Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2015

மோட்டார் விகடன் விருதுகள் 2015

மோட்டார் விகடன் விருதுகள் 2015

மோட்டார் விகடன் விருதுகள் 2015

Published:Updated:
மோட்டார் விகடன் விருதுகள் 2015

இந்த ஆண்டின் சிறந்த கார் எது என்பதைத் தேர்ந்தெடுப்பது, அவ்வளவு சுலபமாக இல்லை. மினி எம்பிவி கார்களில் தனி ராஜாங்கம் நடத்திய மாருதி எர்டிகாவுக்குப் போட்டியாகக் களமிறங்கி மார்க்கெட் ஷேரைப் பிரித்த கார், ஹோண்டா மொபிலியோ. இடவசதி, தரமான இன்ஜின், மாடர்ன் டிஸைன் என மொபிலியோவுக்கு பலங்கள் அதிகம். அடுத்து மார்க்கெட்டுக்கு வருவதாக அறிவிப்பு வந்ததுமே, ஹூண்டாயின்  எக்ஸென்ட்டுக்கு புக்கிங் குவிந்தது. 4 மீட்டருக்குள் அதிக வசதிகள்கொண்ட தரமான மிட் சைஸ் கார் என்பதுதான் எக்ஸென்ட்டின் பலம். ‘டாடாவில் இருந்து இப்படி ஒரு காரா’ என டிஸைனிலும் சிறப்பம்சங்களிலும் வியக்கவைத்த கார் ஜெஸ்ட். தவிர, மாருதி சியாஸ், புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டொயோட்டா கரோலா என பல கார்கள், சிறந்த காருக்கான போட்டியில் இருந்தன. ஆனால், இந்த ஆண்டின் ஹாட் ஹேட்ச்பேக் காராக அறிமுகமாகி, விற்பனையில் ஹிட் அடித்து, மக்கள் மனதில் இடம்பிடித்த கார், ஹூண்டாய் எலீட் i20.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

ஹூண்டாய் எலீட் i20, ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது. செம ஸ்டைலான ஹேட்ச்பேக் காராக இருப்பதுதான் எலீட் i20-ன் பலம். 6-9 லட்சத்துக்குள் தரமான ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் வேண்டும் என்றால், பலரின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஹூண்டாய் எலீட் i20தான். இதுதான் 2015-ன் சிறந்த கார்!

மோட்டார் விகடன் விருதுகள் 2015

பொதுவாக, மாஸ் வெற்றி பெற்ற மாடலில் புதிய அப்டேட் மாடலைக் கொண்டுவரும்போது, பழைய மாடலுக்கும் இதற்குமான ஒப்பீடுகள் ஆரம்பிக்கும். ‘இதுக்கு பழைய மாடலே நல்லா இருக்கு’ என விமர்சனங்கள் எழும். ஆனால், பழைய பைக்கைவிட தரத்திலும் சிறப்பம்சங்களிலும் முன்னேறி, விற்பனையை இன்னும் பல மடங்கு உயர்த்தியிருக்கும் பைக், யமஹா FZ-S V2.0. பெட்ரோல் வீணாகாமல் சரியான அளவை இன்ஜினுக்குள் செலுத்தி, பெர்ஃபாமென்ஸையும் மைலேஜையும் அதிகரிக்கும் தொழில்நுட்பம்தான் ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தால், பைக்கின் விலை அதிகமாகும். ‘நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் பைக்கில் இது தேவையா?’ என்ற விமர்சனங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, துணிச்சலாக ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை FZ பைக்கில் அறிமுகப்படுத்தி வெற்றிபெற்றிருக்கிறது யமஹா. FZ-S V2.0 பைக்தான் 2015-ம் ஆண்டின் மிகச் சிறந்த பைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

ஆண்கள், பெண்கள் என இருவருமே பயன்படுத்தும்படியான ஸ்கூட்டர்கள்தான் இன்றைய ட்ரெண்ட். சுஸூகி லெட்ஸ், டிவிஎஸ் ஜெஸ்ட், ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜுபிட்டர் என வெளிவந்த ஸ்கூட்டர்களே இன்றைய காலத்தின் தேவையைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் நம்பகத்தன்மைக்கும் தரத்துக்கும் பெர்ஃபாமென்ஸுக்கும் பெயர் பெற்ற ஸ்கூட்டர், ஹோண்டா ஆக்டிவா. அதில், காலத்துக்கு ஏற்றபடி பவரைக் கொஞ்சம் அதிகரித்து 125சிசி ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தியது ஹோண்டா. 125சிசி செக்மென்ட்டிலும் மார்க்கெட் லீடராக உயர்ந்து நிற்கும் ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டர்தான், 2015-ம் ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர்.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

