Published:Updated:

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

ஆடி Q3 35 TDI Vs பிஎம்டபிள்யூ X1 Vs மெர்சிடீஸ் பென்ஸ் GLA 200 CDIதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

ஆடி Q3 35 TDI Vs பிஎம்டபிள்யூ X1 Vs மெர்சிடீஸ் பென்ஸ் GLA 200 CDIதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

இந்திய வாடிக்கையாளர்கள் எப்போதும் சொகுசு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதே சமயம், விலையின் மீதும் கவனமாக இருப்பார்கள். இவர்களைத் திருப்திப்படுத்த வந்ததுதான் காம்பேக்ட் லக்‌ஸுரி செக்மென்ட்.

40 லட்சம் ரூபாய்க்குள் விற்பனையாகும் மினி எஸ்யுவி மார்க்கெட் இது. இதில் ஆடி Q3, பிஎம்டபிள்யூ X1 ஆகிய கார்களுடன் போட்டி போட, பென்ஸ் தனது GLA காம்பேக்ட் எஸ்யுவியைக் களமிறக்கியிருக்கிறது.

மூன்று கார்களில், எது மிகச் சிறந்த காம்பேக்ட் எஸ்யுவி?

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

டிஸைன்

பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய கார்களின் லோகோவைப் பார்த்துப் பரவசப்பட்ட காலம் இப்போது இல்லை. அதனால், ட்ரெண்டுக்கு ஏற்றபடி இந்த கார்கள் டிஸைன் செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பென்ஸ் GLA  அப்டேட்டட் டிஸைனுடன் வந்து அசரடித்திருக்கிறது.

பிரம்மாண்டமான முன்பக்கம், பானெட்டின் மீது படர்ந்திருக்கும் நீளமான கோடுகள், சின்னச் சின்ன வளைவுகள், கிரில்லில் ஸ்டைலான இரட்டை க்ரோம் கோடுகள், 18 இன்ச் வீல்கள் எனப் பெரிய எஸ்யுவி போன்ற ஃபீல் அளிக்கிறது பென்ஸ் GLA.

பிஎம்டபிள்யூ X1 காரின் தோற்றம், ஒரு எஸ்டேட் காரை வலுக்கட்டாயமாக எஸ்யுவியாக மாற்றியதுபோல இருக்கிறது. இதற்குக் காரணம், இந்த X1 மாடல் பிஎம்டபிள்யூவின் 3 சீரிஸ் டூரிங் காரை அடிப்படையாகக்கொண்டது என்பதுதான். பிஎம்டபிள்யூவின் இரட்டை ஸ்ப்ளிட் கிரில், பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ் என்பதைத் தாண்டி, X1 காரில் வியந்து பார்க்க எதுவும் இல்லை.

பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களைக் காட்டிலும் ஒரு முழுமையான எஸ்யுவியாக இருக்கிறது ஆடி Q3. ஆடியின் முன்பக்க ‘டைனமிக்’  க்ரில் மிரட்டலாக இருக்கிறது. பட்டையான ஹெட்லைட்ஸ் சின்னதுபோல இருந்தாலும், செம பவர்ஃபுல். ஆனால், ஆடியின் பின்பக்கம் ஏனோ அசத்தலாக டிஸைன் செய்யப்படவில்லை.

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

 டிரைவ் சிஸ்டம்

மெர்சிடீஸ் பென்ஸ் GLA, ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம்கொண்டது; பிஎம்டபிள்யூ X1 காரில் இருப்பதோ, ரியர் வீல் டிரைவ்; ஆடி Q3 காரில், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது.

ஆடியிலும் பென்ஸிலும் இன்ஜின் குறுக்குவாட்டில் வைக்கப்பட்டிருக்க, பிஎம்டபிள்யூவில் நேர்கோட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ஆடி - பென்ஸில் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ X1 காரில், ZF 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். இந்த மூன்று கார்களுமே தீவிரமான ஆஃப் ரோடிங் சாகசங்களுக்குச் சரிப்பட்டு வராது.

