Published:Updated:

டாடாவின் மாடர்ன் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் TATA BOLTவேல்ஸ்

டாடாவின் மாடர்ன் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் TATA BOLTவேல்ஸ்

Published:Updated:

போல்ட் - டாடா மோட்டார்ஸுக்கு மிக மிக முக்கியமான கார். இண்டிகாவுக்குப் பிறகு டாடாவில் இருந்து ஒரு முழுமையான புதிய ஹேட்ச்பேக் காராக வெளிவர இருக்கிறது போல்ட்.

டாடாவின் மாடர்ன் கார்!

இண்டிகா இந்தியாவில் விற்பனைக்கு வந்தபோது, மிகக் குறைவான கார்களே போட்டிக்கு இருந்தன. ஆனால், இப்போது நிலைமையே வேறு. ஸ்விஃப்ட், i10 , ஃபிகோ, போலோ என 20-க்கும் மேற்பட்ட கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இந்த வரிசையில் முதல் இடம் பிடிப்பது என்பது, அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை.

போல்ட் முதலிடம் பிடிக்குமா?

டிஸைன்

ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்ட ஜெஸ்ட் காரின் ஹேட்ச்பேக் வெர்ஷன்தான் போல்ட். டாடா லோகோவை எடுத்துவிட்டு யாரிடமாவது, ‘இது என்ன கார்’ என்று கேட்டால், ஜப்பான் அல்லது ஐரோப்பிய நிறுவனங்களின் கார் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு டிஸைனில் செம மாடர்ன் கார் போல்ட்.

டாடாவின் மாடர்ன் கார்!

இதன் முகப்பில் இருக்கும் டெலிஸ்கோபிக் ஹெட்லைட்ஸ் மற்றும் கிரில் எடுப்பாக இருக்கின்றன. ‘ஃப்ளோட்டிங் ரூஃப்’ என்று டாடா குறிப்பிடும் இதன் கூரை, காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொடுக்கிறது. C பில்லரில் கறுப்பு நிற வினைல் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது ‘மிதக்கும் கூரை’ என்ற வர்ணனைக்கு வலிமை சேர்க்கிறது. இப்போது காரின் பின்புறத்துக்கு வருவோம். பின்பக்க விளக்குகள் காரோடு பொருந்தியிருப்பதோடு, பேனல் இடைவெளிகளும் இல்லை.

நம்பர் ப்ளேட்டுக்கு மேலே கொடுக்கப் பட்டிருக்கும் பெரிய க்ரோம் பட்டை போல்ட்டுக்குத் தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. ஆனால், பக்கவாட்டில் நின்று பார்க்கும்போதுதான், இது டாடா விஸ்ட்டாவை நினைவுப்படுத்துகிறது. காரணம், கதவுகள் அப்படியே விஸ்ட்டாவில் இருப்பதுபோலவே இருக்கின்றன.

8 ஸ்போக்ஸ் கொண்ட அலாய் வீல் கவர்ச்சியாக இருந்தாலும், 175/65 சின்ன சைஸ் டயர்கள் காரின் பிரம்மாண்டத்தைக் குறைத்துவிடுகின்றன. புதிய டிஸைன்தான் என்றாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ‘கொழுக் மொழுக்’ என ஒரு ஷேப்பில் இல்லாததுபோல இருப்பது, போல்ட்டின் மைனஸ்.

டாடாவின் மாடர்ன் கார்!

உள்ளே

டாடா விஸ்ட்டாவைப் போலவே போல்ட்டிலும் இடம் தாராளம். முன்னிருக்கை, பின்னிருக்கை என வேறுபாடு இல்லாமல் மிட் சைஸ் செடான் அளவுக்கு இரண்டிலுமே கை கால்களை நீட்டி மடக்கி, வசதியாக உட்கார முடிகிறது. அதிலும் பின் சீட்டில் மூன்று பேர் வசதியாக உட்கார்ந்து பயணம் செய்யலாம். சீட்களில் தொடைக்குப் போதுமான சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருப்பதால்,  நீண்ட தூரம் பயணித்தாலும் அலுப்புத் தெரியவில்லை. உள்ளலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்ஸ் மற்றும் திருகுகளின் தரம் உயர்த்தப்பட்டு இருந்தாலும் ஹூண்டாய் அளவுக்குத் தரமாக இல்லை. போல்ட்டின் டேஷ்போர்டில் ஆங்காங்கே சில மலிவான பிளாஸ்டிக்குகளும் இடம்பிடித்து, இது டாடா கார் என்று உறுதி செய்கின்றன.

போல்ட்டின் ஹைலைட்டாக, இதன் டச் ஸ்கிரீன்தான் இருக்கப்போகிறது. காரணம், செல்போனை இதன் டச் ஸ்கிரீனோடு இணைத்துவிட்டால், ஜிபிஎஸ் வசதி காருக்குக் கிடைத்துவிடும். இந்த டச் ஸ்கிரீன், செல்போனுக்கு வரும் மெசேஜைப் படித்துக் காட்டும்; வாய்ஸ் கமாண்ட் கொடுத்தால், அதையும் நிறைவேற்றும்.  ஜெஸ்ட்டைவிட இந்த டச் ஸ்கிரீன் தரமாக இருக்கிறது.

டாடாவின் மாடர்ன் கார்!

