Published:Updated:

ரேஸ் வீரனாக...

பாலவிஜய்

ரேஸ் வீரனாக...

பாலவிஜய்

Published:Updated:
ரேஸ் வீரனாக...

கட்டுரையாளர் பாலவிஜய், இந்தியாவின் முன்னணி ரேஸ் வீரர்களில் ஒருவர். பைக் ரேஸராக பயணத்தைத்  துவங்கியவர், பிறகு கார் ரேஸராக மாறினார். 2010-ம் ஆண்டு எம்ஆர்எஃப் சர்வதேச ரேஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். தேசிய டூரிங் கார் சாம்பியன்ஷிப் போட்டியிலும் சாம்பியன் பட்டம். மோட்டோ ரெவ் என்ற பெயரில் ரேஸ் அணியை நடத்திவருகிறார். இந்தியாவின் நம்பர் ஒன் பைக் ரேஸரான ரஜினி, மோட்டோ ரெவ் அணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஸ் வீரனாக...

அந்தச் சிறுவனுக்கு அப்போது நான்கு வயது. சாலையில் செல்லும் பைக்குகளை எல்லாம் ஓடிப்போய் ஆர்வமாகப் பார்ப்பானாம். தினந்தோறும் பைக்குகளைப் பற்றிய விபரங்களை தன் தந்தையிடம் கேட்பானாம். மகனின் நான்காவது பிறந்த நாளுக்கு, சர்ப்ரைஸ் பரிசு என்ன தருவது என்று யோசிக்க வேண்டிய அவசியம் அந்தத் தந்தைக்கு ஏற்படவில்லை. அழகான, குட்டியான மோட்டார் பைக்கை தன் செல்ல மகனுக்குப் பரிசளித்தார். அப்போது முதல் இரண்டு சக்கரங்களோடு விளையாட ஆரம்பித்தவருக்கு இப்போது இரண்டு சக்கரங்களில்தான் வாழ்க்கை. அந்தச் சிறுவன் வேறு யாரும் அல்ல... உலகிலேயே மிக இளம் வயதில் இரண்டுமுறை மோட்டோ ஜீபி சாம்பியன் பட்டத்தை வென்ற, 21 வயது மார்க் மார்க்யூஸ்.

நம் ஊரிலும் ரேஸ் கனவு காணாத இளைஞனே இருக்க முடியாது. ஒரு பைக் கையில் கிடைத்துவிட்டால் போதும்; ஆக்ஸிலரேட்டரை ஒரு முறுக்கு முறுக்கினால்தான் தாகம் அடங்கும். ‘பசங்கதான் பைக் ஓட்டுவாங்களா? நாங்களும் இருக்கோம்’ என இளம் பெண்களும் இன்று பைக்குகளோடு பறக்கிறார்கள். ரேஸ் ஆர்வம் இருக்கும் யாரும் சாலையில் வீரத்தைக் காட்டாமல், ரேஸ் ட்ராக்கில் முழுமையான ரேஸ் வீரராக மாற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.

ரேஸ் வீரனாக...

இந்திய ரேஸ் உலகுக்கு, சென்னைதான் புனிதத்தலம். இந்தியாவில் ஒருவர் எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும் ரேஸ் வீரனாக வேண்டும் என்ற கனவு இருந்தால், தமிழகத்துக்குத்தான் வரவேண்டும். என்னதான் டெல்லியில் புத்  இன்டர்நேஷனல் ரேஸ் ட்ராக் இருந்தாலும், சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக், கோவை கரி மோட்டார் ஸ்பீட்வே ஆகிய இரண்டும்தான் பயிற்சிக் களங்கள். சென்னை, கோவையில்தான் தேசிய ரேஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.
‘அய்யய்யோ... ரேஸ் எல்லாம் பணக்காரர்களின் விளையாட்டு’ என்று யாராவது சொன்னால், மியூட் பட்டனை அழுத்துங்கள். யமஹா, ஹோண்டா, டிவிஎஸ் துவங்கி டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன் என இந்தியாவுக்குள் நுழைந்துவிட்ட அத்தனை வாகனத் தயாரிப்பாளர்களும், தங்கள் வாகனம்தான் வெற்றியாளர் என உலகுக்குச் சொல்ல, ரேஸ்தான் ஒரே வழி. ரேஸில் நாங்கள்தான் வின்னர் என்று சொல்லும்போதுதான் அந்த காரின் பெர்ஃபாமென்ஸ் மீதும் ஸ்டெபிளிட்டி மீதும் நம்பகத்தன்மை வரும் என்பதால், இந்தியாவில் ரேஸுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

ரேஸ் வீரனாக...

இந்தியாவின் நம்பர் ஒன் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன்தான் இப்போது டாடா, லேண்ட்ரோவர், ஜாகுவார் கார்களின் அதிகாரப்பூர்வ டெஸ்ட் டிரைவர். இளம் ரேஸ் வீரர்களான அர்மான் இப்ராஹிம் பிஎம்டபிள்யூவுக்கும், ஆதித்யா பட்டேல் - ஆடி நிறுவனத்துக்கும் அதிகாரப்பூர்வ டெஸ்ட் டிரைவர்கள். அதனால், ரேஸுக்குப் போனால் பின்னால் வேலை கிடைக்காது என்பதிலும் உண்மை இல்லை. திறமை இருந்தால், யார் வேண்டுமானாலும் ரேஸ் வீரர் ஆகலாம்.

ரேஸ் வீரனாக ஆவதற்கு, முதலில் ரேஸ் லைசென்ஸ் எடுக்க வேண்டும். இதற்கு அதிகாரப்பூர்வமாக 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், தந்தையோ/பாதுகாவலரோ கையெழுத்திட்டால், எந்த வயதாக இருந்தாலும் ரேஸ் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. அதனால், ரேஸுக்கு வயது ஒரு தடை இல்லை.

ரேஸ் வீரனாக...

கார் ரேஸராக வேண்டும் என்றால், கோ-கார்ட்தான் ரூட். அதாவது, சின்ன கார்களான கோ-கார்ட் கார்களில் பயிற்சி பெற்று, அதன்பிறகு ரேஸ் கார்களை ஓட்டலாம். ஆனால், பைக்கைப் பொறுத்தவரை நம் ஊரில் அதற்கான பயிற்சி முறைகள் இல்லை. மினி மோட்டோ எனச் சொல்லப்படும் பாக்கெட் பைக்ஸ்தான், பைக் ரேஸராகப் பயிற்சி பெற சிறந்த வழி. மினி மோட்டோ என்றால் என்ன? கோ-கார்ட்டில் கலந்துகொள்வது எப்படி என்பதை அடுத்தடுத்த இதழ்களில் சொல்கிறேன்.

படம்: ஜெ.வேங்கடராஜ்

(விர்ர்ரூம்!)