Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

9 லட்சம் ரூபாய்க்குள் ஒரு காரை வாங்க விரும்புகிறேன். ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா ஜெஸ்ட், மாருதி டிசையர், செவர்லே செயில், டொயோட்டா எட்டியோஸ், ஃபோர்டு கிளாஸிக் ஆகிய கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டேன். இதில் ஃபோர்டு கிளாஸிக் டீசல் டைட்டானியம் மாடல் வாங்கலாம் என்பது என் முடிவு. இந்த முடிவு சரியா?

- தேவராஜ், இ-மெயில்

லேட்டஸ்ட் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்த பிறகும், பழைய காரான ஃபோர்டு கிளாஸிக் மாடல் பிடித்திருக்கிறது என்கிற உங்கள் முடிவே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஃபோர்டு கிளாஸிக் மாடல் - ஸ்டீயரிங் ஃபீட்பேக், ஓட்டுதல் தரம், கையாளுமை போன்றவற்றுக்கு பிரபலமானது. ஆனால், அதன் பெயரைப் போலவே மிகவும் பழைய காராகிவிட்டது கிளாஸிக். விரைவில், ஃபோர்டு நிறுவனம் இதன் தயாரிப்பை நிறுத்துவதற்குக்கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஃபோர்டு கிளாஸிக் பரிந்துரைக்கக்கூடிய கார் இல்லை. நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த மற்ற கார்களில்  ஜெஸ்ட், எக்ஸென்ட் ஆகிய கார்கள் நல்ல தயாரிப்புகள். இவைதான் புதிய மாடல்களும்கூட! அதனால் ஜெஸ்ட் அல்லது எக்ஸென்ட் கார்களில் ஒன்றை வாங்கலாம்.

எனக்கு பாதுகாப்பான கார் வேண்டும். பட்ஜெட் முக்கியம் இல்லை. ஐந்து பேர் பயணம் செய்யும் கார்; எங்கள் முதல் கார். வார இறுதி நாட்களில் மட்டும்தான் உபயோகிப்போம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை சொந்த ஊர் செல்வோம் (400 கிமீ). சிறந்த காரைப் பரிந்துரைக்கவும்.

- நாகராஜன், பெங்களூர்

இப்போது சந்தையில் உள்ள பெரும்பாலான கார்களில் விலை உயர்ந்த வேரியன்ட்டில் மட்டும்தான் பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன. ஃபோக்ஸ்வாகன் போலோ, டொயோட்டா எட்டியோஸ் போன்ற கார்களில் மட்டுமே அனைத்து வேரியன்ட்களிலும் காற்றுப் பைகள், ஏபிஎஸ் போன்றவை ஸ்டாண்டர்டாக உள்ளன. 8 லட்சம் ரூபாய்க்குள்  ஹூண்டாய் எலீட் ஐ20 Asta பெட்ரோல் மாடல், அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் டாடா ஜெஸ்ட் பெட்ரோலும் அடங்கும். டாடா ஜெஸ்ட் காரில்தான் ஐந்து பேர் சொகுசாக, அதிக தூரம் வசதியாக பயணிக்க முடியும்.

மோட்டார் கிளினிக்

நான் 2010 ஃபோர்டு ஃபிகோ டீசல் மாடல், டைட்டானியம் வேரியன்ட் காரை வைத்திருக்கிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளில் 45,000 கி.மீ ஓட்டியிருக்கிறேன். கார் நல்ல கண்டிஷனில் இருக்கிறது. இந்த காரை எவ்வளவு விலைக்கு விற்கலாம்? அதேபோல், அடுத்து என்ன காரை வாங்கலாம் என்றும் சொல்லுங்கள். நான் ஆண்டுக்கு 10,000 கி.மீ வரைதான் பயணிப்பேன். இடவசதி அதிகம்கொண்ட, டிக்கியிலும் கொஞ்சம் அதிகப் பொருட்கள் வைக்கக்கூடிய காராக இருக்க வேண்டும். நம்பகத்தன்மை வாய்ந்த, வாங்கிய பின் எந்தப் பிரச்னையும் தராத காராக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். என்னுடைய பட்ஜெட் அதிகபட்சம் 8 லட்சம். என்ன கார் வாங்கலாம்?

