Published:Updated:

ஹாட் ஆட்டோமேட்டிக்!

MITSUBHISHI PAJERO SPORT ATசார்லஸ், சுரேன், படங்கள்: பத்ரி

மிட்சுபிஷி என்றால், நமக்கு நினைவுக்கு வரும் கார்கள் லான்ஸர் மற்றும் பஜேரோ! இந்துஸ்தான் மோட்டார்ஸூடன் கூட்டணி அமைத்து, இந்தியாவில் தனது இன்னிங்ஸைத் துவக்கிய மிட்சுபிஷி, 1998-ல் சென்னையில் தொழிற்சாலை துவங்கியது. லான்ஸர், லான்ஸர் சிடியா, பஜேரோ, மான்ட்டேரோ, அவுட்லேண்டர் ஆகிய கார்கள், சென்னை தொழிற்சாலையில் தயாரித்து/அசெம்பிள் செய்து விற்பனை செய்துவந்தது.


ஒரு கட்டத்தில், லான்ஸர் இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட காராக இருந்தது. பஜேரோ, இந்தியாவின் சிறந்த எஸ்யுவி எனப் பெயர் பெற்றது.

மிட்சுபிஷி கார்களுக்கு டிமாண்ட் இருந்தும், இந்திய மார்க்கெட்டைக் கண்டும் காணாதபடி  விட்டுவிட்டது மிட்சுபிஷி. இதன் விளைவு, தற்போது மிட்சுபிஷி இந்தியாவில் விற்பனை செய்துவரும் ஒரே கார், பஜேரோ மட்டுமே! கிட்டத்தட்ட மார்க்கெட்டை இழந்துவிட்ட மிட்சுபிஷி, புது உற்சாகத்துடன் மீண்டும் களம் இறங்கி இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மிட்சுபிஷியின் கூட்டாளியான இந்துஸ்தான் மோட்டார்ஸ், அம்பாஸடர் தயாரிப்பை நிறுத்திவிட்டதால், முழுக் கவனமும் இனி மிட்சுபிஷி மீதுதான் என உறுதியளித்திருக்கிறது. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் அவுட்லேண்டர்,  மான்ட்டேரோ கார்களை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. மேலும், மிக முக்கிய காராக டொயோட்டா இனோவாவுக்குப் போட்டியாக, டெலிகா எனும் எம்பிவி காரை அடுத்த ஆண்டுக்குள் விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது மிட்சுபிஷி. இதற்கிடையே, ஃபார்ச்சூனர் ஆட்டோமேட்டிக் மாடலுக்குப் போட்டியாக, பஜேரோ ஸ்போர்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பொருத்தி வெளியிட்டிருக்கிறது மிட்சுபிஷி.

ஹாட் ஆட்டோமேட்டிக்!

டிஸைன்

பஜேரோ ஸ்போர்ட், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கும் ஆட்டோமேட்டிக் மாடலுக்கும் டிஸைனில் சின்னச் சின்ன வித்தியாசங்கள் மட்டுமே! காரின் வெளிப்பக்கத்தில் புதிய டிஸைன் பம்ப்பர்களுடன் நீளவாக்கில் க்ரோம் கிரில் மாற்றப்பட்டுள்ளதோடு, பனி விளக்குகளும் க்ரோம் குடுவைக்குள் புகுந்திருக்கின்றன. பக்கவாட்டுக் கண்ணாடிகளிலேயே இண்டிகேட்டர் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதுதான் மேனுவல்/ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கு உள்ள வெளிப்பக்க டிஸைன் வித்தியாசம்.

தோற்றத்தில் மிரட்டலாகவும் பிரம்மாண்டமாவும் இருக்கிறது பஜேரோ ஸ்போர்ட். இது 2,800 மிமீ வீல்பேஸ்கொண்டது. டொயோட்டா ஃபார்ச்சூனரைவிட 50 மிமீ அதிகம். ஹுண்டாய் சான்ட்டா ஃபீ காரைவிட 100 மிமீ அதிகம். அதனால், மற்ற கார்கள் ஒதுங்கி வழிவிடும் வகையில், மிரட்டலாக இருக்கிறது பஜேரோ ஸ்போர்ட்.

உள்ளே...