அறிமுகமான வேகத்திலேயே மிகப் பெரிய ஹிட்டான ஹூண்டாய் எலீட் i20 கார்தான் 2015-ன் சிறந்த ஹேட்ச்பேக் கார். உச்சகட்ட சாதனையாக கடந்த நவம்பர் மாதம் 10,000 எலீட் i20 கார்கள் விற்பனையாகி இருப்பது, போட்டியாளர்களை மிரள வைத்திருக்கிறது. அப்படி என்ன இதில் ஸ்பெஷல்? ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, 8 ஸ்பீக்கர் மியூஸிக் சிஸ்டம், டிரைவர் சீட் மற்றும் ஸ்டீயரிங் வீல் அட்ஜஸ்ட், பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் கேமரா, ரியர் ஏ.சி வென்ட், காற்றுப் பைகள், ஏபிஎஸ் என ஒரு ப்ரீமியம் சொகுசு காரில் இருக்கும் அத்தனை வசதிகளையும் ஹேட்ச்பேக் காரில் கொடுத்திருப்பதுதான், எலீட் i20 காரின் வெற்றிக்குக் காரணம்.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

அமெரிக்க பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன், இந்தியாவுக்கு வரும்போது அது இந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில், அமெரிக்காவில் இருந்து பைக்குகளை இறக்குமதி செய்து விற்பனையைத் துவக்கிய ஹார்லி டேவிட்சன், இந்தியாவுக்கான ஸ்பெஷல் பைக்கை அறிமுகம் செய்தது. 5 லட்ச ரூபாய்க்குள் ஒரு ஹார்லி டேவிட்சனை வாங்க முடியும் என்கிற பலரின் கனவை நனவாக்கிய பைக் ஸ்ட்ரீட் 750. இது இந்திய பைக் மார்க்கெட்டின் ஒரு லேண்ட்மார்க் பைக். க்ரூஸர் பைக்குகள் என்றாலே, சீக்கிரத்தில் கலகலத்துவிடும்; ஆயில் கசியும்; அதிகமாக செலவு வைக்கும் என்கிற எண்ணத்தை முற்றிலுமாக மாற்றிய பைக், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750. இந்தியாவில் க்ரூஸர் பைக்குகளை விற்பனை செய்துவரும் பல தயாரிப்பாளர்களையும் இந்த பைக் தரமான பைக்குகளைத் தர நிர்பந்தப்படுத்தியிருக்கிறது. டிரையம்ப், ஹோண்டா, கவாஸாகி, கேடிஎம் என பல ப்ரீமியம் பைக்குகள் படையெடுத்திருந்தாலும், ‘மேட் இன் இந்தியா’ பைக்காக வெற்றிபெறுகிறது, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

டீசல் இன்ஜின் இல்லாத ஒரே காரணத்தால், செடான் மார்க்கெட்டை இழந்த ஹோண்டா, பவர்ஃபுல்லான டீசல் இன்ஜினுடன் சிட்டி காரைக் கொண்டுவந்து முதல் இடம் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டின் துவக்கத்தில் மாதத்துக்கு 3,000 கார்களுக்கும் மேல் விற்பனையான ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டியின் வருகையால் கடுமையான பின்னடைவைச் சந்தித்தது. கடந்த நவம்பர் மாதம் ஹூண்டாய் வெர்னா 1,588 கார்கள் மட்டுமே விற்பனையாக, ஹோண்டா சிட்டியின் விற்பனையோ 7,251. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், மாதத்துக்கு 10,000 கார்களுக்கு மேல் விற்பனையாகக்கூடிய கார் ஹோண்டா சிட்டி. காரணம், இந்த காருக்கான வெயிட்டிங் பீரியட் 2 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. தரமான இன்ஜின், ஏராளமான இடவசதி, நம்பகத்தன்மை என மற்ற செடான் கார்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது ஹோண்டா சிட்டி.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

இந்தியாவில் பிஎம்டபிள்யூ, பென்ஸ் என்று பேர் சொன்னாலே போதும்; கார் வாங்கிவிடுவார்கள் என்கிற நிலையை மாற்றிய நிறுவனம் ஆடி. ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் அங்கமான ஆடி இந்தியாவுக்கு வந்த பிறகுதான், நாம் கொடுக்கும் விலைக்குச் சரியான காரைத்தான் வாங்குகிறோமா என்று பலர் யோசிக்க ஆரம்பித்தனர். 30 - 40 லட்சம் ரூபாய்க்குள் A3 எனும் அசத்தலான என்ட்ரி லெவல் சொகுசு செடான் காரைக் கொடுத்து வெற்றிபெற்றிருக்கிறது ஆடி. ஆக்டேவியா, சொனாட்டா, அக்கார்டு போன்ற கார்களைப் பயன்படுத்திவிட்டு, ஒரு முழுமையான செடான் காருக்கு மாறவேண்டும் என்பவர்களின் முதல் சாய்ஸ் ஆடி A3 கார்தான் என்பதை, விற்பனை விபரம் போட்டியாளர்களுக்கும் வெளிப்படுத்தியது. ஏகப்பட்ட சொகுசு வசதிகள், சூப்பர் பெர்ஃபாமென்ஸ், அதிக மைலேஜ் என ஆடி A3 போட்டியாளர்களைவிட பல மீட்டர்கள் முன்னால் பறக்கிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