- யோகேஸ்வரன், திருப்பூர்

உங்களின் ஃபோர்டு ஃபிகோ டாப் எண்ட் டீசல் மாடல் காரை, அதிகபட்சமாக 2.8-3 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும். நீங்கள் ஆண்டுக்கு 10,000 கி.மீ-தான் பயணிப்பீர்கள் என்பதால், பெட்ரோல் காரே போதுமானது. 8 லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஹோண்டா அமேஸ் பெட்ரோல் மாடல் காரை வாங்கலாம். அதிக இடவசதி என்பதோடு, மிட் சைஸ் செடான் என்பதால், டிக்கியிலும் பொருட்கள் வைக்க இடம் அதிகம். ஹோண்டா என்பதால், தரம் பற்றிப் பிரச்னை இல்லை. இதன் சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸுகளின் விலையும் குறைவு.

நான் ஒரு விவசாயி. முதல் கார் வாங்கும் தேடலில் இருக்கிறேன். மாருதி ஆல்ட்டோதான் என்னுடைய முதல் காராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். ஆனால், ஆல்ட்டோவில் 800, கே10, ஏஎம்டி என மூன்று வகை கார்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆல்ட்டோ எப்படி இருக்கிறது. இதில் ஏதும் பிரச்னை இருப்பதாக புகார்கள் வந்திருக்கின்றனவா?

மதன்குமார், கல்லிடைக் குறிச்சி

மோட்டார் கிளினிக்

உங்கள் ஊர் மற்றும் உங்களின் தொழிலை வைத்துப் பார்க்கும் போது, உங்களின் பயணம் பெரும்பாலும் சிற்றூர், கிராமச் சாலைகளில்தான் இருக்கும் எனக் கணிக்கமுடிகிறது. இதுபோன்ற சாலைகளில் பயணிப்பதற்கு ஆட்டோ-மேட்டிக் கியர்பாக்ஸ் சரியான சாய்ஸ் இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஆல்ட்டோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல், சென்னை போன்ற நகரச் சாலைகளில் ஓட்டுவதற்குத்தான் சரியாக இருக்கும். மலைப் பிரதேசங்கள், பெரிய மேடுகளில் எல்லாம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் ஏறுவதற்குத் திணறும். உங்களுக்கு பெர்ஃபாமென்ஸ் முக்கியம், பவர்ஃபுல் இன்ஜின் கொண்ட கார் வேண்டும் என்றால், ஆல்ட்டோ கே10 வாங்கலாம். இதில் 1000 சிசி இன்ஜின் இருக்கிறது. பவரும் 800 மாடலைவிட 20bhp சக்தி அதிகம். 
கார் வாங்கும்போதே ரீ-சேல் வேல்யூ இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள் என்று சொல்கிறார்கள். ரீ-சேல் வேல்யூ எதை வைத்துக் கணிக்கப்படுகிறது என்று சொன்னால் உதவியாக இருக்கும்?