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

உள்ளே

மெர்சிடீஸ் பென்ஸ் GLA காரின் வெளிப்புறம் எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதேபோல் உள்பக்கமும் மிக அழகாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. கேபினைப் பார்க்கும்போதே, அதன் தரம் மனதில் பதிகிறது. ஏ-கிளாஸ் போலவே ஏ.சி வென்ட்டுகள் வட்டமாக உள்ளன. ஸ்டீயரிங் வீல், லெதர் சீட்ஸ், சென்டர் கன்ஸோல் ஆகிய எல்லாமே தரத்தில் நம்பர் ஒன். ஆனால், சென்னை ஜிபி ரோடில் வாங்கிப் பொருத்தியதுபோல, டேஷ்போர்டுடன் ஒட்டாமல் இருக்கிறது COMAND டிஸ்ப்ளே ஸ்க்ரீன். தரமும் சுமார்தான்.

X1 காரின் கேபினிலும் பிஎம்டபிள்யூவின் வழக்கமான டேஷ்போர்டுதான். ஆனால், தரத்தில் குறை இல்லை. xLine வேரியன்ட்டில் பீஜ் மற்றும் கறுப்பு என இரட்டை வண்ண டேஷ்போர்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

வழக்கமாக, ஆடி கார்களின் உள்பக்கம் சூப்பராக இருக்கும். ஆனால், Q3 காரில் அந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது ஆடி. க்ரே, பீஜ் வண்ண டேஷ்போர்டு ரொம்பவே டல் அடிக்கிறது. ஆடி என்று பெருமையாகச் சொல்லும் அளவுக்குத் தரமான பிளாஸ்டிக்ஸ், மெட்டல் பாகங்கள் இல்லை. ஆனால், காரில் நுழைவதும்  வெளியே வருவதும் ஆடியில் ஈஸியாக இருக்கிறது. GLA, X1 கார்களின் இருக்கைகள் உயரம் குறைவாக இருப்பதால், டிரைவிங் பொசிஷன் கமாண்டிங்காக இல்லை.

பென்ஸ் GLA-ன் லெக்ரூம், ஹெட்ரூம் தேவைக்கும் அதிகமாகவே இருக்கிறது. பிஎம்டபிள்யூ X1 காரின் பின்னிருக்கை கொஞ்சம் தட்டை. ட்ரான்ஸ்மிஷன் டனல் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால், பின் இருக்கைகளில் இடவசதி குறைவுதான்.

Q3 காரின் பின்னிருக்கை சொகுசாகவும், வசதியாகவும் உள்ளது. சரியான உயரத்தில் எல்லா இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பின்பக்கம் ஆர்ம்ரெஸ்ட் இல்லையென்றாலும், இந்த செக்மென்ட்டில் ரியர் ஏ.சி வென்ட் இருக்கும் ஒரே கார் என்பதால், கேபின் சில்லென இருக்கிறது. மூன்று கார்களிலுமே நான்கு பேர்தான் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும்.

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

X1 காரின் 420 லிட்டர் டிக்கியில், பொருட்களை ஏற்றி இறக்குவது எளிது. ஆனால், ஆடியில் 460 லிட்டர் டிக்கி இடவசதி. மெர்சிடீஸ் பென்ஸின் 421 லிட்டர் டிக்கியில், ஸ்பேர் வீலும் இடம்பிடித்துக்கொள்வதால், பொருட்கள் வைக்க இடம் குறைவு. பிஎம்டபிள்யூ, ரன் ஃப்ளாட் டயர்களைப் பயன்படுத்துவதால், ஸ்பேர் வீல் கிடையாது. ஆனால், ஆப்ஷனலாக ஸ்பேர் வீலை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், அதை டிக்கியில்தான் வைக்கமுடியும். 
வசதிகள் எலெக்ட்ரிகல் அட்ஜஸ்ட்டபிள் முன்னிருக்கைகள், லெதர் சீட், ரெய்ன் சென்ஸிங் வைப்பர்ஸ், ரியர் பார்க்கிங் சென்ஸார்ஸ், பேனோரமிக் சன்ரூஃப், இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் ஆகியவை மூன்று கார்களிலுமே பொதுவாக இருக்கின்றன.

ஆடி Q3 காரில் இருக்கைகளுக்கு மெமரி வசதி, சேட்டிலைட் நேவிகேஷன், இன்ஜின் ஸ்டாப்-ஸ்டார்ட் வசதிகள் இல்லை. ஆனால், இந்த மூன்று கார்களிலேயே ரியர் ஏ.சி வென்ட், முன் பக்க பார்க்கிங் சென்ஸார்  கொண்ட ஒரே கார் ஆடி Q3தான்.