கடந்த இரண்டு ஆண்டுகளாவே இந்தியாவில் க்ராஸ்ஓவர் ஜுரம். ஃபோக்ஸ்வாகன் போலோ க்ராஸ், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் என சும்மா பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு வராமல், முழுமையான க்ராஸ்ஓவர் காராக உருமாறி வந்திருக்கும் கார், ஃபியட் அவென்ச்சுரா. புன்ட்டோ ஈவோ காரில் இருந்து முளைத்த கார்தான் இது என்றாலும், இரண்டு கார்களுக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்களைக் காட்டி, ‘இவன் வேற மாதிரி’ என அவென்ச்சுராவைச் சொல்லவைத்திருக்கிறது ஃபியட். 10 லட்சம் ரூபாய்க்குள் ஸ்டைலான க்ராஸ்ஓவர் கார் என்றால், அவென்ச்சுராதான் முதலில் நினைவுக்கு வரும். அதனால், க்ராஸ்ஓவர், மினி எஸ்யுவி போட்டியில் வெற்றி பெறுகிறது அவென்ச்சுரா.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

ஹோண்டா மொபிலியோவை ஓட்டும்போது, ஏழு பேர் உட்கார்ந்து செல்லும் பெரிய எம்பிவி காரை ஓட்டுகிறோம் என்கிற உணர்வே உங்களுக்கு வராது. செம ஈஸி டிரைவிங் கார் ஹோண்டா மொபிலியோ. பிரியோ பிளாட்ஃபார்மில் இருந்து முளைத்த இந்த மொபிலியோ, ஓட்டுதல் தரத்திலும் கையாளுமையிலும் சிறந்த காராக இருக்கிறது. 8 - 12 லட்சம் ரூபாய்க்குள் எம்பிவி கார் வாங்க வேண்டும் என்பவர்களுக்கான முதல் சாய்ஸ், ஹோண்டா மொபிலியோ.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

சூப்பர் இன்ஜின், செம பெர்ஃபாமென்ஸ் என எவ்வளவு சிறப்பான காராக இருந்தாலும் சரியான பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லை என்றால், அது மார்க்கெட்டில் வெற்றி பெறாது. விலைக்கேற்ற தரமான காராக இருந்தால் மட்டுமே, அது பெஸ்ட் செல்லராக உயரும். அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த விலைமதிப்புள்ள கார், ஹூண்டாய் எக்ஸென்ட். 5 - 8 லட்ச ரூபாயில் அதிக வசதிகள்கொண்ட, டிக்கியில் பொருட்கள் வைக்கவும் அதிக இடம்கொண்ட, ஸ்டைலான, மாடர்னான கார் ஹூண்டாய் எக்ஸென்ட்.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

டொயோட்டா கரோலா விற்பனையாகும் D1 செக்மென்ட், இந்தியாவில் மிக மிக ஸ்பெஷல் செக்மென்ட். இந்த கார்களுக்கு இந்தியாவில் மார்க்கெட் இல்லை என்று தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொண்டு பல நிறுவனங்கள் மாதந்தோறும் 100, 200 கார்களை விற்பனை செய்யும் நிலையில், ஹேட்ச்பேக் கார் போன்று மாதத்துக்கு 1,000 கரோலா ஆல்டிஸ் கார்களை விற்பனை செய்துவருகிறது டொயோட்டா. லேட்டஸ்டாக வெளிவந்த புதிய கரோலா ஆல்டிஸ், 3ஜி தலைமுறை விரும்பும் டிஸைனுடன் வந்ததுதான் ப்ளஸ். நம்பகத்தன்மைக்கும் தரத்துக்கும் பெயர்பெற்ற கரோலா, புதிய டிஸைன் மூலம் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

காம்பேக்ட் கார்களுக்கான போட்டியில், டட்ஸனின் முதல் காரான கோ, மாருதியின் புதிய ஆல்ட்டோ கே10 மற்றும் மாருதி செலேரியோ என மூன்று கார்கள் மோதுகின்றன. இதில், புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் மக்களின் மனம் கவர்ந்த காராக வெற்றிபெறுகிறது மாருதி செலேரியோ.  குறைந்த விலை, புதிய வசதிகள், போதுமான பெர்ஃபாமென்ஸ், அதிக மைலேஜ் என ஒரு ஆல்ரவுண்டர் பட்ஜெட் காராக இருக்கிறது, மாருதி செலேரியோ.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

