Published:Updated:

வெற்றியுடன் துவக்கிய ஹாமில்ட்டன் !

FORMULA - 1சார்லஸ்

துவங்கிவிட்டது திருவிழா. 2015-ம் ஆண்டுக்கான ஃபார்முலா-1 சீஸன் ஆஸ்திரேலியாவில் துவங்க, வெற்றியுடன் கணக்கைத் துவக்கியிருக்கிறார், நடப்பு சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்.

பழைய அணிகளில் புதிய வீரர்கள் என இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமான கூட்டணியோடு துவங்கியது ஃபார்முலா-1. கடந்த ஆண்டு வரை ரெட்புல் அணியில் இருந்த முன்னாள் சாம்பியன் செபாஸ்ட்டியன் வெட்டல், இந்த ஆண்டு ஃபெராரி அணிக்காகக் களம் இறங்க, மெக்லாரன் அணிக்காகக் களம் இறங்க வேண்டிய முன்னாள் சாம்பியன் ஃபெர்னாண்டோ அலான்சோ மிஸ்ஸிங். காரணம், பிப்ரவரி 22-ம் தேதி, பார்சிலோனா ரேஸ் மைதானத்தில் மெக்லாரன் ஃபார்முலா-1 காரை டெஸ்ட் செய்துகொண்டிருந்தார் அலான்சோ. அப்போது காரை வேகமாக ஓட்டி டெஸ்ட் செய்தபோது, கார் கட்டுப்பாட்டை இழக்க, மிக மோசமான விபத்தில் சிக்கினார். மூளையில் அடிபட்டதால் நினைவுகளை இழந்த அலான்சோவுக்கு, 10 வயதுக்கு மேல் நடந்தது எதுவும் நினைவில் இல்லை. மார்ச் 3 வரை மருத்துவமனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பி சகஜநிலைக்குத் திரும்பினார் அலான்சோ. இருப்பினும், ஆஸ்திரேலிய ரேஸை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அலான்சோ கலந்துகொள்ளவில்லை.

வெற்றியுடன் துவக்கிய ஹாமில்ட்டன் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃபார்முலா-1 - ஆஸ்திரேலியா

மார்ச் 15 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் முதல் ரேஸ் நடைபெற்றது. மெல்போர்னில் உள்ள ஆல்பர்ட் பார்க் மைதானத்தைச் சுற்றி, பொதுச்சாலைகளில் நடத்தப்படும் ஸ்ட்ரீட் ரேஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மெர்சிடீஸ் அணி வீரர்கள் லூயிஸ் ஹாமி ல்ட்டன், நிக்கோ ராஸ்பெர்க் இருவரும், ரேஸை முதல் வரிசையில் இருந்து துவக்கினார்கள்.

ஆரம்பம் முதலே லூயிஸ் ஹாமில்ட்டன் ஆதிக்கம் செலுத்தினார். மெர்சிடீஸ் பென்ஸ் கார்களுடன் களமிறங்கிய லூயிஸ் ஹாமில்ட்டனுக்கும், நிக்கோ ராஸ்பெர்க்குக்கும் இடையேதான் போட்டி. ஃபெராரியின் செபாஸ்ட்டியன் வெட்டலால், இவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. மொத்தம் 18 பேர் களமிறங்கிய இந்த ரேஸ் போட்டியில், 11 பேர் இறுதி வரை ரேஸ் ஓட்டினர். இதில், முதல் ஆறு வீரர்களைத் தவிர, மற்ற ஐந்து வீரர்களும் மிகவும் பின்தங்கி அதாவது, 1 லேப் வித்தியாசத்தில் ரேஸ் ஓட்டிக்கொண்டிருந்தனர். மொத்தம் 58 லேப்புகள்கொண்ட இந்த ரேஸின் வெற்றிக்கோட்டை, லூயிஸ் ஹாமில்ட்டன் 1 மணி நேரம் 31 நிமிடங்களில் தொட்டு வெற்றி பெற்றார். நிக்கோ ராஸ்பெர்க் ஒரே ஒரு விநாடி மட்டுமே பின்தங்கி இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாம் இடம் பிடித்த ஃபெராரியின் செபாஸ்ட்டியன் வெட்டலுக்கும் நிக்கோ ராஸ்பெர்க்கும் இடையே 34 விநாடிகள் வித்தியாசம் இருந்தது.

வெற்றியுடன் துவக்கிய ஹாமில்ட்டன் !

ஆஸ்திரேலிய ரேஸில் 5.3 கி.மீ தூரம் கொண்ட 1 லேப்பை, 1 நிமிடம் 30 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார் லூயிஸ் ஹாமில்ட்டன்.

ஃபார்முலா ஒன் ரேஸ் போட்டிகளின் இரண்டாவது சுற்று, இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் மலேசியாவில் மார்ச் 29-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்.