ஜெஸ்ட்டில் இருக்கும் அதே 1.2 ரெவோட்ரான் இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது. சிட்டி, எக்கோ, ஸ்போர்ட்ஸ் ஆகிய மூன்றில் நமக்கு எது தேவையோ அந்த மோடில் போல்ட்டைச் செலுத்த முடியும். குறுகலான சாலைகளில் ஓட்டும்போது, நான் முதலில் சிட்டி மோடு ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தேன். ஷார்ட் கியர் என்பதாலோ என்னவோ, ஜெஸ்ட்டைவிட போல்ட்டின் இன்ஜின், சிட்டி டிராஃபிக்கில் நாம் கேட்கிற சக்தியைத் தயங்காமல் கொடுக்கிறது. ஸ்டீயரிங்கும் டைரக்ட் ஸ்டீயரிங் என்பதால், அது நம் சொல்படி காரை வளைத்து நெளித்துச் செலுத்துகிறது.  நகருக்குள் ஓட்டுவதற்கு  மிகவும் ஈஸியான காராக இருக்கிறது போல்ட். ஆனால், கியர் ஷிஃப்ட் இயக்குவதற்கு அத்தனை ஸ்மூத் இல்லை.

சஸ்பென்ஷன்

குண்டும் குழியுமான சாலைகளில் மிதமான வேகத்தில் பயணம் செய்தபோதும் சரி; வேகத்தைக் கூட்டிய போதும் சரி; சக்கரம் படும் அவஸ்தையை காருக்குள் கடத்தவிடாமல் தடை செய்துவிடுகிறது சஸ்பென்ஷன்.

சரி, பெர்ஃபாமென்ஸ்? சிட்டிக்குள் ஓட்ட சக்தி போதுமானதாக இருந்தது. ஆனால், நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்ய ஆக்ஸிலரேட்டரில் ஏறி நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாறினால், இந்த பவர் குறைபாடு குறைந்து, பவர் சட்டென அதிகரிக்கிறது.

இது 0 - 100 வேகத்தை எக்கோ மோடு வேகத்தைக் காட்டிலும் 3.16 விநாடிகள் சீக்கிரமாகவே கடந்தது. அதேபோல, 40 - 100 கி.மீ வேகத்தை எட்ட எக்கோ மோடைவிட ஸ்போர்ட்ஸ் மோடு 8.92 விநாடிகள் குறைவாகவே எடுத்துக்கொள்கிறது. இதன் எடை 1,125 கிலோ என்றாலும் ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டும்போது, இது காற்றாகப் பறக்கிறது. ஆனாலும் இது போட்டி கார்களைப்போல சத்தம் இல்லாமல் இயங்கும் கார் இல்லை. குறிப்பாக, 5,500 - 5,900 ஆர்பிஎம்-ல் இன்ஜினை இயக்கும்போது சத்தம் அதிகமாகக் கேட்கிறது. இதன் கியர்பாக்ஸ் இந்தச் சத்தத்தை மேலும் கூட்டுகிறது.

ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஸ்போர்ட் மோடில் ஓட்டும்போது, போல்ட்-ன் இன்ஜின் ஜெஸ்ட்டைவிட... ஏன், ஸ்விஃப்ட், கிராண்ட் i10, எட்டியோஸ் லிவா ஆகிய போட்டி கார்களைவிடவும் துரிதமாக இருக்கிறது. போல்ட் 0 - 100 வேகத்தை வெறும் 13.16 விநாடிகளில் தொட்டு ஆச்சரியப்படுத்துகிறது.

டாடாவின் மாடர்ன் கார்!

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

போல்ட் ஸ்டெபிளிட்டியில் சூப்பர்! இது டாடா கார்தானா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஸ்டீயரிங் அற்புதம். ஆனால், வேகமாகச் சென்று திரும்பும்போது, பாடி ரோல் இருக்கிறது. இது, சொகுசான பயணத்துக்காக வடிவமைப்பட்ட காரே தவிர, பெர்ஃபாமென்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட கார் இல்லை என்பதால், இதை மன்னித்துவிடலாம். பாஷ் நிறுவனத் தயாரிப்பான ஏபிஎஸ் பிரேக்ஸ், வேகமாகச் செல்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது.

மைலேஜ்

ஷார்ட் கியரிங் என்பதால், இதன் மைலேஜ் ஜெஸ்ட்டைவிடவும் லிட்டருக்கு 0.8 கி.மீ குறைவு. அதாவது, இதன் அராய் மைலேஜ் லிட்டருக்கு 16.8 கி.மீ. ஆனால், இதுவே ஸ்விஃப்ட் 20.4 கி.மீ, எட்டியோஸ் லிவா 17.7 கி.மீ அளிக்கின்றன. போல்ட்டின் உண்மையான மைலேஜ் என்ன என்பது நாம் முழுமையாக டெஸ்ட் டிரைவ் செய்யும்போதுதான் தெரியவரும். வெகு விரைவிலேயே டீசல் இன்ஜின் கொண்ட போல்ட் வரவிருக்கிறது.

முதல் தீர்ப்பு

ஜெஸ்ட்டின் வெற்றிக்கான அறிகுறிகள் புலப்படும் இந்த நேரத்தில், மேலும் ஒரு வெற்றியை ஈட்டவே போல்ட் காரைக் களமிறக்குகிறது டாடா. உறுதியான கட்டமைப்பு கொண்ட, இடவசதிகொண்ட, பல புதிய அம்சங்கள் நிறைந்த வசதியான இந்த காரை, சுமார் 4.3 லட்சத்துக்கு டாடா விற்பனை செய்யும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சந்தேகமே இல்லை; இதுதான் விலை என்றால், இந்த விலைக்கு ஏற்ற கார்தான் போல்ட்!