21 வயதான கோவையைச் சேர்ந்த அர்ஜூன் நரேந்திரன்தான் 2014-ம் ஆண்டின், ‘இண்டியன் டூரிங் கார்ஸ் சாம்பியன்.’ 17 வயது முதல் தொழில்முறையிலான ரேஸிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்த அர்ஜுனுக்கு, 2014-ம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டு. சென்னை, கோவை, டெல்லி என இந்த ஆண்டு மொத்தம் 11 சுற்றுகளாக நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், 9 ரேஸ்களில் முதல் இடம் பிடித்து வெற்றிபெற்றவர் அர்ஜுன் நரேந்திரன். இரண்டு ரேஸ்களில் மூன்றாவது இடம். ஆக மொத்தம் 11 ரேஸ்களிலும் போடியம் ஏறி, இந்திய ரேஸ் உலகில் உச்சம் தொட்ட இளம் தமிழன் அர்ஜுன் நரேந்திரன்தான் இந்த ஆண்டின் சிறந்த கார் ரேஸ் வீரர்.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

2012, 2013, 2014 என மூன்று ஆண்டும் தொடர்ந்து தேசிய சாம்பியன் பட்டம் வென்று, ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார் ஜெகன். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜெகனுக்கு, பைக் ரேஸராக வேண்டும் என்பது கனவு. சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து சைக்கிளிலேயே இருங்காட்டுக்கோட்டை வரை சென்று, பைக் ரேஸ் வேடிக்கை பார்த்து வருவார். ஜெகனின் ஆர்வத்தைப் பார்த்த ஒரு மெக்கானிக், அவரை பைக் ரேஸர் ஒருவரிடம் அறிமுகப்படுத்த, அன்று முதல் இருங்காட்டுக்கோட்டையில் பறக்க ஆரம்பித்தது ஜெகனின் பைக்! ஆட்டோ டிரைவரின் மகனான 25 வயது ஜெகனுக்கு, ஆசியன் ஜீபி, பிறகு மோட்டோ ஜீபியில் ரேஸ் ஓட்ட வேண்டும் என்பது லட்சியம். திறமையும் தகுதியும் உள்ள ஜெகன், சர்வதேச ரேஸ்களில் கலந்துகொண்டு, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தருவார்.

மோட்டார் விகடன் விருதுகள் 2015

இந்தியர்களின் மன நிலையை முழுக்க முழுக்கப் படித்து வைத்திருக்கும் நிறுவனம் ஹூண்டாய். தேர்தல், ஆட்சி மாற்றம், வட்டி விகித உயர்வு என கார் மார்க்கெட் ஆட்டம் காண, புதிய மாடல்கள் மூலம் விற்பனையில் உச்சத்தைத் தொட்டது ஹூண்டாய். எக்ஸென்ட், எலீட் i20 என இரண்டு கார்களுமே 2014-ம் ஆண்டின் மிக முக்கிய கார்கள் என்பதோடு, இன்னும் பல ஆண்டுகளுக்கு மார்க்கெட் லீடராக இருக்கப்போகும் கார்கள். சென்னையில் ஆண்டுக்கு 6 லட்சம் கார்களைத் தயாரித்து, உலகின் பல மூலைகளுக்கும் கொண்டுசெல்கிறது ஹூண்டாய். இந்திய கார் மார்க்கெட் பல சூறாவளிகளைச் சந்தித்தாலும், புதுப்புது கார்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் ஹூண்டாய்தான் 2015-ம் ஆண்டின் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனம்.  

இந்த ஆண்டின் சிறந்த கார், சிறந்த பைக், சிறந்த ஸ்கூட்டர் எது? என்று கடந்த இதழில் வாசகர்களின் கருத்துகளைக் கேட்டிருந்தோம். கடிதங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக உங்களின் தேர்வு எது என்று சொல்லி, மோட்டார் விகடன் விருதுகளைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றி. மோட்டார் விகடன் தேர்வுக்குழுவின் முடிவுகளைச் சரியாகக் கணித்திருக்கும் வாசகர்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வாசகர்களுக்குப் பரிசுகள் விரைவில் வீடு தேடிவரும்!


பரிசுபெறும் ஐந்து வாசகர்கள்: 

எஸ்.லிங்கேஸ்வரன், திருச்சி  கே.சாந்தகுமாரி, அரியலூர்  ஏ.புவனேஸ்வரன், சிவகங்கை  சா.தேவபிரபு, ஈரோடு  பி.செந்தில்குமார், ஓசூர்.