பிஎம்டபிள்யூ X1 காரில், ஹை-ரெசொல்யூஷன் ஸ்க்ரீனுடன் iDrive சிஸ்டம் இருக்கிறது. மற்ற இரண்டு கார்களின் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டங்களில் லோ-ரெசொல்யூஷன் ஸ்க்ரீன்கள்தான். புஷ் பட்டன் ஸ்டார்ட் கொண்ட ஒரே காரும் இதுதான். இந்த காரின் ட்ரிப் கம்ப்யூட்டர் மோனோக்ரோம் டிஸ்ப்ளே மிகவும் சுமாராக இருக்கிறது. மற்ற இரண்டு கார்களிலுமே கலர் ஸ்க்ரீன்கள் உள்ளன.

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

36 லட்சம் ரூபாய் காம்பேக்ட் லக்‌ஸுரி காரில் மேனுவல் ஏ.சியைக் கொடுத்து காமெடி செய்திருக்கிறது பென்ஸ். பிஎம்டபிள்யூ, ஆடி இரண்டு கார்களிலுமே டூ-ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி இருக்க, பென்ஸில் சாதாரண ஏ.சி இருப்பது மைனஸ். ஆனால், பென்ஸ் GLA காரில் மட்டுமே ரியர் வியூ கேமராவும், பேடில் ஷிஃப்டர்களும் இருக்கின்றன.
பெர்ஃபாமென்ஸ் மெர்சிடீஸ் பென்ஸ் GLA காரில் இருப்பது, A கிளாஸ் முதல் ML கிளாஸ் வரை பயன்பாட்டில் இருக்கும் அதே 2,143 சிசி டீசல் இன்ஜின். மூன்று கார்களில் மிகக் குறைவான பவர் கொண்ட கார் பென்ஸ்தான். 134 bhp சக்தியையும் 30.6 kgm டார்க்கையும் அளிக்கிறது பென்ஸ் GLA. ஆடி Q3 காரில் இருக்கும் 1,968 சிசி டீசல் இன்ஜின், 174 bhp சக்தியையும் 38.74 kgm டார்க்கையும் அளிக்க, பிஎம்டபிள்யூ X1 காரின் 1,995 சிசி இன்ஜின், 181 bhp சக்தியையும் 38.74 kgm டார்க்கையும் அளித்து, பவரில் முன்னே நிற்கிறது.

போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது சக்தி மிகவும் குறைவு என்பதால், 0-100 கி.மீ வேகத்தை அடைய 9.51 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது பென்ஸ். இந்த ஸ்லோ மோஷன் ரேஸுக்கு, பவர் குறைபாடு மட்டும் காரணம் அல்ல. காரின் எடையும்தான். 1,585 கிலோ எடைகொண்ட ஹெவி வெயிட் காராக இருக்கிறது பென்ஸ்.

பிஎம்டபிள்யூவின் 2 லிட்டர் டீசல் இன்ஜின் செம ரெஸ்பான்ஸிவ். எந்த மோடில் வைத்து, ஆக்ஸிலரேட்டரை மிதித்தாலும் சீறுகிறது X1. இந்த இன்ஜினின் இயக்கத்துக்குக் கைகொடுக்கும் விதத்தில் அருமையான சாலை அமைந்துவிட்டால் ஜாலிதான். கியர்பாக்ஸும் ஸ்மூத்தாக இருக்கிறது.  இந்த மூன்று கார்களின் இன்ஜின்களில் Q3 காரில்தான் பக்குவப்பட்ட இன்ஜின். ஸ்போர்ட்ஸ் மோடு உண்டு. ஆனால், எக்கோ மோடு இல்லை. நிதானமாக ஓட்டினாலும் சரி; விரட்டி வேலை வாங்கினாலும் சரி; அதிரடி பெர்ஃபாமென்ஸைக் கொடுப்பது, ஆடி Q3 காரின் இன்ஜின்தான்.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

பிஎம்டபிள்யூ X1 காரின் பவர்ஃபுல்லான இன்ஜினுக்கு சப்போர்ட் செய்வது, இதன் ஸ்போர்ட்டியான டைனமிக்ஸ். காரின் ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருக்கிறது.
ஆனால் ரன் ஃப்ளாட் டயர்களுடன் பின்பக்கம் மட்டும் சஸ்பென்ஷன் சாஃப்ட்டாக இருப்பதால், குறைவான வேகங்களில் ஆடாமல் செல்கிறது X1. வேகம் பிடித்த பின்பு, காருக்குள் ஆட்டம் துவங்க ஆரம்பிக்கிறது.

