Published:Updated:

ஹோண்டா சிட்டி

பழைய கார் HONDA CITYசார்லஸ்

ஹோண்டா சிட்டி

பழைய கார் HONDA CITYசார்லஸ்

Published:Updated:

யூஸ்டு கார் மார்க்கெட்டின் எவர்கிரீன் ஹீரோ, ஹோண்டா சிட்டி. 1998-ம் ஆண்டு முதல் ஹோண்டா சிட்டி விற்பனையில் இருக்கிறது. 1998 முதல் 2003 வரை முதல் தலைமுறையும், 2003 முதல் 2008 வரை இரண்டாம் தலைமுறையும், 2008 முதல் 2014 வரை மூன்றாம் தலைமுறையும் விற்பனையில் இருந்தன. இப்போது விற்பனையில் இருப்பது நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி. இதில், 2003 முதல் 2008-ம் ஆண்டு வரை வெளிவந்த ஹோண்டா சிட்டிக்கு, மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகம். இதை ‘டால்ஃபின் சிட்டி’ என்று சொல்வார்கள். அதிக பெர்ஃபாமென்ஸ் கொண்ட தரமான கார், குறைந்த விலையில் கிடைப்பதுதான் இதன் வெற்றிக்குக் காரணம்.

 இன்ஜின்

முதலில் 1.5 லிட்டர், 77bhp இன்ஜின்கொண்ட சிட்டி காரை விற்பனைக்குக் கொண்டுவந்த ஹோண்டா, 2005-ம் ஆண்டு இதில் 100bhp சக்திகொண்ட மாடலையும் விற்பனைக்குக் கொண்டுவந்தது. இதில், சக்தியை மட்டும் அதிகரிக்காமல், சஸ்பென்ஷனிலும் நல்ல மாற்றங்களைச் செய்தது. இது, ஓட்டுதல் தரத்தில் இன்னும் சிறந்த காராக சிட்டியை மாற்றியது. அதனால், பழைய கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டியிலேயே இரண்டு வெர்ஷன் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஹோண்டா சிட்டி

பெர்ஃபாமென்ஸ்

77bhp சக்திகொண்ட ஹோண்டா சிட்டி பெர்ஃபாமென்ஸில் சுமார்தான். ஆனால், பவர் டெலிவரி சீராகவும், இன்ஜின் செம ஸ்மூத்தாகவும் இருக்கும். நகருக்குள் ஓட்ட சிறப்பாக இருக்கும். ஆனால், நெடுஞ்சாலையில் பயணிக்கும்போதுதான் அதிக சக்தி இல்லாததால் திணற ஆரம்பிக்கும். 100bhp சக்திகொண்ட VTEC மாடல், பெர்ஃபாமென்ஸில் கில்லி.

மைலேஜ்

77bhp சக்திகொண்ட மாடல் நகருக்குள் லிட்டருக்கு 10.9 கி.மீ, நெடுஞ்சாலையில் 16.6 கி.மீ மைலேஜ் தரும். 100bhp சக்திகொண்ட மாடல் நகருக்குள் 10.5 கி.மீ, நெடுஞ்சாலையில் 16.3 கி.மீ மைலேஜ் தரும்.

என்ன கவனிக்க வேண்டும்?

நீங்கள் வாங்க இருப்பது கிட்டத்தட்ட 8-10 ஆண்டுகள் பழைய கார் என்பதால், சர்வீஸ் ஹிஸ்டரி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஹோண்டா சர்வீஸ் சென்டரில் காரின் பதிவு எண் சொல்லிக் கேட்டாலே, சர்வீஸ் ஹிஸ்டரி கிடைத்துவிடும்.

ஹோண்டா சிட்டி

மோசமான சாலைகளில் தொடர்ந்து ஓட்டப்பட்ட கார் என்றால், ஸ்டீயரிங் ரேக் அசெம்பிளி விரைவிலேயே பழுதடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, மேடு பள்ளங்களில் ஓட்டிப் பாருங்கள். ஸ்டீயரிங்கில் வித்தியசமான சத்தம் வந்தால், ஸ்டீயரிங் ரேக்கில் பிரச்னை இருக்கிறது என்பது உறுதி. இதைச் சரிசெய்ய 20,000 ரூபாய் வரை செலவாகும். ஸ்டீயரிங்கில் பெரிய பிரச்னைகள் இருந்தால், டேஷ்போர்டிலேயே ஸ்டீயரிங் எச்சரிக்கை விளக்கு ஒளிரும். இது ஒளிர்ந்தால் ஸ்டீயரிங் மோட்டார் மற்றும் சென்ஸார்களில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய மட்டும் 30,000 ரூபாய் ஆகும். மோசமான சாலைகளில் அதிகம் பயணப்பட்ட கார் என்றால், ஸ்டீயரிங் ஆர்ம் 30,000 கி.மீ-க்கு ஒருமுறை மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு 5,000 ரூபாய் வரை செலவாகும்.

டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, கார் சில துள்ளல்களோடு பயணத்தைத் துவக்கினால் ஃப்யூல் இன்ஜெக்டர், ஃப்யூல் ஃபில்டர் அல்லது இரண்டும் அடைத்துக்கொண்டு, மாற்ற வேண்டிய கண்டிஷனில் இருக்கின்றன என்று அர்த்தம்.

ஹோண்டா சிட்டியை 5,000 கி.மீ-க்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு 5,000 ரூபாய் வரை செலவாகும். 40,000 கி.மீ-க்கு ஒருமுறை பெரிய சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும். கிளட்ச் அசெம்பிளியை மாற்ற 16,000 ரூபாய் வரை செலவாகும். ஒரு செட் பிரேக் பேடுகள் 4,400 ரூபாய். 2008 ஹோண்டா சிட்டிக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க 6,500 ரூபாய் வரை ஆகும்.

ஹோண்டா சிட்டி

மூன்று லட்சம் ரூபாய்க்குள் அதிக இடவசதிகொண்ட, நல்ல மைலேஜ் தரக்கூடிய, பெர்ஃபாமென்ஸில் அசத்தக்கூடிய கார் வேண்டும் என்றால், அதற்கு ஹோண்டா சிட்டிதான் முதல் சாய்ஸ். பழைய கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டியை வாங்கிய பின்பு குறை சொல்பவர்களைக் காண்பதும் அரிது. அதனால், ஹோண்டா சிட்டியை பழைய கார் மார்க்கெட்டில் நம்பி வாங்கலாம்!