Published:Updated:

ஆக்‌ஷன் ஹீரோ! அப்டேட்

ரீடர்ஸ் ரெவ்யூ - MAHINDRA SCORPIO NEW S10ம.மாரிமுத்து

அம்பாஸடர், டாடா இண்டிகா, சுமோ, ஃபோர்டு பியஸ்ட்டா, மஹிந்திரா என எல்லா விதமான கார்களையும் பயன்படுத்தி இருப்பதால், கார் பற்றிய அனுபவம் நிறையவே உண்டு.

ஆக்‌ஷன் ஹீரோ! அப்டேட்

ஏன் ஸ்கார்ப்பியோ?

கம்பீரமான, தோரணை-யான கார் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். நண்பர்களிடம் விசாரித்தபோது, நான் எதிர்பார்க்கும் அம்சங்கள் டொயோட்டா பார்ச்சூனரில் இருக்கும் என்றார்கள். ஆனால் அது, பராமரிப்புச் செலவு சற்று அதிகமாக இருக்கும் என்றனர். மேலும், பார்ச்சூனரின் விலை 20 லட்சத்தைத் தாண்டுவதால், இவ்வளவு பணம் இதில் முதலீடு செய்ய வேண்டுமா என்றும் யோசித்தேன். அப்போது, புதிய ஸ்கார்ப்பியோ காருக்கு வந்த விளம்பரம் என்னைக் கவர்ந்தது. பார்ச்சூனருக்கு இணையான உயரம், கம்பீரமான வெளிப்புறத்தோற்றம் கொண்ட கார். ஏற்கெனவே நான்  ஸ்கார்ப்பியோ காரைப் பயன்படுத்தி இருப்பதால், அதன் பெர்ஃபாமென்ஸ் மேல் நம்பிக்கை இருந்தது. மேலும், அப் டு டேட் மாற்றங்களுடன் ஜி.பி.எஸ் வசதியும் இருக்கிறது என்று தெரிந்ததும், வாங்கத் தீர்மானித்தேன்.

ஷோரூம் அனுபவம்?

மதுரை கப்பலூரில் இருக்கிற மஹிந்திரா -சுசீ ஆட்டோமொபைல் நிறுவனத்தில் காரை புக் செய்தேன். நான் ஏற்கெனவே இங்குதான் ஸ்கார்ப்பியோ வாங்கினேன். மஹிந்திராவின் வாடிக்கையாளர் என்பதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்ல நட்பில் இருந்தனர். ‘ஸ்கார்ப்பியோ எஸ்-10 வேரியன்ட் விற்பனையை பொங்கல் முதல்தான் துவக்குவோம்’ என்ற முடிவில் இருந்த அவர்கள், எனக்காக புத்தாண்டிலேயே, அந்த காரை டெலிவரி கொடுத்தனர்.

எப்படி  இருக்கிறது?

பார்ப்பதற்கு இதன் கம்பீரமான வெளித்தோற்றம், உயரம் போன்றவை பெரிய கார் என்ற மன நிறைவைத் தருகிறது. பொது இடங்களுக்கு இந்த காரில் பயணிப்பது கூடுதல் கௌரவம். பழைய ஸ்கார்ப்பியோவில் சின்னச் சின்னக் குண்டு குழிகளில்கூட குலுங்கல்கள் இருக்கும். இதில் சஸ்பென்ஷன் நன்றாக இருப்பதால், குலுங்கினாலும் அவ்வளவாக அலுப்புத் தெரியவில்லை. நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர், மேடு பள்ளங்களைப் பற்றி கவலை இல்லாமல் காரை ஓட்டலாம். நெடுஞ்சாலையானாலும், நகரச் சாலையானாலும் அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம்.

கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி இருப்பதால், தேவைக்கு ஏற்ப அதுவே மாறிக்கொள்கிறது. கார் வாங்கிய சில நாட்களில் சென்னை சென்றுவந்தேன். பிரேக்ஸ் பக்காவாகச் செயல்படுகிறது. சொகுசாகப் பயணம் செய்ய, பட்ஜெட் விலையில் கிடைப்பது இந்த காரின் சிறப்பு.