ஆடியின் விலை உயர்ந்த வேரியன்ட்டில், இப்போது ‘டிரைவ் செலெக்ட்’ வசதி உண்டு. எனவே, ‘டைனமிக்’ மோடில் வைத்து ஓட்டினால், சஸ்பென்ஷன் இறுக்கமாகிவிடும் என்கிறது ஆடி. ஆனால், நார்மல் மோடுக்கும், இந்த டைனமிக் மோடுக்கும் ஓட்டுதல் தரத்தில் பெரிய வித்தியாசத்தை உணர முடியவில்லை. நார்மல் மோடிலேயே நல்ல ஓட்டுதல் தரத்தையும், கையாளுமையையும் தருகிறது ஆடி Q3. நெடுஞ்சாலையில் அதிக வேகங்களிலும் ஸ்டேபிளாகச் செல்கிறது. ஆனால், இன்ஜினைவிட சஸ்பெஷன் சத்தம் அதிகமாக காருக்குள் கேட்கிறது.

மெர்சிடீஸ் பென்ஸ் GLA காரின் சஸ்பெஷன்தான் இந்த மூன்றில் இறுக்கமானது. அதனால், அதிக வேகங்களில் கட்டுக்குலையாமல், வளைவுகளில் பாடி ரோல் இல்லாமல் செல்கிறது. டயர்களும் நல்ல க்ரிப் அளிக்கின்றன. ஆனால், மெதுவான வேகங்களில் ரொம்பவே குலுங்குகிறது. குறைவான வேகத்தில் மேடு பள்ளங்களை சாஃப்ட்டாகக் கடக்கவில்லை.

மைலேஜ்

சிட்டி டிராஃபிக்கில் ஆடி Q3 லிட்டருக்கு 10.5 கி.மீ, பிஎம்டபிள்யூ X1 10.5 கி.மீ, பென்ஸ் GLA 11 கி.மீ மைலேஜ் அளிக்கின்றன. நெடுஞ்சாலைகளில் அதிக மைலேஜ் அளிப்பது மெர்சிடீஸ் பென்ஸ் GLA கார்தான். இது, லிட்டருக்கு 14.5 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. Q3 லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தர, X1 லிட்டருக்கு 13.8 கி.மீ மைலேஜ் தருகிறது.

2013-ம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பிறகு, பிஎம்டபிள்யூ X1 ரொம்பவே

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?

முன்னேறியிருக்கிறது.  நீங்கள் டிரைவிங் ஆர்வலராக இருந்தால், இதன் இன்ஜின் - கியர்பாக்ஸ் காம்பினேஷன் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். மெர்சிடீஸ் பென்ஸ் GLA கார், முழுக்க முழுக்க ‘ஷோ’தான். விலை மதிப்புள்ள காரில் ஏறுவது போன்ற ஒரு உணர்வை அளிக்கிறது பென்ஸ். ஆனால், காரின் ஓட்டுதல் தரம் மிகவும் இறுக்கமாக உள்ளது. பின்னிருக்கைகள் சொகுசாக இல்லை. பெர்ஃபாமென்ஸும் சுமார்தான் என்பதால், காருக்குள் ஏறும்போது இருக்கும் உற்சாகம் வெளியே வரும்போது இல்லை.

ஒரு எஸ்யுவி என்று வரும்போது, பார்க்க பிரம்மாண்டமாக இருந்தால் மட்டும் போதாது. எஸ்யுவிக்கான வேலையைக் கச்சிதமாகச் செய்ய வேண்டும். அந்த வகையில், இந்த மூன்றில் ஆடி Q3 கார்தான் பெஸ்ட். போட்டி கார்கள் இரண்டும் உயரமான ஹேட்ச்பேக், எஸ்டேட் கார்கள் போன்று தோற்றமளிக்க, ஒரு எஸ்யுவியாகத் தெரிவது Q3 மட்டுமே! ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், நல்ல இடவசதி, சொகுசு, குறைவில்லாத பெர்ஃபாமென்ஸ் என வொர்க்கஹாலிக் எஸ்யுவியாக இருக்கிறது ஆடி Q3. 

எது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி?