Published:Updated:

நம்ம ஊரு பென்ஸ்!

அ.சியாமளா கெளரி

நம்ம ஊரு பென்ஸ்!

அ.சியாமளா கெளரி

Published:Updated:

அம்பாஸடர்களும் பத்மினிகளும் அதிகம் புழங்கிய காலத்தில், வி.ஐ.பி-களால் விரும்பப்பட்ட கார், கான்டெஸா. செல்லமாக ‘இந்தியன் பென்ஸ்’ என அழைக்கப்படும் கான்டெஸாவுக்கு, இன்றைக்கும் அப்படியொரு கிரேஸ்.

இங்கிலாந்தின் V6 பெட்ரோல் இன்ஜின் கொண்ட வாக்ஸ்ஹால் விக்டர்தான் நமக்கு கான்டெஸா. இதை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் 1982-ல் அறிமுகப்படுத்தியபோது, இந்தியாவின் ‘ஒன் அண்டு ஒன்லி’ வி.ஐ.பி கார் இது மட்டுமே!

நம்ம ஊரு பென்ஸ்!

 பின்பு, 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டும் விற்பனைக்கு வந்தது. 1988-ம் ஆண்டுக்குப் பிறகு, இசுஸூவின் 1.8 லிட்டர் இன்ஜினும் பொருத்தப்பட்டது. பின்னர், கான்டெஸா கிளாஸிக் மாடல், இரண்டு வேரியன்ட்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இசுஸூ நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினும் அறிமுகமானது. 2001-ல் இருந்து 2002-ம் ஆண்டு உற்பத்தி நிறுத்தும் வரை, 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வந்தது கன்டெஸா.

 ஆரம்பத்தில் மேனுவல் ஸ்டீயரிங்குடன் ஏ.சி இல்லாமல் விற்பனைக்கு வந்ததை இப்போது கற்பனை செய்யக்கூட முடியாது. ஏனென்றால், அந்தக் காலத்தில் இது நமக்கு சொகுசு கார். அதன் பின்பு பவர் ஸ்டீயரிங், ஏ.சி, டிஸ்க் பிரேக் என பரிணாம வளர்ச்சி பெற்று மாடர்ன் காராக உருவெடுத்தபோது, பன்னாட்டுப் படையெடுப்பில் தாக்குப் பிடிக்க முடியாமல் முடங்கியது கான்டெஸா.

கோவையில் கான்டெஸா கார் கிளப் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி கிளாஸிக் கார் சந்தையில் அதிக மதிப்புள்ள காராக கான்டெஸா பார்க்கப்படுகிறது. இரண்டு லட்ச ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை காரின் மாடலுக்கு ஏற்ப விற்பனையாகிறது. தமிழகத்தில் சரிவரப் பராமரிக்கப்படாத கான்டெஸா கார் 70,000 ரூபாயில் இருந்து 1.25 லட்சம் வரை கிடைக்கின்றன.

நம்ம ஊரு பென்ஸ்!

கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டதும் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. டயர், பிரேக், சஸ்பென்ஷன் புஷ் போன்றவை கிடைக்காமல் இருந்தன. பிறகு எம்.ஆர்.எஃப் நிறுவனம், இதற்கான டயரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. சஸ்பென்ஷன் புஷ் கிட்டை வேறொரு நிறுவனம் தயாரிக்கிறது. எனவே, பாடி பார்ட்ஸ் தவிர மற்ற பாகங்கள் அம்பாஸடரின் பாகங்கள்தான் என்பதால், எல்லா இடங்களிலும் உதிரிபாகங்கள் கிடைக்கின்றன.

கான்டெஸா கார்களின் உரிமையாளர் களான கோவையைச் சேர்ந்த முஹமது ஜக்ரியா மற்றும் நாகேந்திரனிடம் பேசினோம். “என்னிடம் 89 டீசல், 94 பெட்ரோல், 96 பெட்ரோல் என மூன்று கார்கள் இருக்கின்றன. கான்டெஸாவை முறையாகப் பராமரித்தால், எந்தப் பிரச்னையும் வராது. இதன் பெட்ரோல் இன்ஜின் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 10 - 12 வரை மைலேஜ் அளிக்கிறது. அதேபோல்,  நல்ல பராமரிப்பில் இருக்கும் டீசல் இன்ஜின் 16 - 18 கி.மீ வரை மைலேஜ் அளிக்கிறது!” என்கிறார் முஹமது ஜக்ரியா.

“பள்ளி செல்லும் வயதிலிருந்தே சாலைகளில் கான்டெஸாவைக் கண்டால் அப்படி ஒரு ஈர்ப்பு. 1990, 1995 டீசல்;  1995 பெட்ரோல்; 1998 பெட்ரோல் என நான்கு கார்கள் வைத்திருக்கிறேன். கான்டெஸா - வசதியான கார், விஐபி கார் என்பதையெல்லாம் தாண்டி, காருடனான உயிரோட்டமான பந்தம் எனக்கும் கான்டெஸாவுக்கும் இருக்கிறது.” என்கிறார் நாகேந்திரன்.

படங்கள்:  த.ஸ்ரீநிவாசன்