Published:Updated:

எந்திரன்

பரணிராஜன்

எந்திரன்

பரணிராஜன்

Published:Updated:
எந்திரன்

என்னைப் பற்றி...

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பி.ஈ. மெக்கானிக்கல் படிச்சேன். ஃபைனல் செமஸ்டர்ல எலெக்டிவ்வா, நம்ம விருப்பத்துக்கு ஒரு பாடம் எடுக்கணும். அப்போ ஈஸியா இருக்கும்னு நண்பர்கள் சொன்னதால, ஆட்டோமொபைல் பாடம் எடுத்தேன். ஆனா, அதுவே வாழ்க்கையில் தொடர்ந்துவரும்னு எதிர்பார்க்கலை. மெக்கானிக்கல் முடிச்சதும் அப்படியே டி.வி.எஸ் கேம்பஸ் இன்டர்வியூவுல செலக்ட்டாகி, ஜூனியர் இன்ஜினீயர், மேனேஜர், சீனியர் மேனேஜர்னு டக்கு டக்குனு போயிருந்தேன்னா, இந்த நேரம் இந்தக் கட்டுரை எழுதியிருக்க முடியாது.

பி.ஈ. முடிச்சதும், சரியான வேலை சிக்கலை. அந்தச் சிக்கலை, ஏதோ ஒரு வேலையில சேர்ந்து சமாளிப்போம்னு டூவீலர் சர்வீஸ் ஸ்டேஷன்ல சேர்ந்தேன். பஜாஜ் வாகனங்களுக்கான அதிகாரப்பூர்வமான டீலர். அங்க ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு, அடுத்த புரொமோஷனை நானே வெளியே தேடிக்கிட்டேன். ஆமாம். அடுத்தது ஃபோர் வீலர் சர்வீஸ் ஸ்டேஷன். அம்பாஸடர் கார்களுக்கான டீலர்ஷிப் அது. இன்ஜின், கியர்பாக்ஸ்னு ஒவ்வொரு முக்கிய பாகத்தையும் பிரிச்சுப் பார்க்கும் வாய்ப்பு அங்கதான் கிடைச்சது. அப்புறம்தான் ஆர்வம் அதிகமாகி, சென்னை எம்.ஐ.டியில் எம்.ஈ, ஆட்டோமொபைல் படிச்சேன்.

எந்திரன்

கேம்பஸ் இன்டர்வியூவுல நான் செலக்ட்டான கம்பெனி, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் துணை நிறுவனம். சர்வீஸ் ஸ்டேஷனில் எந்த இன்ஜின், கியர்பாக்ஸைத் தொட்டுத் தூக்கிப் பார்த்தேனோ, அதே இன்ஜின், கியர்பாக்ஸ் தயாரிக்கும் உதிரிபாகத் தொழிற்சாலை (Component Manufacturing). அங்கு R&D-யில் டிரான்ஸ்மிஷன் (கியர்பாக்ஸ்) டிஸைன் டீமில் மூணு வருஷம் இந்தூரில் வேலை பார்த்தேன். அடுத்த வாய்ப்பு பெங்களூருவில் உள்ள உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு கம்பெனியில கிடைச்சது. இங்கே நாலு வருஷமா வேலை செய்றேன்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டூ-வீலர் இருந்த காலம் போய், இப்போது ‘கார்’காலம் வந்தாச்சு. அம்பாஸடர், பத்மினி, ஸ்டாண்டர்ட் கார்கள் மட்டுமே இருந்தது ஒரு காலம். அதுவும் பளிச் என வெள்ளை கலரில்தான் பெரும்பாலும் கார்கள் இருக்கும். ஊரில், கிராமத்தில் பெரிய வீட்டில் மட்டும்தான் கார் இருக்கும். அந்த வீடுதான் அங்கே லேண்ட்மார்க். போகப் போக மாருதி கார்களின் வருகை, சாலைகளில் கார்களின் அடர்த்தியை அதிகமாக்கியது.

கையைக் கடிக்காத பட்ஜெட்டில் கிடைக்கும் நானோவில் இருந்து, மூன்று கோடி ரூபாய் ரோல்ஸ்ராய்ஸ் வரை, ஏகப்பட்ட வகைகளில் கார்கள் இந்தியாவில் அறிமுகமாகின. உள்ளூர் கம்பெனிகளும், வெளியூர் கம்பெனிகளும் போட்டி போட ஆரம்பித்தார்கள். பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற கார் கம்பெனிகள் எல்லாம் சொகுசு கார்கள் மட்டும்தான் தயாரிப்பார்கள் என்று பார்த்தால், அவங்களும் ஹேட்ச்பேக் கார்கள் வரை இறங்கிவந்துவிட்டார்கள். அதனால், புதுப் புது தொழில்நுட்பத்தோடு கார்கள் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன.

