Published:Updated:

பென்ஸின் மினி எஸ்யுவி!

BENZ GLA 200சார்லஸ், படங்கள்: பத்ரி

சொகுசு கார்களிலும் இப்போது எஸ்யுவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கிறது. ஆடி, பிஎம்டபிள்யூ, வால்வோ என அத்தனை சொகுசு கார் தயாரிப்பாளர்களிடமும் 50 லட்சம் ரூபாய்க்குள்ளான எஸ்யுவி தயாராக இருக்கும் நிலையில், பென்ஸின் எஸ்யுவி கார்கள் 65 லட்ச ரூபாயில் இருந்துதான் துவங்கின. ஆடி Q3, பிஎம்டபிள்யூ X1, வால்வோ XC90 என பட்ஜெட் எஸ்யுவி மார்க்கெட்டில் போட்டியாளர்கள் எல்லாம் பின்னியெடுக்க, அவர்களுடன் போட்டி போட லேட்டாக பென்ஸ் கொண்டுவந்திருக்கும் கார்... GLA 200.

ஜெர்மனியில் GL என்பது கலான்டன் வேகன் என்பதைக் குறிக்கும். ஆஃப் ரோடு வாகனம் என்பதுதான் இதன் அர்த்தம். ‘A’ கிளாஸ் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார் என்பதால்,  GLA என இதற்குப் பெயர் சூட்டியிருக்கிறது பென்ஸ்.

பென்ஸின் மினி எஸ்யுவி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிஸைன்

மிரட்டலான முரட்டு எஸ்யுவி/கிராஸ்ஓவர் காராக இல்லாமல், பார்க்க அழகாகவும், அதே சமயம் எஸ்யுவிக்கான கேரக்டர்களுடனும் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது பென்ஸ் GLA. உண்மையில் GLA காரை எஸ்யுவி என்பதைவிட, க்ராஸ்ஓவர் என்றுதான் சொல்ல வேண்டும். ஐ20 பிளாட்ஃபார்மில் இருந்து ஐ20 ஆக்டிவ் உருவானதுபோல, ஹேட்ச்பேக் காரான A கிளாஸில் இருந்து உருவாகியிருக்கும் கார் GLA. பெரிய வீல் ஆர்ச், முன்பக்க பானெட்டுக்குக் கீழே இடம்பிடித்திருக்கும் பிளாஸ்டிக் மேலுறை (கிளாடிங்), காரின் மேற்கூரையில் ரூஃப் ரெயில் என டிஸைன் மாற்றங்கள் பளிச் எனத் தெரிகின்றன. இதை எல்லாம்விட கிராஸ்ஓவர்/எஸ்யுவி போன்ற தோற்றத்தைத் தருவது தாராளமான 183 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும், பிரம்மாண்டமான 18 இன்ச் வீல்களும்தான்.

உள்ளே

A கிளாஸின் உள்பக்கத்திலும், GLA காரின் உள்பக்கத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை. அதே டேஷ்போர்டு, அதே ஏ.சி வென்ட்ஸ், அதே டிஸைன் என டாப் கிளாஸ் தரத்துடன் இருக்கிறது. சீட் உயரமாக இருப்பதால், டிரைவர் இருக்கையில் இருந்து முழுச் சாலையையும் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. முன்பக்க இடவசதியும் தாராளமாக இருப்பதால், மிகவும் சொகுசாக உட்கார்ந்து பயணிக்க முடிகிறது. ஆனால், பின் இருக்கைகளில்தான் இடவசதி குறைவு. மூன்று பேர் வசதியாக உட்கார முடியாது. பின் இருக்கைகளில் இடவசதியைக் குறைத்துவிட்டு, டிக்கியில் அதிக இடத்தைக் கொடுத்திருக்கிறது பென்ஸ். டிக்கியில் 424 லிட்டர் கொள்ளளவுகொண்ட இடம் இருக்கிறது. ஆனால், இங்கேயும் ஒரு சொதப்பல். ஸ்பேர் வீல் டிக்கிக்கு அடியில் இல்லாமல் மேலேயே இருப்பதால், வீல் - பாதி இடத்தை அடைத்துக்கொள்கிறது.

