Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:

 இரண்டு லட்ச ரூபாய்க்குள் சூப்பர் பைக் வாங்க முடிவெடுத்து இருக்கிறேன். பின்னால் அமர்ந்து செல்ல வசதியாக இருக்க வேண்டும். வார இறுதி நாட்களில் சின்ன டூர் சென்றுவர ஏதுவாக இருக்க வேண்டும். எந்த பைக் வாங்கலாம்? CBR 250 R வாங்கலாமா?

- சக்திவேல், ஈரோடு

 குறைந்த பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் என்றால், ஹோண்டா CBR 250R நன்றாக இருக்கும். இதன் 249 சிசி இன்ஜின், 26 bhp சக்தியை அளிக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸின் ஆறாவது கியர், நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் விலை 2 லட்சம் ரூபாயைத் தாண்டிவிடும். இதே செக்மென்டில் KTM 200 டியூக், RC 200 பைக்குகளை வாங்கலாம். பார்க்க ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற லுக்குடன் இருக்கும் இவை, நெடுஞ்சாலையில் ஓட்ட நன்றாக இருக்கும். விலையும் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். ஆனால், பில்லியனில் அமர்ந்து வருபவருக்கு வசதியாக இருக்காது.

 மாதம் இருமுறை நெடுஞ்சாலையில் சுமார் 150 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பயணம் இலகுவாக அமைய வேண்டும்; ஸ்மூத்தான ஓட்டுதல் இருக்க வேண்டும். 1.5 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்; மைலேஜ் கண்டிப்பாக லிட்டருக்கு 40 கி.மீ-க்கு அதிகமாக இருக்க வேண்டும். முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படுத்தாத பைக்காகவும் இருக்க வேண்டும். எந்த பைக் வாங்கலாம்?

 - ஆதவா பிரகாஷ், ஃபேஸ்புக்

சொகுசான ஓட்டுதல் தரம் என்றால், க்ரூஸர் பைக்குகள்தான். இதில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு, பஜாஜ் அவென்ஜர் போன்ற பைக்குகள், தொலைதூரப் பயணங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், இவற்றின் மைலேஜ் லிட்டருக்கு 40 கி.மீ-யைவிட குறைவாகவே இருக்கும். மைலேஜ் அதிகமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்றால், ஹோண்டாவின் புதிய சிபி யூனிகார்ன் 160 வாங்கலாம். ஸ்போர்ட்டியாக இல்லாமல் சாதாரணமான சீட்டிங் பொசிஷனைக் கொண்டிருப்பதால், தொலைதூரப் பயணங்களில் வசதியாக இருக்கும்.

மோட்டார் கிளினிக்

 15 லட்சம் ரூபாய்க்குள் ஒரு ஆட்டோமேட்டிக் செடான் காரை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். வென்ட்டோ, சிட்டி, வெர்னா ஆகிய கார்களில் ஒன்றை வாங்க வேண்டும். இவற்றைத் தவிர, டொயோட்டா கரோலா ஆல்டிஸ் ஆட்டோமேட்டிக் எப்படி? தற்போது போலோ வைத்துள்ளேன்!

- சிவராம் ஆதித்தன், ஃபேஸ்புக்

பிரீமியம் செடான் செக்மென்ட்டில், சிறந்த ஆட்டோமேட்டிக் செடான் கார் என்றால், அது ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ TSI மாடல்தான். இதன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினும், DSG கியர்பாக்ஸும் செம சூப்பரான ஓட்டுதல் அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால், பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். ஹோண்டா சிட்டி பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரில் இருக்கும் CVT கியர்பாக்ஸ், மந்தமாக இயங்குவதால், ஓட்ட நன்றாக இருக்காது. ஹூண்டாய் வெர்னா பெட்ரோல் மாடலில் இருக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் சுமார்தான். டீசல் ஆட்டோமேட்டிக்தான் வேண்டும் என்றால், ஹூண்டாய் வெர்னா டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் மட்டும்தான் இந்த செக்மென்ட்டில் இருக்கிறது.  எனவே, பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார் என்றால், வென்ட்டோ TSI; டீசல் ஆட்டோமேட்டிக் என்றால், வெர்னா டீசல் வாங்கலாம்.

மோட்டார் கிளினிக்

 நான் அடிக்கடி மதுரையில் இருந்து ஆந்திரா வரை பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைக்கு ஏற்ற கார் ஒன்றை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். ரெனோ டஸ்ட்டர், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் என் சாய்ஸ். இவற்றில் எது பெஸ்ட்?