 மைலேஜ்

என் ஓட்டுதல் முறைக்கு சராசரியாக லிட்டருக்கு 13.5 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது. அதேபோல இன்ஜின் சத்தம், ஹீட் என எந்த அசெளகரியமும் இல்லை. இதில் ஜி.பி.எஸ் வசதி இருப்பதால், பெயர் தெரியாத ஊர்களுக்கும் ஜி.பி.எஸ் மேப் நமக்கு வழி காட்டுகிறது. காரின் முன்பக்கம் உள்ள ஹெட்லைட்ஸ், காரைத் திருப்பும்போது வளைந்து, நாம் திரும்பும் திசைக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. இது, கிராமச் சாலைகளை அடிக்கடி பயன்படுத்தும் எனக்கு மிக உதவியாக இருக்கிறது.

ஆக்‌ஷன் ஹீரோ! அப்டேட்

பார்க்கிங்கின்போது, இதில் உள்ள சென்ஸார்கள் துல்லியமாகச் செயல்பட்டு, ரிவர்ஸ் எடுக்கும்போது ஏற்படும் சிரமத்தைக் குறைக்கிறது.
பொருட்கள் வைப்பதற்கு, பூட் ஸ்பேஸ் அதிகமாகவே இருப்பதும், மடக்கிப் பொருத்தும் இருக்கைகள் கடைசி வரிசையில் இருப்பதும், குடும்பத்தோடு பயணிக்கும்போது, சுலபமாக்குகிறது.

ப்ளஸ்

ஜி.பி.எஸ் இருப்பது பெரிய பலம். பட்டிதொட்டியெங்கும் யாரின் உதவியின்றி, மேப்பின் துணையுடன் சென்றுவர முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள புதிய சஸ்பென்ஷனால், கரடுமுரடான பாதையிலும், காரில் ஆட்கள் குறைவாக இருக்கும்போதும், அதிர்வுகள் தெரியவில்லை. காரில் மெதுவாக செல்லும் போதும், வேகமாகச் செல்லும்போதும், சவுண்ட் சிஸ்டத்தின் ஒலி பொதுவாக மாறாது. ஆனால், இதில் அதிவேகத்தில் செல்லும்போது, அதற்கேற்றவாறு இதில் பொருத்தப்பட்ட சவுண்ட் சிஸ்டம் படிப்படியாக அதிக ஒலியுடன் ஒலிக்கிறது. மேலும், டேஷ் போர்டு பழைய மாடலில் இருந்ததைவிட மிகவும் அகலமாக இருப்பது, பொருட்கள் வைக்க வசதியாக அமைகிறது.

ஆக்‌ஷன் ஹீரோ! அப்டேட்

மைனஸ்

காரின் பின்புறத்தில் டெய்ல் லேம்ப், தனித் தனியாக சிறிதாக இருப்பது, இந்த  பிரமாண்ட காருக்குப் பொருத்தமாக இல்லை. பின்னால் வரும் வாகனங்களுக்கு, முன்னால் செல்வது கார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். மிக முக்கியமான குறை என்றால், கிளட்ச். மிகவும் ஓங்கி மிதிக்க வேண்டியிருக்கிறது. அலாய் வீலுக்கும், வீல் ஆர்ச்சுக்கும் இடையில் அதிக இடைவெளி காணப்படுகிறது. இது காரின் கம்பீரத்தைப் பாதிக்கிறது.

என் தீர்ப்பு

 நடுத்தர மக்களுக்கு விலை சற்று அதிகமாகத் தோன்றினாலும், இதன் சொகுசான பயணமும் கம்பீரமான தோற்றமும் எனக்குப் பிடித்திருக்கின்றன. கொடுக்கும் விலைக்கு அதிக வசதிகள், இந்த காரில் இருப்பதால், இதன் பயணத்தை அனுபவித்து ரசிக்கலாம்.

படங்கள்: சே.சின்னத்துரை

அடுத்த கட்டுரைக்கு