Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

நான் மாதம் 500 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைப் பயணம் செல்வேன். எனது பட்ஜெட் 5 லட்ச ரூபாய். யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி வாங்கலாமா?

குமரேசன் பாலு, இமெயில்

ஹோண்டா சிட்டி, பராமரிப்புச் செலவுகள் குறைவாகக்கொண்ட, அதிக இடவசதி நிறைந்த, முழுமையான செடான் கார். அதனால், ஹோண்டா சிட்டி வாங்க நினைக்கும் உங்களின் முடிவு சரியானதே! 50,000 கி.மீக்கு மேல் ஓடிய 2009  2010 மாடல் ஹோண்டா சிட்டி, உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும்.

கார் வாங்கும்போது 'ஹேண்ட்லிங் சார்ஜ்’ என்று ஒரு குறிப்பிட்ட தொகையை கார் டீலர்கள் வாங்கிவிடுகிறார்கள். இது என்ன கட்டணம்? இதை எதற்காக டீலர்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்குகிறார்கள்?

அப்பாஸ், இமெயில்

டீலர்கள் கேட்கும் 'ஹேண்ட்லிங் சார்ஜ்’ என்பது, உங்கள் கார் டீலரிடம் வந்து சேர்ந்ததும் அதை உங்களிடம் ஒப்படைக்கும் வரை, அது வைக்கும் செலவுகளைக் குறிக்கிறது. இதில் குடோனில் இருந்து காரை ஷோரூமுக்கு எடுத்து வருவது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குப் பதிவுசெய்வதற்காக எடுத்துச்செல்வது, எரிபொருள் நிரப்புவது, நம்பர் ப்ளேட்கள் பொருத்துவது போன்ற செலவுகள் அடங்கும். சட்டப்படி, இந்த 'ஹேண்ட்லிங் சார்ஜ்’ வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யக் கூடாது. 2012 ஏப்ரல் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் காரைப் பதிவுசெய்வதற்கும் மேலே கூடுதலாக 'ஹேண்ட்லிங் சார்ஜ்’  என்று எதையும் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறை, 'ஹேண்ட்லிங் சார்ஜ்’ பற்றிய வழிகாட்டலை மக்களுக்கும் டீலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.

மோட்டார் கிளினிக்

நான் அமெரிக்காவில் வேலை செய்கிறேன். சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினர் உள்ளனர். தற்போது என் பெற்றோர்களுக்கு வயதாகிவருகிறது. அதேசமயம், என் குட்டி மகளும் வளர்ந்து வருகிறாள். எனவே, வீட்டில் ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டால், அவர்களுக்கு வெளியே சென்றுவர வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். மனைவிக்கு கார் ஓட்டத் தெரியும். பட்ஜெட் 7 லட்சம். பெட்ரோல், டீசல்  எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

செ. கமல்ராஜ், மதுரை  

7 லட்சம் பட்ஜெட்டுக்குள் நிறைய கார்கள் இருக்கின்றன. ஃபியட் புன்ட்டோ பில்டு குவாலிட்டியில் தரமான கார். ஆனால், டிரைவிங் பொசிஷன் வசதியாக இருக்காது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் சிறப்பம்சங்கள் அதிகம். ஆனால், டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் குறைவு. மாருதி டிசையர், ஃபோர்டு ஃபிகோ ஆகிய கார்கள் விரைவில் உருமாற்றம் பெற்றுவர இருக்கின்றன. ஃபோக்ஸ்வாகன் போலோ தரமான கார் என்றாலும், சர்வீஸ் குறைபாடுகள் இதில் அதிகம். ஹூண்டாய் ஐ20 நல்ல சாய்ஸ். ஆனால் விலை 7 லட்சத்தைத் தாண்டிவிடும். நிஸான் மைக்ரா வாங்கலாம். இதில் இடவசதி அதிகம்; சிறப்பம்சங்களும் அதிகம். நல்ல மைலேஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸ் தரக்கூடிய சிறந்த இன்ஜின். ஆனால், ரீசேல் வேல்யூ கொஞ்சம் குறைவு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.  

மோட்டார் கிளினிக்

நான் ப்ரீமியம் பைக் பிரியன் இல்லை. இப்போது ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 வைத்திருக்கிறேன். பட்ஜெட் சிக்கல்களால்  இதற்கு  முன்பு, சூப்பர் பைக்குகளை வாங்கத் திட்டமிட்டதுகூட இல்லை. ஆனால், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலை குறைவாக இருப்பதால், அதை வாங்கினால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்துள்ளேன். ராயல் என்ஃபீல்டை விற்பனை செய்துவிட்டு, நிதி உதவி ஏற்பாடு செய்து, ஸ்ட்ரீட் 750 பைக்கை வாங்கலாம் என நினைக்கிறேன். என்னுடைய பைக் தேர்வும், வாங்கும் முறையும் சரியா?

