் அதிகமாகவில்லை என்பதால், சின்ன சந்து பொந்துகளில்கூட வளைத்துத் திருப்புவதற்குச் சுலபமாக இருக்கிறது. சிக்னலில் நிற்கும்போது இரண்டாவது கியரிலேயே காரைக் கிளப்ப முடிகிறது. 16 இன்ச் டயர்கள் என்பதால், வேகமாகப் பயணிக்கும்போது திருப்பங்களில் காரை நம்பிக்கையுடன் திருப்ப முடிகிறது.

சர்வீஸ்

சர்வீஸைப் பொறுத்தவரை, என் கார்களுடனான வாழ்க்கையில் மிக நல்ல அனுபவம் முதன்முறையாகக் கிடைத்திருக்கிறது. 3,000 கி.மீ ஓடியதும் ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும் என்று சொன்னதும், '15,000 கி.மீ வரை தேவை இல்லையே’ என்றார்கள். ஆனால், என்னுடைய வழக்கம் புதிய காரில் 3,000 கி.மீ ஓடியதும் மாற்றிவிடுவேன் என்று சொன்னேன். சரியாக அப்பாயின்மென்ட் தந்த நேரத்துக்கு அலுவலகத்துக்கே வந்து காரை எடுத்துச் சென்று, சர்வீஸ் செய்து கொண்டுவந்து கொடுத்தார்கள். மேலும், ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஃபியட் பயன்படுத்தும் 'செலினோ’ எனும் இன்ஜின் ஆயில் தனித்துவமானது. ஃபியட்டின் சர்வீஸ் சென்டரில் மட்டுமே கிடைக்கும் இந்த ஆயில், உலக அளவில் தரத்துக்குப் புகழ்பெற்றது. ஆல்ஃபா ரோமியோ காருக்கும் இந்த ஆயில்தான் பயன்படுத்தப்படுகிறது.

யுவன்களின் கார் ஈவோ!

அனுபவம்

இந்த காரில் நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக 170 கி.மீ வேகம் வரை சென்றிருக்கிறேன். காரில் மூன்று பேர் வரை இருந்தால், 140 கி.மீ வேகம் வரை நல்ல நிலைத்தன்மையோடு செல்கிறது. அதைக் கடந்தால், கொஞ்சம் அலைபாய்வதை உணர முடிகிறது. ஸ்டீயரிங், பிரேக், கியர் ஷிஃப்ட் என எல்லாமே கையாள்வதற்கு வசதியாக இருப்பதுடன் ஸ்போர்ட்டி ஃபீல் கொடுக்கிறது. சராசரியாக லிட்டருக்கு 18.5 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. மொத்தத்தில், ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கான அத்தனை அம்சங்களுடன் யூத்ஃபுல்லாக இந்த கார் இருக்கிறது.

படங்கள்: தி.ஹரிஹரன்