பென்ஸின் மினி எஸ்யுவி!

நாம் டெஸ்ட் செய்திருப்பது GLA பெட்ரோல் மாடல். பேனரமிக் சன்ரூஃப், மிகச் சிறந்த ஹர்மான் கார்டன் மியூஸிக் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டர் ஆகியவை உள்ளன. எப்போதுமே பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் பென்ஸ், இதில் காரைச் சுற்றிலும் 7 காற்றுப் பைகள், ஆன்ட்டி ஸ்கிட் ரெகுலேஷன், ஏபிஎஸ் பிரேக் மற்றும் பிரேக் அசிஸ்ட் சிஸ்டம் என அத்தனை பாதுகாப்பு வசதிகளையும் சேர்த்துள்ளது.


ஆனால், 45 லட்சம் ரூபாய் காரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி இல்லை என்பதோடு, பின்பக்க ஏ.சி வென்ட்டும் இல்லை.

இன்ஜின்!

2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல்  இன்ஜின், 181bhp சக்தியைக் கொண்டிருப்பதால், பெர்ஃபாமென்ஸில் தெறிக்கவிடுகிறது. 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8 விநாடிகளில் கடந்து விடுவதோடு, 0-160 கி.மீ வேகத்தை 21.41 விநாடிகளில் தொட்டுவிடுகிறது GLA.

நகருக்குள் ஓட்டக்கூடிய  கிராஸ்ஓவர்/எஸ்யுவி என்கிற பிராண்ட் ஐடென்ட்டிக்கு ஏற்ப, பெர்ஃபாமென்ஸில் சிறந்த காராக இருக்கிறது GLA. டர்போ லேக் இல்லை என்பதால், நகர டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டுவது ஈஸியாகவே இருக்கிறது. 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், வேகமாகவே இயங்குகிறது. 2 வீல் டிரைவ் சிஸ்டம்தான் என்றாலும், சாலையே இல்லாத காட்டுப் பாதைகளிலும் கொஞ்ச தூரம் பயணிக்கலாம்.
பெரிய காரை ஓட்டுகிறோம் என்கிற உணர்வைத் தராமல், சின்ன ஹேட்ச்பேக் காரை ஓட்டுவது போன்ற உணர்வைத் தந்து, கையாளுமையில் வெற்றிபெறுகிறது பென்ஸ் GLA. வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டவும், டிராஃபிக் நெருக்கடிகளில் புகுந்து புறப்படவும் ஸ்டீயரிங் திறம்படச் செயல்படுகிறது. ஆனால், ஓட்டுதல் தரத்தில் சொதப்புகிறது GLA. பெரிய மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, ஆட்டமும் குலுங்கலும் அதிகம்.

GLA காரை வாங்கலாமா?

பிஎம்டபிள்யூ X1, ஆடி Q3 கார்களுடன் நேரடியாக மோதுகிறது GLA200. பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய கார்கள் டீசல் இன்ஜினை மட்டுமே கொண்டிருக்க, இதில் மட்டும்தான் பெட்ரோல்/டீசல் என இரண்டு ஆப்ஷனும் உள்ளன. GLA பெட்ரோல் மாடலின் சென்னை ஆன்ரோடு விலை 44.40 லட்ச ரூபாய். டீசல் இன்ஜின் மாடலே நகருக்குள் லிட்டருக்கு 11 கி.மீ-தான் மைலேஜ் கொடுக்கும் நிலையில், பெட்ரோல் மாடலின் மைலேஜ் கேட்கவே வேண்டாம்.  டீசல் கார்கள் எனக்கு வேண்டாம்; பெட்ரோல் சொகுசு கார்கள் மட்டும்தான் ஓட்டுவேன் என்பவர்களுக்கான சாய்ஸ்தான், பென்ஸ் GLA.