க. ஜான்ஸன், கோவை

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750, டெக்னிக்கலாக நல்ல பைக்தான். இதன் 749 சிசி, V-Twin இன்ஜின் செம ஸ்மூத். ஆனால், ராயல் என்ஃபீல்டு தந்த அதே 'கெத்தான’ உணர்வை இந்த ஹார்லி டேவிட்சன் தருமா என்பதுதான் சந்தேகம். காரணம், பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தம். ஒரு ஹார்லி டேவிட்சன் பைக்குக்கான அதிரடிச் சத்தமாக இல்லாமல், டல்லான எக்ஸாஸ்ட் சத்தத்தையே எழுப்புகிறது ஸ்ட்ரீட் 750. 'இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று உங்களுக்குத் தோன்றினால், தாராளமாக ஸ்ட்ரீட் 750 பைக்கை வாங்கலாம். இதன் சென்னை ஆன் ரோடு விலை 4,92,900 ரூபாய். ஸ்ட்ரீட் 750 பைக்குக்கென பிரத்யேக ஃபைனான்ஸ் திட்டத்தையும் ஹார்லி டேவிட்சன் அளிக்கிறது. முன் பணமாக 91,471 ரூபாய் செலுத்தி பைக்கை வாங்கிக்கொள்ளலாம். பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குத் தவணையாக மாதம் 8,309 ரூபாய் செலுத்த வேண்டும்.

மோட்டார் கிளினிக்

நான் ஒரு நல்ல காம்பேக்ட் செடான் வாங்க விரும்புகிறேன். ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட், ஹூண்டாய் எக்ஸென்ட் ஆகிய கார்களைத் தேர்வு செய்துள்ளேன். இவற்றில் நிம்மதியான ஓனர்ஷிப்பையும், காசுக்கு ஏற்ற மதிப்பையும் கொடுக்கும் கார் எது?  

V. ஷண்முகப்பிரியா, இமெயில்

நீங்கள் செலெக்ட் செய்திருக்கும் மூன்று கார்களில், டாடா ஜெஸ்ட் அல்லது ஹூண்டாய் எக்ஸென்ட் வாங்கலாம். டாடா ஜெஸ்ட் நல்ல தயாரிப்பாக இருந்தாலும், ஹூண்டாய் அளவுக்கு டாடாவின் சர்வீஸ் சென்டர்கள் நல்ல பெயரைப் பெறவில்லை. எனவே, நிம்மதியான ஓனர்ஷிப் என்று வரும்போது ஹூண்டாய் எக்ஸென்ட்தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

மோட்டார் கிளினிக்

நான்கு பேர் கொண்ட என் குடும்பத்தில், முதன்முறையாக கார் வாங்கத் திட்டமிட்டுள்ளோம். நான் வெளியூரில் வேலை பார்ப்பதால், நான் இல்லாதபோது கார் மாதத்துக்கு 100 கி.மீக்கும் குறைவாகவே ஓடும். நான் வீட்டுக்கு வந்தால், அதிகம் பயன்படுத்துவேன். வாங்கப்போகும் காரை அடுத்த 7  8 ஆண்டுகளுக்கு மாற்றும் திட்டம் இல்லை. 8 லட்சம் பட்ஜெட். டீசல் கார்தான் வேண்டும். அதனால், குறைவான மெயின்டெனன்ஸும், போதுமான பாதுகாப்பு வசதிகளும்கொண்ட காராக இருக்க வேண்டும். ஹூண்டாய் எலீட் i20, ஹோண்டா அமேஸ், ஃபோக்ஸ்வாகன் போலோ ஜிடி, செவர்லே செயில், மாருதி ஸ்விஃப்ட், ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களில், எது என் தேவைகளுக்கு ஏற்ற கார்?  

S.மரிய தீபக், சேலம்

8 லட்சம் பட்ஜெட், டீசல் கார். இந்த வரையறைக்குள் ஸ்கோடா ரேபிட் வராது. அதிக ஆண்டுகள் வைத்திருக்கப் போகும் கார் என்பதால், அப்டுடேட் தொழில்நுட்பங்கள்கொண்ட, லேட்டஸ்ட் காராக இருக்க வேண்டும் உங்களுடைய கார். அதன்படி பார்த்தால், ஹூண்டாய் எலீட் i20தான் உங்களுக்கு ஏற்றது. ஹூண்டாய் என்பதால் வசதிகளுக்கும் குறைவு இல்லை. ஆனால், காற்றுப் பை வேண்டுமென்றால் எலீட் i20 ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் அல்லது ஆஸ்டா வேரியன்ட்தான் வாங்க வேண்டும். அதற்கு கூடுதலாக 30,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ஆகும். 8 ஆண்டுகள் வரை வைத்திருக்கப் போகிறீர்கள் என்பதால், அதிகம் செலவானாலும், பரவாயில்லை என்று பாதுகாப்பு வசதிகள் நிறைந்த ஆஸ்டா வேரியன்ட்டை வாங்குங்கள்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மோட்டார் கிளினிக்,

மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.

மெயிலில் அனுப்ப: motor@vikatan.com