- மனுநீதி ராஜன், ஃபேஸ்புக்

இந்த இரண்டில் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற கார் டஸ்ட்டர்தான். ஸ்டேபிளான ஓட்டுதல் தரம், நம்பகமான கையாளுமை என நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற காராக இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் பழைய கார் போல, குலுங்கல் இல்லாத ஓட்டுதல் தரம் இருக்கிறது என்றாலும், டஸ்ட்டரை வீழ்த்தவில்லை. ரெனோ டஸ்ட்டர்தான் உங்களுக்கு ஏற்ற கார். 

மோட்டார் கிளினிக்


 பிரீமியம் ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். அலுவலகம், பெர்சனல் வேலைகளுக்கு இந்த ஸ்கூட்டரையே பயன்படுத்துவேன். இது சம்பந்தமாகத் தேடும்போது, ஹோண்டா PCX ஸ்கூட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்த ஸ்கூட்டர் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? நல்ல ஸ்கூட்டரா? தமிழ்நாட்டில் ஆன் ரோடு விலை எவ்வளவு இருக்கும்?

- கார்த்திகேயன், சேலம்
 
2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா, PCX ஸ்கூட்டரைக் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த ஆண்டு இந்தியாவில் 15 இரு சக்கர வாகனங்கள் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளது ஹோண்டா. இதில், 8 மாடல்கள் ஃபேஸ்லிஃப்ட். மீதம் உள்ள 7 தயாரிப்புகளும் புத்தம் புதியவை. இதில் ஒன்றாக PCX 150 ஸ்கூட்டர் இருக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக இந்த ஸ்கூட்டர் ஒன்றை, கடந்த ஆண்டு ஆகஸ்டு 25-ம் தேதி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்துள்ளது ஹோண்டா. இந்த ஸ்கூட்டரில் 153 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் உள்ளது. 13.4 bhp சக்தியையும், 1.43 kgm டார்க்கையும் அளிக்கிறது இந்த இன்ஜின். 150சிசி ஸ்கூட்டர் என்பதால், மைலேஜ் பற்றி இப்போது எதுவும் கணிக்க முடியாது. சுமார் 80,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வரக்கூடிய இந்த ஸ்கூட்டருக்குப் போட்டியாக, ஹீரோ நிறுவனமும் Zir 150 என்ற ஸ்கூட்டரைத் தயார் செய்துவருகிறது.

 ஒரு நல்ல டீசல் காம்பேக்ட் செடான் காரை வாங்க விரும்புகிறேன். பெட்ரோல் விலை குறைந்துகொண்டே வந்தாலும், பயன்பாடு காரணமாக டீசல் கார்தான் எனக்குச் சரியாக இருக்கும். ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட், ஹூண்டாய் எக்ஸென்ட் போன்ற காம்பேக்ட் செடான்களில் எது பெஸ்ட்? ஓட்ட ஜாலியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டிரைவர்தான் எப்போதும் காரை ஓட்டப் போகிறார். ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் சென்றுவர, நிம்மதியான ஒரு கார் இருந்தால் போதும்.

- வி.ஸ்டான்லி, நாகர்கோயில்

ஹோண்டா அமேஸ் டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் நன்றாக இருந்தாலும், இன்ஜின் சத்தம் உள்ளே அதிகம் கேட்பதால், நிம்மதியாகப் பயணிக்க முடியாது. அமேஸின் இன்டீரியரும் சுமாரான டிஸைனில்தான் இருக்கும். ஹூண்டாய் எக்ஸென்ட்டின் இன்டீரியரில் தரமான பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவையான வசதிகளும் இருக்கின்றன. ஆனால், மூன்று பேர் பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பது சிரமம்தான். டாடா ஜெஸ்ட்டின் இன்டீரியரில் பிளாஸ்டிக் தரம் ஹூண்டாய் அளவுக்குச் சிறப்பாக இல்லையென்றாலும், Harman இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகளைத் தந்து, உயர்தரமான காரில் செல்லும் உணர்வை அளிக்கிறது. இதில், பிரபலமான 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் இருக்கிறது என்பதால், நம்பகத்தன்மையில் குறை இல்லை. 75 hp, 90 hp என இரண்டு டியூனிங்குகளில் கிடைக்கிறது ஜெஸ்ட் டீசல். 90 hp மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனும் இருக்கிறது. எனவே, டாடா ஜெஸ்ட் டீசல்தான் உங்களுக்கு ஏற்ற காம்பேக்ட் செடான்.