Published:Updated:

ஜெனிவா மோட்டார் ஷோ

ரா.ராஜா ராமமூர்த்தி

ஜெனிவா மோட்டார் ஷோ, எப்போதும் கார் தயாரிப்பாளர்களின் டார்லிங். ஐரோப்பிய கார் நிறுவனங்களுக்கோ, இது ஒரு சென்ட்டிமென்ட்.  காரணம், இங்கு அறிமுகமான கார்கள் எல்லாமே ஹிட் அடித்திருக்கின்றன. அதிகமான ஸ்போர்ட்ஸ் கார்கள், சூப்பர் கார்கள் அறிமுகமாவதும் ஜெனிவாவில்தான். மார்ச் 5 முதல் 15 வரை நடைபெற்ற ஜெனிவா ஷோவில் என்ன ஸ்பெஷல்?
 

/ 2016 ஆடி R8 /

இரண்டாவது தலைமுறை R8 சூப்பர் காரை முதன்முறையாக ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியது ஆடி. V10 இன்ஜின் மாடல், e-Tron எலெக்ட்ரிக் மாடல், LMS ரேஸர் என மூன்று R8 கார்களை ஒரே சமயத்தில் காண்பித்து, சர்ப்ரைஸ் கொடுத்தது ஆடி. காரின் மெக்கானிக்கல் பாகங்கள் அனைத்தும் லேட்டஸ்ட். 533 hp, 602 hp என இரண்டுவிதமான டியூனிங்கில் 5.2 லிட்டர் V10 இன்ஜினைக் கொண்டுள்ளது புதிய R8. e-Tron மாடலில் 456 hp சக்தியையும் 93.78 kgm டார்க்கையும் அளிக்கக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜெனிவா மோட்டார் ஷோ

/ ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் /

ஜெனிவா மோட்டார் ஷோவில் எக்கோ ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியது ஃபோர்டு. இந்த மாடலில் ஸ்பேர் வீல் காரின் பின்பக்கம் மவுன்ட் செய்யப்படவில்லை. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இப்போது புதிய டிஸைனில், க்ரோம் எஃபெக்ட்டுடன் உள்ளது. சஸ்பென்ஷனையும் ரீ-டியூன் செய்துள்ளதால், முன்பைவிட நல்ல ஓட்டுதல் தரம் இருக்கும் என்கிறது ஃபோர்டு. கிரவுண்ட் கிளியரன்ஸும் 10 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுகள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளில் முதலில் விற்பனைக்கு வரும்.

ஜெனிவா மோட்டார் ஷோ

/ கோனிசே ரெகெரா /

உலகின் சக்திவாய்ந்த ஹைபிரிட் ஹைப்பர் காராக, அறிமுகமானது கோனிசே ரெகெரா (Regera). இதன் மொத்த சக்தி 1,500 hp-க்கும் அதிகம். கியர்பாக்ஸே இல்லை என்பதால், டெக்னிக்கலாகவும் வித்தியாசமான கார் ரெகெரா. Koenigsegg Direct Drive தொழில்நுட்பம் மூலம் சக்தி நேரடியாக சக்கரங்களுக்குச் செல்கிறது. இதன் மூலம் டிரான்ஸ்மிஷன் லாஸ் 50 சதவிகிதம் குறைக்க முடியுமாம். 5.0 லிட்டர் V8 இன்ஜினுடன் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் இந்த காரில் உள்ளன. காரின் மொத்த எடை 1,420 கிலோ. காரின் அனைத்துக் கதவுகளையும் ஆட்டோமேட்டிக்காக ஸ்மார்ட்போன் மூலம் இயக்கக் கூடிய முதல் கார் இதுதான். முதலில் 80 ரெகெரா கார்களை மட்டுமே தயாரிக்க இருக்கிறது கோனிசே.

ஜெனிவா மோட்டார் ஷோ

/ போர்ஷே கேமன் GT4 /

‘சொந்தத் தம்பியே அண்ணனுக்குப் போட்டியாக வந்து நின்றால்?’ அதுதான் போர்ஷே கேமன் GT4 காரின் கதை. அருமையான மிட்-இன்ஜின் (Mid mounted) சேஸி இருந்தும், தன்னுடைய 911 கரெரா காருக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாதே என கேமன் காருக்கு, சக்தி குறைவான இன்ஜினையே கொடுத்திருந்தது போர்ஷே. ஆனால், கேமன் காருக்கு அதிக சக்தி தேவை என்ற ஆர்வலர்களின் கோரிக்கை, போர்ஷேவை இறங்கிவரச் செய்திருக்கிறது.

இப்போது 911 கரெரா காரின் 3.8 லிட்டர் ஃப்ளாட்-6 இன்ஜினையே கேமன் காரில் பொருத்தியிருக்கிறார்கள். மேலும், இதன் 911 GT3 காரின் மெக்கானிக்கல் பாகங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது கேமன் GT4. போர்ஷே கரெரா பேஸ் வேரியன்ட் காரைவிட 0.4 விநாடி குறைவாக 0-100 கி.மீ வேகத்தை அடைகிறது கேமன் GT4.

ஜெனிவா மோட்டார் ஷோ

/ நிஸான் ஸ்வே கான்செப்ட்/

நிஸான் மைக்ரா, பார்ப்பதற்குச் சற்று போரடிக்கிற கார்தான். ஆனால், அடுத்த தலைமுறை மைக்ரா செம எக்ஸைட்டிங்காக இருக்கும் என ஸ்வே கான்செப்ட் சொல்கிறது. ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமான அழகான கான்செப்ட் கார், நிஸான் ஸ்வே-தான். காம்பேக்ட் செக்மென்ட்டிலேயே முற்றிலும் ஃப்ரெஷ் டிஸைன் கொண்ட ஒரு காருக்கான கான்செப்ட் இது என்கிறது நிஸான். இதுதான் அடுத்த மைக்ரா என்றால், நிஸானுக்கு இந்தியாவில் ‘ஒளிமயமான எதிர்காலம்’ காத்திருக்கிறது.

ஜெனிவா மோட்டார் ஷோ

/ ஃபெராரி 488 GTB /

ஃபெராரி 458 இட்டாலியா காரின் புதிய மாடலாக அறிமுகமாகியுள்ளது, 488 GTB. பழைய 459 இட்டாலியா சாதாரண V8 இன்ஜினைக்கொண்டிருக்க, இந்த காரில் இருப்பது 3.9 லிட்டர் ட்வின் - டர்போ V8 இன்ஜின். இது 661 hp சக்தியை 8,000 ஆர்பிஎம்மில் அளிக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 3 விநாடிகளில் கடக்கிறது. 9 விநாடிகளுக்குள் 200 கி.மீ வேகத்தைத் தாண்டிப் பறக்கிறது 488 GTB. நிறைய டிஸைன் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த டிஸைன், 458 இட்டாலியா காரை நினைவூட்டுகிறது. ‘டர்போ இன்ஜினா? அப்ப பழைய இட்டாலியா மாதிரி எக்ஸாஸ்ட் சத்தம் இருக்காதா?’ என அலறும் ஆர்வலர்களுக்கு, ‘டர்போ இன்ஜின் என்றாலும், இதிலும் வழக்கமான ஃபெராரி எக்ஸாஸ்ட் சத்தம் இருக்கும்!’ என நம்பிக்கை கொடுக்கிறது ஃபெராரி.