ரூபன் டி ஃபிராங்க், நாகர்கோயில்

கார் தரமான கார், நல்ல இன்ஜின், பெர்ஃபாமென்ஸ் சூப்பர் என பல ப்ளஸ்கள் இருந்தாலுமே, காரைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பிராண்ட் இமேஜ்தான் ரீ-சேல் வேல்யூவைத் தீர்மானிக்கும் முதல் கருவி. ஃபியட் லீனியா நல்ல கார்தான். ஆனால், அதற்கு ரீ-சேல் வேல்யூ குறைவு. காரணம், ஃபியட் டீலர்ஷிப்புகள் குறைவு; முதலில் டாடாவுடன் கூட்டணி; பிறகு தனியாகத் துவங்கியது; ஸ்பேர் பார்ட்ஸுகள் உடனுக்குடன் கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால், ஃபியட் கார்களுக்கான ரீ-சேல் வேல்யூ குறைந்துவிட்டது. அடுத்ததாக அவுட் டேட் ஆகும் மாடலை நீங்கள் வாங்கும்போது, ஆட்டோமேட்டிக்காக ரீ-சேல் வேல்யூவும் குறைந்துவிடும். ஹூண்டாய் ஆக்ஸென்ட், மாருதி பெலினோ இப்போது ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மார்க்கெட்டில் இருந்து நிறுத்தப்போகும் கார்களை வாங்கும்போது ரீ-சேல் வேல்யூ குறையும். ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட கார்களின் மெயின்டனென்ஸ் செலவுகள் அதிகம் என்பதால், இந்த கார்களை விற்கும்போது நல்ல விலை கிடைக்காது. அதேபோல், ஒரு காரில் டீசல் மாடல் ஹிட்டா, பெட்ரோல் மாடல் ஹிட்டா என்று பார்த்து வாங்க வேண்டும். உதாரணத்துக்கு, ஹூண்டாய் வெர்னாவில் டீசல் மாடலுக்குத்தான் மவுசு அதிகம். பெட்ரோலை வாங்கினால் ரீ-சேல் வேல்யூ குறைவாகத்தான் இருக்கும்.

நான் சூப்பர் பைக் வாங்குவதில் ஆர்வமாக இருக்கிறேன். காசு அதிகம் இல்லை என்பதால், செகண்ட் ஹேண்ட் சூப்பர் பைக்தான் வாங்கப் போகிறேன். ஆனால், செகண்ட் ஹேண்ட் சூப்பர் பைக் மார்க்கெட்டில், முறையாக இறக்குமதி வரி கட்டி வாங்காத பல பைக்குகள் உலவுதாக நண்பர்கள் சொல்கிறார்கள். யூஸ்டு பைக் மார்க்கெட்டில் நல்ல சூப்பர் பைக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மோட்டார் கிளினிக்

சதீஷ் குமார், சென்னை

சூப்பர் பைக்குகளை வாங்கும்போது முதலில் ரிஜிஸ்ட்ரேஷன், இன்ஷூரன்ஸ், இறக்குமதி வரி உள்ளிட்ட பேப்பர்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்ப்பது முதல் முக்கியம். இந்தியாவில் 90 சதவிகித சூப்பர் பைக்குகள் ‘டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடென்ஸ்’ முறையில்தான் இம்போர்ட் செய்யப்படுகின்றன. அதாவது, வெளிநாட்டில் குறிப்பிட்ட காலம் வாழும் இந்தியர்கள் மீண்டும் இந்தியா வரும்போது, அவர்கள் பயன்படுத்திய பைக்குகளையும் இங்கே கொண்டுவரலாம். இந்த வழியாக வந்தால், இறக்குமதி வரி குறைவு. இந்த வழியாக வந்து இந்தியாவில் ரிஜிஸ்டர் செய்யப்படும் பைக்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது விதி. அதனால், டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடன்ஸ் வழியாக வந்த பைக் என்றால், ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் தேதியைக் கவனிப்பது அவசியம். பொதுவாக, சூப்பர் பைக்குகளைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் பெயரில் அந்த பைக்கை ரிஜிஸ்டர் செய்வது இல்லை. அதனால், உங்களிடம் பைக்கை விற்பவரின் பெயரில் பைக் இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லை என்றால், அவர் பெயருக்கு மாற்றித் தரச் சொல்லிவிட்டு, பிறகு நீங்கள் வாங்குங்கள். காரணம், சில நேரங்களில் உண்மையான உரிமையாளர் வேறு யாராவதாகக்கூட இருக்கக்கூடும்.

டிக் டாக்ஸ்:

1. ஃபோர்டு கிளாஸிக் மாடல் -  ஓட்டுதல் தரம், கையாளுமை போன்றவற்றுக்கு பிரபலமானது.

2. டாடா ஜெஸ்ட் காரில்தான் 5 பேர் சொகுசாக, அதிக தூரம் வசதியாகப் பயணிக்க முடியும்.

3. பொதுவாக சூப்பர் பைக்குகளைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் பெயரில் அந்த பைக்கை ரிஜிஸ்டர் செய்வதில்லை.

4. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல், மலை ஏறுவதற்குத் திணறும்.