Published:Updated:

மோட்டார் நியூஸ்

அப் - டு - டேட் செய்திகளுக்கு...

 ஆந்திராவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 592 ஏக்கர் நிலம்!


சித்தூர் அருகே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 592 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது, ஆந்திரப் பிரதேச அரசு. இந்த நிலத்தில் 1,600 கோடி முதலீட்டில் புதிய இருசக்கர வாகனத் தொழிற்சாலையை அமைக்கிறது ஹீரோ. இந்தத் தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியாவில் மீண்டும் டுகாட்டி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டுகாட்டி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் மூலம், இப்போது இந்தியாவுக்குள் மீண்டும் விற்பனையைத் துவக்கியுள்ளது டுகாட்டி. டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய 3 நகரங்களில் இப்போது அதிகாரப்பூர்வ டுகாட்டி டீலர்ஷிப்புகள் திறக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் விரைவில் ஷோரூம் திறக்கப்பட இருக்கிறது. டயாவெல், ஹைப்பர்மோட்டார்ட், பனிகாலே, மான்ஸ்டர் ஆகிய டுகாட்டி பைக்குகள், இப்போது இந்தியாவில் விற்பனையில் உள்ளன. சமீபத்தில் அறிமுகமான ஸ்க்ராம்ப்ளர் பைக், விரைவில் இங்கு விற்பனைக்கு வருகிறதாம்.

மோட்டார் நியூஸ்

ஸ்க்ராம்ப்ளர், சுமார் 6 லட்சத்தில் இருந்து 7.5 லட்ச ரூபாய் வரை விலை கொண்டிருக்கும். மான்ஸ்டர் பைக்குகள் சுமார் 7 முதல் 26 லட்ச ரூபாய் வரை விலை இருக்கும். ஹைப்பர்மோட்டார்ட் பைக்குகளின் விலை, 10 லட்சத்தில் இருந்து துவங்கும். க்ரூஸர் பைக்கான டயாவெல், சுமார் 13.5 லட்ச ரூபாயில் இருந்து 37 லட்சம் ரூபாய் வரையும், மல்ட்டிஸ்ட்ராடாவின் விலை 14 முதல் 20 லட்சம் வரையும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 பாரத் பென்ஸ் சாதனை!

மோட்டார் நியூஸ்

செப்டம்பர் 2012-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த பாரத் பென்ஸ் டிரக்குகளின் விற்பனை, 20,000 எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. ஹெவி டியூட்டி செக்மென்ட்டிலும் 7 சதவிகிதம் மார்க்கெட் ஷேரைப் பிடித்துள்ளது பாரத் பென்ஸ். 2015-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், 72 சதவிகிதம் விற்பனை உயர்ந்துள்ளதாக பாரத் பென்ஸ் நிறுவனம் கூறுகிறது.

 வேகன்-ஆரில் ஐடிலிங்-ஸ்டாப் டெக்னாலஜி!

மோட்டார் நியூஸ்

தன்னுடைய கார்கள் அனைத்துமே மைலேஜில் நம்பர் ஒன்-ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது மாருதி. இதில், மாருதி போட்டிருக்கும் புதிய ஸ்கெட்ச், ஐடிலிங்-ஸ்டாப் டெக்னாலஜி. டிராஃபிக் சிக்னல்களில் கார் நிற்கும்போது, இன்ஜினை அணைத்து எரிபொருளை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பம்தான் ஐடிலிங் ஸ்டாப். இது, விலை உயர்ந்த கார்களில் இருக்கும் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம்தான். இங்கே இன்ஜின் அணையும்போது, ஏ.சி-யும் ஆஃப் ஆகிவிடும். எனவே, எக்கோ கூல் எனும் தொழில்நுட்பம் மூலம் ஏ.சி ஆஃப் ஆனாலும், உள்ளே குளிர் காற்றை அனுப்பும். இதனால், பயணிகளுக்கு அசௌகரியமாக இருக்காது. ஐடிலிங் ஸ்டாப் தொழில்நுட்பம் மூலம் 2 முதல் 3 சதவிகிதம் வரை எரிபொருளைச் சேமிக்கலாமாம். விரைவில் வேகன் - ஆர் காரில் இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி.

 டெஸ்டிங்கில் ஃபோர்டு புதிய எண்டேவர்!

மோட்டார் நியூஸ்

தீபாவளி சமயம் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய ஃபோர்டு எண்டேவர் எஸ்யுவி. அச்சரப்பாக்கம் அருகே டெஸ்ட் செய்யப்பட்டு வந்த புதிய ஃபோர்டு எண்டேவர் கார்களைப் படம் எடுத்துள்ளார், திண்டிவனத்தைச் சேர்ந்த மோட்டார்  விகடன் வாசகர் மணிகண்டன் சுப்பராயலு. 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல், 3.2 லிட்டர் 5 சிலிண்டர் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய எண்டேவர். மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் உண்டு. தாய்லாந்தில் இருந்து கிட்கள் இறக்குமதி செய்து, CKD முறையில் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது புதிய எண்டேவர்.

 மாருதியின் விட்டாரா Brezza

மோட்டார் நியூஸ்

விரைவில் மாருதி சுஸூகி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவிருக்கும் புதிய கார், ‘விட்டாரா Brezza’ எனச் சொல்லப்படுகிறது. இத்தனை நாட்களாக ‘YBA’ என்று அழைக்கப்பட்டு வந்த கார்தான் இந்த விட்டாரா Brezza எஸ்யுவி. ஃபியட் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 5 வேரியன்ட்டுகளில் விற்பனைக்கு வரவிருக்கிறதாம்.
2016-ம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் வரும் இந்த எஸ்யுவியின் விலை, 7 லட்சம் முதல் 11 லட்சம் வரை இருக்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு.

 இந்தியாவில் பெனெல்லி!

மோட்டார் நியூஸ்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகமானது
DSK-பெனெல்லி. இன்று, 2.83 லட்சம் முதல் 11.81 லட்சம் ரூபாய் வரை விலைகொண்ட 5 பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது பெனெல்லி. இந்த பைக்குகள் CKD முறையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். புனே தவிர, சென்னை, பெங்களூரூ, மும்பை, ஹைதராபாத், டெல்லி, அஹமதாபாத், கொல்கத்தா, கோவா ஆகிய நகரங்களில் பிரத்யேக டீலர்ஷிப்கள் மூலம் DSK-பெனெல்லி பைக்குகள் விற்பனை செய்யப்படும். சென்னையில் பெனெல்லி ஷோரூம் அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ளது.

 மத்திய பட்ஜெட் 2015: ஆட்டோமொபைல் துறை

மத்திய பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறை எதிர்பார்த்த அளவு சாதமாக அமையவில்லை. கடந்த ஆட்சியில் குறைக்கப்பட்ட உற்பத்தி வரியை, நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்தது. அதனால், 2015-ம் ஆண்டு முதல் கார்களின் விலைகள் உயர்ந்தன. பட்ஜெட்டில் மீண்டும் வரிச்சலுகை அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லை. GST (Goods and Service Tax) வரி, 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன. அனைத்து மாநிலங்களிலும் ஒரே விதமான வரி வசூலிக்கப்படும் என்பதால், கார் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை அதிகம் எதிர்பார்த்திருந்தன. வருங்காலத்துக்கு முக்கியமான எலெக்ட்ரிக் வாகன ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக, வெறும் 75 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

2015 மத்திய பட்ஜெட், ஆட்டோமொபைல் துறைக்குப் பெரிய அளவில் பயன் இல்லை என்பதுதான் இந்தத் துறையினரின் பரவலான கருத்து.

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்