பஜேரோ ஸ்போர்ட் மேனுவல் மாடலில் இல்லாத சில முக்கியமான அம்சங்களை, ஆட்டோமேட்டிக்கில் சேர்த்திருக்கிறார்கள். ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவுடன் வாகனத்தின் பல முக்கிய டேட்டாக்களை தரும் எம்ஐடி (MID) டச் ஸ்க்ரீனும் இடம்பிடித்துள்ளது. ரிவர்ஸ் கேமராவின் ஆங்கிள் மிக அகலமாகவும் துல்லியமாகவும் இருப்பதால், ரிவர்ஸ் எடுப்பது வசதியாக இருக்கிறது. டேஷ்போர்டைப் பொறுத்தவரை, மிகவும் தரமாக இருக்கிறது. தண்ணீர் பாட்டில், பேப்பர், பொருட்களை வைக்க காருக்குள் அதிக இடவசதி உண்டு. டிரைவர் சீட் பொசிஷன் உயரமாக இருப்பதால், சாலையை முழுவதுமாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. எலெக்ட்ரிக் சீட் என்பதால், பட்டன்கள் மூலம் சீட்டுகளை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

ஹாட் ஆட்டோமேட்டிக்!

இடவசதியைப் பொறுத்தவரை, முன் பக்க இரண்டு வரிசை இருக்கைகளிலும் இடம் ஏராளம். கால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்து, வசதியாகப் பயணிக்கலாம். இரண்டாவது இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியும். ஆனால், கடைசி வரிசை இருக்கைகளில் இடவசதி ஓகேவாக இருந்தாலும், உள்ளே போய் உட்கார எக்சர்ஸைஸ் செய்ய வேண்டியிருக்கிறது. மேலும், இருக்கைகள் உயரமாக இருப்பதால், முட்டியை மேல்நோக்கி வைத்துக்கொண்டு உட்கார வேண்டும். ஆனால், பின்பக்கப் பயணிகள் ரிலாக்ஸ் செய்ய, மூன்றாவது வரிசைக்குத் தனி ஏ.சி வென்ட் இருப்பதால், சில்லாக்ஸ்!

இன்ஜின்

பஜேரோ மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் இருக்கும், அதே 2.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல்

ஹாட் ஆட்டோமேட்டிக்!

இன்ஜின்தான் இதிலும் இடம்பிடித்திருக்கிறது. இது, மேனுவலைப் போலவே அதிகபட்சமாக 176hp சக்தியை வெளிப்படுத்துகிறது. சக்தியில் மாற்றம் இல்லை. ஆனால், டார்க் திறன் குறைந்துள்ளது. மேனுவல் மாடல் 40kgm டார்க் அளிக்க, ஆட்டோமேட்டிக் அதிகபட்சமாக 35.69kgm டார்க்கை அளிக்கிறது. டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் அதிக எடைகொண்ட பெரிய கார் என்பதால், டர்போ லேக் கொஞ்சம் அதிகம். 2,000 ஆர்பிஎம் வரை மந்தமாக இருக்கும் இன்ஜின், அதன் பிறகுதான் சீற ஆரம்பிக்கிறது.

நெடுஞ்சாலையில் வேகம் பிடித்துவிட்டால், பறக்கிறது. ஸ்டெபிளிட்டி மிகச் சிறப்பாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் 120 - 140 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்ய முடிகிறது. 140 கி.மீ வேகத்துக்கு மேல், இன்ஜின் அதிகப்படியான சத்தத்தை எழுப்புகிறது.

பஜேரோவின் சஸ்பென்ஷன் சிறப்பாக இருப்பதால், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது காருக்குள் அலுங்கல் குலுங்கல்கள் அதிகம் இல்லை. ஆட்டோமேட்டிக் மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை. இதனால், சீரியஸ் ஆஃப் ரோடு சாகசங்களை ஆட்டோமேட்டிக் மாடலில் செய்ய முடியாது. ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக் சிஸ்டம் இருப்பதால், பிரேக் பிடித்தவுடன் எந்த ஆட்டமும் அதிர்வும் இல்லாமல் நிற்கிறது பஜேரோ ஸ்போர்ட்.
மைலேஜ்

பஜேரோ ஸ்போர்ட் மேனுவல், லிட்டருக்கு 12.8 கி.மீ மைலேஜ் தந்தது. ஆட்டோமேட்டிக் மாடலின் மைலேஜ், இதைவிட சற்றே குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹாட் ஆட்டோமேட்டிக்!

பஜேரோ ஸ்போர்ட், மிகச் சிறந்த எஸ்யுவி. மிரட்டும் தோற்றம், பவர்ஃபுல் இன்ஜின், அதிக இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் என பர்ஃபெக்ட் எஸ்யுவி பஜேரோ ஸ்போர்ட்.  ஆனால், ஃபார்ச்சூனர் ஆட்டோமேட்டிக்கைவிட 3 லட்சம் ரூபாய் விலை அதிகம். பட்ஜெட் பிரச்னை இல்லை; மிகச் சிறந்த எஸ்யுவி வேண்டும் என்றால், பஜேரோ ஸ்போர்ட் நல்ல சாய்ஸ்!