அம்பாஸடர் காரை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சர்வீஸ் செய்துவிடலாம் என்கிற ஒரே பலத்தாலேயே, அது 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியது. இப்போது நம் நாட்டில் விற்பனையாகும் ஹோண்டா, டொயோட்டா, ஜிஎம், ஃபோர்டு, நிஸான், ரெனோ போன்ற கார்களை, அப்படி ஜஸ்ட் லைக் தட் எங்கேயும் சர்வீஸ் செய்துவிட முடியாது.

எந்திரன்

காரில் சாவியைப் போட்டு, டுர்ர்ர் டுர்ர்ர் என இன்ஜின் உறுமி, பிறகு பொறுமையாக பொதிகை டிவி நாடகம் மாதிரி ஸ்டார்ட் செய்து, கிளட்ச்சை மிதித்து, கொஞ்சம் கொஞ்சமா ஆக்ஸிலேட்டரை மிதித்த காலம் போய், இப்போது காருக்கு வெளியே நின்றபடி ரிமோட்டில் ஒரு பட்டனை அழுத்தினாலே, சத்தமே இல்லாமல் இன்ஜின் ஸ்டார்ட் ஆகும் காலம் வந்துவிட்டது. இப்போது நிறைய கார்கள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனோடு வருகின்றன. கிளட்ச்சை மிதிக்கத் தேவை இல்லை. காரின் வேகத்துக்கு ஏற்ப கியர் மாறிவிடும். ஹாயாக காரை வாங்கினோமா, ஜாலியாகப் போனோமா என்று இல்லாமல், அதில் இருக்கும் சில முக்கியப் பாகங்களின் வேலை என்ன என்று தெரிந்துவைத்துக்கொண்டால், காரோடு நம் உறவு இன்னும் மேம்படும். சர்வீஸ் சென்டரில், சில பல ஆயிரங்கள் சேர்த்து பில் போட்டு நம்மை ஏமாற்ற முடியாது.

பிரேக் பிடிக்க வேண்டும் என்றால், பிரேக் பெடலை அழுத்துவோம். பெடலுக்கும் சக்கரத்துக்கும் இடையில் என்ன மெக்கானிசம் இருக்கிறது; அது எப்படி வேலை செய்கிறது; பிரேக்கில் என்னென்ன லேட்டஸ்ட் வகைகள் இருக்கின்றன; அவற்றை எப்படிப் பராமரிப்பது என்று பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். ஸ்டீயரிங்கை வலது பக்கம் திருப்பினால், கார் வலது பக்கம் திரும்புகிறது; இடது பக்கம் திருப்பினால், இடது பக்கம் திரும்புகிறது. அதுவே ரிவர்ஸ் கியரில் திருப்பினால், பின்னால் செல்கிறது. இந்த ஸ்டீயரிங் எப்படி வேலை செய்கிறது? ஸ்டீயரிங்கில் இருந்து வீல்களுக்குக் கட்டளைகள் எப்படிச் செல்கின்றன எனப் பல சந்தேகங்கள் எழும். அதை எளிமையாக இங்கே விளக்கி, உங்கள் எல்லோரையும் ஆட்டோமொபைல் எகஸ்பர்ட்டாக மாற்றுவதே என் நோக்கம்.

எந்திரன்

கார் என்றால், முழுக்க முழுக்க ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் வகை மட்டும் இல்லை. இப்போது வரும் எல்லா கார்களுமே எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டத்தின்படிதான் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஓர் உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், பழைய கார்களில் ‘கார்புரேட்டர்’ என்றொரு பாகம் இருக்கும். அதுதான் இன்ஜினுக்கு காற்றையும் பெட்ரோலையும் தேவைக்கேற்ற விகிதத்தில் கலந்து அனுப்பும். ஆனால், இப்போதெல்லாம் ’எரிபொருள் சிக்கனம் தேவை இக்கணம்’ என்பதால், MPFI (Multi Point Fuel Injection) சிஸ்டம் வந்துவிட்டது.

இது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. விவசாயத்தில் ‘சொட்டு நீர்ப்பாசனம்’ எப்படியோ, அதுபோலத்தான். தேவையான அளவு சொட்டுச் சொட்டாக பெட்ரோலை அனுப்பும். தேவையான அளவு என்ன, எப்படி என்பதை கன்ட்ரோல் பண்ணுவதுதான் ECU என்கிற எலெக்ட்ரானிக்ஸ் கன்ட்ரோல் மாட்யூல். இன்ஜின், ஒரு வாகனத்தின் இதயம் எனில், இந்த ECU ஒரு மூளைபோலச் செயல்படும்.

இந்த எலெக்ட்ரானிக்ஸ் கன்ட்ரோல் மாட்யூல் எதையெல்லாம் கன்ட்ரோல் செய்யும்; எப்படி கன்ட்ரோல் செய்யும்; அதற்கான இன்புட்ஸ் எப்படிக் கிடைக்கின்றன என்று வரும் இதழ்களில் பார்ப்போம்.

(எந்திரன் பேசுவான்)